×

படர்மெலிந் திரங்கல்

அதிகாரம் 117- படர்மெலிந் திரங்கல்

குறட் பாக்கள் 

குறள் #1161

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்.

பொருள்
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

குறள் #1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்.

பொருள்
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

குறள் #1163

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து.

பொருள்
பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.

குறள் #1164

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

பொருள்
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.

குறள் #1165

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

பொருள்
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?.

குறள் #1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

பொருள்
காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.

குறள் #1167

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

பொருள்
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.

குறள் #1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை.

பொருள்
`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.’.

குறள் #1169

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

பொருள்
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

குறள் #1170

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.

பொருள்
காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

திருக்குறள் அருஞ்சொற்கள்

காவா 

காவடித் தண்டு

துப்பு 

துன்பஞ்செய்தற்குரிய பகைமை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments