
அன்பான தமிழீழ மக்களே!
என்றுமில்லாத வகையில் சிறீலங்கா அரசு தமிழ்இன அழிப்பு வேலைகளில் தனது முழுப் பலத்தையும் வளத்தையும் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது.
இத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு சிங்கள மக்கள் மத்தியிலிருக்கும் அனைத்து அமைப்புகளும் சிறீலங்கா அரசிற்கு தங்களது முழு ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இத்தீவிர இன அழிப்பு நடவடிக்கைகளிலிருந்து எமது இனத்தைப் பாதுகாப்பதற்காக இங்கு ஓர் விடுதலைப்போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இவ்விடுதலைப் போராட்டமானது இன்று, மேலும் மேலும் கூர்மைபெற்று ஒரு போராகப் பரிணாமம் கண்டுள்ளது.
இப்போர் காரணமாக எமது விடுதலை இராணுவத்திற்கு பல புதிய தேவைகள் எழுந்துள்ளன. போராட்டம் கூர்மை அடைய, அடைய இத் தேவைகளும் அதிகரித்துச் செல்லும். போர் என்பது இரண்டு நாட்டு இராணுவங்களுக்கிடையில் நிகழ்வது. இங்கே சிங்கள தேசத்தின் இராணுவத்திற்கும், தமிழர் இராணுவத்திற்கும் இடையில் போர் நடைபெறுகின்றது.
இப்போர் சிங்கள தேசத்தின் மண்ணில் நிகழவில்லை தமிழீழ மண்ணிலேயே நடைபெறுகின்றது.
தமிழீழம் சிங்களப் படைகளினால் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளது.
சிங்களதேசத்தின் இராணுவம் தனது முப்படைகளையும் பயன்படுத்தி தமிழர்களின் தாயகமான தமிழீழத்தின் – மீது மும்முனைத்தாக்குதலை நடாத்தி எமது மக்களைக் கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றது.
இவ் இனஅழிப்பைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணை சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதற்காக தமிழர் இராணுவம் அளப்பரிய தியாகங்களைப் புரிந்து போராடிக் கொண்டிருக்கின்றது.
போர் என்பது மிகப்பெரிய பொருட்செலவில் நடாத்தப்படுவது. போர் ஆயுதங்களின் பிரமாண்டமான செலவுடன் விடுதலை இராணுவத்தைப் பராமரிக்கவும் பெரிய அளவில் நிதி தேவைப்படுகின்றது.
அடக்குமுறையாளனின் கருவியாக இருந்து செயற்படும் அரச இராணுவத்திற்கு பொருட் செலவென்பது பெரிய பிரச்சனையாக இருக்காது. அதை அரசாங்கமே பார்த்துக் கொள்ளும்.
☀அதற்காக அன்னிய நாடுகளிடமிருந்துக் கடன்வாங்கும்
☀ அல்லது அன்னிய சக்திகளுக்கு நாட்டை அடைவு வைத்து நிதியைப் பெறமுனையும்
☀அல்லது சொந்த தன் நாட்டு மக்களின் உழைப்பையே உறிஞ்சும்
☀அல்லது மேற்கூறிய அனைத்தையும் செய்யும்.
ஆனால், உண்மையானதொரு விடுதலை இராணுவம் தனது நிதித்தேவைகளை மேற்குறித்த வகையில் பெறுவதில்லை.
அன்னிய சக்தி ஒன்று எமது மக்களின் விடுதலையை விரும்பி ஏற்று பொருள் உதவி புரியும் என எதிர்பார்ப்பது மடைமைத்தனம். அவ்விதம் வரமுனையும் உதவிகளும்கூட ஒரு துஸ்டநோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கும். இது வரலாறு கற்றுத்தந்தபாடம். எமது மக்களின் விடுதலையை எப்பாடுபட்டாவது நாம்தான் பெறவேண்டும். ஒரு விடுதலை இராணுவத்தின் தேவைகள் அனைத்தையும் மக்கள்தான் ஈடுசெய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக விடுதலைப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஒரு இனம் அல்லது ஒரு தேசம் அந்த விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக தனது வளங்கள்-பலங்கள் அனைத்தையுமே போராட்டத்திற்குத் தாரைவார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அப் போதுதான் ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும்.
தமிழீழம் அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு நாடு. மனிதவளம், மூளைவளம்,தொழில் நுட்பவளம், பொருளாதாரவளம், இயந்திரவளம் – என எமது வளங்கள் நீண்டுசெல்லும்.
☀ பொருளாதார பலமுள்ளவர்கள் போராட்டத்திற்காக நிதியை வாரிவழங்க வேண்டும்.
☀ தொழில்நுட்பவளமும், மூளைவளமும் உள்ளவர்கள் தங்களது ஆற்றலை போராட் டத்திற்கு வழங்க வேண்டும்.
☀வாகனங்கள். மற்றும் இயந்திர சாதனங்களின் சொந்தக்காரர்கள் தங்களது வாகனங்களை அல்லது இயந்திர சாதனங்களை போராட்டத்திற்கு வழங்க வேண்டும்.
இத்தகைய வளங்களுடன் தமிழீழப் பிரசைகள் அனைவரினதும் உடல் உழைப்பும் போராட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும். இதனுடைய அர்த்தம் தேவையானவற்றை வைத் துக்கொண்டு தேவைக்கு மிஞ்சியிருப்பதை போராட்டத்திற்கு கொடுத்தல் என்பதல்ல. மாறாக, தங்களது தேவைகளைச் சுருக்கிக் கொண்டு அனைத்தையுமே போராட்டத்திற்காக அர்ப்பணித்தல் என்பதையே குறித்து நிற்கின்றது.
தமிழீழத்தின் குடிமக்களாகிய எமது மக்களிடமிருந்து நாம் கேட்பது: போராட்டத்திற்காக உங்கள் பொருளை அர்ப்பணிக்கத் தயாராக இருங்கள், உங்கள் சேமிப்புக்களை அர்ப்பணிக்கத் தயாராக இருங்கள். உங்கள் உடல் உழைப்பை அர்ப்பணிக்கத் தயாராக இருங்கள், அத்துடன் உங்களது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருங்கள்.
ஏனென்றால், இது எமது எதிர்கால சந்ததியின் சுதந்திரமான, வளமான வாழ்க்கைக்கான ஒரு போராட்டம். கேட்டால்தான் கொடுப்போம் என்ற அன்னிய மனோபாவத்தைக் கைவிட்டு தேடிச்சென்று கொடுங்கள். இதை ஒரு நிர்ப்பந்தமாகவும், இடைஞ்சலாகவும் கருதும் மனோநிலையை உதறித்தள்ளி விடுங்கள். இவைகளெல்லாம் எமது விடுதலைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத தேவைகள். இத்தேவைகளைத் தமிழீழ மக்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள் – மற்றவர்களுக்கும் புரியவையுங்கள்.
இப்போராட்டத்திலிருந்து எவருமே ஒதுங்கி வாழ முனையாதீர்கள். இதில் பங்கெடுக்க வேண்டியது தமிழீழக்குடிமக்கள் அனைவரினதும் கடமையாகும்.
இன்று, இக்கடமையானது உங்கள் முன் இருப்பதையிட்டு சஞ்சலமடையாதீர்கள். பெருமைப்படுங்கள். இது உங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் ஒரு அரியசந்தர்ப்பம். எமது மூத்த சந்ததிக்கோ அல்லது, எமது அடுத்த அடுத்த சந்ததிக்கோ கிடைக்காத அரிய வாய்ப்பு தற்போது’ எமது சந்ததிக்குக் கிடைத்துள்ளது. அது என்னவெனில் எமது இனத்தின் விடுதலையை இரத்தம்சிந்தி, அர்ப்பணிப்புக்களுடன் போராடி, பெற்றுக்கொடுக்கும் ஒரு வாய்ப்பு.
எமது தேசத்தை ஆக்கிரமிப்பாளனிடமிருந்து மீட்டுக் கொடுக்கும் வாய்ப்பு. இதற்காக தமிழீழத்தின் அனைத்து வளங்களும்-பலங்களும் பயன்படுத்தப்படவேண்டும். தமிழீழத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும், அனைத்துப் பொருட்களும், அனைத்து வளங்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கே சொந்தமானது.இத்தகைய வளங்களும்-பலங்களும்தான் வளர்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றியடையச் செய்யும்.
புலிகளின் தாகம் – தமிழீழத்தாயகம்.
– விடுதலைப்புலிகள் இதழ்
சூலை 1990