×

உலக வரலாறும் மனித விடுதலையும்

வரலாறு என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அது ஒரு அர்த்தபூர்வமான செல்நெறியிற் செயற்படுகிறதா? அதன் இயங்கு விதிகளை இனம் கண்டு கொள்வது சாத்தியமா? மானிடத்தின் உலகானுபவத்தை உள்வாங்கியபடி, மனித சமூக வடிவங்களை ஒரு உயர்ந்த படிநிலைக்கு இட்டுச் செல்லும் பரிணாம வளர்ச்சியை நோக்கி வரலாறு அசைந்து செல்கிறதா? வரலாற்றின் அசைவியக்கத்தை அடையாளம் கண்டு அதன் போக்கை, அது செல்லும் பாதையை, அதன் இலக்கை எதிர்வு கூற முடியுமா? வரலாற்று அசைவியக்கத்தின் இறுதி நோக்கு என்ன? வரலாறு எப்பொழுது நிறைவு பெறுகிறது? அதற்கு ஒரு முடிவு உண்டா?

இன்றைய சமூக சிந்தனை உலகில் இப்படியான பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றிற்கு விடை அளிப்பதுதான் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.

வரலாறு என்பது கால ஓட்டத்தைக் குறிப்பது அல்ல. அன்றிக் காலத்தின் கோலத்தைக் கணிப்பிட்டுக் கூறுவதும் அல்ல. வரலாறு என்றால் செத்துப் போன காலத்தின் புதைகுழிக்குள் உக்கிப் போன எலும்புகளைத் தேடுவதும் அல்ல. கடந்து போன நிகழ்வுகளைக் காலவரிசையில் நிரைப்படுத்திவிடுவதும் வரலாறு ஆகிவிடாது. வரலாறு என்பது மனித வாழ்வு பற்றியது. மனித சமூகத்தின் வாழ்வியக்கம் பற்றியது. அந்த அசைவியக்கத்தின் மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உந்தியல்பான தன்மைகள், சக்திகள், விதிகள் பற்றியது. சாராம்சத்தில் வரலாறு என்பது மானிடத்தின் உயர்நிலை வளர்ச்சிப் போக்கு பற்றியது.

மானிடத்தின் வரலாற்றைப் பல்வேறு தனித்துவ கூறுகளாகப் பிரித்து, பண்டைய நாகரீகங்கள் என்றும், பண்பாட்டு மையங்கள் என்றும், நாடுகள் என்றும், சமூகங்கள் என்றும், தனி மனிதர்கள் என்றும் மேற்கொள்ளப்படும் சரித்திர ஆய்வுகளும் இல்லாமல் இல்லை. வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்ற முப்பரிமாண விதிகளின் அடிப்படையில் இந்த வரலாற்று ஆய்வுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை மதிப்பாய்வு செய்வது எமது நோக்கமல்ல. நாம் இங்கு எடுத்துக் கொண்ட வரலாற்று ஆய்வு முறைமை வித்தியாசமானது. மனித வரலாற்றைக் கூறு போட்டு நோக்காமல், மானிடத்தின், அதாவது மனித குலத்தின் ஒட்டுமொத்தமான வரலாறு பற்றியே நாம் இங்கு பார்ப்போம். முழு மனித வரலாறு எனும் பொழுது, எல்லாக் காலங்களிலும், எல்லா மக்கள் சமூகங்களாலும் பெறப்பட்ட உலகானுபவத்தை உள்வாங்கியபடி ஒரு சீரான அசைவியக்கமாக மானிடத்தை ஒரு உன்னத படிநிலை வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்லும் வரலாறு பற்றியே நாம் குறிப்பிடுகிறோம். இத்தகைய ஒரு ஆழமான வரலாற்றுத் தரிசனத்திற்கு மூல கர்த்தாவாக விளங்கியவர் பிரபல ஜெர்மானியத் தத்துவாசிரியரான ஹேகல் (Hegel) ஆவார். ஹேகலின் வரலாற்றுத் தத்துவத்தை செழுமைப்படுத்தி, விரிவுபடுத்தியவர் கார்ள் மாக்ஸ். ஆகவே, மானிட வரலாறு பற்றிய ஒரு ஆழமான பார்வையை நாம் பெற்றுக் கொள்வதாயின், ஹேகலதும் கார்ள் மாக்சினதும் சிந்தனை உலகங்களைத் தரிசித்துக் கொள்வது அவசியம். கார்ள் மாக்சின் வரலாற்றுக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதாக இருந்தால் முதலில் ஹேகலின் தத்துவத்தைப் படித்தறிவது அவசியம் என்று லெனின் அடிக்கடி வலியுறுத்துவார். இந்தக் கூற்றில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

அன்றைய ஜெர்மானிய கருத்துலகின் திருமூலராக ஹேகல் விளங்கினார். அவர் படைத்த எண்ண உலகம் மாக்ஸ் போன்ற அன்றைய இளம் சிந்தனையாளர்கள் மீது ஆழமான தாக்கத்தைப் பதித்தது. ஹேகலின் தத்துவத்தை மாக்ஸ் கடுமையாக விமர்சித்தார். அகவயமான ஆன்மீகவாதம் எனச் சாடினார். எனினும் ஹேகலின் கருத்துலக ஆதிக்கத்திலிருந்து அவர் முற்று முழுதாக விடுபட்டதாக இல்லை. ஹேகலின் இயங்கியலும் வரலாற்றுத் தத்துவமும் கார்ள் மாக்சை வெகுவாக ஆகர்ஷத்துக் கொண்டன. ஆன்மீக உலகத்தில் புதைந்து போயிருந்த ஹேகலின் இந்த சிந்தனைக் கருவூலங்களை பொருளிய உலகத்தை விளக்கும் அறிவியற் கோட்பாடுகளாக மாக்ஸ் மாற்றியமைத்தார் எனக் கூறுவது பொருத்தமாகும். இதனால் தான் மாக்சீயத்தை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு ஹேகலின் தத்துவத்தைப் படிக்க வேண்டும் என லெனின் கூறினார்.

ஹேகலின் தத்துவத்தைப் புரிந்து கொள்வது என்பதும் இலகுவான விடயமல்ல. மிகவும் கனமான, ஆழமான கருத்துகளை, மிகவும் தெளிவற்ற பூடகமான வார்த்தைகளில், மிகவும் சிக்கலான முறையில் விபரிப்பதில் அவர் வித்தகர். வரலாறு பற்றி அவர் விளக்கும் Phenomenology of The Mind, Philosophy of History, என்ற நூல்கள் இத்தகைய சொற்புதிர்கள் நிறைந்தவை. உதாரணமாக மனம் என்று அவர் பிரயோகிக்கும் சொல் பல்வேறு அர்த்த பரிமாணங்களைக் கொண்டது. அவரது மொழியில் மனம் என்பது சாதாரண மனித மனதை மட்டும் குறிப்பிடுவதல்ல. அது மனித ஆன்மாவைக் குறிப்பிடும். மானிடத்தின் கூட்டு மனதையும் அது குறிப்பிடும். அதே வேளை, அண்டமெங்கும் வியாபித்து நிற்பதாக அவர் கருதும் பிரபஞ்ச மனதையும் அது பொருள்படுத்தும். அதே சமயம் அது மெய்ப்பொருளையும் குறிக்கும். மெய்யுண்மையாக அவர் கருதும் பரிபூரணத்துவத்தையும் குறியீடு செய்யும். தனி மனித மனம், மானிட மனமாக, பிரபஞ்ச மனமாக, ஆத்மாவாக, பரமாத்மாவாக, மெய்யுண்மையாக, சகலத்தையும் உள்ளடக்கிய முழுமையாக, பரிபூரணத்துவமாக, எல்லாம் வல்ல கடவுளாக அர்த்த பரிமாணம் கொள்ளும்.

இந்தப் பிரபஞ்ச மனதின் அசைவியக்கத்தையே வரலாறு என்கிறார் ஹேகல். இந்த அசைவியக்கமானது பிரபஞ்சத்திலிருந்து மனித வாழ்க்கை வரை வியாபித்து நிற்கிறது. அது எல்லாவற்றையும் நகர்த்திச் செல்லும் மாபெரும் இயங்கு சக்தியாக அசைகிறது. இந்தப் பேரசைவு ஒரு முரணிய இயக்கமாக சகலதையும் படைத்து, சகலதையும் அசைத்து, சகலதையும் அழித்து ஒவ்வொரு படிநிலையாக, முழுமையை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்னொரு அர்த்தத்தில் வரலாறு என்பது இறைவனின் பிரபஞ்ச நாடகம்.

பூமியிலும் இந்த நடனம் அரங்கேறுகிறது.

மனித நாகரீகங்கள் தோன்றுகின்றன. சாம்ராஜ்யங்கள் எழுகின்றன. மனித பண்பாட்டு மறுமலர்ச்சி யுகங்கள் பிறக்கின்றன. இவை தோன்றி, வளர்ந்து, மடிந்து போக புதிய நாகரீகங்கள், புதிய சாம்ராஜ்யங்கள், புதிய பண்பாட்டு யுகங்கள் தோன்றுகின்றன. இந்த பிறப்பு, இருப்பு, அழிவு என்ற அசைவியக்கத்தின் ஊடாக மானிட மனமானது முரண்பாடுகள் களையப்பெற்ற முழு நிறைவை நோக்கி நகர்கிறது. சட உலகின் சாரமாக ஈர்ப்பு சக்தி இருப்பது போல, ஆன்ம உலகின் சாராம்ச சக்தியாக விடுதலையுணர்வு இயங்குகிறது. எனவே வரலாறு என்பது ஆன்மத்தின் விடுதலை நோக்கிய நகர்வு (history is the movement of the spirit towards freedom) என்கிறார் ஹேகல்.

மெல்ல மெல்ல, மானிடப் பிரக்ஞை விழிப்பு நிலை பெறுகிறது. விடுதலை பற்றி சுயவுணர்வு கொள்கிறது. தளைகளை நீக்கி விடுதலையைப் பெற முனைகிறது. ஆதி நாகரீகங்களில் அனைத்து அதிகாரமும் கொண்ட அரசனே சுதந்திர புருஷனாக விளங்கினான். மற்றெல்லோரும் அவனுக்குக் கீழ் அடிமைகளாக உழன்றனர். காலப் போக்கில் புதிய நாகரீகங்கள், புதிய பண்பாட்டு உலகங்கள் தோன்றி, விடுதலையின் விழிப்புணர்வை மனிதரிடையே வளர்த்தது. வேதங்களாக, தத்துவங்களாக, கலை இலக்கிய வடிவங்களாக, சமூகச் சிந்தனைகளாக, அரசியற் கோட்பாடுகளாக, காலத்திற்குக் காலம் தோன்றி வளர்ந்த பண்பாட்டுக் கோலங்கள் விடுதலையின் விழிப்புணர்வை விரிவுபடுத்தியது. போர், புரட்சி, கிளர்ச்சி என்று மனிதர்கள் விடுதலை வேண்டி எழுச்சி கொண்டனர். இவ்விதம் விடுதலையின் தேடுதலாக மனித வரலாறு நகர்கிறது. இந்த வரலாற்று நகர்வு, யுகங்களை விழுங்கிய நீண்ட பயணமாகத் தொடர்கிறது. இந்தப் பெரும் பயணத்தில், முடிவில்லாது தொடரும் இந்த ஆன்மீக யாத்திரையில், கோடானு கோடி மனிதர்களின், கோடானு கோடி சுயசரிதச் சுவடுகளை உள்வாங்கி வரலாற்று இயக்கம் அசைந்து செல்கிறது.

பிரபஞ்ச பேரான்மாகவும், பூவுலக ஜீவான்மாவாகவும், கடவுளாகவும், மனிதனாகவும், ஒன்றோடு ஒன்று சங்கமிக்கும் முழுமையாகவும், சகலதாகவும், சர்வ வியாபகம் கொண்டு பிரம்மன் நடத்தும் திருக்கூத்துப் பற்றி உபநிடதம் படித்தவர்களுக்கு ஹேகலின் வரலாற்றுக் கடவுளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காது. இந்தப் பிரபஞ்ச பேரான்மாவின் சுயசரிதமாகவே மனித வரலாற்றை எழுதுகிறார் ஹேகல்.

எங்கோ, மனித புலன்களுக்குப் புலப்படாத மறு உலகிலிருந்து மனித வாழ்க்கை நிச்சயமாகிறது. அண்டம் அளாவிய ஒரு பெரும் தெய்வீகத் திட்டத்தை நிறைவு செய்ய நாம் எல்லோரும் இந்தப் பூவுலக யாத்திரையில் வந்து செல்கிறோம். எமது தனிப்பட்ட வாழ்வும், வரலாறும் ஏதோ ஒரு அர்த்தத்தில், ஏதோ ஒரு நோக்கில், ஏதோ ஒரு காரணத்தில் நெறிக்கப்படுகிறது. அது எமக்குப் புலப்படுவதில்லை. நாம் எமது வாழ்க்கைக்கு கொடுக்கும் அர்த்தங்கள் எல்லாம் அர்த்தமற்றவை. எமது வாழ்க்கையின் அர்த்தத்தை நாம் கண்டு கொள்ள முடியாது. அது பிரபஞ்ச முழுமையின் தரிசனத்தில் மட்டும் ஒளிந்து கிடக்கிறது. அந்தப் பிரபஞ்ச முழுமையின் தரிசனத்தில் மட்டுமே அதன் உண்மை புலனாகும். முழுமை பெறாத நிலையில், பூரணமற்ற தன்மையில் இருப்பின் இரகசியத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. எமக்குப் பின்னாலிருந்து ஏதோ அசைக்க நாம் அசைபடுகிறோம். மனிதப் பொம்மைகளாக, நாம் பொம்மலாட்டம் ஆடுகிறோம். சிந்தித்துச் செயல்படுவதாக நாம் எண்ணிக் கொள்வது எல்லாம் அபத்தமானது. வரலாற்றின் அரூப கரங்களால் நகர்த்தப்படும் பகடைக் காய்கள் நாம்.

அமைதியும் ஆனந்தமும், ஒழுங்கும் ஒத்திசையும் நிறைந்த பொற்காலங்களை வரலாறு படைப்பதில்லை. அது உலக வரலாற்று ஏட்டின் வெற்றுப் பக்கங்களாகவே இருக்கும் என்கிறார் ஹேகல். முரண்பாடும் மோதலும், சாவும் அழிவும் நிறைந்த துன்பியல் நாடகமாக வரலாறு இந்தப் பூமியில் அரங்கேறுகிறது. மானிடம் இரத்தம் சிந்தியபடி சிலுவையைச் சுமந்து செல்கிறது. பூரணத்துவம் நோக்கிய பாதையில் மனிதன் இரத்த ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். மனித வாழ்வை, வரலாறு அப்படி விதித்திருக்கிறது. ஒரு சிலர், வரலாற்றினால் அபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டும் சிலர், வரலாற்று நாயகர்களாகப் பிறப்பெடுக்கின்றனர். அந்த உலக வரலாற்று நாயகர்கள் (world historical beings) வரலாறு விதித்த பணிக்காக அவதாரம் எடுக்கிறார்கள். அவர்கள் மூலம், வரலாறானது தனது நோக்குகளை தந்திரமாக, நுட்பமாக சாதித்து விடுகிறது. மகா அலெக்சாந்தர் தொடக்கம் நெப்போலியன் வரை, யுகம் யுகமாக, வரலாற்று மனிதர்கள் தோன்றி, வரலாற்றை நகர்த்திச் செல்ல வரலாறு விதி செய்திருக்கிறது என்கிறார் ஹேகல்.

II

ஹேகல் படைத்த வரலாற்றுத் தத்துவத்தின் மையக் கருத்தாக விளங்குவது இயங்கியல். இந்த இயங்கியல் தத்துவத்தின் (philosophy of dialectics) அடிப்படையிலேயே மனவுலகத்தையும் பொருளுலகத்தையும், உலக வரலாற்று இயக்கத்தையும் அவர் விளக்க முனைந்தார்.

ஹேகலின் இயங்கியல் தத்துவத்தை மாக்சிய வரலாற்றியல் எவ்வாறு, எந்த வடிவத்தில் உள்வாங்கிக் கொண்டது என்பதை ஆராய்வதற்கு முன்னர், இந்தத் தத்துவம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த உலகம் நிலையானது அல்ல. இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரமானது அல்ல. எதுவுமே நிச்சயமானதும் அல்ல. இந்த உலகம் சதா மாறிக் கொண்டிருக்கிறது. சதா அசைந்து கொண்டிருக்கிறது. சதா அவிழ்ந்து கொண்டிருக்கிறது.

அக உலகம் என்றாலும் சரி, புற உலகம் என்றாலும் சரி, எதிலும், எல்லாவற்றிலும் ஒரு பெயர்வு இருக்கிறது; ஒரு நகர்வு இருக்கிறது; ஒரு மலர்வு இருக்கிறது. அணுவிலிருந்து அண்டம் வரை எல்லாமே ஒரு இயங்கு சக்தியால் இயக்கப்படுகிறது.

காலம் என்பது இயக்கம்; வாழ்வு என்பதும் இயக்கம்; இருப்பு என்பதும் இயக்கம்; வரலாறு என்பதும் இயக்கம்.

இந்த இயக்கம் இலக்கின்றி சும்மா இயங்கவில்லை. இந்த இயக்கத்தின் இயக்கத்தில் ஒரு நிலை மாற்றம் நிகழ்கிறது; ஒரு புத்தாக்கம் பிறக்கிறது; ஒரு வளர்ச்சி தோன்றுகிறது. ஒரு முன்னேற்றம் ஏற்படுகிறது. இந்த இயக்கம் எல்லாவற்றையுமே ஒரு வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி நகர்த்திச் செல்கிறது. உயர் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

மனித சிந்தனையிலும் இந்த இயக்கம் இருக்கிறது. மனித சமூகத்திலும் இந்த இயக்கம் இருக்கிறது. மனித வரலாற்றிலும் இந்த இயக்கம் இருக்கிறது. இயற்கையிலும் இந்த இயக்கம் இருக்கிறது. முழு உலகமுமே இந்தச் செயலியக்கப் படிமுறையில் தோற்றம் கொண்டு, வளர்ச்சி கண்டு, மாற்றமடைந்து, முன்னோக்கிய முனைப்பில் உருவாக்கம் பெறுகிறது.

மனித மனம், சமூகம், இயற்கை என்ற ரீதியில் சகலவற்றையும் வளர்ச்சிப் படிமுறையில் நகர்த்திச் செல்லும் செயலியக்கத்திற்கு அடிப்படையான விதிகள் உள்ளன. இந்த இயங்கு விதிகள் பற்றிய தத்துவக் கோட்பாடே இயங்கியல் எனப்படும். இந்த இயங்கியல் விதிகளை (law of dialectics) முதன் முதலாக நெறிப்படுத்திய பெருமை ஹேகலைச் சாரும்.

இந்த இயங்கியல் விதிகளில் அடிப்படையானது முரணியமாகும் (contradiction).

எந்தப் பொருளுக்கும் ஒரு தன்னியக்கம் இருக்கிறது. உள்ளீட்டான சுய-இயக்கம் இருக்கிறது. இந்த சுய-இயக்கம் முரணியத் தன்மையைக் கொண்டது. அதாவது ஒன்றுக்கொன்று மாறான, முரணான எதிர்வுத் தன்மைகளைக் (opposite tendencies) கொண்டது. ஒரு பொருளில் இந்த எதிர்வுத் தன்மைகள் ஒன்றித்திருக்கும் நிலையை எதிர்வுகளின் ஒன்றியம் (unity of opposites) என்கிறார் ஹேகல். இந்த எதிர்வு சக்திகள் ஒன்றித்திருந்து அதே சமயம் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிகழ்த்தும் பிணக்காக, போராட்டமாக அந்தப் பொருளின் வாழ்வியக்கம் அசைகிறது. இந்த முரண்பாடு முற்றி வெடிக்கும் பொழுது மாற்றம் நிகழ்கிறது. புதியது பிறக்கிறது. எனவே, எந்தப் பொருளது இயக்கத்திற்கும், மாற்றத்திற்கும், புத்தாக்கத்திற்கும், புதிய வளர்ச்சிப் போக்கிற்கும் அந்தப் பொருளில் உள்ளீட்டாக, அதன் உள்ளியக்கமாகச் செயற்படும் முரணியமே காரணியாக இருக்கிறது. சிந்தனை உலகிலும் சரி, சமூக உலகிலும் சரி, இயற்கையின் சகல பொருட்களிலும் சரி, தோற்றம், மாற்றம், முன்னேற்றம் என்பன புற சக்திகளால் தூண்டப்படுவதல்ல. அது உள்ளீட்டாக, உள்-முரண்பாட்டின் உந்துதலால் நிகழ்கிறது.

இயங்கியலின் அடிப்படையிலேயே மனித மனம் படிநிலை வளர்ச்சி காண்கிறது என்கிறார் ஹேகல். இங்கும் முரணிய விதி முக்கிய இடம் பெறுகிறது. முரண்பாடான சிந்தனைகள் தோன்றி அவற்றின் தீர்வாகப் புதிய சிந்தனை பிறக்கிறது. காலப் போக்கில் அந்தப் புதிய சிந்தனையிலும் புதிய முரண்பாடு எழுந்து, அது களையப் பெறும்போது மேலும் செழுமை பெற்ற சிந்தனை வளர்கிறது. இவ்விதம் ஒரு முடிவில்லா முரணியச் சுழற்சியில் மனித மனமானது பரிணாம வளர்ச்சி கண்டு அகற்சி பெறுகிறது. மனித அறிவு முன்னேற்றம் காண்கிறது.

தர்க்கீகம் பற்றி ஹேகல் இரு நூல்களை எழுதியிருக்கிறார். இந்நூல்களில் அவரது இயங்கியல் தர்க்கீகம் (dialectical logic) விபரிக்கப்படுகிறது. முரணியம் மூலம் எண்ண இயக்கத்தின் முன்னோக்கிய நகர்வு தர்க்க ரீதியில் விளக்கப்படுகிறது. அதன் சாராம்சம் இதுதான்.

முதலில் ஒரு எண்ணம் அல்லது சிந்தனை பிறக்கிறது. இது கருத்தாக்கம் (thesis) எனப்படும். இந்தக் கருத்துக்கு மாறாக ஒரு எதிர்க்கருத்து எழுகிறது. இது முரண் கருத்தாக்கம் (anti-thesis) எனப்படும். ஒன்றுக்கு ஒன்று மாறான இவ்விரு கருத்துகள் மத்தியில் முரண்பாடு தோன்றுகிறது. இறுதியில் இம்முரணான கருத்துகள் மத்தியில் ஒத்திசைவு ஏற்பட்டு, அதன் தீர்வாக ஒரு புதிய கருத்து பிறக்கிறது. இது கூட்டுக் கருத்தாக்கம் (synthesis) எனப்படும். இந்தக் கூட்டுக் கருத்தாக்கம், காலக்கெதியில் மீண்டும் ஒரு கருத்தாக்கமாக முரண்பாட்டைச் சந்திக்கிறது. இவ்விதம், எண்ண இயக்கமானது இயங்கியலின் மும்முனைச் சுழற்சியில் முன்னேறிச் செல்கிறது.

ஹேகலின் இயங்கியல் தர்க்கீகத்தில் மனித சிந்தனையை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் உந்து சக்தியாக முரணியமே செயற்படுகிறது. முரணியத்தால் நிகழும் மாற்றத்தை விளக்கும் வகையில் மேலும் சில இயங்கியல் விதிகளை அறிமுகப்படுத்துகிறார் ஹேகல். இவற்றில் எதிர்மறை (negation), எதிர்மறையின் எதிர்மறை (negation of negation) என்பன முக்கிய விதிகளாகும். எதிர்மறை என்பது ஒரு கருத்தாக்கத்தில் அல்லது ஒரு பொருளின், அல்லது ஒரு கட்டமைப்பின் நிலைமாற்றத்தைக் குறிப்பிடுகிறது. அதாவது ஒன்று செயலிழந்து, நிலைமாறி, அதன் சிதைவால் இன்னொன்றின் வளர்ச்சிக்கு ஏதுவாகும் மாற்றீட்டை இது புலப்படுத்தும்.

உதாரணமாக, ஒரு கருத்துக்கு எதிராக முரண்பாடான இன்னொரு கருத்துத் தோன்றி, முன்னதை வாழாண்மை ஆக்குவதை எதிர்மறை என்கிறார் ஹேகல். பின்னர் முரணிய கருத்துக்கள் இரண்டுமே மாற்றமடைந்து புதிய கருத்தாக்கம் பிறக்கிறது. இவ்விதம் முரணிய கருத்துக்கள் செயலிழந்து செல்லுபடி அற்றுப் போவதை ‘எதிர்மறையின் எதிர்மறை’ என விளக்குகிறார் அவர். எதிர்மறையிலும் சரி, அல்லது எதிர்மறையின் எதிர்மறையிலும் சரி, ஒரு கருத்தாக்கம் அல்லது ஒரு பொருள் முற்று முழுதாக அழிக்கப்படுவதல்ல. இந்த மாற்றீட்டில், அவற்றிலுள்ள சாராம்சப் பண்புகள் உள்வாங்கப்பட்டு உயர் நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உதாரணமாக, ஒரு விதை முளைவிட்டுத் துளிர்த்து அதன் சிதைவிலிருந்து ஒரு மரம் வளர்கிறது. அந்த விதையின் சிதைவை எதிர்மறை என்றும், அந்த மரத்திலிருந்து மீண்டும் உற்பத்தியாகும் புதிய விதைகளை எதிர்மறையின் எதிர்மறை என்றும் அவர் விளக்கம் கொடுக்கிறார். விதையானது சிதைவு பெற்றபோதும் அதிலுள்ள சாராம்சப் பண்புகள் மரமாகி, மீண்டும் விதையாகி தொடர்ச்சியான ஒரு வளர்ச்சிப் போக்கில் கட்டவிழ்ந்து செல்கிறது.

ஹேகலின் இயங்கியல் தர்க்கீகம் மிகவும் சிக்கலானது. கனமானது. கருத்துப் புதிர்கள் நிறைந்தது. தனது இயங்கியல் கோட்பாட்டை நிறுவ மிகவும் பூடகமான வாதங்களை அவர் முன் வைக்கிறார்.

இந்தத் தர்க்கீகத்தில், இருத்தல் (being) இல்லாமை (non-being) என்ற முரணிய கருத்துகள், உண்டாகுதல் (becoming) என்ற கூட்டுக் கருத்தாக்கத்தில் தீர்வு காணப்பட்டு செழுமை பெறுகிறது என்பது ஹேகலின் வாதம். இவ்வாறு, வாதப் பிரதிவாதங்களை அடுக்கிச் சென்று மிகவும் பூடகமான தர்க்கீக உலகத்தைப் படைக்கிறார் அவர்.

ஹேகலின் இயங்கியல் மனவுலகத்திற்கே முதன்மை கொடுக்கிறது. அவரது தரிசனத்தில் சகலதுமே மனவுலகில் தொடங்குகிறது.

அகத்தின் இயல்புகள்தான் புறத்திலும் இருக்கிறது. மனவுலகத்து இயங்கியல்தான் பொருளுலகத்தையும் இயக்குகிறது. எல்லாமே ஒரே விதியில் அசைகிறது. அகம் வேறு புறம் வேறு அல்ல. அகமே புறம். மனமே இந்த உலகம். மனமே எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கிறது. மனதின் இயக்கமாக, அதன் பொருளிய வெளிப்பாடாக மெய்யுலகம் தோற்றப்பாடு கொள்கிறது. இந்த மனமானது மனிதனின் மண்டை ஓட்டிற்குள் மட்டும் செயற்படவில்லை. அதன் பரப்பு எல்லையற்றது. அது அண்டம் வரை விசாலித்து நிற்கிறது. பிரபஞ்ச மனமாக எங்கும் வியாபித்து நிற்கிறது. ஆன்மாவாக, பரமான்மாவாக, பிரம்மமாக எல்லாவற்றையும் ஆட்கொண்டு நிற்கிறது.

இயங்கியலின் சக்கரத்தில், அதன் முரணிய சுழற்சியில் பிரபஞ்ச மனமானது பிரபஞ்சத்தை இயக்கிச் செல்கிறது. தோற்றமும் மாற்றமுமாகச் சகலதையும் படைத்து, சகலதையும் காத்து, சகலதையும் அழித்து, அந்தச் சிதைவில் சகலதின் உள்ளியல்புகளையும் உள்வாங்கி, உயர்நிலைப் பரிணாம வளர்ச்சியில் பரிபூரணத்துவம் என்ற இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறது.

பிரபஞ்ச மனமானது பூமியிலும் ஒரு இயங்கியல் காவியத்தை எழுதுகிறது. அதுதான் உலக வரலாறு. மனித வரலாறு. பிரபஞ்ச பிரக்ஞையின் கணங்களாக; எண்ணப் பொறிகளாக இங்கு யுகங்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நாகரீகம் தோன்றி மறைகிறது. இந்திய, சீன, கிரேக்க, ரோம, கிறிஸ்தவ நாகரீகங்கள் என்று, இந்த நாகரீகங்கள் ஒவ்வொன்றிலும், அந்த யுகத்து சமூக, அரசியல், பொருண்மிய கட்டமைப்புகள் பிரபஞ்ச மனதில் உதித்த எண்ணப் பொறியின் வெளிப்பாடாகத் தோற்றப்பாடு கொள்கிறது. அந்த எண்ணமானது, அந்த நாகரீகத்தில் அதியுன்னத வளர்ச்சியைப் பெறுகிறது. (உதாரணமாக, ரோம நாகரீகத்தில் சட்ட ஆட்சி என்ற எண்ணப்பாடு உன்னத நிலையை அடைந்ததாகக் கூறுகிறார் ஹேகல்). ஒவ்வொரு நாகரீகத்தின் சிதைவிலும், அதன் எதிர்மறையாக அந்த நாகரீகத்தின் சாராம்ச பண்பான அந்த எண்ணம் உள்வாங்கப்பட்டு, அடுத்து யுகத்திற்கு, அடுத்த நாகரீகத்திற்கு, அடுத்த வரலாற்றுக் காலகட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வரலாற்று ஓட்டத்தில் பிரபஞ்சப் பிரக்ஞையானது மானிடத்தின் கூட்டு மனதாக தோற்றப்பாடு கொண்டு புதிது புதிதாக விழிப்பு நிலை பெற்று வளர்கிறது. முரண்பாடுகளைக் களைந்து, தளைகளை அகற்றி, விடிவை நோக்கி, முழுமையை நோக்கி முன்னேறிச் செல்கிறது.

பூமியில் மானிட வரலாறு விடுதலையை நோக்கிய முனைப்பில் முன்னேறுகிறது. சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வேண்டி மனிதர்கள் போராட்டங்களையும் புரட்சிகளையும் நிகழ்த்துகிறார்கள். பிரஞ்சுப் புரட்சி நிகழ்கிறது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கப் புரட்சி நிகழ்கிறது. மன்னராட்சி வீழ்கிறது. சர்வாதிகார ஆட்சி சரிகிறது. மனிதர்கள் மக்களாட்சியை நிறுவுகின்றனர். நவீன அரசு வடிவம் எடுக்கிறது. சுதந்திரம், சமத்துவம் என்ற மனித விழுமியங்களின் திருவடிவமாக, மனித அபிலாசைகளின் பூரணத்துவமாக நவீன அரசு தோற்றம் கொள்கிறது என்கிறார் ஹேகல். அவரது பார்வையில் அரசு என்பது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த ஒரு முழுமை. தனி மனித மனமும் சமூக மனமும் சங்கமமாகும் ஒன்றியம். அரசு என்ற இந்த உன்னதமான முழுமையிலேயே தனி மனிதன் தனது உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். தனி மனிதன் சுயநல அபிலாசைகளைத் துறந்து, பொதுநல நோக்கிற்காக அரசின் கட்டமைப்பிற்குக் கட்டுப்பட வேண்டும். அரச சட்டங்களுக்கு அடிபணிய வேண்டும். அரசு என்பது ஒரு தேசத்தின் ஆன்மா. அந்தத் தேசிய ஆன்மாவில், அந்த முழுமையான உண்மையில், தனி மனிதம் நிறைவு காண முடியும் என்கிறார் ஹேகல்.

யுகம், யுகமாக விடுதலை நோக்கிய முனைப்போடு, முடிவில்லாப் பயணத்தில் முன்னேறிச் சென்ற மனித வரலாற்று இயக்கம் இறுதியில் அரசுகளின் உருவாக்கத்துடன் தனது யாத்திரையை முடித்துக் கொள்கிறது.

அரச நிறுவனத்திற்கு ஹேகல் எதற்காக முக்கியத்துவம் கொடுத்தார்? தனது முதுமைக்கால தத்துவ எழுத்துகளில் அரசின் உன்னதம் பற்றி அவர் போதித்தது ஏன்? உலக வரலாற்று இயக்கத்தை அன்றைய ஜெர்மானிய சர்வாதிகார அரசுக்கு அடிபணிய வைத்ததன் காரணம் என்ன? பிரஞ்சுப் புரட்சியால் எழுந்த சுதந்திரத் தீ ஜெர்மானிய ஆளும் வர்க்கத்திற்குச் சவாலாக எழுந்த பொழுது ஹேகலின் தத்துவம் அன்றைய சர்வாதிகார அரசை நியாயப்படுத்த முனைந்தது என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அன்றைய ஜெர்மானிய அரசும் மக்கள் சமூகமும் முரண்பட்டு நின்றபொழுது, தனி மனித சுதந்திரங்களை அரசு மிதிக்கும் பொழுது, மனிதரிடையே சமத்துவம் நிலவாத பொழுது, அரசின் மகத்துவம் பற்றி அவர் எழுதியது ஜெர்மானிய இளம் புரட்சியாளர்களை சீற்றம் கொள்ளச் செய்தது. இந்த இளம் புரட்சியாளர்களில் முக்கிய சிந்தனையாளராக விளங்கியவர் கார்ள் மாக்ஸ். நவீன அரசின் தோற்றப்பாட்டுடன் மனித வரலாற்று இயக்கம் நிறைவு காண்கிறது என்ற ஹேகலின் கருத்தை கார்ள் மாக்ஸ் நிராகரித்தார். அன்றைய ஜெர்மானிய அரசு ஒரு முதலாளிய சர்வாதிகார அரசு. அந்த அரசில் ஒரு அடிப்படையான முரண்பாடு நிலவியது. அதாவது, முதலாளிய ஆளும் வர்க்கத்திற்கும், ஆளப்படும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் மத்தியில் முரண்பாடு நிலவியது. வர்க்க முரண்பாடுகள் நிலவும் வரை சமத்துவமும் சுதந்திரமும் தோன்றாது. முரண்பாட்டினால் எழும் வர்க்கப் போராட்டமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஆகவே, வர்க்க முரண்பாடு நீங்கிய, சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் பொதுவுடமைச் சமுதாயத்தில்தான் மனித வரலாறு பூரணத்துவம் பெறும் என்பது கார்ள் மாக்சின் தத்துவம்.

ஹேகலின் தத்துவார்த்த சிந்தனை கார்ள் மாக்சை வெகுவாகக் கவர்ந்தது என்பது உண்மை. எனினும் ஹேகலின் தத்துவத்தை அவர் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஹேகலின் வரலாற்றுத் தரிசனத்தில் எத்தகைய கருத்துக்களை அவர் நிராகரித்தார், எத்தகைய கருத்துக்களை உள்வாங்கித் தனது சமூக வரலாற்றுத் தத்துவத்தைப் படைத்தார் என்பதை இனி விரிவாகப் பார்ப்போம்.

III

ஹேகலின் தத்துவார்த்த எழுத்துகளை ஆன்மீகவாதம் என்றும், புதிரான புராணக்கதை என்றும் கடுமையாக விமர்சித்த கார்ள் மாக்ஸ் அவரது இயங்கியல் கோட்பாட்டை மெச்சத் தவறவில்லை. ‘இயக்கத்தின் இரகசியத்தை முதன் முதலாக ஆழமாக விளக்கிய பெருமை ஹேகலைச் சாரும்’ எனப் பாராட்டினார். எனினும் ஹேகலின் இயங்கியல் இறையியலில் புதைந்து கிடக்கிறது; பிரபஞ்சம் எங்கும் வியாபித்து நிற்கிறது; ஆகாயத்தில் தலை கீழாகத் தொங்கும் அதனை, பூமிக்கு கொண்டு வந்து நிலத்தில் காலூன்றச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார் மாக்ஸ். ஹேகலின் இயங்கியல் எண்ண விதை பூடகமான ஆன்மீக மேலுறையால் போர்த்தப்பட்டிருக்கிறது. இந்த மேலுறையை கழற்றி எறிந்து விட்டு விதையை மட்டும் எடுக்க வேண்டும் என்று இன்னொரு இடத்தில் கூறுகிறார்.

ஹேகலின் கருத்துலகிலிருந்து இயங்கியலைப் பிரித்தெடுக்கும் அறுவைச் சிகிச்சையை மாக்சீயம் நுட்பமாகச் செய்திருக்கிறது. இந்த அறுவைச் சிகிச்சை மூலம் பிரபஞ்ச யாத்திரையில் சென்ற இயங்கியல் பூமிக்குக் கொண்டு வரப்படுகிறது. சமூக எதார்த்த நிலத்தில் நிறுத்தப்படுகிறது.

ஹேகலின் ஆன்மீகத்தை மாக்சீயம் விரட்டியது. ஆயினும் ஹேகலின் ‘ஆவியை’ மாக்சீயத்தால் விரட்ட முடியவில்லை. அது மறைபொருளாக, எதிர்மறையின் சாகாத பண்பாக மாக்சீயத்தில் புரையோடிக் கிடக்கிறது.

மாக்சீயத்தின் பிதாமகர்களான மாக்ஸ், ஏங்கல்ஸ் தொடக்கம், மாக்சீயப் புரட்சிவாதிகளான லெனின், மாவோ மற்றும் பல நவ-மாக்சீய தத்துவ அறிஞர்கள் வரை ஹேகலின் இயங்கியல் தத்துவம் பலரால் பல்வேறு ரகங்களில், பல்வேறு வடிவங்களில் உங்வாங்கப் பட்டிருக்கிறது.

மாக்சின் தோழரான ஏங்கல்ஸ் இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையில் இயற்கையின் இரகசியங்களை விளக்க முனைந்தார். இயற்கையின் இயங்கியல் (dialectics of nature) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் இயங்கியல் விதிகளை விஞ்ஞான விதிகளாக நிறுவ முனைகிறது. உயிருலகமும் பொருளுலகமும் இயங்கியலால் இயக்கப்படுவதாக அவர் தரும் பல உதாரணங்களை இன்றைய அறிவியல் ஏற்க மறுக்கிறது. அன்றைய காலகட்டத்தில், அவர் இயங்கியலின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தி எழுதினார் என்பதை இன்று பலர் ஒப்புக்கொள்கிறார்கள்.

இயங்கியலின் அடிப்படையில் ஆன்மத்தின் சூட்சுமத்தை விளக்க முனைந்தார் ஹேகல். அதே இயங்கியல் விதிகளைக் கொண்டு இயற்கையின் இரகசியங்களை விளங்க முனைந்தார் ஏங்கல்ஸ். அதே விதிகளைக் கொண்டு சமூக வரலாற்று இயக்கத்தை விளக்க முனைந்தார் மாக்ஸ்.

ஹேகலின் இயங்கியலுக்கும் மாக்சிய இயங்கியலுக்கும் மத்தியில் அடிப்படையான வேறுபாடு உண்டு என வாதிப்பவர்களும் உளர். ஹேகலின் இயங்கியல் கருத்து நிலை சார்ந்தது; அகவயமானது; அது நிஜவுலகத்தின் நிழலான மனவுலகத்தை ஆராய்கிறது. ஆனால் மாக்சின் இயங்கியல் பொருளியம் சார்ந்தது; அது நிஜவுலகத்தின் மெய்யுண்மைகளை விளக்க முனைகிறது என்பது இவர்களது வாதம். இவ்விதம் ஹேகலின் சிந்தனையிலிருந்து மாக்சீய இயங்கியலை வேறுபடுத்தி, அதனைப் பொருளிய இயங்கியல் (materialistic dialectics) என இவர்கள் வர்ணிக்கிறார்கள். இந்த வேறுபாட்டில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் இந்த வேறுபாடு ஆய்வுப் பொருள் சார்ந்தது; ஆய்வுமுறை சார்ந்தது. ஆனால், இயங்கியலின் மூல விதிகளில் அடிப்படையான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்த மூல விதிகளை நெறித்தவர் ஹேகல். இது அபாரமான கண்டுபிடிப்பு என மாக்சீயத்தின் தந்தைகளே மெச்சியிருக்கிறார்கள். இந்த மூல விதிகளை மாக்சீயம் உள்வாங்கி, அதன் அடிப்படையில் ஆழமான சமூக ஆய்வுகளையும், நடைமுறைப் பரிசோதனைகளையும் செய்திருக்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஹேகலின் இயங்கியல் விதிகளை மாக்சீயம் உள்வாங்கி, அவற்றை சீரமைத்து, செழுமைப்படுத்தி, சிறப்பான ஆய்வுக் கருவியாகக் கையாண்டிருக்கிறது எனலாம். இயக்கத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்த ஹேகல், அதனைப் படைத்தலின் சூட்சுமமாகக் கொண்டார். பிரபஞ்சப் பேரான்மாவின் சிருஷ்டிப்பு வித்தையாகக் கண்டார். இதனால் அவரது இயங்கியல் தத்துவம் ஆன்மீக உலகத்தின் சிகரத்திலிருந்தே மனித வாழ்க்கையை நோக்குகிறது. இந்த நோக்கில், மனித வாழ்வும் மனித வரலாறும் தெய்வீகத் திருக்கூத்தாக அவருக்குத் தென்பட்டது. இயங்கியலின் மூல விதிகளை நெறித்து, அந்தப் பிரமாதமான கண்டுபிடிப்பை ஆன்மீக கருத்துலகில் புதைத்து விடுகிறார் ஹேகல்.

கார்ள் மாக்சின் எழுத்துக்களில் ஹேகலின் இயங்கியல் விதிகள் பொருளுலகின் எதார்த்த களத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. மெய்யுலகின் இயங்கு விதிகளாக அவை நிறுவப்படுகின்றன.

கார்ள் மாக்ஸ் ஒரு பொருளியவாதி. பொருளுலகத்தையே மெய்யுலகமாகக் கண்டவர். பொருளுலகத்திற்கே முதன்மை கொடுத்தவர். பொருளுலகத்திலிருந்தே மனவுலகம் தோற்றப்பாடு கொள்கிறது என்ற கருத்தைக் கொண்டவர். அவரது உலகப் பார்வை ஹேகலின் ஆன்மீகக் கருத்துலகிற்கு நேர் மாறானது.

ஹேகலின் தரிசனத்தில், வரலாறு என்பது ஒரு தெய்வீகச் சக்தி. மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி. மனித உலகத்திற்கு அந்நியமான சக்தி. மனிதனுக்குப் புறம்பாக நின்று, ஆனால் அதே சமயம், மனிதனுக்கு புலனாகாத ஒரு புனித பயணத்தில், பரிபூரணத்துவத்தை நோக்கிய, முழு மனித விடுதலையை நோக்கிய பரிணாமப் பயணத்தில், மனிதனை வழிநடத்திச் செல்லும் ஒரு சக்தி. இது பிரம்மமாக, பிரபஞ்சப் பேரியக்கமாக, பிரபஞ்ச மனமாக, எங்கும் எதிலும் சர்வவியாபகம் கொண்டு எல்லாவற்றையும் இயக்குகிறது. இது ஒரு இயங்கு சக்தி. சிருஷ்டி சக்தி. இந்தத் தெய்வீக சக்தி இயங்கியல் சக்கரத்தில் சுழல்கிறது. இயங்கியல் விதிகளுக்கு அமைய இயங்குகிறது. இப்படியாக, ஹேகலின் தத்துவார்த்த எழுத்துக்கள் இயக்கத்தின் மூல விதிகளை பிரம்ம சூத்திரமாக மாற்றி, அதன் அடிப்படையில் மனித வாழ்விற்கும் வரலாற்றிற்கும் விளக்கங்கள் கொடுக்கிறது.

கார்ள் மாக்சைப் பொறுத்த வரை, மனிதனின் பொருளிய வாழ்வே எல்லாவற்றிற்கும் மூலமானது. மனித மனமும், மனித உறவுகளும், மனித வாழ்வும், மனித வரலாறும் – எல்லாமே மனிதனின் பொருளிய வாழ்விலிருந்து பிரவாகமெடுக்கிறது. இந்தப் பொருளிய வாழ்வின் மூல இயக்கமாகவே இயங்கியலை நிறுவுகிறார் மாக்ஸ்.

இந்தப் பொருளிய வாழ்வு மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மனிதனே பொருளுலகத்தைப் படைக்கிறான். மனித செயற்பாட்டின் மூலமே பொருளுற்பத்தி நிகழ்கிறது. இந்தப் பொருளுற்பத்தியில் நிகழும் ஒட்டுமொத்தமான உறவுகளின் கூட்டமைப்பாக பொருண்மியக் கட்டமைப்பு உருவாக்கம் பெறுகிறது. அதுவே, சமூகத்தின் அடித்தளமாக அமைகிறது. பொருண்மிய வளர்ச்சிப் போக்கில், பொருள் உற்பத்தி வடிவங்களில் தோன்றும் மாற்றங்கள் சமூக அமைப்பிலும் மாற்றங்களை நிகழ்த்துகிறது. இந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திச் செல்லும் மாபெரும் இயங்கு சக்தியாக வரலாறு இயங்குகிறது. பொருண்மிய உறவுகளில் எழும் முரண்பாடும், அந்த முரண்பாட்டைக் களைந்து விட மனிதர்கள் நிகழ்த்தும் போராட்டமும், அந்தப் போராட்டத்தால் நிகழும் சமூக மாற்றமுமாக வரலாறு நகர்கிறது. எனவே, வரலாறு என்பது சமூக மாற்றத்தை நிகழ்த்தும் இயங்கு சக்தி. இது பொருளுற்பத்திக் களத்திலிருந்து எழுவதால் அதனைப் பொருளிய வரலாறு அல்லது வரலாற்றுப் பொருளியம் (historical materialism) என்கிறார் கார்ள் மாக்ஸ். இந்தப் பொருளிய வரலாற்றை நகர்த்திச் செல்லும் இயங்கு விதிகளாக இயங்கியல் விதிகள் இயங்குகின்றன.

இயங்கியல் பற்றி விளக்கமான ஆய்வுரைகள் எதையும் கார்ள் மாக்ஸ் எழுதிவிடவில்லை. ஆனால் அவரது தத்துவார்த்த எழுத்துக்களிலும், சமூக, பொருண்மிய ஆய்வுகளிலும் இயங்கியல் கருத்தாக்கங்கள் செறிந்து கிடக்கின்றன. இயங்கியலை ஒரு விளக்கக் கோட்பாடாக, ஒரு ஆய்வுக் கருவியாகக் கையாண்டு, சமூக மெய்யுண்மைகளை அவர் பிட்டுக் காட்டினார். இயங்கியல் ஆய்வு முறைமையின் (dialectical methodology) ஒரு தலை சிறந்த உதாரணமாக அவர் எழுதிய ‘மூலதனம்’ விளங்குகிறது.

கார்ள் மாக்ஸ், மனித சமூகத்தை ஒரு முரண்பாட்டுக் களமாகக் கண்டார். அவரது சமூக ஆய்வுகளில் இயங்கியலின் மூல விதியான முரணியம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

சமூகம் என்பது தனிமனிதர்களைக் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் அல்ல. எல்லா மனிதர்களும் ஒன்று சேர்ந்து, ஒத்திசைவாக, ஒன்றித்திருக்கும் ஒரு சுவர்க்க பூமியும் அல்ல. சமூகம் என்பது முரண்பாடுகள் நிறைந்த ஒரு உலகம். வர்க்கம் என்றும், சாதி என்றும், மதம் என்றும், ஏழை என்றும், பணக்காரன் என்றும், ஆளுபவன் என்றும், ஆளப்படுபவன் என்றும், ஒடுக்குபவன் என்றும், ஒடுக்கப்படுபவன் என்றும், சுரண்டுபவன் என்றும், சுரண்டப்படுபவன் என்றும், ஆண் என்றும், பெண் என்றும் மனித உறவுகளில், சமூகப் பிரிவுகளில், எங்கும், எல்லாவற்றிலும் முரண்பாடு தலைதூக்குகிறது. சமூகமானது முரண்பாடுகள் நிறைந்த ஒரு போராட்ட களம். கொந்தளிப்புகளும், நெருக்கடிகளும் நிறைந்த மனித உலகம். இந்த முரண்பாடுகளே சமூகத்தின் அசைவியக்கத்திற்கு காரணிகளாக இருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் இயல்புகளை இனம் கண்டு கொள்வதன் மூலமே சமூக அசைவியக்கத்தின் தன்மைகளைப் புரிந்து கொள்ளலாம். சமூக அசைவியக்கமாக கட்டவிழும் சமூக வரலாற்றின் போக்கினையும் அறிந்து கொள்ளலாம்.

மனிதர்களின் சமூக வாழ்வைப் பொறுத்த வரை, பொருளாதார வாழ்வே முக்கியமானது. பொருளுற்பத்தியே மனித வாழ்வுக்கு ஆதாரமானது. மனித தேவைகளை நிறைவு செய்வதும் அதுவே. இதனால், சமூகக் கட்டமைப்பில் பொருண்மிய அமைப்பிற்கே பிரதான இடத்தைக் கொடுக்கிறார் கார்ள் மாக்ஸ். பொருண்மிய அமைப்பே பொருளுற்பத்தியின் மையம். அதுவே சமூகத்தின் திண்ணியமான அடித்தளம். அந்த அடித்தளத்தின் மேற்தளமாகவே மற்றெல்லாம் இயங்குகிறது. பொருளிய வாழ்வே மனவுலகத்தையும் நிர்ணயிக்கிறது. பொருளிய புறநிலைகளின் வெளிப்பாடாகவே கருத்துலகமும் தோற்றப்பாடு கொள்கிறது.

பொருளுற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில், ஒரு காலகட்டத்தில், உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் மத்தியில் முரண்பாடு எழுகிறது. அந்த முரண்பாடு முற்றி, வர்க்கப் போராட்டம் தீவிரம் பெறுகிறது. சமூகப் புரட்சிக்கான புறநிலை தோன்றுகிறது. இறுதியில், சமூகப் புரட்சி வெடிக்கிறது. இந்தச் சமூகப் புரட்சியால் பொருண்மிய கட்டுமாணத்தில் மாற்றம் நிகழ்கிறது; உற்பத்தி உறவுகளில் மாற்றம் நிகழ்கிறது; சமூக வடிவத்தில் மாற்றம் நிகழ்கிறது. இதனால் புதிய சமுதாயம் பிறக்கிறது. இந்தப் புரட்சிகரமான சமூக மாற்றம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாக இடம்பெறுகிறது. இந்த வரலாற்று நிகழ்வு சமூகத்தை ஒரு புதிய படிநிலை வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.

இப்படியாக, கடந்த காலங்களில் சமூக மாற்றங்கள் நிகழ்ந்து புதிய சமூக வடிவங்கள் தோன்றி, பொருளாதார கட்டமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் கார்ள் மாக்ஸ். இந்த சமூக வடிவங்களை புராதன பொதுவுடமை சமுதாயம், அடிமைச் சமுதாயம், பிரபுத்துவ சமுதாயம், முதலாளிய சமுதாயம் என அவர் வகைப்படுத்தினார். ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில், மனிதர்கள் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த யுகத்தில், சொத்துரிமைப் பிரச்சினை இருக்கவில்லை. அதனால் ஆதி சமூகத்தில் வர்க்கப் பிரிவுகள் தோன்றவில்லை. ஆயினும் காலப்போக்கில், மனிதர்கள் நிலத்தைப் பகிர்ந்து விவசாய உற்பத்தியில் ஈடுபட்ட காலத்தில் சொத்துரிமைப் பிரச்சினை தோன்றி வர்க்கங்கள் பிறந்தன. கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்களில் அடிமைகளின் உழைப்பை சுரண்டி விவசாய, கைத்தொழில் துறைகள் வளர்ந்தன. ஆண்டான் அடிமைகளாக வர்க்கங்கள் தோன்றின. அடிமை சமுதாயத்தின் அழிவிலிருந்து பிரபுத்துவ உற்பத்தி வடிவம் தோன்றி, பிரபுக்களும் கூலி விவசாயிகளும் என்ற வர்க்கங்கள் தோன்றின. இதனையடுத்து, ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியாலும், விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளாலும் உற்பத்தி சக்தியில் நிகழ்ந்த மாற்றம் காரணமாக புதிய உற்பத்தி வடிவமாக முதலாளியம் தோற்றம் எடுத்தது. முதலாளிய உற்பத்தி வடிவத்தில், முதலாளி, தொழிலாளி என்ற இரு பெரும் வர்க்கங்கள் தோற்றம் கொண்டன. இவ்விதம் உற்பத்தி வடிவங்களில், உற்பத்தி உறவுகளாக தோன்றும் வர்க்கங்களும் அவை மத்தியில் எழும் போராட்டங்களுமாக சமூக மாற்றங்களை நிகழ்த்தி, மனித வரலாறு முன்னேறிச் செல்வதாக மாக்சின் வரலாற்றுப் பொருளியம் கூறுகிறது.

கார்ள் மாக்சின் சமூக வரலாற்றுக் கோட்பாட்டில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இந்தக் கோட்பாடு பொருண்மிய நியதியை (economic determinism) வலியுறுத்துகிறது என்பது சிலரது குற்றச்சாட்டு. அதாவது, பொருளாதாரக் கட்டுமாணமே சமூகத்தின் சகல அமைப்புகளையும், மனித மன உலகையும் நிர்ணயிக்கும் சக்தியாகக் கொள்ளப்படுகிறது. இதில், மனித செயலாக்க சக்திக்கு மேலாக பொருளிய சக்தியே மேலோங்கி நிற்கிறது என்பது இவர்களது வாதம்.

வேறு சிலர், மாக்சின் வரலாற்றுப் பொருளியத்தை, தொழில்நுட்ப நியதிவாதம் எனவும் விமர்சிப்பதுண்டு. அதாவது, உற்பத்தி சக்தியில் தோன்றும், தொழில்நுட்ப வளர்ச்சியே சமூக மாற்றத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாக்ஸ் சித்தரிக்கிறார் என்பது இவர்களது குற்றச்சாட்டு. உற்பத்தி சக்தி என்பது உற்பத்தி சாதனங்களையும், மனித தொழிலாக்க சக்தியையும் குறிக்கும். உற்பத்தி சாதனங்களில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சியே பொருளுற்பத்தி உலகில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் காரணியாக அமைகிறது. ஆகவே, தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சியே சமூக மாற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் வித்திடும் உந்து சக்தியாக விளங்குகிறது. எனவே, வரலாற்றின் இயங்கு சக்தியாகத் தொழில் நுட்பத்தையே கொள்ள வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இந்த விமர்சனங்களை எல்லாம் மாக்சீயத்தின் பிதாமகர்களே நிராகரித்திருக்கிறார்கள். லெனினும் இது பற்றி நீண்ட விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார். அவற்றின் சாராம்சம் இதுதான்.

பொருளாதார உறவுகளில் எழும் முரண்பாடு பிரதானமானது. ஆயினும் சமூக கட்டமைப்பின் பல்வேறு நிலைகளில், பல்வேறு பரிமாணங்களில், முரண்பாடுகள் தோன்றி வளர்கின்றன. சகல முரண்பாடுகளினதும் ஒட்டுமொத்தமான புறநிலை அழுத்தத்தால் புரட்சிகர சூழ்நிலை எழுகிறது. ஒடுக்கப்படும் மக்களே இந்த முரணியங்களின் அழுத்தத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். சமூகத்தின் பெரும்பான்மையாக, சமூக உற்பத்தியின் படைப்பாளிகளாக விளங்கும் உழைக்கும் மக்களே, புரட்சிகர வர்க்கமாக, புரட்சிகர சக்தியாகச் செயற்படுகிறார்கள். எனவே, முரணியங்களின் போராட்ட களமாக வர்க்கப் போராட்டம் அமைகிறது. இந்த வர்க்கப் போராட்டமே வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகிறது. வர்க்கப் போராட்டமே சமூகப் புரட்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் ஏதுவாக இருக்கிறது. வர்க்கப் போராட்டம் என்பது தானாக, தன்னியல்பாக சமூகப் புரட்சியை தோற்றுவிப்பதல்ல. வர்க்கப் போராட்டம் என்பது அணிதிரட்டப்பட்ட வெகுசன சக்தியாக எழுச்சி கொள்ளும் புரட்சிகர வர்க்கத்தின் போராட்டம். வெகுசனத்தை அணிதிரட்டவும், போராட்டத்தை முன்நகர்த்திச் செல்லவும், புரட்சியை நடத்தவும், ஆட்சியைக் கைப்பற்றவும், சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்தவும் ஒரு புரட்சிகர இயக்கம் வேண்டும். இந்தப் புரட்சிகர இயக்கமும் அதன் பின்னால் அணிதிரளும் மக்களுமே புரட்சியை நடத்த முடியும். வரலாற்றை நகர்த்த முடியும்.

கார்ள் மாக்ஸ் ஒரு வரலாற்று ஆசிரியர் மட்டுமன்றி ஒரு சமூகப் புரட்சியாளரும் ஆவார். அவர் சமூக உலகத்திற்கும் வரலாற்றுக்கும் விளக்கக் கோட்பாடுகள் அளித்ததோடு நின்றுவிடவில்லை. அவர் சமூகத்தை, உலகத்தை மாற்றியமைக்க விரும்பினார். முதலாளிய ஒடுக்குமுறையிலும், சுரண்டல் முறையிலும் சிக்குப்பட்டுச் சீரழியும் மனிதர்கள் விடுதலையடைந்து ஒரு உன்னதமான சமூக அமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டுமென ஆவல் கொண்டவர். எனவே, அவர் சமூகப் புரட்சி பற்றி எழுதினார். சமூகச் செயற்பாட்டை வலியுறுத்தினார்.

சமூக மெய்மையை, அதன் முரணிய தன்மைகளை, அதன் அசைவியக்கத்தை ஆழமாகப் பார்க்கும் ஆய்வுக் கருவியாக அவர் இயங்கியலைக் கையாண்டார். இயங்கியலில் நெறிக்கப்பட்ட சமூக அறிவியற் கோட்பாடு சமூக நிதர்சனத்தைத் துல்லியமாகக் காட்ட வல்லது; சமூக வரலாற்று இயக்கத்தை வெளிப்படுத்த வல்லது என்பது அவரது கருத்து. விளக்கக் கோட்பாடுகள் சமூக உண்மைகளைத் திரைநீக்கம் செய்து காட்டலாம். ஆனால் செயற்பாடுதான் சமூகத்தை மாற்றியமைக்க வல்லது. ஆகவே, கோட்பாடும் செயற்பாடும் ஒன்றித்து நிற்பதுதான் புரட்சிகர நடவடிக்கைக்கு இன்றியமையாதது என்பது அவரது நிலைப்பாடு.

இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையில் மாக்சின் சிந்தனைப் பாரம்பரியத்தை சமூகப் புரட்சிக் களத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் லெனினும் மாவோவும் முக்கியமானவர்கள். அக்டோபர் புரட்சிக்கு முற்கால ரஷ்ய சமூக அமைப்பை இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படையில் தெளிவாக விளக்கினார் லெனின். ரஷ்ய சமூகத்தில் அன்று நிலவிய பன்முக முரண்பாடுகளை ஆழமாக எடுத்து விளக்கி, புரட்சிக்கான புறநிலைத் தன்மைகளை அவர் சுட்டிக் காட்டினார். சமூக எதார்த்த நிலைகளை விளக்குவதோடு நின்றுவிடாது, சமூக மாற்றத்திற்காக புரட்சிகர வேலைத்திட்டத்தையும் நெறிப்படுத்தி, அதைச் செயற்படுத்தியும் காட்டினார். இதே போன்று சீனச் சமூக உலகத்தையும், அதன் முரண்பாட்டுக் கோலங்களையும் மிகவும் துல்லியமாக விளக்கினார் மாவோ. விவசாய வர்க்கத்தின் கட்டமைப்பையும் அந்த வர்க்கத்தில் நிலவிய பிரிவுகளையும் பிளவுகளையும் முரண்களையும் ஆழமாக ஆராய்ந்து, அந்த முரண்களை அகற்றும் செயற்திட்டமாக புரட்சிக் கோட்பாடுகளை அவர் உருவாக்கினார். முரணியம் பற்றி அவர் எழுதிய கட்டுரை, இயங்கியல் ஆய்வு முறைக்கு ஒரு தலைசிறந்த விளக்கவுரையாகக் கருதப்படுகிறது.

சமூகம் என்பது சிக்கலான மனித உறவுகளைக் கொண்ட ஒரு புதிரான உலகம். எத்தனையோ எதிர்வு சக்திகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, ஒன்றோடு ஒன்று முரண்பட்டு, அந்த முரண்களின் முகங்கள் தெரியாதவாறு ஒன்றோடு ஒன்று ஒன்றித்து நின்று, ஒரு பொய்யான தோற்றப்பாட்டுடன் சமூகம் இயங்குகிறது. இந்தத் தோற்றப்பாட்டிற்கு அப்பால், மறைபொருளாக ஒளிந்திருக்கும் சமூக மெய்யுண்மைகளை இனம் கண்டு அறிவதற்கு இயங்கியல் ஆய்வு இன்றியமையாதது. இதில் முரணிய விதி முக்கியமானது. அதுவே சமூக இயக்கத்தின் இரகசியங்களை வெளிக்காட்ட வல்லது. இந்த முரணியம் ஒருமுகத் தன்மை கொண்டதல்ல; அது பல்முகப் பரிமாணங்களைக் கொண்டது என விளக்குகிறார் மாவோ.

சிக்கலான வர்க்க உறவுகளால் பின்னப்பட்டிருக்கும் சமூக உலகத்தில், முரண்பாடுகளும் சிக்கலானதாக பின்னப்பட்டிருக்கின்றன. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக, ஒன்றன் மீது ஒன்று தாக்கம் விளைவிப்பதாக, சமூக இயக்கத்தின் நீரோட்டமாக அசைகின்றன. இந்த சமூக முரண்பாட்டு உலகத்தைப் பல ரகங்களாக வகைப்படுத்துகிறார் மாவோ. பிரதான முரண்பாடு என்றும், இரண்டாம் தர முரண்பாடு என்றும், பகை முரண்பாடு என்றும், சிநேக முரண்பாடு என்றும், சமநிலையற்ற வளர்ச்சிப் போக்குடைய முரண்பாடு என்றும், இவை நிரைப்படுத்தி வகைப்படுத்தப்படுகின்றன. நதிகள் சமுத்திரத்தில் சங்கமமாவது போன்று, எல்லா முரண்பாடுகளுமே பிரதான முரண்பாட்டைச் சந்திக்கின்றன. அதற்கு முண்டு கொடுத்து நிற்கின்றன. இந்தப் பிரதான முரண்பாடு முக்கியமானது. அது முற்றிக் கனியும்போதே புரட்சிகரப் புறநிலை பிறக்கிறது. இந்தப் பிரதான முரண்பாட்டையும் அதோடு பிணைந்து நிற்கும் ஏனைய முரண்பாடுகளையும் இனம்கண்டு கொள்வதன் மூலமே சமூக உலகத்தை ஆழமாகத் தரிசித்துக் கொள்ள முடியும் என்கிறார் மாவோ.

முரணியக் கோட்பாட்டை விரிவுபடுத்தி, அதனைச் செழுமைப்படுத்த மாவோ, லெனின் போன்றோர் நிகழ்த்திய சமூக ஆய்வுகளை உதாரணம் காட்டி, ஹேகலின் இயங்கியலுக்கும் மாக்சீய இயங்கியலுக்கும் அடிப்படையான, அமைப்பு ரீதியான வேறுபாடு உண்டு என வாதிடுகிறார் பிரபல நவ மாக்சிய அறிஞரான அல்தூசர். ஹேகலின் தத்துவம் கருத்துலகம் சார்ந்தது. ஆன்மீக மயமானது. ஆனால் மாக்சின் ஆய்வு வரலாற்றுடன் பிணைந்து நிற்கிறது. சமூக வரலாற்றிற்கு அறிவியல் ரீதியான விளக்கத்தைக் கொடுக்கிறது என்பது அல்தூசரின் வாதம்.

மாக்சீயத்தை ஒரு வரலாற்று விஞ்ஞானக் கோட்பாடாக நிறுவுவதாயின் மாக்சின் சிந்தனை உலகிலிருந்து ஹேகலின் ‘ஆவியை’ விரட்ட வேண்டும் என்கிறார் அல்தூசர். அவரது தத்துவார்த்த எழுத்துக்கள் இந்தக் காரியத்தையே செய்ய முனைகின்றன. அல்தூசரின் எழுத்துக்கள் நவ மாக்சிய சிந்தனை உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தச் சர்ச்சையையும் அதன் வாதப் பிரதிவாதங்களையும் விளக்கிக் கூறுவது இக் கட்டுரையின் நோக்கமல்ல. நாம் இங்கு எடுத்துக் கொண்ட விடயம், ஹேகலின் தத்துவம் மாக்சின் சமூக வரலாற்றுக் கோட்பாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியதாகும். ஹேகலின் சிந்தனையை மாக்சியம் எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறது என்பது பற்றியே நாம் இங்கு பார்ப்போம். இந்தச் சிந்தனை வரம்பிற்குள் நின்றே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

கார்ள் மாக்சின் சிந்தனையுலகை இரு கால கட்டங்களாகப் பிரித்து, ஒன்றை இளம் மாக்சின் தத்துவார்த்த எழுத்துக்கள் என்றும், மற்றதை முதிர்ந்த மாக்சின் அறிவியற் கோட்பாடுகள் என்றும் இருவகைப்படுத்துகிறார் அல்தூசர். முன்னது சித்தாந்த உலகம் சார்ந்தது. பின்னது அறிவியல் உலகம் சார்ந்தது. முன்னதில் ஹேகலின் தத்துவப் பிசாசு குடிகொண்டிருக்கிறது. பின்னதில் அது விரட்டப்பட்டுவிட்டது. முன்னது தத்துவ விமர்சனம். பின்னது சமூக வரலாற்று விஞ்ஞானம். இப்படியாக மாக்சின் எழுத்துலகை இரு கூறுகளாகப் பிரித்து, இடையே ஒரு சிந்தனை முறிவு ஏற்பட்டுள்ளதாக வாதாடுகிறார் அல்தூசர்.

இந்த வாதம் வலிமையற்றது. ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனென்றால் அல்தூசர் கூறுவதுபோல மாக்சின் எழுத்துக்களில் ஒரு அடிப்படையான சிந்தனை முறிவு (epistemological break) ஏற்பட்டதாக சொல்லிவிட முடியாது. அவரது எழுத்துக்களில் ஒரு சிந்தனைத் தொடர்ச்சி இருக்கிறது. ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது. இளம் பிராயத்தில் அவர் தத்துவம் பற்றி எழுதினார். முதிய காலத்தில் பொருண்மியம் பற்றி எழுதினார். ஆனாலும் அவரது தத்துவப் பார்வை, உலகப் பார்வை, அவரது முதிர்ந்த கால எழுத்துக்களிலும் ஆழமாக வேர் பதித்து நிற்கின்றன. ஹேகலின் இயங்கியல் தத்துவமானது மாக்சின் சிந்தனைத் தொடர்ச்சிக்கு ஆதாரமாக நிற்கிறது.

ஜெர்மானிய தத்துவம், பிரஞ்சு அரசியல், பிரித்தானிய பொருண்மியம் என்ற ரீதியில், காலத்திற்குக் காலம் அந்தந்த நாடுகளில் வாழ்ந்தபோது, அந்தந்த நாடுகளின் வரலாற்றுப் புறநிலைகளாலும் சிந்தனைப் போக்குகளாலும் ஈர்க்கப்பட்டு, அந்தந்த துறைகள் பற்றி மாக்ஸ் எழுதினார். அவர் எங்கு சென்றாலும், எதனை எழுதினாலும், ஹேகலின் ‘ஆவி’ அவரைப் பின்தொடர்ந்தது. அதே ‘ஆவிதான்’ ஹேகலின் இயங்கியல் தத்துவம். அது அவரது எல்லா எழுத்துக்களிலும் ஆட்கொண்டு நிற்கிறது.

முதிர்ந்த பருவத்தில் அவர் பிரித்தானியாவில் வாழ்ந்தபொழுது, ஆங்கிலேய முதலாளிய உற்பத்தி உலகின் அராஜகப் போக்கு அவரை ஆழமாகப் பாதித்தது. பல வருடங்களை லண்டன் ‘மியூசியம்’ நூலகத்தில் செலவிட்ட அவர், ‘மூலதனத்தை’ எழுதினார். புரட்சிகரமான பொருண்மியக் கோட்பாடுகளைப் படைத்தார். முதலாளிய உற்பத்தி உலகின் முரணிய தன்மைகளையும், இயங்குவிதிகளையும் எடுத்து விளக்கினார். வரலாற்றுப் பொருளியத்தின் அத்திவாரத்தை அமைத்தார். அல்தூசரால் சமூக வரலாற்று விஞ்ஞானமாகச் சித்தரிக்கப்படும் சமூக வரலாற்றுப் பொருளியமும் இயங்கியல் தத்துவத்தின் அத்திவாரத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது. ஹேகலின் இயங்கியல் விதிகளே மாக்சிய வரலாற்றியலின் தூண்களாக நிற்கின்றன.

IV

இயங்கியல் ஆய்வு முறைக்கு இலக்கணமாகத் திகழும் கார்ள் மாக்சின் ‘மூலதனம்’, முதலாளிய பொருள் உற்பத்தி உலகை ஆழமாக விசாரணை செய்கிறது. தற்கால சமூகத்தின் பொருண்மிய இயங்குவிதிகளைப் பிட்டுக்காட்டுவதே இந்த ஆய்வு நூலின் இறுதி நோக்கம் என ‘மூலதனத்தின்’ முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார்.

சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாக பொருண்மியக் கட்டமைப்பு அமைந்திருக்கிறது. பொருண்மிய அமைப்பின் இயங்கு விதிகளே சமூகக் கட்டமைப்பின் அசைவியக்கத்திற்கு பிரதான காரணிகளாக விளங்குகின்றன. ஆகவே, பொருண்மிய அமைப்பின் இயங்குவிதிகளைக் கண்டுகொண்டால் சமூக இயக்கத்தின் போக்கினை, அதன் வரலாற்று நகர்வினைக் கண்டு கொள்ளலாம். இந்த நோக்கிலேயே முதலாளிய சமூகத்தின் உற்பத்தி வடிவத்தை ‘மூலதனம்’ அறுவை செய்து பார்க்கிறது.

இந்த ஆய்வில், முதலாளிய உற்பத்தி முறையில் நிலவும் முரணியங்களை மிகவும் நுட்பமான முறையில் வெளிப்படுத்திக் காட்டுகிறார் கார்ள் மாக்ஸ். இந்த முரணியங்கள் முதலாளியத்தைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இது முதலாளியத்தின் சிதைவுக்கு வழிகோலும் என அவர் நம்பினார்.

உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற பேரவாவில், முதலாளியமானது கட்டுக்கடங்காத வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இதன் விளைவுகளில் ஒன்றாக, இலாப விகிதாசாரத்தில் தவிர்க்க முடியாத வீழ்ச்சி ஏற்படும். இது முதலாளியத்தின் உள்-முரண்பாடாக எழுந்து, முதலாளிய உற்பத்தி முறையை ஸ்தம்பிக்கச் செய்யும். மறுபுறத்தில், முதலாளியத்தின் பெருவளர்ச்சி, முதலாளிய தொழிலாள வர்க்கங்களை இரு துருவப் பிளவில் இட்டுச் செல்லும். பெருமீன்கள் சிறு மீன்களை விழுங்குவது போல, பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளை ஏப்பம் விட முதலாளிகளின் தொகை சுருங்கும். அதே வேளை தொழிலாள வர்க்கத்தின் தொகை பெருகும். சுரண்டல் அதிகரிக்கும். தொடர்ச்சியாக வறுமையின் விளிம்பிற்கு பாட்டாளி வர்க்கம் தள்ளப்படும். சகித்துக் கொள்ளமுடியாத துன்பத்தில் உழைக்கும் வர்க்கம் உழலும். இதனால் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெடிக்கும். இவ்விதம் உள்-முரண்பாடாக எழும் நெருக்கடியால் முதலாளியமானது தனது புதைகுழியைத் தானாகவே தோண்டிக் கொள்ளும். அதன் புதைகுழியிலிருந்து ஒரு புதிய சமூகம் பிறக்கும். புதிய உற்பத்தி உறவுகளைக் கொண்ட ஒரு புதிய உற்பத்தி வடிவம் தோன்றும். இவ்வாறு ‘மூலதனத்தில்’ தீர்க்க தரிசனம் சொல்கிறார் கார்ள் மாக்ஸ்.

முதலாளித்துவத்தின் புதைகுழியிலிருந்து புதிய உற்பத்தி வடிவமாக சோசலிச சமுதாயம் பிறக்கும். அந்தச் சோசலிச சமுதாயத்தில் அனைத்து உற்பத்தி சாதனங்களும் பொதுவுடமையாக்கப்படும். அந்தப் புரட்சிகரமான புதிய சமுதாயத்தில் வர்க்கப் பிரிவுகள் அழிந்து சமத்துவம் நிலவும். அந்த சோசலிச சமுதாயம் மேலும் வளர்ச்சி கண்டு கம்யூனிச சமுதாயமாக உன்னத வடிவம் எடுக்கும். அந்தக் கம்யூனிச சமுதாயத்தில் அரச நிறுவனமும், ஆட்சி அதிகாரமும் அழிந்து போகும். ஆளுபவர், ஆளப்படுபவர் என்ற முரணிய பேதங்கள் முற்றாக நீங்கும். கம்யூனிசம் இறுதியில் உலகமயமாகி முழு மனித வர்க்கத்தையும் தழுவிக் கொள்ளும். அப்பொழுது, சுதந்திரமும், சமத்துவமும் பெற்றதாக மனிதம் பூரணமடையும். அத்துடன் மனித உலகத்து முரணிய இயக்கங்கள் முடிவுக்கு வரும். அந்நிலையில் வரலாற்றின் அசைவியக்கம் நின்றுவிடும். இப்படி எதிர்வு கூறினார் கார்ள் மாக்ஸ்.

‘மூலதனத்தில்’ முதலாளியத்தின் சாவு பற்றி கார்ள் மாக்ஸ் கூறிய தீர்க்கதரிசனம் பலிக்கவில்லை. முதலாளிய உற்பத்தி உலகில் எழும் வர்க்க முரண்பாடு கூர்மையடைந்து, தனக்குத்தானே குழிபறித்து முதலாளித்துவம் செத்துவிடவில்லை. பதிலாக, அதுபெரும் வளர்ச்சியைக் கண்டது. ஏகபோக முதலாளியமாக, அரச முதலாளியமாக, ஆக்க நல முதலாளியமாக, காலத்திற்கு காலம் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்து விஸ்வரூபம் பெற்று பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது. முதலாளியமானது தேசிய எல்லைகளைக் கடந்து, உலகக் கூட்டணி அமைத்து சர்வதேச சக்தியாக விரிவாக்கம் பெற்று வருகிறது. இன்று உலக முதலாளியத்தின் பொருளாதாரச் சிலந்திவலைக்குள் முழு உலகமுமே சிக்குப்பட்டு நிற்கிறது.

மூலதனத்தின் ஆய்வில் முதலாளியத்தின் உண்மை முகத்தை கார்ள் மாக்ஸ் கண்டு கொள்ளவில்லை. உலகத்தின் வளங்களையும் உழைப்பாற்றலையும் சுரண்டிக்கொழுக்கும் அதன் உற்பத்தி வலுவையும் அவர் செம்மையாக எடைபோடவில்லை என்பது சில பொருண்மிய ஆய்வாளர்களது கருத்து.

தொழில்நுட்பத்தின் தன்மையை, அதன் பேராற்றலை கார்ள் மாக்ஸ் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது இன்னொரு சாரரது வாதம். உற்பத்தி சக்தியின் முக்கிய கூறாக விளங்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது உற்பத்தி உறவுகளில் முரண்பாட்டையும், நெருக்கடியையும் தோற்றுவிக்கும் எனக் கருதுவது தவறு. தொழில்நுட்பமானது மனிதத் தேவையின் நிர்ப்பந்தத்தால் பிறக்கிறது. பொருள் உற்பத்தியைச் செழுமைப்படுத்துகிறது. முழு உலகத்தையுமே ஒரு புதிய தொழில்நுட்ப யுகத்தை நோக்கி நகர்த்திச் செல்கிறது. முதலாளிய உற்பத்தியின் மூச்சாக விளங்கும் இந்த தொழில்நுட்பத்தின் வீச்சை கார்ள் மாக்ஸ் சரியாக மதிப்பாய்வு செய்யவில்லை என்பது இவர்களது நிலைப்பாடு.

சோசலிச சமூக உருவாக்கம் பற்றிய மாக்சின் எதிர்பார்ப்புகளும் நிறைவு பெறவில்லை. முதலாளித்துவம் பாரிய அளவில் வளர்ச்சி கண்ட பிரிட்டன் அல்லது ஜேர்மனியில் வர்க்க முரண்பாடு கூர்மையடைந்து, சமூகப் புரட்சி வெடித்து, சோசலிசம் உருவாக்கம் பெறும் என கார்ள் மாக்ஸ் எதிர்பார்த்தார். ஆயினும் அவர் எதிர்பார்த்ததுபோல இந்நாடுகளில் சமூகப் புரட்சிகள் நிகழ்ந்து சோசலிச சமூகம் உதயம் பெறவில்லை. மாறாக, சமூகப் புரட்சிகள் வேறு எங்கோ நிகழ்ந்தன. அதுவும் முதலாளியம் முதிர்ச்சி காணாத, நிலமானியத்தில் திளைத்து நின்ற ரஷ்யாவிலும் பின்பு சீனாவிலும் புரட்சிகள் நிகழ்ந்தன. இந்தச் சமூகப் புரட்சிகளும் இயங்கியலின் தவிர்க்கமுடியாத நியதிகளின் நிர்ப்பந்தத்தால் நிகழவில்லை. இங்கு சமுதாயப் புரட்சிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. மனித செயற்பாட்டின் திண்ணியமான முனைப்பாக இங்கு மாபெரும் சமூக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

லெனினும், மாவோவும் இயங்கியல் ஆய்வு முறைமையைக் கையாண்டனர். முரணியக் கோட்பாட்டின் அடிப்படையில் சமூக மெய்யுலகை ஆழமாக ஆராய்ந்தனர். ஆயினும், கோட்பாட்டு விளக்கத்துடன் நின்றுவிடாது செயற்பாட்டிற்கும் முதன்மை கொடுத்தனர். கோட்பாட்டுடன் செயற்பாடு கைகோர்த்து நிற்கும் பொழுதுதான் புரட்சி சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தினர். கோட்பாடும் செயற்பாட்டு அனுபவத்தில் நெறிக்கப்பட வேண்டும் என்பதை லெனின் சுட்டிக் காட்டினார். ‘வெகுசனப் புரட்சி இயக்கத்தின் நடைமுறைச் செயற்பாட்டுடன் ஒன்றித்து நிற்கும் பொழுதே ஒரு புரட்சிகரக் கோட்பாடு முழுமையான வடிவத்தை எடுக்கிறது’ என்கிறார் லெனின்.

1917ஆம் ஆண்டு நிகழ்ந்த அக்டோபர் புரட்சியை அடுத்து ரஷ்யாவில் சோசலிச அரசு நிறுவப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது உலக யுத்தத்தை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவிலும் சோசலிச அரசுகள் உருவாக்கம் பெற்றன.

உலக முதலாளியத்திற்குப் போட்டியாக எழுந்த சோசலிச அரசுகளும் சோசலிசப் பொருண்மிய உற்பத்தி வடிவங்களும் நிலைத்து நிற்கவில்லை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் ஏற்பட்ட அரசியற் பூகம்பங்கள் காரணமாக சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசுகள் தகர்ந்து விழுந்தன. 1989ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கும் டிசம்பருக்கும் மத்தியில் ஆறு கிழக்கு ஐரோப்பிய சோசலிச அரசுகள் சிதைவுற்றன. இதே ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் புரட்சிகரமான அரசியற் சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. இறுதியில் 1991ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டதை அடுத்து சோவியத் ஒன்றியத்தின் சோசலிச ஆட்சி கவிழ்ந்தது. சீனாவில் 1980ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்தே சோசலிசப் பொருளாதாரக் கட்டுமாணத்தில் அடிப்படையான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அரசின் ஆதிக்கத்தின் கீழிருந்த கூட்டுறவு விவசாய முறை நீக்கப்பட்டு, தனிப்பட்ட முறையில் உணவு உற்பத்தியில் ஈடுபடவும், உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யவும் சீன விவசாயிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. எண்பது விகிதமான சனத்தொகையைக் கொண்ட சீன விவசாய சமூகம் முதலாளிய உற்பத்தி முறையைத் தழுவிக் கொண்டது. அப்பொழுது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பதவி வகித்த டெங் சியா பிங், தனியார் சொத்துடமையை அனுமதித்ததுடன் முழு நாட்டையுமே முதலாளிய பொருளுற்பத்தி முறைக்குத் திறந்து விட்டார். சீனக் கம்யூனிஸ்ட் தலைமை ஆட்சியதிகாரத்தை இறுகப் பற்றிக்கொண்டு முதலாளியத்தைத் தழுவிக் கொண்டதால், அரசியல் நெருக்கடியைத் தவிர்த்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. எனினும், சீனாவில் சோசலிசம் தோல்வி கண்டது என்பதுதான் உண்மை.

முதலாளியம் தகர்ந்து விழும் என்றும் அதன் சமாதியிலிருந்து பொதுவுடமை சமுதாயமாக சோசலிசம் தோன்றி வளர்ந்து, உலகெங்கும் பரவி, அதன் உயர்நிலைப் பரிணாம வளர்ச்சியாக கம்யூனிச சமூகம் தோன்றும் என்றும் அந்த உன்னதமான சமூக வடிவத்தின் உதயத்துடன் மனிதர்கள் முழுமையான விடுதலை பெறுவதுடன் மனித வரலாறும் முழுமைபெற்று முடிவுக்கு வருமென மாக்சியத்தின் தந்தையர் கண்ட கனவு பலிக்கவில்லை.

சோசலிசத்தின் சிதைவுக்கான காரணங்களை ஆழமாக, விரிவாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் சில மூல காரணிகளை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பாவிலும் சோசலிச அரசுகள் சிதைவுற்றதற்குப் பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம். இந்த நாடுகளின் பொருளாதார வாழ்வு, மைய அரசின் இரும்புப் பிடிக்குள் இருந்தது. மைய அரசே பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டி அவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்தியது. சோவியத் ஒன்றியத்தைப் பொறுத்த வரை அரச பொருளாதாரத் திட்டங்கள் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமையவில்லை. மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாகக் கனரக தொழிற்சாலைகள் நிறுவும் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. உலக முதலாளிய வல்லரசுகளுடன் பனிப் போரில் ஈடுபட்டிருந்ததால் தேசிய வருமானத்தின் பெரும் பங்கு ஆயுத உற்பத்தியிலும், அணு ஆராய்ச்சியிலும், விண்வெளி ஆய்விலும் செலவிடப்பட்டது. இத்தகைய தவறான அணுகுமுறையால் சோவியத் ஒன்றியம் பாரிய உணவுத் தட்டுப்பாட்டைச் சந்திக்க நேர்ந்தது. பண வீக்கம் அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சியின் விகிதாசாரம் படிப்படியாக வீழ்ந்து பூஜ்யத்தை அடைந்ததாக சோவியத் பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகிறார்கள். மக்களின் வாழ்க்கைத் தரமும் வெகுவாகக் குறைந்தது. நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. சோவியத் மக்கள் வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்குண்டனர். முதலாளிய உலகிலிருந்து உணவுத் தானியங்களை இறக்குமதி செய்ய சோவியத் அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. சோசலிசப் பொருளாதார உற்பத்தி முறையில் மக்களுக்கு நம்பிக்கை தளர்ந்தது. கம்யூனிசக் கட்சியின் ஆட்சியமைப்பை மாற்றியமைக்க மக்கள் திடசங்கற்பம் பூண்டனர்.

சோவியத் ஒன்றியத்திலும் சரி, கிழக்கு ஐரோப்பாவிலும் சரி, சோசலிசத்தின் சிதைவுக்கு பொருளாதார நெருக்கடி மட்டும் முக்கிய காரணி அல்ல. ஒரு கொடூரமான சர்வாதிகார ஆட்சிமுறையும் அதன் கீழ் பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுமே கம்யூனிச நிர்வாகம் சிதைந்து போனதற்குப் பிரதான காரணமாகும்.

அக்டோபர் புரட்சியை அடுத்து சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபீடம் ஏறியது. கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகார ஆட்சியில் உண்மையான சனநாயகம் பேணப்படுமென லெனின் கூறிவந்தார். ஆனால் நடைமுறையில் அப்படி நிகழவில்லை. லெனினின் மறைவுக்குப் பின்னர் ஆட்சிப் பீடம் ஏறிய ஸ்டாலின் மிகவும் கொடூரமான சர்வாதிகார ஆட்சிமுறையை நிறுவினார். அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. இரவுக் கைது, சித்திரவதை, கொலைகளாக பொதுமக்கள் மீது கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. சைபீரிய பனிமண்டல சிறைகளில் பல லட்சம் மக்கள் மரணத்தைத் தழுவ நேரிட்டது. ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் பதவிக்கு வந்த குருசேஷ் 1956ஆம் ஆண்டு விடுத்த பிரகடனத்தில், ஸ்டாலின் ஆட்சிக் கால அட்டூழியங்களைப் பகிரங்கப்படுத்தினார். ஆயினும் அரச பயங்கரவாதம் முடிவுக்கு வரவில்லை.

எதிர்ப்புகளை நசுக்கி, குடிமக்களை இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தீர்மானித்த அரசு கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் சாதாரண மக்களின் சாதாரண சமூக வாழ்வு சிதறடிக்கப்பட்டது. குடும்பம், மத வழிபாடு, பண்பாட்டு வாழ்வு போன்ற சமூக வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் மனித உறவுகளைப் பாதிக்கும் வகையில் அரச சர்வாதிகாரம் மக்களின் வாழ்வில் தலையிட்டது. அன்புறவுகளுக்கு அப்பால் அரச விசுவாசத்திற்கும், கீழ்ப்படிவிற்கும் முதன்மை அளிக்கப்பட்டது. மக்களின் சிந்தனையை நெறிப்படுத்தி அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நோக்கில் ஊடகங்களையும், கல்வி முறையையும், கட்சிச் சித்தாந்தத்தையும் அரசு தனது கட்டுப்பாட்டில் இயக்கியது. ஆயினும் யதார்த்த உண்மைகளை ஊடகங்கள் வாயிலாகவும், திட்டமிட்ட பரப்புரைகள் மூலமாகவும் சோவியத் சர்வாதிகாரம் மூடிமறைக்க முனைகிறது என்பதை மக்கள் உணரத் தொடங்கினர். நீண்ட காலமாக, பல பரம்பரைகளாக சர்வாதிகார ஆட்சியின் அட்டூழியங்களைச் சகித்து வந்த சோவியத் மக்கள், எண்பதுகளின் இறுதிப் பகுதியில் கோபச்சேவின் ஆட்சிக் காலத்தில் பொறுமையின் எல்லையை அடைந்தனர். சோவியத் சோசலிச ஆட்சியை கட்டிக்காக்க விழைந்த கோபச்சேவ் சில அடிப்படையான அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஆனால் அவை மக்களின் கொதிப்புணர்வையோ, சோசலிச ஆட்சியை சிதைத்துவிட வேண்டுமென்ற அவர்களது உறுதிப்பாட்டையோ தணித்து விடவில்லை.

தனியார் சொத்துடமையை பொதுவுடமையாக ஆக்கிவிட்டால், சொத்துடமையால் எழும் வர்க்க பேதங்கள் நீங்கி சமத்துவ சமுதாயம் உருவாகும் என மாக்சீயத்தின் மூலகர்த்தாக்கள் கண்ட கனவு நிறைவேறவில்லை. மாறாக, சோசலிச நாடுகளில் ஒரு புதிய ஆளும் வர்க்கம் தோற்றம் எடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் பிரமுகர்களும் முக்கிய உறுப்பினர்களுமாக அரச நிர்வாகத்தைக் கைப்பற்றி புதிய ஆளும் வர்க்கமாக உருவெடுத்தனர். இப்புதிய ஆளும் வர்க்கமானது சர்வ அதிகாரமும், சகல வசதிகளும், சலுகைகளும் பெற்றதாக மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சக்தியாக இயங்கியது. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் ஒழுக்கக் கேடும் இப்புதிய ஆட்சியாளரிடம் குடிகொண்டதால் இவர்கள் வெகுசன விரோதிகளாக மாறினார்கள். சோசலிச உலகில் தோற்றமெடுத்த இப்புதிய அதிகார வர்க்கத்தின் அநீதிகளும் அட்டூழியங்களும் சோசலிசத்தின் வீழ்ச்சிக்கு புறநிலையை அமைத்துக் கொடுத்தன எனலாம்.

சோசலிச ஆட்சியில் சமத்துவமும் சுதந்திரமும் சம உரிமைகளும் நிலைநாட்டப்பட்ட ஒரு உன்னத சமுதாயம் பிறக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் சமத்துவத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக அவை தனி மனித அபிலாசைகளை நசுக்கி, சமூக அநீதிக்கு வழிவகுத்தன. எல்லா மனிதர்களும் தமது ஆற்றலுக்கும் திறமைக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே ஆவல் கொண்டனர். மனித ஆற்றலுக்கு மதிப்பளிக்காமல், தேவையின் அடிப்படையில் வருமானத்தை நெறித்து அரசினால் திணிக்கப்பட்ட சமத்துவமானது மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் விரோதமாக அமைந்தது. பிற தலையீடுகள் எதுவுமின்றி தமது தனிப்பட்ட வாழ்க்கையை, தமது சொந்த அபிலாசையைத் தாமாக நிர்ணயித்துக் கொள்ளவே மனிதர்கள் விரும்பினார்கள். பொது உடமை என்றும், பொதுவான கூட்டுறவு வாழ்க்கை என்றும் தேவைக்கு ஏற்றதான ஊதியம் என்றும் சோசலிசம் வழங்கிய சமத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அடிப்படையான மனித உரிமைகளோடு, தமது தலைவிதியைத் தாமாகத் தெரிவு செய்யும் சுதந்திர மனிதர்களாக வாழ்வதையே எல்லா மனிதர்களும் விரும்பினார்கள். தனி மனிதர்களின் இந்த அடிப்படையான அபிலாசைகளுக்கு சோசலிச ஆட்சிமுறை இடமளிக்கவில்லை. சோசலிசத்தின் சிதைவுக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாக அமைந்தது.

V

மானிடத்தின் வரலாறு பற்றிய ஹேகலதும், கார்ள் மாக்சினதும் சிந்தனை உலகங்களைத் தரிசித்தோம். வரலாற்றியலில் இயங்கியல் தத்துவத்திற்கு ஹேகல் அளித்த முக்கியத்துவம் பற்றியும், சமூக வரலாற்றுத் துறையில் இயங்கியல் ஆய்வுமுறையைக் கார்ள் மாக்ஸ் தழுவிக் கொண்டதையும் பார்த்தோம். ‘மூலதனம்’ என்ற தனது பிரதான நூலில் முதலாளித்துவ உற்பத்தி வடிவம் பற்றி கார்ள் மாக்ஸ் நிகழ்த்திய ஆழமான ஆய்வு பற்றியும் விளக்கினோம். முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத வீழ்ச்சி பற்றியும், கம்யூனிச சமூகத்தின் உதயத்துடன், முரணியங்கள் நீங்கிய அந்த உயர் நிலை சமுதாய வளர்ச்சியுடன் வரலாற்று அசைவியக்கம் முடிவுக்கு வருமென மாக்ஸ் கூறிய தீர்க்க தரிசனம் பலிக்கவில்லை என்பது பற்றியும் விபரமாக விளக்கினோம்.

சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும், சோசலிச உற்பத்தி வடிவங்கள் சிதைவடைந்து அங்கெல்லாம் முதலாளித்துவ பொருளுற்பத்தி பெருவளர்ச்சி கண்டு வருகிறது. சோசலிசத்தின் வீழ்ச்சியுடன் முதலாளித்துவம் எழுச்சி கண்டுள்ள இப்புதிய சூழ்நிலையில் மாக்சிய சிந்தனை மறு பரிசீலனைக்கு ஆளாகி வருகிறது. நவீன வரலாற்றியலில் மாக்சிய சிந்தனை எத்தகைய பங்கை வகிக்க முடியும்? மாக்சிய சமூகவியலை ஒரு அறிவியற் கோட்பாடாக நிறுவ முடியுமா? மாக்சியச் சிந்தனையிலுள்ள பலவீனங்கள் என்ன? சிறப்பம்சங்கள் என்ன? மனித விடுதலை நோக்கிய வரலாற்றின் அசைவியக்கம் முடிவுநிலை எய்துமா? இன்றைய வரலாற்றியல், சமூகவியல் சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய இக்கேள்வி பற்றி இனி நோக்குவோம்.

பிரபல நவமாக்சிய சிந்தனையாளரும் பிரஞ்சுத் தத்துவாசிரியருமான அல்தூசரின் சிந்தனை பற்றி ஏற்கனவே சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். மாக்சின் வரலாற்றுப் பொருளியம் ஒரு தத்துவதரிசனம் அல்ல; அது ஒரு சமூக வரலாற்று விஞ்ஞானம் என வாதிடுகிறார் அல்தூசர். நவமாக்சிய சிந்தனைப் பாரம்பரியத்தில் அல்தூசரின் தத்துவார்த்த எழுத்துக்கள் மிகவும் பிரபல்யம் பெற்றவை. சோசலிச உலகின் சிதைவுக்கு முன்னர் அவரது தத்துவ நூல்கள் பிரசுரிக்கப்பட்ட போதும், மாக்சிய சமூகவியல் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் இன்றும் சர்ச்சையை தோற்றுவித்து வருவதால், அவை பற்றி மிகவும் சுருக்கமாக இங்கு பரிசீலனை செய்து பார்ப்போம்.

வரலாற்றுப் பொருளியத்தை ஒரு சமூக விஞ்ஞானக் கோட்பாடாக நிறுவும் நோக்கில் கார்ள் மாக்ஸ் படைத்த அரசியற் தத்துவார்த்த எழுத்துக்கள் அனைத்தையும் சித்தாந்தவாதம் என ஒதுக்கிவிடுகிறார் அல்தூசர். அது மட்டுமன்றி, மாக்சிய மரபு வழி தோன்றிய தத்துவச் சிந்தனையாளர்கள் பலரது எழுத்துக்களும் அறிவியலுக்குப் புறம்பான கருத்தியல் என அவரால் நிராகரிக்கப்படுகிறது. ‘மூலதனத்தை’ மட்டுமே முக்கிய ஆய்வுநூலாக அவர் மதிப்பாய்வு செய்கிறார்.

‘மூலதனத்தில்’ மாக்ஸ் அறிமுகம் செய்யும் முக்கிய கருத்தாக்கங்களை (உதாரணமாக, உற்பத்தி வடிவம், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் போன்றன) மையமாக வைத்து வரலாற்றுப் பொருளியத்தை ஒரு விஞ்ஞானக் கோட்பாடாக நிறுவ முனைகிறார் அவர். அல்தூசரின் ஆய்வில், மாக்சியம் ஒரு சமூக அமைப்பியல் கோட்பாடாகக் கொள்ளப்படுகிறது. விஞ்ஞானம் என்பதும் அறிவை உற்பத்தி செய்யும் ஒரு கோட்பாட்டுக் கட்டமைப்பாக விளக்கப்படுகிறது. ‘மூலதனத்து’ கருத்தாக்கங்களின் அடிப்படையில், மனித சமூகத்திற்கும், சமூக இயக்கத்திற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்தை இனிப் பார்ப்போம்.

சமூகம் என்பது முழுமையான ஒரு கட்டமைப்பு (Structural Totality). பல அமைப்புகளின் கூட்டமைப்பாக அது இயங்குகிறது. இந்த சமூக அமைப்புகள் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒரு சிக்கலான ஒருமைப்பாட்டில் செயற்படுகின்றன. இந்தச் சமூகக் கட்டமைப்பின் பிரதானமான அலகுகளாக பொருண்மியம், அரசியல், கருத்தியல் ஆகியன இயங்குகின்றன. இந்த மூன்று முக்கிய அமைப்புகளின் ஒன்றியமாக சமூக வடிவமைப்பு அமையப் பெறுகிறது. சமூகத்தின் அமைப்புகள் ஒவ்வொன்றும், தமக்கே உரித்தான செயற்பாட்டைக் கொண்டவை. பொருளுற்பத்திச் செயற்பாடு, அரசியற் செயற்பாடு, கருத்து உற்பத்திச் செயற்பாடு, இப்படியாக இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும், சார்பு நிலையுடைய தனித்துவம் கொண்டவை (Relatively Autonomous). தன்னியல்பாக இயங்கிய போதும், ஒன்றோடு ஒன்று சார்ந்து நிற்பவை. இந்த அமைப்புகளின் செயற்பாடுகள், ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒன்றின் தாக்கமும், அழுத்தமும் மற்றதைப் பாதிக்கிறது. இந்த சமூக அமைப்புகளின் செயற்பாடுகளும் உறவுகளும் ஒன்றின் மீது ஒன்று விழுத்தும் தாக்கங்களும் அழுத்தங்களும் சமூக இயங்கு நிலைக்கும் அசைவியக்கத்திற்கும் காரணியாக இருக்கின்றன. இறுதியில், பொருண்மிய அமைப்பே சமூகக் கட்டமைப்பில் மாற்றத்தை நிகழ்த்த வல்ல நிர்ணய சக்தியாக அமைகிறது. அல்தூசரின் சமூக அமைப்பியல் இறுதியில் பொருண்மிய அமைப்பிற்கே முதன்மை கொடுக்கிறது.

சமூக வரலாற்று விஞ்ஞானமாக, அல்தூசர் சித்தரித்துக் காட்டும் மாக்சிய அமைப்பியலில் முரணிய விதி முக்கிய இடத்தைப் பெறுகிறது. முரணிய விதியே சமூக அசைவியக்கத்தின் இயங்கு விதியாக அமைகிறது. சமூகத்தின் பல்வேறு கூறுகளிலும், பல்வேறு நிலைகளில், பன்முகப்பட்டதாக முரணியம் செற்படுகிறது. பன்முகப்பட்ட சமூக முரண்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவாக சமூக மாற்றம் நிகழ்கிறது என்கிறார் அல்தூசர்.

அல்தூசர் கற்பிக்கும் மாக்சிய சமூக விஞ்ஞானம், வரலாற்று இயக்கத்தை ஒரு இயந்திர இயக்கமாக விளக்க முனைகிறது. அமைப்புகளும் அமைப்புகளின் உறவுகளும் அமைப்புகளின் பரஸ்பர அழுத்தங்களும் அந்த அமைப்புகளிலிருந்து தலைதூக்கும் முரண்பாடுகளும் அந்த முரண்பாடுகளின் கூட்டிணைந்த விளைவுகளும் என்ற ரீதியில் சமூக வரலாறு ஒரு இயந்திரக் கட்டமைப்பின் சக்கரமாகச் சுழல்கிறது. இதில், மனித செயலாண்மைக்கு இடமளிக்கப்படவில்லை. மனித உறவுகளுக்கும் மனித செயற்பாடுகளுக்கும் அப்பால் சமூக அமைப்புகளின் நிர்ணய சக்தி மேலாண்மை செலுத்துகிறது.

அமைப்புகளால் கட்டப்பட்ட அல்தூசரின் சமூக உலகில் மனிதர்கள் பங்கு சிறுமைப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் சமூக அமைப்புகளின் சுமைதாங்கிகளாக (Bearers of Structures) சித்தரிக்கப்படுகிறார்கள். சமூக அமைப்புகளால் வனையப்பட்ட பொம்மைகளாக உருவாக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பியல் விஞ்ஞானத்தின்படி, மனித வரலாற்றை மனிதர்கள் படைப்பதில்லை. அமைப்புகளின் முரணிய இயக்கமே மனிதர்களையும் இயக்கி, மனித வரலாற்றையும் நகர்த்திச் செல்கிறது. ஒட்டுமொத்தத்தில் அல்தூசரின் வியாக்கியானம் மாக்சியத்தை ஒரு வரண்ட விஞ்ஞானவாதமாக மாற்ற முனைகிறது.

மனித செயற்பாட்டை வலியுறுத்தி, மனித போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூக முரண்பாடுகள் பற்றியும், சமூகப் புரட்சி பற்றியும் கார்ள் மாக்ஸ் எழுதிய தத்துவார்த்த, அரசியல் நூல்களை அல்தூசர் நிராகரித்தமை மாக்சிய சிந்தனை வளர்ச்சிக்கு இழைக்கப்பட்ட பெரும் தவறு எனக் கண்டிக்கிறார் ஆங்கில தத்துவ அறிஞரான ஈ.பி.தொம்சன். மாக்சியத்தை ‘மூலதனத்திற்குள்’ மட்டும் முடக்கி அதற்கு விஞ்ஞான அந்தஸ்தை கொடுக்க முனையும் அல்தூசரின் முயற்சி, மாக்சியத்தின் கருத்துப் பரப்பையும் செறிவையும் ஆழத்தையும் சிதைத்து விடுகிறது என்கிறார் அவர். மாக்சிய வரலாற்றியலுக்கு வரம்புகளைக் கட்டி, அதனை ஒரு அமைப்பியல் நியதிவாதமாக மாற்றியிருக்கிறார் அல்தூசர் என்பது தொம்சனின் குற்றச்சாட்டு. சதா இயங்கு நிலையில் உள்ளதும், சதா மாறிக் கொண்டிருப்பதுமான வரலாற்று ஓட்டத்தை விசாரணை செய்யும் ஆய்வுக் கோட்பாடுகள், கால மாற்றத்திற்கு ஏற்ப, நிகழ்வுப் போக்குகளுக்கு அமைய மாற்றியமைக்கப்பட வேண்டும்; மிகவும் இறுக்கமான, அசைந்து கொடாத, அமைப்பியல் கோட்பாடுகளால் சமூக இயக்கத்தையும் மாற்றத்தையும் செம்மையாக ஆய்வு செய்வது சாத்தியமல்ல என்கிறார் தொம்சன்.

வரலாறு என்பது தொடர்ச்சியாகக் கட்டவிழ்ந்து செல்லும் மாற்றத்தையும் வளர்ச்சிப் போக்கையும் வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த வரலாற்று இயக்கத்தில் மனித செயலாக்கம் பிரதானமானது. மனிதர்களின் திண்ணியமான செயற்பாட்டின் முனைப்பாகவே சமூக உறவுகளிலும் சமூக உலகத்திலும் மாற்றம் நிகழ்கிறது. இந்த வகையில், மனிதர்களே வரலாற்றின் கதாநாயகர்கள். இந்த மனிதர்களை, தனி மனிதர்களாக அல்லாமல், சமூகப் பிறவிகளாகச் சித்தரித்து, வர்க்கப் பிரிவுகளாக வகைப்படுத்தி, வர்க்க முரண்பாட்டில் மோதும் எதிர்வு சக்திகளாக இனம் கண்டு, அந்த முரணியப் போரில் கட்டவிழும் சமூக மாற்றத்தை வரலாறாகக் கற்பிக்கிறார் மாக்ஸ். ஆனால் அல்தூசரின் மாக்சியம், மனித செயலாக்க சக்தியை அமைப்புகளின் நிர்ணய சக்திக்குள் முடக்கி விடுகிறது. வரலாற்றுப் பொருளியத்தை விஞ்ஞான மயமாக்கும் அவரது முயற்சி, மாக்சியத்தை செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக வறுமைப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த உண்மையைச் சுட்டிக் காட்டும் நோக்கில்தான், ஈ.பி.தொம்சன், அல்தூசரை விமர்சித்து எழுதிய நூலுக்கு, Poverty of Theory எனத் தலைப்பு வைத்திருக்கிறார்.

இன்னொரு கோணத்திலிருந்து, மாக்சிய வரலாற்றியலை விஞ்ஞானமாகக் கொள்ள முடியாது என வாதித்து, கார்ள் பொப்பர் (Karl Popper) என்ற தத்துவ அறிஞர் ஒரு நூலை எழுதினார். அதற்கு Poverty of Historicism எனத் தலைப்பிட்டிருக்கிறார். கார்ள் பொப்பர் என்ன சொல்கிறார் என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

பௌதிகவியல், வானியல், உயிரியல் போன்ற இயற்கைசார் விஞ்ஞானங்களை (Natural Sciences) ஒத்ததாக சமூகவியலும், அறிவியல் அந்தஸ்தை எட்டிப் பிடிப்பதற்கு முயற்சிகளை செய்து வருகிறது. ஆயினும் இயற்கைசார் விஞ்ஞானங்களைப் போன்று அவதானிப்பிலும், பரிசோதனை ஆய்வு முறைமையிலும் சமூகவியலை நெறிப்படுத்துவது கடினம். அது சாத்தியமும் இல்லை என்கிறார் பொப்பர்.

சமூகம் ஒரு வித்தியாசமான உலகம். எண்ணற்ற மனித உறவுகளையும் செயற்பாடுகளையும் கொண்டதான சமூக உலகமானது ஒருமையான சீரமைப்பைக் (Uniformity) கொண்டதல்ல. அதனை ஒரு முழுமையான ஆய்வுப் பொருளாகக் கொள்ள முடியாது. அன்றி, அனுபவத்திற்கு அகப்படும் மெய்ப்பொருளாக எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தவும் முடியாது என்பது பொப்பரின் நிலைப்பாடு.

அரசியல், சமூக நிகழ்வுகளை அவதானித்து, அந்த நிகழ்வுகளைக் கால வரிசையில் பதிவு செய்து, அந்த வரலாற்றுப் பதிவின் அடிப்படையில் சமூகத்தின் போக்கு பற்றி பொதுவிதிகளை நிறுவி விடலாமென சமூகவியல் முயற்சிக்கிறது. இந்தப் பொதுவிதிகளின் அடிப்படையில், சமூக வரலாற்று ஒட்டம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் எதிர்வு கூறவும் முயற்சிக்கிறது. இந்த முயற்சி சாத்தியமானதல்ல என்கிறார் பொப்பர். இப்படியாக, வரலாற்றுத் தீர்க்கதரிசனம் கூற முனையும் அணுகுமுறையை வரலாற்றியம் (Historicism) என அவர் சாடுகிறார். மாக்சியம் இப்படியான ஒரு சமூக தத்துவம்; வரலாற்று விஞ்ஞானம் அல்லது விஞ்ஞான சோசலிசம் என்ற போர்வையில், அது எதிர்காலத்தை எதிர்வு கூற முனைகிறது என்பது பொப்பரின் குற்றச்சாட்டு.

இயற்கைசார் விஞ்ஞானம் பெருவளர்ச்சி கண்டிருக்கிறது; ஆயினும், சமூகவியல், ஒரு விஞ்ஞானக் கோட்பாடாக இன்னும் தன்னை நிறுவிக் கொள்ளவில்லை என்று பொப்பர் கூறுவது உண்மைதான். இயற்கை வேறு; மனித உலகம் வேறு. இயற்கையின் ஒழுங்கு விதிகளில், நியதிகளில் – மனித உலகம் இயங்கவில்லை. எனவே, இயற்கைசார் விஞ்ஞானங்களின் அடிப்படையில், ஆய்வுமுறைமையில் மனித உலகத்தின் மெய்யுண்மைகளை கண்டு கொள்ள முனைவது கடினமானது என்பது உண்மை. அப்படியாக, விஞ்ஞானத் தகைமையைப் பெறாத சமூகவியல், வரலாற்றுத் தீர்க்க தரிசனம் கூறவிழைவது சாத்தியமல்ல. விண்வெளி விஞ்ஞானம், ஒரு சூரிய கிரகணத்தை அறுதியிட்டு எதிர்வு கூறுவதுபோல, ஒரு சமூகப் புரட்சி எப்பொழுது, எந்த நேரத்தில் நிகழுமென சமூகவியலால் தீர்க்கதரிசனம் கூறிவிட முடியாது. மாக்சிய வரலாற்றியலாலும் அது முடியாது.

மாக்சிய சமூகவியல், வரலாற்று தீர்க்க தரிசனம் கூறுவதையே தனது ஆய்வு இலக்காகக் கொண்டிருக்கிறது எனப் பொப்பர் கூறுவது ஒரு தவறான மதிப்பீடாகும். ‘மூலதனத்தில்’ கார்ள் மாக்ஸ் தெரிவித்த ஒரு சில தீர்க்க தரிசனக் கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு மாக்சிய சமூக சிந்தனையை, ஒட்டுமொத்தமாக ‘வரலாற்றியம்’ என அவர் நிறுவ முனைவதும் அபத்தமானது. சமூகம் என்பது மிகவும் சிக்கலான மனித உறவுகளால் பின்னப்பட்ட ஒரு விசித்திரமான உலகம் என்பதால், அதனை ஒரு பௌதிகப் பொருளாக ஆய்வுகூடப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாதுதான். ஆனால் அதே வேளை, சமூக உலகத்தை, அறிவியல் ரீதியில் ஆய்வு செய்வது சாத்தியமற்றது எனப் பொப்பர் கூறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பௌதிகப் பொருட்களையும் அண்டத்துக் கோள்களையும் தாவரங்களையும் ஆய்வு செய்து அறிவது போன்று மனித வாழ்வியக்கத்தை அறிந்து கொள்ள முடியாது. சமூக மெய்யுண்மையானது மனித உறவுகளின் தளத்திலிருந்து தோற்றப்பாடு கொள்வதாலும் மனித செயற்பாடுகளினால் அது சதா இயங்கு நிலையிலுள்ள அசைவியக்கத்தைக் கொண்டதாலும், சமூகத்தை ஆழமாகத் தரிசித்துக் கொள்வதற்குப் பிரத்தியேகமான ஆய்வுமுறை அவசியம். இந்தத் தேவையை, இயங்கியல் ஆய்வு முறைமை ஓரளவிற்குப் பூர்த்தி செய்கிறது எனச் சொல்லலாம். இயங்கு நிலையிலுள்ள மெய்மையை விளங்கிக் கொள்வதற்கு இயங்கு விதிகளால் நெறிக்கப்பட்ட இயங்கியல் ஆய்வுமுறையைக் கார்ள் மாக்ஸ் தழுவிக்கொண்டார்.

மாக்சியத்தை ஒரு விஞ்ஞானக் கோட்பாடு என்ற நிலைக்கு உயர்த்திக் காட்ட முனைவது தவறு. முன்னைய சோசலிச அரசுகளின் சித்தாந்தவாதிகளும், சில கம்யூனிச தத்துவாசிரியர்களும் இத்தகைய மிகைப்படுத்திய பார்வையைக் கொண்டிருந்தனர் என்பது உண்மை.

ஆயினும், தனது எழுத்துக்களையும், ஆய்வுகளையும், விஞ்ஞானக் கோட்பாடு என கார்ள் மாக்ஸ் முத்திரை பதிக்க முயலவில்லை. விஞ்ஞானம் என்பது, என்றும் நிலைத்து நிற்கும் அழியாத மெய்யுண்மைகளைக் கொண்டதல்ல; அது சதா மாற்றத்திற்கு உட்பட்டு வரும் ஒரு அறிவியக்கம் என்ற கருத்தையே அவர் கொண்டிருந்தார். விஞ்ஞானமும், இயங்கியலுக்கு அமைய மாற்றமும் வளர்ச்சியும் என்ற பாதையில் முன்னேறிச் செல்லும் என்பதே அவரது நிலைப்பாடு. கால ஓட்டத்திற்கு அமைய, வரலாற்றுச் சூழ்நிலைக்கேற்ப தனது சிந்தனையிலும் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கத் தவறவில்லை. சோசலிச அரச சித்தாந்தவாதிகள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. மாக்சியத்தை, விஞ்ஞான சோசலிசம் என முத்திரை குத்தி, அதனை காலத்தால் அழியாத மெய்யுண்மையாகப் பூசித்தனர். மாறிவரும் உலகின் மாறிவரும் வரலாற்றுப் போக்கிற்கு இசைந்து கொடுக்காது, மரபுவாதத்தை இறுக்கமாகப் பற்றி நின்றனர். இந்த இறுக்கமான பழமைவாதப் போக்கால் சமூகத்தில் பூகம்பமாக எழுந்த பொருண்மிய, அரசியல் பிரச்சினைகளை அவர்களால் செம்மையாக எடைபோட முடியவில்லை. சோசலிசத்தின் உடைவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

சாராம்சத்தில் மாக்சியம் ஒரு சமூக தத்துவம். அதனை ஒரு வரலாற்று விஞ்ஞானமாகக் கொள்ள முடியாது. மாக்சியத்தை ஒரு சிறந்த வரலாற்று ஆய்வு முறைமையாக, ஒரு விசாரணைக் கருவியாகக் கொள்ளலாம். சமகால வரலாற்று ஆசிரியர்கள் பலர் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர்.

பல நூற்றாண்டு காலமாக, பழமைவாதத்தில் புதைந்து நின்று இறந்த காலத்தை மட்டுமே வரலாறாக நோக்கிய வரலாற்றுத் துறையில் மாக்சியம் ஒரு சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப் போவது என்ற வரிசையில், வரலாற்றுக் காலத்தின் முப்பரிமாண அகற்சியை மாக்சியம் தரிசித்துக் கொள்ள முனைகிறது. நிகழ்ந்து போனதும், நிகழ்காலத்தில் விரிந்து செல்வதுமான நிதர்சனத்திலிருந்து எதிர்காலத்தைப் படைத்துவிட அது முனைகிறது. இதன் அடிப்படையில் சமூகவியலுக்கு அப்பாலான அரசியற் பரிமாணமும் மாக்சியத்திற்கு உண்டு. மானிடத்தின் விடுதலையை இலக்காகக் கொண்ட புரட்சிகர அரசியற் செயற்பாட்டை அது வலியுறுத்தி நிற்கிறது.

மாக்சியத்தின் சிறப்பம்சம் அதன் சமூக ஆய்வுத் திறனாற்றல் மட்டுமல்ல; அதன் செயற்பாட்டுத் தத்துவமுமாகும். சிந்தனையுடன் செயலையும் அது வற்புறுத்துகிறது. சமூக அறிவினால் பிறக்கும் விழிப்புடன், மனித செயற்பாடும் இணைந்து கொள்ளும் பொழுதே வரலாறு உயிர்ப்பிக்கப்படுகிறது என்ற உண்மையை மாக்சியம் எடுத்துரைக்கிறது.

VI

உலக வரலாற்று இயக்கத்திற்கு ஒரு முடிவு இருக்கின்றதா? எத்தகைய புறநிலையில் வரலாறு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது? அன்றி, மானிட வரலாறானது ஒரு முடிவில்லாப் பயணத்தில், தொடர்ச்சியாக கட்டவிழ்ந்து செல்லுமா?

உலகப் பிரசித்தி பெற்ற வரலாற்றியல் சிந்தனையாளர்களான ஹேகலதும், கார்ள் மாக்சினதும் கருத்துலகங்களை ஆய்வு செய்தோம். சுதந்திரமும் சமத்துவமும் பகுத்தறிவும் பூரணத்துவம் பெறும் உன்னத வாழ்நிலை நோக்கி மனித வரலாறு நகர்ந்து செல்வதாகக் கூறும் ஹேகல், இந்த விழுமியங்களின் திருவடிவமாக நவீன அரசு தோற்றம் கொண்டுள்ளதாகவும், அதன் தோற்றப்பாட்டுடன் மனித வரலாற்று இயக்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கருதினார். வரலாற்றின் முடிவு பற்றி ஹேகல் தெரிவித்த கருத்து தவறானது. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற சுலோகங்களுடன் நிகழ்ந்த பிரஞ்சுப் புரட்சியை அடுத்து, ஐரோப்பாவில் தோன்றிய நவீன அரசுகள் மனித நாகரீகத்தின் அதியுன்னத வடிவத்தை எய்தியதாக ஹேகல் எண்ணினார். இந்த உயர்நிலை வளர்ச்சி காரணமாக மானிடம் நிறைவை எய்தி, வரலாற்று இயக்கம் முடிவுக்கு வரும் என அவர் கற்பிதம் செய்தார். அவரது கற்பிதம் பிழைத்துப் போனது. ஐரோப்பாவில் பூகம்பமாக வெடித்த முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் பேரழிவுடன் நவீன அரசுகளும் சிதைந்து போயின. மனித வரலாற்று இயக்கம், ஹேகல் கற்பித்தது போன்று, நின்றுவிடவில்லை. அது புதிய பரிமாணம் நோக்கி நகர்ந்தது. முரண்பாடுகள் முற்றி வெடித்து முதலாளித்துவம் சிதைந்து போகும் என்றும், அதன் சிதைவுகளிலிருந்து பொதுவுடமை சமுதாயமாக சோசலிச உற்பத்தி வடிவம் பிறக்குமென்றும், அது மேலும் உயர்நிலை வளர்ச்சி பெற்று கம்யூனிச சமூக வடிவம் தோன்றி உலகளாவியதாக வளர்ந்து, மனித முரணியங்கள் நீங்கிய புதிய நாகரீகம் பிறக்கும் என்றும், அப்பொழுது வரலாற்று இயக்கம் முடிவுக்கு வரும் என்றும் கார்ள் மாக்ஸ் எதிர்வு கூறினார். அவரது தீர்க்கதரிசனமும் பிழைத்துப் போயிற்று. முதலாளித்துவம் மடிந்து போகவில்லை. பதிலாக, சோசலிச அரசுகளே இடிந்து போயின. முதலாளித்துவம் உலகரீதியாகப் பெருவளர்ச்சி கண்டது. சோசலிசம் சிதைவுற்ற நாடுகளிலும் அது காலூன்றி வளர்ந்து வருகிறது. சோசலிச உற்பத்தி முறையைக் கைவிட்டு முதலாளியத்தைத் தழுவியதால் சீனாவிலும் பிரமிக்கத்தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

மானிடத்தின் உயர்நிலை வளர்ச்சியை நோக்கிய அசைவியக்கமாகவே ஹேகலும், கார்ள் மாக்சும் வரலாற்றுக்கு விளக்கம் அளித்தனர். ஆயினும், மனித சமூகத்தின் உயர்நிலை வளர்ச்சி பற்றியும் வரலாற்றின் நிறைவு பற்றியும் அவர்கள் கண்ட தரிசனத்தை வரலாறே பொய்ப்பித்து விட்டது.

ஹேகலதும், மாக்சினதும் சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து மனித வரலாறு பற்றி ஒரு புதிய கண்ணோட்டத்தை முன் வைக்கிறார் அமெரிக்க வரலாற்று அறிஞரான பிரான்சிஸ் புக்குயாமா (Francis Fukuyama). 1989இல் கம்யூனிச உலகின் சிதைவுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த போது ‘வரலாற்றின் முடிவு’ (End of History) என்ற தலைப்பில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்திய உரை அரசியல் உலகிலும் அறிவுத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உரை பின்பு கட்டுரை வடிவத்தில் புலமை சார்ந்த ஏடுகளில் பிரசுரமாகியது. அக்கட்டுரையின் பொருளடக்கத்தை விரிவுபடுத்தி, 1992ஆம் ஆண்டில் ஒரு நூலை வெளியிட்டார் புக்குயாமா. ‘வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்’ (The end of history and the last man) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் அனைத்துலக ரீதியில் இன்றும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. மனித வரலாறு முடிவுக்கு வந்து விட்டது எனப் பிரகடனம் செய்யும் புக்குயாமாவின் சிந்தனை பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

மானிடத்தின் வரலாறு பற்றி ஹேகலும், கார்ள் மாக்சும் தெரிவித்த மையக் கருத்தினை புக்குயாமா ஏற்றுக் கொள்கிறார். அதாவது, வரலாறு என்பது மானிட சமூகத்தின் உயர்நிலை வளர்ச்சியை நோக்கிய அசைவியக்கம் என்ற தரிசனம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. ஆயினும் வரலாற்று ஓட்டத்தின் முடிவு பற்றிய அவர்களது கருத்தை புக்குயாமா ஏற்றுக் கொள்ளவில்லை. நவீன அரசின் தோற்றப்பாட்டுடனும், கம்யூனிச சமூகத்தின் உதயத்துடனும் மனித வரலாறானது பூரணத்துவம் பெற்று முடிவடைகிறது என ஹேகலும், மாக்சும் தெரிவித்த கருத்தை அவர் நிராகரித்தார்.

சோசலிசத்தின் சிதைவை முதலாளியத்தின் வெற்றியாகக் காண்கிறார் புக்குயாமா. உள் முரண்பாடுகளால் முதலாளியம் உடைந்து போகாது, வர்க்க முரண்பாடுகளை உள்வாங்கியபடி என்றுமில்லாப் பெருவளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்கிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பத்தால் செழுமைபெற்று, மேம்பாடு கண்டு அது உலகெங்கும் கிளைபரப்பி விருட்சமாக வளர்கிறது. பொருளுற்பத்தியில் முதலாளியத்திற்கு ஈடாக எந்தவொரு உற்பத்தி வடிவமும் நிலைத்து நிற்கப் போவதில்லை. சோசலிசத்தின் வீழ்ச்சியுடனும், முதலாளித்துவத்தின் எழுச்சியுடனும் மானிட சமூகம் ஒரு நவயுகத்தில் பிரவேசித்துள்ளது என்கிறார் புக்குயாமா.

சமூகப் பொருளுற்பத்தி வடிவங்களின் படிநிலை வளர்ச்சியின் உச்சமாக முதலாளியம் தோற்றம் எடுத்தது. அது போன்றே, அரசியலமைப்பு வடிவங்களின் உச்சகட்ட வளர்ச்சியாகச் சனநாயகம், குறிப்பாக தாராண்மை சன நாயகம் (Liberal Democracy) உருவாக்கம் பெற்றுள்ளது என்கிறார் புக்குயாமா. மன்னராட்சி என்றும், மத ஆட்சி என்றும், சர்வாதிகார ஆட்சி என்றும், பாசிசம் என்றும், நாசிசம் என்றும், கம்யூனிசம் என்றும், தோற்றமெடுத்த ஆட்சியமைப்புகள் மனித உரிமைகளுக்கும், மனித சுதந்திரங்களுக்கும் மனித அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்கத் தவறியதால் இந்த அரசியலமைப்பு வடிவங்கள் இறுதியில் சிதைந்து போயின. இவற்றின் புதைகுழியிலிருந்து பிறந்த சனநாயக ஆட்சிமுறை வளர்ச்சி பெற்று, முதிர்ச்சி பெற்று, நிலைத்து நிற்கிறது. முன்னேறிய நாடுகளின் உறுதியான அரசியல் அத்திவாரமாக அது இன்று நிமிர்ந்து நிற்கிறது. உலகளாவியதாகப் பரந்து வளர்கிறது. மனித விழுமியங்களுக்கு சனநாயகம் மதிப்பளிக்கிறது. மனித தேர்வுச் சுதந்திரத்திற்கு இடமளித்து, மனித அபலாசைகளுக்கு ஊக்கமளிக்கிறது. இதனால் சனநாயக ஆட்சிமுறையை மனிதர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மனித சுதந்திரங்களின் நிறுவன வடிவமாக, மனித சமூக வளர்ச்சியின் உச்ச கட்டமாக தாராண்மை சனநாயகம் நிரந்தரமாக நிலைத்து நிற்கப் போகின்றது என்பது புக்குயாமாவின் வாதம்.

அடுத்ததாக, முதலாளியத்திற்கும் சனநாயகத்திற்கும் ஒரு ஒத்திசைவான வளர்ச்சிப் போக்கு உண்டு என வாதிக்கிறார் புக்குயாமா. சனநாயக அரசியல் புறநிலையில்தான் முதலாளிய உற்பத்தி முறை மேம்பாடு காணும். ஏனெனில், சனநாயக அரசியல் அமைப்பிலேயே முதலாளியத்தின் வளர்ச்சிக்கு ஏதுவான தனிமனித அபிலாசைகள், சுதந்திரங்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது என்கிறார் புக்குயாமா.

திறந்த சந்தைப் பொருளாதாரமாக முதலாளியமும், மனித சுதந்திரங்களின் திருவடிவமாக தாராண்மைச் சனநாயகமும் ஒன்றிணைந்த வளர்ச்சிப் போக்கு சமூகங்களை நவீனத்துவத்தை (Modernity) நோக்கி நகர்த்தி வருகிறது. இந்த வளர்ச்சிப் போக்கானது மேற்குலகில் நிலையூன்றி வளர்ந்து, மேலும் பல நாடுகளில் பரவி வருகிறது. இது ஒரு தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கு. இதனால் முழு உலகமுமே நவீனமாயமாகி வருகிறது. மானிட சமூகம் ஒரு உன்னதமான உச்சநிலை வளர்ச்சியைக் கண்டுவிட்டது. முதலாளியமும், சனநாயகமும் ஒன்றிணைந்து படைத்துள்ள நவீனத்துவ உலகிற்கு அப்பால் மேற்கொண்டு வளர்ச்சி இருக்கப்போவதில்லை. நவீனத்துவம்தான் மானிட சமூக வளர்ச்சியின் எல்லை. எனவே, மானிடத்தின் உயர்நிலை வளர்ச்சிப் போக்காக, அந்தப் படிநிலை வளர்ச்சியின் அசைவியக்கமாக செயற்பட்ட வரலாறு நவீனத்துவ யுகத்தின் உதயத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. இப்படியாக வரலாற்று இயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறார் புக்குயாமா.

வரலாற்றின் முடிவுபற்றி புக்குயாமா முன்வைத்த கோட்பாடு பலத்த சர்ச்சைக்கு இலக்காகி வருகிறது. மனித சமூகத்தின் பொருளுற்பத்தியில், நவீனத்துவ உலகின் உருவாக்கத்தில் முதலாளித்துவமானது என்றுமில்லாத பெரும் சாதனைகளை ஈட்டியிருக்கிறது என்பது உண்மை. ஆயினும் அதன் வளர்ச்சிப் போக்கு மனித சமூகத்தின் அதியுன்னத நிலையை எட்டியுள்ளது என்பதும் முதலாளியத்திற்கு அப்பால் அடுத்த கட்ட வளர்ச்சி சாத்தியமில்லை என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதென வாதிடுகிறார்கள் பல அறிஞர்கள். முதலாளியம் மனித சமத்துவத்திற்கு விரோதமானது. மனிதர்களிடையே அது முரண்பாட்டையும் வர்க்க பேதத்தையும் பொருளாதார ஏற்றத் தாழ்வையும் ஏற்படுத்தி வருகிறது. முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளில் சமூக முரண்பாடுகள் தலைவிரித்தாடுகிறது. சமூகச் சீர்கேடுகள் பெருகி வருகிறது. சமத்துவமின்மை தாண்டவமாடுகிறது. பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உதிரத்திலிருந்து சிறுபான்மையான சிலர் செல்வத்தையும் அதிகாரத்தையும் தேடிக் கொள்ள முடிகிறது. முதலாளியமானது, சாராம்சத்தில் சமூக அநீதிகளைத் தோற்றுவிக்கும் ஒரு பொருளுற்பத்தி வடிவம். பொருளுற்பத்தியில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை எட்டிய போதும், மனிதத்தின் வளர்ச்சியையும் மனித உறவுகளின் மேம்பாட்டையும் அது பேணி நிற்கவில்லை. எனவே, பொருளிய வளர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, மானிட சமூகம் உன்னதமான உயர்நிலை வளர்ச்சியை எட்டிவிட்டதெனக் கருதுவது தவறு. புக்குயாமாவின் கோட்பாட்டுக்கு எதிராக இப்படியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியலமைப்பைப் பொறுத்தவரை, சனநாயகம், குறிப்பாக தாராண்மை சனநாயகம், தலைசிறந்த ஒரு அரசியல் வடிவம் என்றும் அதில் மனித உரிமைகளும், சுதந்திரங்களும் செம்மையாகப் பேணப்படுகின்றன என்றும் புக்குயாமா தெரிவிக்கும் கருத்தும் கண்டன விமர்சனங்களுக்கு இலக்காகி வருகிறது. அரசியல் நிறுவனங்களின் படிநிலை வளர்ச்சியில் சனநாயக ஆட்சிமுறையானது, ஏனைய ஆட்சி அமைப்புகளை விடச் சிறந்தது என்றே கூற வேண்டும். எனினும் பல்வேறு ரகங்களாக, பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் சனநாயக ஆட்சி வடிவங்களில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும் செம்மையாகப் பேணப்படுகிறதா என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயம். சனநாயகம் என்றும் பரந்த கொள்கை ஆட்சி என்றும் சுதந்திர உலகம் என்றும், மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி என்றும் போற்றப்படும் இந்த ஆட்சிமுறையில் அநீதியும் அடக்குமுறையும் தலைதூக்கி மனித உரிமைகள் நசுக்கப்படுவது இன்றைய உலக யதார்த்தம். மனித உரிமைகள், குடியுரிமைகள், அரசியல் உரிமைகள் என்றும் தனிமனித சுதந்திரங்கள் என்றும், சனநாயக யாப்புகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட போதும், நடைமுறையில் இவையெல்லாம் மீறப்படுவது இயல்பாகியுள்ளது. சனநாயக ஆட்சிமுறையில் பல்வேறு ஏமாற்று வழிகளைக் கையாண்டு, பணத்தைக் கொட்டி, பரப்புரை செய்து முதலாளிய வர்க்கமே ஆட்சி பீடம் ஏறுகிறது. மக்களை நம்பச் செய்யும் வகையில் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களின் உரிமையாளர்களும் இவ்வர்க்கத்தினரே. அமெரிக்க சன நாயக ஆட்சிமுறையிலே, ஆளும் வர்க்கமானது, ஊடகங்கள் வாயிலாக மக்களின் மனவுலகில் கருத்துக்களைத் திணித்து, உண்மைகளைத் திரிவுபடுத்தி, பொய்மை என்ற மாயைக்குள் மக்களை வைத்திருக்கிறது என்பதனை ஆதாரங்களுடன் புட்டுக்காட்டுகிறார் பிரபல அமெரிக்க அறிஞரான நோம் சொம்ஸ்கி (Noam Chomsky). இப்படியாக, உலகின் முதன்மையான சனநாயக ஆட்சியமைப்புகளே கேள்விக் குறிக்கு ஆளாகி நிற்கும் பொழுது, இந்த ஆட்சிவடிவத்தை மானிடத்தின் அதியுன்னத வளர்ச்சிக் கட்டமாகவும், மனித விழுமியங்களின் திருவடிவமாகவும் புக்குயாமா சித்தரிக்க முனைவது தவறானது. சனநாயக அரசியற் புறநிலையில் திளைத்து வளர்ந்து, விரிவாக்கம் பெற்று, முதலாளியமானது மானிட சமூகத்தின் ஒரு பிரிவினரை மட்டும் நவீன தொழில்நுட்ப யுகத்தினுள் இட்டுச் சென்றுள்ளது. இப்பூமியில் வதியும் ஏனையோர், பெரும்பான்மையான மனிதர்கள், மூன்றாம் உலக மக்கள் இன்னும் ஏழைகளாக, ஒடுக்கப்பட்டவர்களாக, சுரண்டப்படுபவர்களாக மிகவும் பின்தங்கிய நிலையில் துன்பங்களைச் சுமந்து வாழ்ந்து வருகிறார்கள். மானிட உலகம் பிளவுபட்டு நிற்கிறது. செல்வமும், வறுமையுமாக, முன்னேற்றமும் பின்னடைவுமாக, உயர்நிலையும் தாழ்நிலையுமாக மனிதர்களிடையே பாரிய ஏற்றத் தாழ்வு நிலவுகிறது. போர்கள், ஆக்கிரமிப்புகள், புரட்சிகள் போராட்டங்களாக மனித சமூகங்கள் மத்தியில் முரண்பாடும் மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. உலக ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. உலக அமைதி குன்றி வருகிறது. ஒழுங்கும் அமைதியும், ஒத்திசைவான மனித உறவுகளும், வறுமைப் பிணி அகன்ற நிறைவான வாழ்வும், சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான வளர்ச்சி நிலையை மானிடம் இன்னும் அடையவில்லை. நவீனத்துவம் என புக்குயாமா குறிப்பிடுவது முதலாளிய தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தையே. இதனை அடிப்படையாகக் கொண்டு, மானிட சமூகம் ஒரு உன்னதமான உச்சநிலை வளர்ச்சியை எட்டிவிட்டது என்றும், இக்கட்ட வளர்ச்சியுடன் மனித வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் முன்வைக்கும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. மனித சமூகத்தின் உயர்கட்ட வளர்ச்சிப் போக்கானது முடிவில்லாத பெரும் பயணமாகத் தொடர்கிறது. அந்த முடிவில்லாப் பயணத்து யாத்திரீகனாக வரலாறும் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது.

2001ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், 11ம் திகதி, அமெரிக்க தலைநகரான நியூயோர்க்கில், உலகின் பொருளாதார மையமாக வானைத் தொட்டு நின்ற கோபுரங்கள் தாக்கப்பட்டு தகர்ந்து விழுந்த கோர நிகழ்வானது உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. உலக முதலாளியத்தின் உச்ச வளர்ச்சியின் சின்னமாக, அமெரிக்க சனநாயகத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட கோபுரங்கள் மீது விழுந்த அடி, புக்குயாமாவின் வரலாற்றுக் கோட்பாட்டையும் தகர்த்தது. வரலாறு இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்ற செய்தியையே அந் நிகழ்வு உலகெங்கும் பறைசாற்றியது.

இந்த நிகழ்வை அடுத்து ஒரு புதிய உலக வரலாற்றுப் படலம் கட்டவிழ்ந்தது. அமெரிக்கா, பிரிட்டன் தலைமையில் மேற்குலகம் அணிதிரண்டு உலகப் பயங்கரவாத ஒழிப்பு இயக்கம் என்ற போர்வையில் இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆப்கானிஸ்தானும், பின்பு ஈராக்கும் பெரும் படையெடுப்புகளுக்கு ஆளாகின. இந்நாடுகளில் பழைய ஆட்சியமைப்புகள் கவிழ்க்கப்பட்டு, புதிய ஆட்சிகள் நிறுவப்பட்டன. ஆனால் இங்கு போரும் வன்முறையும் ஓய்ந்து விடவில்லை. அமைதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு புதிய சர்வதேச நெருக்கடிக்குள் உலகம் சிக்குப்பட்டுள்ளது. ஒரு புதிய பரிமாணத்தில் மனித வரலாற்று இயக்கம் அசையத் தொடங்கியுள்ளது.

VII

புதிய உலக ஒழுங்கை நிர்ணயிக்கும் சக்தியாக மேற்குலக சனநாயகம் வளர்ச்சி பெற்று வருவதால் இந்தப் பூமியில் மனித அரசியல் ஆட்சிமுறை பூரணத்துவம் பெற்றுவிட்டது என்றும் இதனால் உலக நெருக்கடி நிலைமைகள் தணிந்து வரலாற்று இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் புக்குயாமா கண்ட தரிசனம் பிழைத்து விட்டது.

மானிட சமூகம் இன்னும் உன்னதம் பெறவில்லை. மனிதர்களிடையே இன்னும் பிணக்குகள் தீர்ந்துவிடவில்லை. முரண்பாடுகள் நீங்கிவிடவில்லை. மனித சமூகங்கள் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. இனங்களிடையே போர் நிகழ்கிறது. பலம் பொருந்திய நாடுகள் பலம் குன்றிய நாடுகள் மீது படையெடுப்புகளை நிகழ்த்துகின்றன. ஆக்கிரமிப்புகள் நடக்கிறது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கிளர்ச்சியும் வன்முறையும் தாண்டவமாடுகிறது. இந்தப் பூமியில் இரத்த ஆறுகள் ஓடியவாறு இருக்கின்றன. வரலாறு என்னும் மகாநதி ஓய்வின்றி, அமைதியின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. மானிடம் இன்னும் விடுதலை பெறவில்லை.

ஒரு புதிய பரிணாமம் நோக்கி நகர்ந்து செல்லும் மனித வரலாற்று இயக்கத்தை எப்படி விளங்கிக் கொள்வது? இன்றைய உலக நெருக்கடி எந்தத் திசையில் செல்கிறது?

உலகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அமெரிக்க வல்லரசானது மேற்குலக நாடுகளை அணிதிரட்டி ஆப்கானிஸ்தானுக்கும் ஈராக்கிற்கும் எதிராகத் தொடுத்த யுத்தம் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தமாகவே கருதப்படுகிறது. இன்னொரு வகையில் பார்க்கப் போனால், மேற்கத்தைய கிறீஸ்தவ உலகிற்கும் இஸ்லாமிய உலகிற்கும் மத்தியிலான மோதலாகவும் இந்நெருக்கடி சித்தரிக்கப்படுகிறது. இரு பெரும் நாகரீகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றனவா என்ற கேள்வியும் இப்பொழுது எழுப்பப்படுகின்றது. இந்தப் பார்வையின் அடிப்படையில் பிரபல அமெரிக்க வரலாற்று அறிஞரான சாமுவேல் ஹண்டிங்ரனது (Samuel Huntington) ‘நாகரீகங்களின் மோதல்’ என்ற வரலாற்றுக் கோட்பாடு இன்று மிகவும் பரவலாக மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. ஹண்டிங்ரனின் வரலாற்றுக் கோட்பாடு பற்றி இங்கு சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்.

1993ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் Foreign Affairs எனப்படும் பிரபல அரசியல் ஆய்வு ஏட்டில் ‘நாகரீகங்களின் மோதல்’ (Clash of Civilizations) என்ற தலைப்பில் சாமுவேல் ஹண்டிங்ரன் எழுதிய கட்டுரை பெரும் சர்ச்சையையும் தொடர்ச்சியான விவாதத்தையும் ஏற்படுத்தியது.

உலகத்தில் பல்வேறு நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இனிவரும் உலக நெருக்கடியின் மிகவும் ஆபத்தான பரிமாணமாக வெவ்வேறு நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் இனங்கள் மோதிக் கொள்வது சாத்தியமாகும். அதாவது, நாகரீகங்களின் மோதல்களாகவே எதிர்காலத்தில் மனித வரலாறு கட்டவிழும். ஹண்டிங்ரனது கட்டுரையின் மையக் கருத்து இதுதான். இந்தக் கருத்து சர்வதேச அரசியல் உலகில் ஒரு சிலுசிலுப்பை ஏற்படுத்தியது.

ஹண்டிங்ரனது கோட்பாடு பற்றிப் பல கேள்விகளும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்தன. இவை எல்லாவற்றிற்கும் ஒரு தெளிவான, விரிவான விளக்கம் அளிக்கும் நோக்குடன் 1997ம் ஆண்டு, ‘நாகரீகங்களின் மோதலும் உலக ஒழுங்கை மீளமைத்தலும்’ (The Clash of Civilizations and the Remaking of World Order) என்ற தலைப்பில் ஹண்டிங்ரன் ஒரு நூலை வெளியிட்டார். பனிப் போர் யுகத்தின் பின்னர் பரிணாமம் பெற்று வரும் உலக அரசியல் நிலைமை பற்றிய ஒரு ஆய்வாகவே இந்நூல் அமையப் பெறுவதாக முன்னுரையில் அவர் கூறுகிறார். இந்நூலில் தரப்படும் மையக் கருத்துகள் பற்றி இனிப் பார்ப்போம்.

கம்யூனிசம், முதலாளியம் என இரு துருவங்களாக பிளவுபட்டு, முரண்பட்டு நின்ற உலகம் சோசலிசத்தின் சிதைவுடன் ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்தை அடைந்தது. பனிப் போர் முடிவுக்கு வந்தது. கருத்தியல் முரண்பாடுகளும் முடிவுக்கு வந்தன. சித்தாந்த வேறுபாடுகளும் செயலிழந்து போயின. முன்பு போல, சித்தாந்தங்களும், அரசியல் அமைப்பு வடிவங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் மனித சமூகங்களின் தனித்தன்மையைக் கோடிட்டுக் காட்டவில்லை. பண்பாட்டு வடிவங்களே மனித சமூகங்களின் அடையாளங்களை நிர்ணயிக்கின்றன. சமூகங்களின் தனித்தன்மையை வேறுபடுத்திக் காட்டுகின்றன. மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு, வழக்கங்கள், நியமங்கள், நிறுவனங்கள் என்ற ரீதியில் பண்பாட்டுக் கோலங்களிலிருந்தே மனித சமூகங்கள் தம்மை இனம் கண்டு கொள்கின்றன. ஒரு குலமாக, இனக் குழுமமாக, மதச் சமூகமாக, தேசிய இனமாக, ஒட்டுமொத்தத்தில் ஒரு நாகரீகமாக மக்கள் சமூகங்கள் தம்மை அடையாளம் காட்டிக் கொள்வதற்குப் பண்பாட்டு அம்சங்களே ஆதாரமாக விளங்குகின்றன. பண்பாடானது நாகரீகத்திலிருந்து வேறுபட்டதல்ல. ஒரு பண்பாட்டின் அகன்ற பரிமாணமே நாகரீகமாகும். மனித வரலாறு என்பது மனித நாகரீகங்களின் வரலாறாகும். ஒரு நீண்ட முடிவில்லாக் கதையாக மனித நாகரீகங்களின் வரலாறு தொடர்கிறது. உலகின் முதன்மையான நாகரீகங்களுக்கு மதங்களும், மதம் சார்ந்த விழுமியங்களுமே அத்திவாரமாக விளங்குகின்றன. உதாரணமாக, மேற்கத்தைய கிறீஸ்தவ நாகரீகம், இஸ்லாமிய நாகரீகம், இந்து நாகரீகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். காலத்தால் சிதைந்து போன நாகரீகங்களும் உண்டு. உதாரணத்திற்கு, சுமேரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், கிரேக்க நாகரீகம், ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் அதே வேளை, தோற்றம் முடிவின்றி பல ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்து நிற்கும் நாகரீகங்களும் இருக்கின்றன. நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதே நாகரீகங்களின் சிறப்பம்சமாகும். சாம்ராஜ்யங்கள் எழுச்சியும் விழுச்சியும் அடையலாம்; அரசுகள் தோன்றி மறையலாம்; சமூக, அரசியற் புரட்சிகள் வெடிக்கலாம். ஆயினும் இப் பூகம்ப நிகழ்வுகளுக்கு ஈடுகொடுத்து நாகரீகங்கள் நிலைத்து நிற்கலாம். புறநிலை அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து, சவால்களை எதிர்கொண்டு, ஒரு படிநிலை வளர்ச்சியில் நாகரீகங்கள் அகற்சி பெற்று நீடிக்கின்றன. நாகரீகங்களுக்கு புவியியல் எல்லைக் கோடுகள் இருப்பதில்லை. பல தேசிய அரசுகளைக் கொண்டதாக, பல இனக் குழுமங்களை உள்ளடக்கியதாக பூதாகார விரிவாக்கம் பெற்ற நாகரீகங்களும் உண்டு. உதாரணத்திற்கு மேற்கத்தைய கிறீஸ்தவ, இஸ்லாமிய நாகரீகங்களைக் குறிப்பிடலாம். இன்றைய நவயுகத்தில் ஏழு அல்லது எட்டு நாகரீகங்களை இனம் கண்டு கொள்ளலாம். மேற்கத்தைய கிறீஸ்தவ நாகரீகம், இஸ்லாமிய நாகரீகம், லத்தீன் அமெரிக்க நாகரீகம், ஆபிரிக்க நாகரீகம், சீன நாகரீகம், இந்து நாகரீகம், பௌத்த நாகரீகம் என்ற ரீதியில் உலகப் பண்பாட்டு மையங்களை வகைப்படுத்தலாம்.

இன்றைய உலக நாகரீகங்களில், அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பெரும் வளர்ச்சி பெற்று வல்லாதிக்கம் படைத்ததாக விளங்குவது மேற்குலக கிறீஸ்தவ நாகரீகமாகும். மேற்குலக நாகரீகத்தின் எழுச்சியும் அதன் வீச்சும் உலகின் ஏனைய நாகரீகங்கள் மீது பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வந்தது. முன்பு ஒரு காலத்தில் காலனித்துவ அடக்குமுறையாக மேற்குலக நாகரீகம் உலகளாவிய ரீதியில் ஏனைய நாகரீகங்களை சீண்டிச் சிதைக்க முற்பட்டது. காலனித்துவ யுகத்தின் பின்பும் மேற்குலக நாகரீகம் உலகத்தை தனது வல்லாதிக்க வியூகத்தினுள் வைத்திருக்க முனைகிறது.

மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்கு அமெரிக்கா தலைமை வகிக்கிறது. மேற்குலக கிறீஸ்தவ நாகரீகமே மனித குலத்தின் அதியுன்னத பண்பாட்டு வடிவம் என அமெரிக்கா எண்ணுகிறது. மேற்குலக நாகரீகத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஏனைய நாகரீகங்கள் மீது திணித்து விட முயல்கிறது. சனநாயகம், தனிமனித சுதந்திரம், திறந்த சந்தைப் பொருளாதாரம், சட்ட ஆட்சிமுறை போன்றன மேற்குலக நாகரீகத்தின் உன்னத பண்புகள் என வரையறுத்து, அவற்றை மனித குலம் பின்பற்ற வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. அதுவே தனது இலட்சியப் பணி எனவும் இறுமாப்புடன் செயற்படுகிறது. அமெரிக்கா தலைமை வகிக்கும் மேற்குலக நாகரீகமானது இராணுவப் படையெடுப்புகளை நிகழ்த்தி ஏனைய நாகரீகங்களைச் சார்ந்த நாடுகளை அடிமைப்படுத்தியும் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தியும் நசுக்கி விட முனைகிறது. தனது பொருளாதார நலன்களை மேம்பாடு செய்யும் நோக்கில், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் வாயிலாக ஒரு உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பை உருவாக்கி ஏனைய நாகரீகங்களின் பொருளாதார வாழ்வைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது. மேற்குலக நாகரீகமானது முழு உலகத்தையுமே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது.

மேற்குலக நாகரீகத்தின் ஆதிக்கமும் செல்வாக்கும் ஏனைய உலக நாகரீகங்கள் மீது ஆக்கபூர்வமான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. முதலாளிய பொருளுற்பத்தி, கைத்தொழில் மயமாக்குதல், நவீனத்துவமாக்குதல் போன்ற மேற்குலகின் வழி முறைகளைத் தழுவி ஏனைய நாகரீகங்களும் பெருவளர்ச்சி கண்டு வருகின்றன. சீனம், யப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய புலிப் பொருளாதார வடிவங்கள் மேற்குலகிற்குப் போட்டியாக முன்னேற்றம் கண்டுள்ளன. இதனால் மேற்குலக நாகரீகத்தின் மேலாதிக்க நிலை தளர்ந்து வருகிறது. பாரிய வளர்ச்சி கண்டு வரும் கிழக்கு ஆசிய சமூகங்களுடன் ஒப்பு நோக்குகையில் மேற்குலகின் பொருளாதார வளர்ச்சி குன்றிவருகிறது. சனத்தொகை விகிதாச்சாரமும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இவற்றைவிட, மேற்கில் தார்மீக ஒழுக்க நெறிகள் சீர்குலைந்து வருகின்றன. வன்முறை, குற்றச் செயல்கள், போதை மருந்துப் பாவனை பெருகி வருகின்றன. குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றன. மேற்குலகில், குறிப்பாக அமெரிக்காவில் பல்லினப் பண்பாட்டுக் (Multi-Cultural) கோட்பாடு வலியுறுத்தப்படுவதால் மேற்குலக நாகரீகத்தின் தனித்தன்மை பலவீனமடைந்து வருகிறது. மேற்குலகம், தனது தனித்துவமான பண்பாட்டினை வலுப்படுத்தி வளர்ப்பதற்குப் பதிலாக, அதனை உலகமயப்படுத்த முனைவது ஆபத்தாக முடியலாம். உலகமானது பல்வேறு பண்பாட்டு மையங்களைக் கொண்டுள்ளது. இந்த நாகரீகங்கள் தமது பண்பாட்டுத் தனித்துவங்களைப் பேணி வளர்த்து முன்னேற முயற்கின்றன. இப் பன்முக நாகரீகங்களது அபிலாசைகளின் அடிப்படையிலேயே இனிவரும் உலக அரசியல் ஒழுங்கு நிர்ணயிக்கப்படும்.

கிழக்கு ஆசியாவில் சீன நாகரீகத்தின் பூதாகர வளர்ச்சியும், முஸ்லிம் உலகில் நிகழ்ந்து வரும் இஸ்லாமிய பண்பாட்டு எழுச்சியும் மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து வருகிறது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் சீன தேசம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மேற்குலக நாகரீகத்திற்கு சவால்விடும் அளவுக்குச் சீனம் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்துடன் ஒப்புநோக்கும் பொழுது சீன நாகரீகம் சாராம்சத்தில் வித்தியாசமானது. கொன்பூசியஸ் என்ற ஞானியின் போதனைகளை உள்வாங்கி வளர்ந்த சீனம் தனக்கேயுரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டது. மேற்குலக நாகரீகத்தைவிட தனது பண்பாடு உன்னதமானது என சீனா கருதுகிறது. அத்தோடு தமது அபாரமான பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமது தனித்துவமான சீரிய பண்புகளுடைய நாகரீகமே காரணம் எனச் சீன மக்கள் கருதுகின்றனர். உலக முதலாளியத்துடன் போட்டியிட்டு முன்னேற வேண்டும் என்ற நோக்கில், சீனா திறந்த சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவிய போதும், இறுக்கமும், ஒழுக்கமும், கட்டுப்பாடுமுடைய உறுதியான அரசாட்சியை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரிய நவீன இராணுவ பலத்துடன் அணு ஆயுதம் படைத்த வல்லரசாகவும் விளங்குகிறது. இதனால் சீன தேசம் தன்நம்பிக்கையும், தன்னுறுதியும் கொண்டதாக, தனித்துவப் போக்குடையதாக மேற்குலக ஆதிக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் விளங்கி வருகிறது. மேற்குலகிற்கு எதிரான ஒரு பகைமைச் சக்தியாக சீன நாகரீகம் உருவெடுக்கலாம். ஏற்கனவே நிகழ்ந்த வியட்னாமிய, கொரிய யுத்தங்களில் சீனாவின் தலையீடு காரணமாக அமெரிக்க வல்லரசு தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது. இப்பொழுது தைவான் தீவின் இறைமைப் பிரச்சினை குறித்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மத்தியில் பகைமை நிலவுகிறது. இது ஒரு யுத்தமாக வெடிக்கும் சாத்தியமும் உண்டு.

சமீப காலமாகத் தோற்றப்பாடு கொண்டுள்ள இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சியும் அதன் தீவிரவாத அடிப்படைவாதப் போக்குகளும் மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. இஸ்லாமிய நாகரீக உலகில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இஸ்லாமிய மதத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தமது இனத்துவ அடையாளத்தைப் பேணவும் தமது சமூகத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கவும் தமது அரசியல் பொருளாதார வாழ்வை மேம்படுத்தவும் பல கோடி முஸ்லிம் மக்கள் இஸ்லாமிய மதத்தில் அர்த்தத்தையும் விடிவையும் காண முனைகின்றனர். மேற்குலக பண்பாட்டுக் கோலங்களை முற்றாக நிராகரித்து, வாழ்வின் உன்னத வழிகாட்டியாக இஸ்லாமிய மதத்தைத் தழுவி நிற்கின்றனர். இஸ்லாமிய மறுமலர்ச்சியானது சமூக, பண்பாட்டு, அரசியல் பரிமாணங்களைக் கொண்ட ஒரு பேரியக்கமாக முஸ்லிம் உலகில் எழுச்சி பெற்று வருகிறது. இம் மறுமலர்ச்சியானது இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் இராணுவவாதத்திற்கும் வழிகோலுவதுடன் மேற்குலக நாகரீகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. குறிப்பாக எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமானது மேற்குலக நாகரீகத்திற்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. தமது மத நம்பிக்கைக்கும் சமூகப் பண்பாட்டு வாழ்வுக்கும் விரோதமான சக்தியாகவே மேற்குலக நாகரீகத்தை முஸ்லிம்கள் கருதுகிறார்கள். சிலுவை யுத்த யுகத்திலிருந்து காலம் காலமாகவே கிறீஸ்தவ – இஸ்லாமிய நாகரீகங்கள் மத்தியில் போரும் பகைமையும் நிலவி வந்திருக்கிறது. சமீப காலமாக முஸ்லிம் அரசியலில் தலையிட்டு, இஸ்லாமிய நாகரீக உலகைப் பிளவுபடுத்தி, யூத ஆதிக்கத்திற்கு முண்டுகொடுத்து வருவதால், மேற்குலகம் மீது குறிப்பாக அமெரிக்கா மீது இஸ்லாமிய சமூகம் ஆத்திரம் கொண்டுள்ளது. இப்பகையுணர்வு கிறீஸ்தவ – இஸ்லாமிய நாகரீகங்கள் மத்தியில் பெரும் மோதலுக்கான புறநிலையை உருவாக்கி வருகிறது.

மேற்குறிப்பிட்டவாறு சாமுவேல் ஹண்டிங்ரன் தனது கோட்பாடுகளை வரலாற்றுத் தகவல்களுடனும் நிகழ்வுகளுடனும் தனது நூலில் எடுத்து விளக்குகின்றார். பல்வேறு நாகரீகங்களை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்காகவே அவர் மானிட சமூகத்தைக் காண்கிறார். இந் நாகரீகங்கள் மத்தியில் அமைதியும் ஒத்திசைவான வாழ்வும் நிலவவில்லை. அவை ஒரு சீரான வரலாற்றுப் பாதையில், ஒரு உன்னதமான படிநிலை வளர்ச்சியை நோக்கி நகரவில்லை. மாறாக, இந்நாகரீகங்கள் தமது பண்பாட்டின் தனித்துவத்தையும் சிறப்பு அம்சங்களையும் வலுப்படுத்த முனைகின்றன. இந்த அபிலாசைகள் காரணமாக முரண்களும் மோதல்களுக்குமான புறநிலையும் உருவாகி வருகிறது. உலக நாகரீகங்களின் நலன்கள், அவற்றின் அபிலாசைகள், அவை மத்தியிலான முரண்கள் ஆகியனவையே எதிர்கால உலக அரசியலையும் மானிடத்தின் வரலாற்றையும் நிர்ணயிக்கும் என்பது ஹண்டிங்ரனது நிலைப்பாடு. மேற்குலக நாகரீகத்தின் ஆதிக்கப் போக்கும் தனது பண்பாட்டு விழுமியங்களை உலகமயமாக்க எத்தனிக்கும் விரிவாக்க நோக்கும் அதனை ஏனைய நாகரீகங்களோடு, குறிப்பாக சீன, இஸ்லாமிய நாகரீகங்களோடு மோதும் நிலைக்கு தள்ளிவருவதாகக் கருதுகிறார் ஹண்டிங்ரன். எனினும் அவரது பார்வையில் இன்றைய உலகின் போர்க்களமாக விளங்குவது இன நெருக்கடிகளும் இனமோதல்களுமாகும். இவையும் ஒரு பரிமாணத்தில் சிறிய அளவிலான நாகரீக மோதல்களாகும். இது பற்றி ஹண்டிங்ரன் கூறும் விளக்கத்தை இனிப் பார்ப்போம்.

தமது இன அடையாளங்களை பாதுகாப்பதற்காகவும் நிலைப்படுத்துவதற்காகவும் மக்கள் சமூகங்கள் காலம் காலமாகப் போராடி வருகின்றன. ஆதிக் குடிகளும், இனக் குழுமங்களும், மத சமூகங்களும், தேசிய இனங்களும் தமது பண்பாட்டுத் தனித்துவத்தைப் பேண எல்லாக் காலங்களிலும் போராடி வருகின்றன. தமது இனத்துவ, பண்பாட்டு அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்பொழுது, அன்றி ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமை கொள்ள எத்தனிக்கும் போது அல்லது ஒரு இனத்தின் பாரம்பரிய நிலப்பரப்பை இன்னொரு இனம் ஆக்கிரமிக்க முயலும் போது இனப் போர்கள் வெடிக்கின்றன. இனப் போர்கள் பல நீண்ட காலமாக முடிவின்றித் தொடர்வதுண்டு. போர் நிறுத்தங்கள் ஏற்படுவதும், அவை முறிந்து போக மீண்டும் போர் தொடங்குவதுமாக இன நெருக்கடிகள் நீடிப்பதுண்டு. இனப் போர்கள் இரு நாடுகள் மத்தியிலும் எழலாம். அன்றி இரு வேறுபட்ட நாகரீகங்களைச் சேர்ந்த இனக் குழுமங்கள் மத்தியிலும் தேசிய இனங்கள் மத்தியிலும் ஏற்படலாம். ஒரே நாட்டில் வதியும் வேறுபட்ட மக்கள் சமூகங்கள் மத்தியிலும் மோதல்கள் எழலாம் (உதாரணமாக, இந்தியாவில் நிகழும் இந்து – முஸ்லிம் கலவரங்கள்). பொதுவாகவே, இனப் போர்கள் மிகவும் கொடூரமானதாக, ஈவிரக்கமற்றதாக அமைவதுண்டு. சில சமயங்களில் இனக் கொலைப் பரிமாணத்தையும் அவை அடைவதுண்டு. இந்த இனப் போர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொண்டு பல தசாப்தங்களாகத் தொடர்வதுண்டு. தெற்கு சுடானில், பிலிப்பைன்சில், காஷ்மீரில், பொஸ்னியாவில், குரோசியாவில், தீபேத்தில், செச்னியாவில், சிறீலங்காவில், கிழக்குத் திமோரில் ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாகரீகங்கள் மத்தியிலான முரண்பாடும் மோதலுமாகவே இனப் போர்கள் வெடிக்கின்றன. வேறுபட்ட நாகரீகங்களைச் சேர்ந்த இனங்கள் மத்தியிலான போர் தீவிரமடையும் போது அவை தமது நாகரீகத்தைச் சார்ந்து நிற்கும் நாடுகளினதும் இனங்களினதும் உதவியையும் ஆதரவையும் நாடுவது இயல்பு. நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது வேறு வழியிலோ நிதியுதவியாக, இராணுவ உதவியாக, அரசியல் இராஜதந்திர ஆதரவாக ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் தமது இன உறவுகளுக்குக் கைகொடுப்பதுண்டு. குறிப்பாக முஸ்லிம் இனங்கள், வேறுபட்ட நாகரீகங்களைச் சார்ந்த சமூகங்கள் அல்லது நாடுகளுடன் நெருக்கடிக்குள் சிக்குப்படும்பொழுது முஸ்லிம் அரசுகள் தமது இனத்துவ உறவுகளுக்கு உதவுகின்றன. உதாரணமாக காஷ்மீர் முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானும், பாலஸ்தீனர்களுக்கு அரபு நாடுகளும், செச்னியா முஸ்லிம்களுக்கு ஈரானும் என்ற ரீதியில் இஸ்லாமிய நாகரீக உலகம் தனது முஸ்லிம் இனத்தவர்களுக்குக் கைகொடுத்து உதவி வருகிறது. இப்படியாக ஒரு இனத்திற்கு அதே இனத்தைச் சார்ந்த இன்னொரு நாடோ இனமோ உதவி வழங்கும் பொழுது அந்த நெருக்கடி மேலும் விரிவடைந்து நாகரீகங்கள் மத்தியிலான பெரும் மோதலாக வெடிக்கலாம். உதாரணமாக, காஷ்மீர் முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் வழங்கிய இராணுவ உதவிகள் இந்தியாவுடனான போருக்கு வழிகோலியது. அதாவது இஸ்லாமிய – இந்து நாகரீகங்கள் மத்தியிலான மோதலுக்குக் காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில், மனித இனங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு நாகரீக மையத்துடன் பிணைந்து இருப்பதால் இன நெருக்கடிகள், சில சமயங்களில் நாகரீகங்கள் மத்தியிலான மோதலுக்கு வழிகோலும் வாய்ப்புண்டு என்பது ஹண்டிங்ரனது நிலைப்பாடு.

இப்படியாக, பண்பாட்டு மையங்களாகவும் பலதரப்பட்ட நாகரீகங்களாகவும் உலகைச் சித்தரிக்கும் ஹண்டிங்ரன், உலக நாகரீகங்களின் தன்மைகளையும், அவற்றின் அபிலாசைகளையும் அவை மத்தியில் நிலவும் முரணியங்களையும் அதனால் எழக் கூடிய பேரபாயங்களையும் விளக்குகின்றார். இவரது பார்வையில் வல்லரசுகளும், வலிமை பெற்ற நாடுகளும் உலக ஒழுங்கை நிர்ணயிக்கப் போவதில்லை. இன்றைய உலக நாடகத்தில் அரசுகள் முக்கியமான கதாபாத்திரங்களாக நடித்த போதும் அரசுகளும் நாடுகளும் இனங்களும் வெவ்வேறான நாகரீக உலகங்களுடன் சங்கமித்து நிற்பதால் நாகரீகங்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அவை மத்தியில் நிலவும் உறவு முறைகளுமே எதிர்கால உலக ஒழுங்கமைப்பையும் மனித வரலாற்றின் போக்கையும் நிர்ணயிக்கும் என்பது ஹண்டிங்ரனது வாதம்.

ஹண்டிங்ரனது நாகரீகக் கோட்பாட்டின் அடிப்படையில் இன்றைய உலக அரசியலையும் சர்வதேச உறவுகளையும் ஆழமாகத் தரிசித்துக் கொள்ள முடியுமா? உலகப் பேரரசுகளையும் நாடுகளையும் தேசிய இனங்களையும் ஒரு குறிப்பிட்ட சில பண்பாட்டு மையங்களுக்குள் உள்ளடக்கி, அவற்றின் உறவுகளையும் பிணக்குகளையும் போராட்டங்களையும் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியுமா? ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பை கிறீஸ்தவ – இஸ்லாமிய நாகரீக மோதலாக எடைபோட முடியுமா? ஈராக் – அமெரிக்க யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் அமெரிக்காவுக்கும் சில ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் மத்தியில், அதாவது மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்தைச் சேர்ந்த நாடுகள் மத்தியில் எழுந்த முரண்பாடுகளை எவ்விதம் புரிந்து கொள்வது? இஸ்லாமிய நாகரீகத்தின் மையமான மத்திய கிழக்கில் அமெரிக்காவினதும் ஐரோப்பிய கிறீஸ்தவ நாடுகளதும் பிரதான நலன்கள் எவை? கிறீஸ்தவப் பண்பாட்டு விழுமியங்களை முஸ்லிம் சமூகங்களிடையே திணிப்பதா அன்றி எண்ணெய் வளங்களைச் சுரண்டுவதா? இஸ்லாமிய நாகரீகத்தைச் சார்ந்த நாடுகள் ஒரே பண்பாட்டு உலகமாக ஒன்றுபட்டு நிற்காது, பிளவுபட்டு முரண்படுவதேன்? ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது ஏன்? மிகவும் கொடூரமானதாக நீடித்த ஈரான் – ஈராக் போரையும் குவேய்த் மீதான ஈராக்கின் படையெடுப்பையும் எவ்விதம் புரிந்து கொள்வது? சீன தேசத்தை மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்கு விரோதமான ஆபத்தான சக்தியாக எடைபோடுவது சரியா? கம்யூனிச ஆட்சிமுறையோடு மேற்குலகின் முதலாளிய உற்பத்தி முறையை தனது நாட்டின் புறநிலைக்கு ஏற்றவாறு பிணைத்து, புதிய பரிசோதனை செய்து, சீனம் பிரமாதமாக முன்னேற்றம் காணவில்லையா? பழைய மரபுகள், சிந்தனைகளுக்கு எதிராகச் சீனாவில் பண்பாட்டுப் புரட்சி நிகழவில்லையா? அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் மத்தியிலான முரண்பாட்டை வெறும் பண்பாட்டு மோதலாகக் கொள்வது சரியா? இஸ்லாமிய உலகிலுள்ள மன்னர் ஆட்சிகளுக்கும், சர்வாதிகார ஆட்சியாளருக்கும் காலம் காலமாக முண்டுகொடுத்து, எண்ணெய் வளங்களைச் சுரண்டி, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம் சமூகங்களை ஏழ்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கவில்லையா? பாலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான இஸ்ரேலிய அரசின் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கவில்லையா? முஸ்லிம் உலகத்திற்கு எதிரான அமெரிக்காவின் தலையீடுகளையும் ஆதிக்கப் போக்கையும் சுரண்டலையும் இவற்றை ஆட்சேபித்து முஸ்லிம்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும் இஸ்லாமிய – கிறீஸ்தவ பண்பாட்டு மோதல் என்ற போர்வைக்குள் மறைத்துவிட முடியுமா?

ஹண்டிங்ரனின் நாகரீகக் கோட்பாடு பல குறைபாடுகளைக் கொண்டது. அவரது வரையறுக்கப்பட்ட பார்வையின் அடிப்படையில் மிகவும் சிக்கலான உலக நெருக்கடிகளையும் உலக நாடுகளின் உறவுகளையும் புரிந்து கொள்வது சாத்தியமல்ல. இன்றைய உலகத்தின் அரசியல் அரங்கில் இனப் போர்களும் இன நெருக்கடிகளுமே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன என அவர் கருதுவது சரியானதே. ஆயினும் இன விடுதலைப் போராட்டங்களை பண்பாட்டுத் தனித்துவத்திற்கான போராட்டமாக மட்டும் வரையறுத்துப் பார்க்க முனைவது தவறு. அந்நிய அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தேச சுதந்திரம் வேண்டி நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் ஆழமான பரிமாணங்களை அவர் கண்டு கொள்ளவில்லை.

ஹண்டிங்ரனின் பார்வையில் மனித வரலாறு நாகரீகங்களின் வளர்ச்சிப் போக்குடன் பின்னிப் பிணைந்து செல்கிறது. இன முரண்பாடுகளால் எழும் உள்நாட்டு யுத்தங்களாகவும் நாகரீக மோதல்களால் எழும் உலக நெருக்கடிகளாகவும் மனித வரலாறு தொடரும் என்பது அவரது கருத்து. ஒவ்வொரு நாகரீகமும் தனக்கே உரித்தான தனித்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதால் நாகரீகங்கள் மத்தியில் ஒத்திசைவு ஏற்படப் போதில்லை. அத்துடன் ஒரு உயர்நிலைப் பண்பாட்டு மையம் நோக்கி நாகரீகங்கள் வளர்ச்சி பெறப் போவதில்லை என்பதும் அவரது கருத்து. மனித குலமானது வேறுபட்ட பண்பாட்டு மையங்களாக நிரந்தரமாகப் பிளவுபட்டு இருக்குமென்றும், நாகரீக மோதல்களும் பேரழிவுகளும் தவிர்க்க முடியாத வரலாற்றுப் போக்காக அமையுமென்றும் ஒரு எதிர்மறையான எதிர்காலத்தையே அவர் எதிர்வு கூறுகின்றார்.

பிளவுபட்டு நிற்கும் பண்பாட்டு உலகங்கள் மனித குலத்திற்குப் பொதுவான ஒரு பண்பாட்டு மையத்தை உருவாக்கப் போவதில்லை என்று ஹண்டிங்ரன் கருதுவது தவறு. ஏற்கனவே, ஐ.நா சபை நிறுவனம் வாயிலாக மானிடத்திற்குப் பொதுவான பண்பாட்டு விழுமியங்கள் தொகுக்கப்பட்டு ஐ.நாவின் சாசனங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளன. அடிப்படை மனித உரிமைகள், மனித சுதந்திரங்கள், அரசியல் உரிமைகள், குடியுரிமைகள், பெண் உரிமைகள், சிறார் உரிமைகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகள் போன்ற உரிமைப் பிரகடனங்களாகவும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களாகவும் மானிடத்திற்குப் பொதுவான பண்பாட்டு விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா செயற்பட்டு வருகிறது. இந்த அறநெறிக் கோட்பாடுகளை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் உலக நாடுகள் அனைத்துமே ஏற்றுக் கொண்டுள்ளன. மானிடத்திற்கான பொதுவிழுமியங்களை மேலும் செழுமைப்படுத்தி, விரிவுபடுத்தவும் ஐ.நா முயன்று வருகிறது. ஒரே தார்மீக ஒழுங்கில் மனித குலத்தை ஒன்றுபடுத்தி நெறிப்படுத்த இந்த உலக நிறுவனம் ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

மனித குலமானது நாகரீக மையங்களாக பிளவுபட்டு நிற்கவில்லை என்பதும் பொருளிய வளர்ச்சியின் அடிப்படையில் அதிகார மையங்களைக் (Centres of Powers) கொண்டதாக உலக ஒழுங்கு அமையப் பெற்று வருகிறது என்பதும் சில அறிஞர்களது கருத்து. 21ஆம் நூற்றாண்டின் புதிய உலக ஒழுங்கில் ஆறு வல்லரசுகளை அதிகார மையங்களாக இனம் காட்டுகிறார் ஹென்றி கிசின்யர் (Henry Kissinger). அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா, யப்பான், இந்தியா ஆகிய வல்லரசுகளும் பல்வேறு நடுத்தர அரசுகளும், சிறிய நாடுகளுமாக எதிர்கால சர்வதேசக் கட்டமைப்பு அமையப் பெறும் என்பது அவரது கருத்து. கம்யூனிச பூதம் என்ற ஒரு பொது எதிரி இல்லாத காரணத்தினால், காலப் போக்கில் ஆயுதப் போட்டி தணிந்து அமெரிக்காவின் இராணுவ வல்லாதிக்கம் படிப்படியாக வீழ்ச்சியடையும். புதிய வல்லரசுகள் மத்தியில் இராணுவச் சமநிலை தோன்றும். நாடுகள் மத்தியிலான உறவுகள் உலகமயமாகும். தீவிரமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் தங்குநிலைப் பொருளாதாரமும் கண்டங்களையும் நாடுகளையும் ஒத்திசைவான ஒரே உலக ஒழுங்கில் இணைத்துவிடும் என்கிறார் ஹென்றி கிசின்யர்.

உலக அரசியலையும் உலக வரலாற்றுப் போக்கையும் மனித சமூகங்களின் பண்பாட்டு வாழ்வின் வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் பார்க்க முனைவது தவறு. மனிதர்களின் சமூக வாழ்வில் பண்பாடு முக்கியமானதே. பண்பாடானது சமூகங்களின் ஆன்மாவாக, சமூக உறவுகளுக்கு ஆதாரமாக, சமூக ஒழுங்கிற்கு அத்திவாரமாகத் திகழ்கிறது. எனினும் மனித அபிலாசைகளின் பரிமாணம் அகன்றது. அவற்றைப் பண்பாட்டு உலகிற்குள் முடக்கிவிட முடியாது. தனி மனிதர்களும் சரி, சமூகங்களும் சரி, நாடுகளும் சரி, வாழ்நிலையை மேம்பாடு செய்வதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றன. ஏழ்மையும் வறுமையும், அடக்குமுறையும் அநீதியும் அகன்ற சமூக சூழலில் சுதந்திரமாக, கௌரவமாக சகல உரிமைகளுடனும், சகல வாய்ப்புகள் வசதிகளுடன் நிறைவாக வாழ்வதையே மனிதர்கள் விரும்புகிறார்கள். வாழ்நிலையை மேம்பாடு செய்து முன்னேற வேண்டும் என்பதே பொதுவாக எல்லா மனித சமூகங்களதும் அபிலாசையாகும். சுதந்திரமாக வாழவேண்டும் என்ற விடுதலை வேட்கையும், வாழ்நிலையை மேம்பாடு செய்து முன்னேற வேண்டும் என்ற அபிலாசையுமே மானிடத்தின் பிரதான உந்துசக்தியாக விளங்குகின்றன. மனித சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் (Human Freedom and Progress) நோக்கிய மானிட சமூகத்தின் உயர்நிலை வளர்ச்சிப் போக்காகவே மனித வரலாறு அசைந்து செல்கிறது.

உலக வரலாறும் மனித விடுதலையும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments