×

“ஆகாய கடல் வெளிச்சமர்”

புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர்

இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.

முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார். இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991. அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தில் ஏறி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக அதாவது தடைமுகாமை கைப்பற்ற இச் சமரை தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் வழிநடாத்தினார். இந் நடவடிக்கை முறையே  11.07.1991 அன்றும் இரண்டாவதாக 27.07.1991 அன்றும் நடைபெற்றது. இவ் இராணுவ முகாம் தாக்குதல்களும் வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள். இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாகா அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும்.

மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும். ஆனால் துரதிஸ்டவசமாக எதிரியின் தாக்குதலால் கனரக வாகனம் எதிரியின் காவலரனுக்கு அண்மையாக செயலிழந்தது. இக்கனரக வாகனத்தை செலுத்திய தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இச் சமரின் இன்னுமொரு முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக சென்று தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை. இச்சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார். அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார். அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இது மாதிரியான பலசம்பவங்கள் இச்சமரில் நடைபெற்றன.

மூன்றாவது வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை இவ்விடத்தில் கடற்படையால் தரையிறக்கலாமென எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 14.07.1991 அன்று கடுமையான தாக்குதலுக்கும் மத்தியில் தரையிறக்கினார்கள். இச்சமரை வழிநாடாத்திய தளபதி லெப். கேணல் சூட்டி அவர்கள் அன்றைய தினம் வீரச்சாவடைந்தார். இருந்தும் சண்டைதொடர்ந்தது. முன்னேறிய இராணுவத்தை அதாவது வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்திவரை சங்கிலித்தொடராக நின்ற இராணுவத்தை 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப்பிரிக்க முடியாவிட்டாலும் பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து முன்னேறிய படையினரை. கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடர்ச்சியாக தொடுத்தனர். கொம்படி வரை வந்த படையினர் கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது தளபதி லெப். கேணல் ராஜன் அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த்தாக்குதல் நடைபெற்றது.

இச்சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. இவ் அா்ப்பணிப்பு மிக்க இச்சமர் இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர். இச்சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்திய சமர். இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். ஒரு மாதமாக நடைபெற்ற இவ் இராணுவ நடவடிக்கையில் அறுநூற்றி மூன்று போராளிகள்ள் வீரச்சாவடைந்தனர்.

உண்மையிலே இச்சமரிலே வீரகாவியமான ஒவ்வொரு போராளிகளுக்குப் பின்னாலும் அற்புதமான தியாகங்களும், மனிதத்தன்மைக்கு அப்பாலான விடுதலை உணர்வும் உள்ளன. இவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் சாதாரணமான இழப்புக்கள் அல்ல மாறாக தமிழர்களுடைய வீர வரலாற்று சரித்திரங்கள்.
இச்சமரிலே தங்கள் உயிர்களைக் கொடையாக்கி தாய்மண் விடுதலைக்காகத் தங்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக.

2 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான் தொடர்புகளை மட்டுமே நம்பி எமது மண்ணில் எதிரி அமைத்துவைத்திருந்த இராணுவ முகாம்களான கோட்டை, கொக்காவில், கொண்டச்சி என்பன போரின் ஆரம்பக் கட்டத்திலேயே இறுக்கமான முற்றுகைக்குட் கொண்டு வரப்பட்டதால் எமது கைகளுள் வீழ்ந்தன. எனவே எதிரி இப்போது வான்படை, கடற்படை, தரைட்படையென முட்படைகளினதும் தொடர்புகளுடன் கூடிய அல்லது அவ்வாறான தொடர்புகளை உடன் ஏற்படுத்தக்கூடிய இராணுவக் கூட்டுத்தளங்களை மட்டுமே எமது பிரதேசங்களில் வைத்திருப்பதற்கு நிப்பந்திக்கப்பட்டான்.

ஆனையிறவுத் தளமும் இத்தகைய அமைப்பைக் கொண்டதாக இருந்தது. இம்முகாம் மீது நாம் தாக்குதலைத் தொடுக்கும் பட்சத்தில் வான், கடல், தரையென மும்முனைகளிலும் எமது நடவடிக்கைகளை எதிகொள்ளக்கூடிய வாய்பான சூழ்நிலையில் ஆனையிறவு இராணுவத்தளம் இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளுக்குமான ஒரேயொரு தரைப்பாதையாக ஆனையிறவுக் கடல்நீரேரியூடாக ஒடுங்கிச்செல்லும் பாதையில், குடாநாட்டின் கழுத்தை நெரிப்பதுபோல் ஆனையிறவு இராணுவத்தளத்தை எதிரி நீண்டகாலமாகவே வைத்திருந்தான். கடல்நீரேரியும் நீண்ட உப்புவெளிகளைக் கொண்டிருந்த பிரதேசங்களும் எதிரியின் பாதுகாப்பிற்கு நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருந்தன. இவ்வாறு சகல வழிகளிலுமே எதிரிக்குச் சாதகமாக இருந்த ஆனையிறவுத் தளத்தின்மீது ஒரு முற்றுகைத் தாக்கியழிப்புச் சமரை மேற்கொண்டு, அதை வீழ்த்துவதென எமது இயக்கம் முடிவுசெய்தது. ஒரு மரபுவழிச் சமருக்குரிய ஆட்பலநிலையிலும் கருவி நிலையிலும் எதிரி பல மடங்கு மேலோங்கியிருந்தான். எனினும் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பிற்குரிய ஆட்பல நிலையையும் கருவிநிலையையும் மட்டுமே கொண்டிருந்த எமது இயக்கம், மரபுவழிச் சமருக்கு முகங்கொடுக்கக்கூடிய எமது போராளிகளின் மனத்திடத்தை மட்டுமே நம்பிச் சமரங்கைத் திறக்க முடிவுசெய்தது. எமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களை வைத்து, எமது போராளிகளின் தனித்துவமான தொழினுட்ப அறிவை மட்டுமே பயன்படுத்தி மரபுவழித் தாக்குதலுக்கு மிகவும் இன்றியமையாததாயிருந்த போர்க்கலங்கள் ஆனையிறவுச் சமருக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தன. உழவு இயந்திரம், புள்டோசர் என்பன பெரும் வெட்டைகளூடாக எமது அணிகளை நகர்த்துவதற்குத் தேவையான கவசவாகனங்களாக உருமாற்றப்பட்டிருந்தன. எமதியக்கத்தால் தயாரிக்கப்பட்ட “பசிலன் – 2000′ என்ற அதிகதாக்கம் விளைவிக்கக்கூடிய குறுந்தொலைவீச்சுப் பீரங்கியும் எம்மிடம் இருந்தது.

எனவே போராளிகளின் மனப்பலத்தை மட்டுமே பெரிதாக எண்ணித் திட்டமிடப்பட்ட “ஆகாய, கடல்வெளி” நடவடிக்கையில் முகாமின் தென்பகுதியூடான நடவடிக்கைகளுக்கான பிரதான பணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் வழங்கப்பட்டது. ஏனைய படையணிகளையும் உள்ளடக்கி இத்தென்சமர்முனையைச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடத்தினார்.

பல இடங்களில் நடைபெற்ற சமர்களில் படையினர் கடும் இழப்பினைச் சந்தித்தனர். பூவரசங்குளச் சந்திப்பகுதியில் நடைபெற்ற கடுமையான சமரில் சிறீலங்கா வான்படைமீதான எமது படையணிப் போராளிகளின் தாக்குதலில் “பெல்” ரக உலங்குவானுர்தி ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இது போராட்ட வரலாற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி புரிந்த முக்கிய சாதனையாகும். எதிரியின் கவசவாகனங்கள் பலவும் சேதமாகின. களத்தில் மூக்குடைபட்ட எதிரி தன் அநாகரிகத்தை வெளிப்படுத்தி அண்டியிருந்த மக்கள் குடியிருப்புக்கள்மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடாத்தினான். 19.06.1991 வரை நடந்த கடுமையான சமரில் 50 இற்கு மேற்பட்ட படையினரையும் ஆயுதங்களையும் இழந்ததுடன் 150 இற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்து படையினர் பின் வாங்கத் தொடங்கினர். புலிகளின் பலம்பற்றி இராணுவ விமர்சகர்கள் வியந்து நின்ற இச்சமரின் வெற்றிக்காகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த போராளிகள் 22 பேர் வரலாறாகினர்.

”வன்னி விக்கிரம” நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினரின் இழப்பைப்பற்றி ஆராய்ந்த பி.பி.சி. உலக சேவையின் இலங்கை முகவர் கருத்து வெளியிடுகையில் இலங்கைத்தீவில் இலங்கை இராணுவம் புலிகளிடம் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். அவ்வளவிற்குச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் “வன்னி விக்கிரம” எதிர்த்தாக்குதல் வலுப்பெற்றிருந்ததை உலகம் அறிந்துகொண்டது.

– நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் நூல்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments