×

வரலாற்றில் சொல்லப்படாத 150 ஆண்டு கால களரிப் போர்

களரிப் போர்;

வரலாற்றில் சொல்லப்படாத 150 ஆண்டு கால களரிப் போர்; சோழர்களின் மாபெரும் வெற்றிக்கான ரகசியம் இதுவா?

களரி எனும் அற்புதக் கலையை சிவனிடம் இருந்து சக்தியும் பிறகு சூரபத்மன் சம்காரத்தின்போது தேவி முருகனுக்கும் இதை உபதேசித்தார் என்று ‘வர்ம காவியம்’ என்ற நூல் கூறுகிறது. உலக வரலாற்றில் 1337-ம் ஆண்டு முதல் 1453-ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒரு போர் நூறாண்டுப் போர் என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரான்ஸ் தேசத்தில் இரு அரச குடும்பங்களிடையே அதிகாரத்தைக் கைப்பற்ற நடந்த போர் என்றும் விவரிக்கிறது.

களரிகுங்பூ.

ஆனால் இதையும் தாண்டி சோழர்களின் காலத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போரே காந்தளூர்சாலைப் போர்கள் எனப்படுகிறது. ஆதித்த கரிகாலன் காலம் தொடங்கி இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலம் வரை நடந்ததாகக் கூறப்படும் இந்தப் போர்கள், சேரதேசத்து களரிப் பயிற்சிச் சாலைகளை அழிக்கவென்று சுமார் 150 ஆண்டுகள் வரை நடைபெற்றதாக வரலாற்றில் அறியப்படுகிறது.

முருகப்பெருமானிடம் இருந்து வேளிமலை எனும் தலத்தில் அகத்தியர் வர்மம், வாசி, யோகம், அடிமுறை, சித்த வைத்தியம் எனும் ஐந்தும் கலந்த களரியைக் கற்றார். பிறகு திருமூலரும், அவரிடமிருந்து காலங்கி, போகர், புலிப்பாணி, ராமதேவர் கற்றுக்கொண்டார்கள். அவர்கள் வழியே மற்ற குருமார்கள் கற்றுக் கொண்டனர் என்றும் வர்ம நூல்கள் கூறுகின்றன.

 களரிப்பயட்டு ஆசான் மு.அரி.

பின்னர் இது பரசுராமர் வழியே அரசர்களிடம் பரவியது என்கிறார்கள். அகத்தியர் கற்றுக்கொடுத்த முறை தெக்கன் களரி என்றும், பரசுராமர் கற்றுக் கொடுத்த முறை வடக்கன் களரி என்றும் பெயர் கொண்டது. இராமாயண காலத்திலே களரி ‘அங்கைப் (வெறும் கை) போர்முறை’ என்று நடைமுறையில் இருந்துள்ளது. கம்பராமாயண யுத்த காண்டத்தில் நீலன் என்ற வானர வீரன் அங்கைப் போர் முறையில் இராவணனின் படைவீரர்களுடன் மோதினான் என்று கூறுகிறது. சங்ககால மன்னர்கள் காலத்திலும் இந்த அங்கைப்போர் மேலும் புதுப்பிக்கப்பட்டு சிறந்து விளங்கியது என்கிறது வரலாறு. பிறகு இந்தக் கலை சீனா சென்று அங்கிருந்து இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், கொரியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் பரவத் தொடங்கியது.

மூவேந்தர்கள் போர்

கி.பி 1-ம் நூற்றாண்டிலேயே மூவேந்தர்கள் ஈடுபட்ட போர்களில் களரி எனும் வெறுங்கைத் திடீர் தாக்குதல் போர்கள் நடைபெற்று வந்துள்ளன. இதை ‘முது மரத்த முரண் களரி வரிமணல் அகன்திட்டை’ என வர்ணிக்கும் பட்டினப்பாலை உள்ளிட்ட பல சங்க இலக்கியங்கள் வழியே காணலாம். காலம் செல்ல செல்ல களரியின் தேவை அதிகமாகி அது ஒரு பாடப் பயிற்சி ஆனது. களரிக்கான பயிற்சிக் கூடமாக விளங்கியவை சாலை எனப்பட்டது. இச்சாலைகளின் தலைமை பயிற்றுனர் பட்டதிரி என்றானார். பயிலும் மாணவர்கள் சட்டர்கள் என்றானார்கள். இந்தச் சாலைகளுக்கு நிதி அளிக்கும் மன்னர்களுக்குப் பிரதிபலனாக மாணவர்களைப் போர்வீரனாக அனுப்பினார்கள். அந்த வகையில் அன்றைய சேர தேசத்தின் எல்லையில் 10-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல களரி சாலைகள் சிறந்து விளங்கின.

அடிப்பது, அடிபடாமல் பார்த்துக் கொள்வது, அடிபட்டால் வேகமாக சிகிச்சை செய்து கொள்வது, எந்த கருவியும் இல்லாமல் தாக்குவது, கண் இமைக்கும் நேரத்தில் எதிரியை வீழ்த்துவது என பூரணமான போர்க்களப் பயிற்சியே களரி. இதைக் கற்றவரை வீழ்த்தவே முடியாது என்பதே உண்மை. இந்த கலையில் தேர்ந்திருந்த சேர நாட்டு வீரர்கள் பலரும் பாண்டியர், சேரர் இரு படைப்பிரிவினருடன் கலந்து சோழ தேசத்துக்கு எதிராக ஆங்காங்கே கலகம் செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக சோழ தேசத்தை நோக்கி வரும் கலங்களைத் தாக்கிக் கொள்ளை அடிப்பது, வணிக வண்டிகளைத் தாக்குவது என செயற்பட்டனர். சேர தேசத்துக்கு ஆதரவு அளித்துவந்த செயலை ஒடுக்கவும். சிறிய தாத்தா உத்தமசீலியின் தலையைக் கொய்ததற்குப் பழி வாங்கவுமே வீரபாண்டியனின் தலையைக் கொய்தான் ஆதித்த கரிகாலன் என்கிறது வரலாறு.

இராஜராஜன் பதவி ஏற்றதும் தனது முதல் வெற்றியாக மெய்க்கீர்த்தியில் குறித்துக் கொள்வது இந்த காந்தளூர்ச் சாலை வெற்றியைத்தான். ‘சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ‘ஸ்ரீராஜராஜ தேவன்’ ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீஇராஜராஜ தேவன்’ என்று இரண்டு விதமாகக் குறிக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் காலத்துக்கு முன்பே 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பார்த்திவசேகரபுரம் உள்ளிட்ட கடிகைகள் ஆகமங்களைக் கற்றுத்தரும் சாலையாகவே இருந்து வந்துள்ளன என்று கோகருநந்தடக்கன் செப்பேடு சொல்கிறது.

இராஜராஜனுக்கும் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவிவர்மனுக்கும் 988-ம் ஆண்டில் நடந்த இந்த போரில் காந்தளூர்ச் சாலை போல சேர நாட்டில் 17 கடிகைகளையும் அழித்தான் இராஜராஜன். நரம்புகளைத் தாக்கி மின்னல் வேகத்தில் நடத்தப்படும் இந்த களரிப் போர்முறையை அவர்களிடமிருந்தே பயின்று கொண்ட வீரர்களைக் கொண்டே ஒரு சிறப்புப் படையைக் கொண்டு அவர்களை வீழ்த்தினான் இராஜராஜன் என்று சொல்கிறது  வரலாறு. சேர, பாண்டிய, ஈழக் கூட்டணியால் வளர்ந்த இந்த கடிகைகள் இராஜராஜன் காலத்தில் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. எனினும் இராஜராஜனிடம் வலிமையான ஒரு களரிப் படை உருவானது. அதனால் அவனால் தெற்காசியா முழுக்க வெற்றி பெறவும் பயன்பட்டது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments