×

இரண்டு தசாப்தங்களும், புலிகளும் (வெளியீடு: 1991)

இரண்டு தசாப்தங்களும், புலிகளும் (வெளியீடு: 1991)

‘எண்பதுகளில் தமிழீழத்தினதும், சிங்கள தேசத்தினதும் அரசியல் தலைவிதியை ஆட்டிப்படைத்துத் தொண்ணூறுடன் முடிவடைந்த ஒரு முக்கிய தசாப்தத்தின் வரலாற்று நாயகனாக விளங்குகின்றார் பிரபாகரன்.’ இப்படியாக பிரபாகரனுக்குப் புகழாரஞ் சூட்டுகிறார் பிரபல எழுத்தாளரும், ‘லங்கா கார்டியன்’ சஞ்சிகையின் ஆசிரியருமான மேர்வின் டீ சில்வா.

புயலின் மையமாக நின்று, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த வீரன் என்ற காரணத்திற்காக ஒரு தசாப்தத்தின் மாமனிதன் எனப் பிரபாகரன் போற்றப்படுகிறார். ‘‘இது எனது தனிப்பட்ட மானசீக மதிப்பீடு அல்ல. இலங்கைத் தீவை அதிர வைத்த பூகம்பமான நிகழ்வுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இது தவிர்க்க முடியாத வரலாற்றின் தீர்ப்பு’’ என்கிறார் மேர்வின்.

எண்பதுகளில் புயலின் வேகத்துடனும், ஆவேசத்துடனும் புலிகள் இயக்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது. இந்தக் காலகட்டத்தின் வரலாற்றுக் கதாநாயகன் பிரபாகரன் என்பதும் சரியான மதிப்பீடுதான். எனினும், பிரபாகரனதும், விடுதலைப் புலிகளினதும் வரலாறு ஒரு தசாப்தத்திற்குள் மட்டும் அடங்கி நிற்கவில்லை. எழுபதுகளின் ஆரம்பத்தில் தலைதூக்கிய வன்முறை அரசியலலைகளுடன் தொடங்கி, இன்று வரை படிமுறை வளர்ச்சியுடன் முன்னோக்கி அசைந்து கொண்டிருக்கும் புலிகளின் வரலாறு, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களை வியாபித்து நிற்கிறது.

இந்த இரண்டு தசாப்த காலகட்டத்தில், தமிழீழ மக்களின் அரசியல் வரலாறு மாபெரும் திருப்புமுனைகளை எதிர்கொண்டது. இந்த வரலாற்றுத் திருப்பங்களும், தேசியப் போராட்டத்தில் அவை விளைவித்த பாரிய தாக்கங்களும், விடுதலைப் புலிகளின் வரலாற்றுத் தோற்றம், வளர்ச்சி, எழுச்சியுடன் பின்னிப்பிணைந்து நிற்கின்றன.

எழுபதுகளைக் கொண்ட தசாப்தம் அரச ஒடுக்குமுறையையும் (state repression), ஆயுத எதிர்ப்புமுறையையும் (armed resistance) முனைப்புறச் செய்த காலகட்டம். ஒடுக்குமுறை மோசமாகிச் செல்லும் போது, எதிர்ப்புமுறையும் உரங்கொண்டு தீவிரம் பெறுவது இயல்பானது. சகல புரட்சிகரப் போராட்டங்களிலும் இதுவே சரித்திர நியதியாக இருந்து வந்திருக்கிறது. இந்த முரண்பாட்டு நியதியின் அடிப்படையில், இந்தத் தசாப்த வரலாற்றினை நாம் மீளாய்வு செய்து பார்ப்பது பயனுடையதாக அமையும். அப்பொழுதுதான் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றுத் தேவையையும், புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கான புறநிலைகளையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

எழுபதின் ஆரம்ப காலகட்ட நிகழ்வுகள், தமிழீழ மக்களின் அரசியல் வாழ்வில் பாரிய தாக்கங்களை விளைவித்தன. இந்தக் காலப் பகுதியில் புதிய மூர்க்கத்துடன் எழுந்த பேரினவாதம், தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியது. இதன் விளைவாகத் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில் நிலவிய தேசிய முரண்பாடு கூர்மையடைந்தது. இதனால் தமிழீழத்தில் வன்முறை அரசியலின் எழுச்சிக்கான திண்ணியமான புறநிலைகள் உருவாகின.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments