
செயற்கையான வீக்கம்
1983 ஓகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய தாக்கங்களை விளைவித்தது. வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியில் உருவகம் கொண்டு வந்த தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கம், இந்தியத் தலையீட்டினால் திடீரென ஒரு செயற்கையான வீக்கம் அடைந்தது. செய்வதறியாது செயலிழந்து போயிருந்த பல தமிழ்க் குழுக்கள், இந்தியாவின் இரத்தமூட்டலினால் உயிர்பெற்றெழுந்து நிமிர்ந்தன. படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவாவில் கண்மூடித்தனமான ஆட்சேர்ப்புக்கள் நடந்தன. இதனால் பல சமூக விரோத சக்திகள் இந்தக் குழுக்களுக்குள் ஊடுருவல் செய்ய முடிந்தது; இதன் விளைவாக ஒழுக்கம், கட்டுப்பாடு சீர்குலைந்தது.
சிறு அளவில் இந்திய உதவியைப் புலிகள் பெற்றுக் கொண்டாலும், இந்திய அழுத்தங்களுக்கு வளைந்துகொடாமல் தனித்துவமான போக்கிலும், இலட்சிய உறுதியிலும் இறுக்கமாக இருந்தனர். ஆனால் அனேகமான மற்றைய அமைப்புக்கள் எல்லாமே இந்திய உதவியில் மெய்மறந்து இந்திய எசமானுக்கு அடிமைப்பட்டன. இந்தியாவின் கூலிப்படை என்று ரெலோ இயக்கம் தன்னைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியது.
ஆயுதப் பயிற்சித் திட்டத்தை இந்திய மண்ணில் செயற்படுத்திக் கொண்டு, கொழும்பில் பேச்சுவார்த்தை நாடகம் ஒன்றையும் பாரத அரசு அரங்கேற்றியது. செத்துப் போயிருந்த கூட்டணித் தலைமைக்குப் புத்துயிர் கொடுத்து, சர்வகட்சி மாநாட்டில் தமிழரின் பிரதிநிதிகளாக அவர்களை மேடையேற்றியது. ஒருபுறம் தமிழ் இளைஞர்களைக் கூலிப்படைகளாகக் களத்தில் இறக்கி ஜே.ஆர். அரசுக்கு இராணுவ நெருக்குதலைக் கொடுத்து, மறுபுறம் கூட்டணியைத் தமிழர்களின் பிரதிநிதிகளாகப் பாவித்து, ஒற்றையாட்சியின் கீழ் அற்ப சொற்ப சலுகைகளுடன் ஒரு தீர்வைக் கொண்டுவர இந்திய அரசு முயன்றது. அரசியல் பாலைவனத்தில் ஒதுங்கிப் போயிருந்த கூட்டணித் தலைவர்களுக்கு இந்தக் கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக அமைந்தது. எனவே இந்திய இயக்குநர்கள் சொன்னபடி நடிப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தனர். எனினும் குறைந்தபட்ச சலுகைகளைத்தானும் கொடுக்க ஜே.ஆர். அரசு மறுத்ததால் 1983இன் இறுதியில் ஆரம்பித்த சர்வகட்சி மாநாடு சிறிது காலம் இழுபட்டுப் பின்னர் தோல்வியில் முடிந்தது.
1984ஆம் ஆண்டு தமிழீழம் பரவலாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் அதிதீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும், தீர்க்கமாகவும் பலமுனைகளில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பல பொலீஸ் நிலையங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதனால் வடக்கில் பொலீஸ் நிர்வாகச் சேவை சீர்குலைந்தது. மிகவும் நுட்பமான முறையில் புலிகளால் தயாரிக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகள், இராணுவத் தரப்பில் பலத்த உயிர்ச் சேதத்தை விளைவித்தன. இதனால் கொதிப்படைந்த இராணுவம், அப்பாவிப் பொதுமக்களைப் பழிவாங்கியது. திருக்கோணமலை, வவுனியா மாவட்டங்களில் பல கிராமியப் படுகொலைகள் இடம்பெற்றன. மக்களைக் கொன்றுவிட்டுத் தப்பிவிட முடியாது என்ற வகையில் புலிகளின் பதிலடித் தாக்குதல்கள் அமைந்தன. சிங்கள ஆயுதப் படைகளுடன் நேருக்கு நேர் நின்று சமர்புரியும் அளவிற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வளர்ச்சி பெற்று வருவதைக் கண்டு சிங்கள அரசு திகிலடைந்தது. புலிகளின் போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர். தமிழரின் விடுதலைப் போராட்டம் முழுமையான ஆயுதப் போர் வடிவம் பெற்று வருவதை மக்கள் புரிந்து கொள்ளத் தவறவில்லை.