
ஜவான் அண்ணைக்கு இன்று பிறந்தநாள்! 04.03.1965
போராளி என்பதைத் தாண்டி, ஒரு தனிமனித ஆளுமை எப்படி இருக்கலாம் என்பதை நாங்கள் நேரில் பார்த்தோம் என்றால் அது அவர் தான், ஒரு நிர்வாகத்தினைத் தலைமை தாங்குபவர், பேச்சளவில் இல்லாமல் செயலளவில் இருக்கவேண்டும் என்பதை அவரிடம் பார்த்து வியந்த நாட்கள் பல. அவர் ஒரு மிகச் சிறந்த ஒளிப்படப்படக் கலைஞர், அதி நவீன டிஜிரல் கமெராவை முதல் முதலில் நான், கையில் தூக்கிப் பார்த்தது அவருடைய கமெராவைத்தான். அவர், தன்னுடைய ஊடகத்துறை வழிகாட்டியாகப் பின்பற்றியது கிட்டு அண்ணை அவர்களை, அச்சு, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்திலும் அனைத்துப் பணிகளும் அவருக்கு கைவந்த கலை, பத்திரிகைகளில் அச்சுக் கோர்க்கின்ற காலத்தில் பிலிம்றோள் கமெராக்களைப் பயன்படுத்தி எடுக்கப்படும் ஒளிப்படங்களை, பத்திரிகைகளில் சேர்ப்பதற்கான புளொக் தயாரித்தல் தொடக்கம் டிஜிற்றல் காலம் வரையில் ஒளிப்படப் பதிவில் தனியான அடையாளமாக அவர் விளங்கியிருந்தார்.
மேதகு அவர்களது பெருமளவான படங்கள் ஜவான் அண்ணை எடுத்ததுதான். அவரின் மிகுந்த அன்புக்கும் அபிமானத்துக்குமுரியவராக ஜவான் அண்ணை விளங்கினார். போராட்டகாலத்து ஒளிப்படக்கலைஞர்கள் பற்றி யாராவது, எங்காவது பதிவு செய்கின்ற போது ஜவான் அண்ணையைத் தவிர்த்து பெயர்களைக் குறிப்பிட முடியாத அளவிற்கு அவருடைய ஒளிப்பட அனுபவம் தனித்துவமானது. எங்கள் வானொலியின் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிகள், நாளாந்த நிகழ்ச்சிகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடந்துகொண்டே இருக்கும். ஒலிபரப்புத் தொடர்பிலான மதிப்பீட்டினை ஒவ்வொரு பணியாளர்களும் வழங்கவேண்டும் என்கிற நடைமுறை கூட இருந்தது. புலத்திலிருந்தோ, தமிழகத்திலிருந்தோ வன்னிக்கு வருகின்ற வளவாளர்களில் பெருமளவானோருடைய அனுபவப் பகிர்வுகளையோ, கருத்தரங்குகளையோ ஏற்பாடு செய்து எங்களுக்கு அவர் வழங்குவதற்குத் தவறியதில்லை. அதேவேளை, வானொலியில் தவறுகள் நிகழ்ந்தால் அதனை நிகழ்த்தியவர் அதற்கு பதில் கூறியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர் பின்வாங்கியதில்லை. குறிப்பாக மாவீரர் நாள் ஒலிபரப்பு நாட்களில் தாக்குதல் அபாயம் எப்போதும் காணப்படும் என்பதால் அன்றைய நாள் மாற்று ஏற்பாடுகளில் அவர் தீவிரமாகவே இருப்பார்.
அமைப்பின் குரல் என்பதை அவர் பிரதிபலிப்பார். சிறப்பு ஒலிபரப்புக்களுக்கான ஒலிபரப்புக் கோபுரங்களை அமைப்பது தொடக்கம், அந்த ஒலிபரப்புக்கள் நிறைவுபெறும் வரையில் ஒவ்வொரு விடயத்தினையும் கண்ணும் கருத்துமாக கைக்கொள்வது வழக்கம், ஒலிபரப்பு நிலையங்களும் அந்தச் சூழல்களும் எப்போதும் அபாயம் மிக்கதாகவே இருக்கும், அவ்வாறான சூழல்களில் எல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்த இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் பணியாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார். சமாதான காலத்துக்கு முன்பாக தொலைத்தொடர்பு சாதனங்களின் (அமைப்பின் தொடர்பாடல் சாதனங்களைத் தவிர) பயன்பாடு என்பது முற்றுமுழுதாக இல்லை என்று சொல்லக்கூடிய காலத்தில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் அவர் உண்மையில் ஒரு தீவிரவாதிதான். அமைப்பின் நிலைப்பாடு சார்ந்து செய்திகளை துரிதமாகவும் நம்பகமாகவும் வெளியிடவேண்டும் என்பது அவருடைய இறுக்கமான நிலைப்பாடு. செய்தி சார்ந்து இன்றுவரையில் அவருடைய வழிகாட்டலின் போது வழங்கிய அறிவுரைகளைத் தாண்டிப் பயணிக்க முடியாத அளவிற்கு அவை காத்திரமானவை, பல முக்கியத்துவம் வாய்ந்த சண்டைக்களங்களுக்குள் நேரில் சென்று தகவல் திரட்டி, வானொலிக்கான செய்திகளையோ, அனுபவப் பகிர்வுகளையோ பெற்றுவிடுவதில் அவருக்கு நிகர் அவர் தான்.
பணியாளர்களை வளர்த்துவிடுவதில் வல்லவர், எங்கள் வானொலியில் பணியாற்றுபவர்கள் அனைவரும் கணிசமாக முடிந்த அளவிற்கு ஏனைய வேலைகளையும் செய்யவேண்டும் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு, ஒரு வருடகாலம் அவருடைய நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள் எங்கும் பணியாற்றிவிடுவார்கள் என்பது தான் அடிப்படை. அந்தளவிற்கு அனைவருடைய உழைப்பும் மனித மணித்தியாலங்களும் முக்கியமானவை என்பதுதான் அவருடைய நிர்வாகத்திறன். திறமையானவர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களை வளர்த்துவிடுவதிலும் அவர் வல்லவர், என்னுடைய அனுபவத்தில் இரண்டு விடயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அமைப்பின் கட்டுமானப் பொறுப்பாளர்களை நேர்காணல் கண்டு ஆவணப்படுத்துவதற்காக “வளநாடு” என்ற நிகழ்ச்சியினைத் தயாரிப்பதற்கான பொறுப்பினை எனக்குத் தந்திருந்தார். அப்போது வெளியில் செல்வதாக இருந்தால் கூடுதலாக தவபாலண்ணையோடு தான் செல்வது வழக்கம், வளநாடு நிகழ்சியின் முதலாவது நேர்காணலுக்காக அப்போதைய சுகாதாரப் பிரிவுப் பொறுப்பாளர் அருண் அவர்களை நேர்காணல் செய்வதற்காகச் சென்றிருந்தேன்..
அங்கு போன பின்னர், தவபாலண்ணையும் இருந்தபடியால்,“நீங்கள் எடுங்கோ” என்றேன், அவரும் கேள்விகளைக் கேட்டார், நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகிவிட்டது. மறுநாள் ஜவான் அண்ணை என்னை அழைத்தார், “அந்த நிகழ்ச்சியை உனக்குத் தந்தது… நீ செய்வதற்காக, தவபாலன் செய்வதாக இருந்தால் அதனை தவபாலனிடம் கொடுத்திருப்பேன் தானே” என்றார். பின்னர் 15 இற்கு மேற்பட்ட பொறுப்பாளர்களிடம் நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணல் நிகழ்ச்சி மிகப் பெரிய அறிமுகங்களையும், மிகப் பெறுமதி வாய்ந்த சந்தர்பங்களையும் ஏற்படுத்தித்தந்தது. அதேபோல, சமாதான காலப் பகுதியில் வடக்கு – கிழக்கில் பொங்குதமிழ் நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றிருந்தன. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சென்றிருந்த தவபாலண்ணை குறித்த திகதியில் பணிக்குத் திரும்ப முடியவில்லை, வானொலியில் முன் அறிவித்தல்கள் எல்லாம் ஒலிபரப்பாகிவிட்டன.
ஜவான் அண்ணை என்னை அழைத்தார், “மட்டக்களப்பு போகவேணும், நேரடி ஒலிபரப்புச் செய்யவேணும், உன்னால் முடியும்” என்றார், என்னை அழைத்துச் சென்றது கொலின் அண்ணை அவர் இப்போது நோர்வேயில் உள்ளார். நான்கு மணி நேரத்திற்கு மேலாக நேரடி ஒலிபரப்பில் தனி ஒருவனாக அறிவிப்புச் செய்திருந்தேன், எங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட, அவர் வைத்திருந்த நம்பிக்கை இன்னமும் நினைக்க முடியாத சிலிர்ப்பைத் தருகிறது, கவிதையில் சந்தமாக இருக்கலாம், செய்தியில் தலையங்கமாக இருக்கலாம், வாகனத்தின் உதிரிப்பாகங்களாக இருக்கலாம், கமெராவில் லென்ஸாக இருக்கலாம், ஒலிபரப்பில் அலைவரிசையாக இருக்கலாம் இன்னும் என்ன என்ன தெரியவேண்டுமோ அத்தனையும் தெரிந்துவைத்திருந்த தனி மனித ஆளுமை அவர், அவருக்கு இன்று பிறந்தநாள், என்றென்றும் மனதின் மிக உயரத்தில் வீற்றிருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணை..