
வன்முறையும், மென்முறையும்
பேயுருவம் பெற்று வந்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துநின்று போராடும் உறுதிப்பாடோ, செயற்திறனோ, தீர்க்கதரிசனமோ, உருப்படியான கொள்கைத் திட்டமோ எதுவுமற்ற பழைய தமிழ்த் தலைமையில் புதிய இளம் சமுதாயத்திற்கு நம்பிக்கை தளர்ந்தது. பிரித்தானிய காலனித்துவம் திணித்துச் சென்ற பாராளுமன்ற அரசியல் முறை, சிங்களப் பெரும்பான்மை சர்வாதிகாரத்திற்கு வலுவூட்டி வந்ததால் பாராளுமன்ற அரசியலிலும் அவநம்பிக்கை ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மென்முறை வழியைத் தழுவிநின்ற அகிம்சைப் போராட்டம், அன்றைய புரட்சிகர சூழ்நிலைக்கு ஒவ்வாதது என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டது. மனிதாபிமானமற்ற, மனித தர்மங்களுக்கு மதிப்பளிக்காத அடக்குமுறையாளனின் மிருகத்தனமான வன்முறைக்கு எதிராக, மென்முறையான, ஆத்மீக, அறநெறி தழுவிய போராட்ட வடிவம் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதைத் தமிழீழ இளம் சமூகம் உணர்ந்து கொண்டது.
அடக்குமுறையாளனின் வன்முறையானது, மனித உரிமைகளையும், அடிப்படை மனித சுதந்திரங்களையும் நசுக்கித் தமிழின ஒழிப்பை இலக்காகக் கொண்டதால் அது அநீதியானது; பிற்போக்கானது. வன்முறைக்கு எதிராக அடக்கப்படும் மக்கள், உரிமை கோரி மேற்கொள்ளும் வன்முறைப் போராட்டம் முற்போக்கானது; நியாயமானது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் வன்முறை அரசியல் போராட்டத்தில் குதிக்கப் புரட்சிவாதத் தமிழ் இளைஞர்கள் தீர்மானித்தனர்.
இதுவரை காலமும் அமைதி வழியில் நடைபெற்று வந்த அரசியல் போராட்டம், எழுபதின் ஆரம்பத்தில் வன்முறை தழுவிய போராட்டமாக வெடித்தது. கொலை முயற்சிகள், குண்டுத் தாக்குதல்கள், அரச உடமைகளை நாசம் செய்தல், பேருந்துகளுக்குத் தீவைத்தல், அரச கொடியை எரித்தல், இப்படியாகப் பரவலாக அரசியல் வன்முறை குமுறியது. புதிய இனவாத அரசியலமைப்பை ஆதரித்துத் தமிழ்த் துரோகிகளாகக் கருதப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசின் அடிவருடிகளாகச் செயற்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், அரச அடக்குமுறையின் ஏவு நாய்களாகச் செயற்பட்ட தமிழ்க் காவற்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.