×

முன்னுரை

1990களின் முற்பகுதி. தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலம். தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளைத் தாங்கிய வண்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது ‘வெளிச்சம்’ ஏடு. விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினாற் பிரசுரிக்கப்பட்டு வந்த இந்தக் கலை இலக்கிய ஏட்டிற்குத் திரு.கருணாகரன் அவர்கள் ஆசிரியராகவும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர். ‘வெளிச்சம்’ இதழிற் கட்டுரைகளாக எனது படைப்புகள் வெளிவர வேண்டும் என எனது நண்பர் புதுவை வலியுறுத்தி வந்தார். அன்றைய சூழலில் அரசியல் வேலைப் பளுவுடன் எழுதுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆயினும் புதுவையின் அன்புத் தொல்லைக்கும் அழுத்தத்திற்கும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆகவே, வெளிச்சத்திற்கு எழுதுவதெனத் தீர்மானித்தேன். ஆயினும் எதை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது. இளைஞர் பரம்பரையை – குறிப்பாக மாணவ சமூகத்தை புதிதாக, புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஏதாவது எழுதுங்கள் என்று பணித்தார் புதுவை. இறுதியாக எழுதினேன். ‘பிரம்மஞானி’ என்ற எனது பழைய புனைபெயரில், ‘வெளிச்சம்’ ஏட்டில் கட்டுரைகளாகவும் தொடர்கட்டுரைகளாகவும் எழுதினேன். அவற்றில் முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திருத்தியமைத்து, செப்பனிட்டு, சிலவற்றை விரிவாக்கம் செய்து இத்தொகுதியில் மறுபிரசுரம் செய்கிறோம். அத்துடன் நான் சமீபத்தில் புதிதாக எழுதிய அரசியற் கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை. அரசியல், சமூகவியல், உளவியல், பொருளியல், மெய்யியல், வரலாற்றியல், மானிடவியல் போன்ற பல்வேறு அறிவியற் பரப்புகளை இவை ஊடுருவி நிற்கின்றன. இவ்விசாரணைகள் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் மனிதன். ஆகவேதான் மனிதன் பற்றியும் மனித மனம் பற்றியும் மனித உணர்வு பற்றியும் மனிதத்துவம் பற்றியும் மனித வரலாறு பற்றியும் மனித விடுதலை பற்றியும் ஆழமான விசாரணைகள் செய்த சிந்தனையாளர்கள் சிலரின் புதுமையான பார்வைகளை இக் கட்டுரைகள் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கிறேன். இந்த எழுத்துக்கள் யாரையாவது புதிதாகச் சிந்திக்கத் தூண்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

அன்றைய போர்ச் சூழலில், அந்த நெருக்கடியான கால கட்டத்தில் என்னை எழுதத் தூண்டிய எனது நண்பர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கும் இந்நூலை கணினியில் அச்சடித்து, பக்கங்களை கணினியில் வடிவமைத்து, மிகவும் பொறுமையுடன் பலமணி நேரத்தை எழுத்துப் பிழை பார்ப்பதில் செலவிட்டு அரும்பணி ஆற்றிய எனது அன்புத் தம்பி ரஞ்சித் அவர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் இந்நூலின் முழுமையான உருவாக்கத்திற்காக உழைத்த வாசன் அச்சக உரிமையாளரான திரு.வாசன் அவர்களுக்கும் அச்சக ஊழியர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும்.

முன்னுரை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments