×

யாழ் நகரம் தீவைப்பு

யாழ் நகரம் தீவைப்பு 

எண்பதுகளின் ஆரம்பம், கூட்டணியின் இனத்துரோகப் படலமாகவும், சிங்களப் பேரினவாதத்தின் இன ஒழிப்பு வன்முறையாகவும் தொடங்கியது. தமிழீழத் தனியரசு அமைப்பதற்குத் தமிழ் மக்களிடம் ஒப்புதல் பெற்றுக் கொழும்புப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கொண்ட கூட்டணி, மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்கும் அளவிற்குக் கீழிறங்கியது. இந்த மாவட்ட சபைத் தேர்தலுக்கு முதல்நாள் இரவு, 1981 மே 31ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆயுதப் படைகள் வெறியாட்டம் ஆடி, யாழ். நகரைத் தீயிட்டுக் கொளுத்தின. யாழ். நூல் நிலையமும், அதிலிருந்த வரலாற்றுக் கலாச்சாரப் பொக்கிசங்களும் தீவைத்து அழிக்கப்பட்டன.

ஜெயவர்த்தனாவின் மூத்த அமைச்சர்களான சிறில் மத்தியூவும், காமினி திசநாயக்காவும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இந்த நாசவேலையைச் செய்து முடித்தனர். யாழ்ப்பாணத் தீவைப்பை அடுத்துச் சரியாக மூன்று மாதங்களின் பின்னர், இலங்கைத் தீவு பூராகவும் தமிழருக்கெதிரான இனக்கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கில் தமிழர் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.

புலிகளின் தாக்குதல்கள்

அரச வன்முறை தீவிரமாக, விடுதலைப் புலிகளின் ஆயுத எதிர்ப்பியக்கமும் அதிதீவிரமடைந்தது.

1981 ஒக்ரோபர் 15ஆம் திகதி, சார்ள்ஸ் அன்ரனி (சீலன்) தலைமையில் விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையணி ஒன்று யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் இராணுவ ஜீப் வண்டி ஒன்றைத் தாக்கி இரு இராணுவத்தினரை அழித்தது. சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய முதலாவது கெரில்லாத் தாக்குதல் இதுவாகும்.

1982 யூலை 2ஆம் திகதி, நெல்லியடியில் ரோந்து சென்ற பொலீஸ் ஜீப் வண்டி மீது திடீர்த் தாக்குதலை நடாத்திய புலிகள், நான்கு பொலீஸாரைக் கொன்றனர்.

1982 ஒக்ரோபர் 27ஆம் திகதி, விடுதலைப் புலிகளின் கெரில்லா அணி ஒன்று சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீது வெற்றிகரமான தாக்குதலை நடாத்தியது. இந்தத் தாக்குதலில் மூன்று பொலீஸார் கொல்லப்பட்டனர்; மூவர் படுகாயமடைந்தனர். பொலீஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்விதம் எண்பதின் ஆரம்பத்தில் முனைப்புற்ற புலிகளின் ஆயுத எதிர்ப்பியக்கம், 1983இல் மேலும் தீவிரமடைந்தது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments