×

நினைவுகளின் துளிகள் விநோத் / சோழமறவன் (விநாயகம் இராசகுமார் )

நினைவுகளின் துளிகள் விநோத் / சோழமறவன் (விநாயகம் இராசகுமார் ) 30.01.2009

நினைவுகளின் துளிகள்
சிறந்த ஒரு கணக்காய்வாளராக…
வைப்பகவியல் கல்லூரியின் பணிப்பாளராக…
வைப்பகத்தின் உதவிப் பணிப்பாளராக…
ஆளுமை மிக்க போராளியாக…
யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக…
அழகியதொரு குடும்பத்தின் தலைவனாக…
அன்பான, கண்டிப்பான ஒரு ஆசானாக…
தமிழேந்தி அப்பாவின் வளர்ப்புகளில் ஒருவனாக …
பன்முக ஆளுமை கொண்ட ஒருவர் விநோத் / சோழமறவன்
(விநாயகம் இராசகுமார் )
பணி ரீதியாக Sir என்றே அழைத்தாலும்
கடமைக்கு அப்பால் சகோதரர் போன்றே பழகிய பண்பாளன்

“நீங்கள் எல்லாம் நல்லா படிக்கவேணும் என்ன…”
இறுதி யுத்த மேகம் சூழ்ந்து களமுனை கடமையில் சென்ற பின்னரும், ஒரு தடவை சந்தித்தபோது அவர் கூறிய வசனம் அது. நிர்வாக பணியில் இருந்தபோதும் அவர் அடிக்கடி எமக்கு கூறும் வசனம் அது. அதேபோல் அவரது ஓய்வு நேரத்தில் எல்லாம் அவர் கையில் எதோ ஒரு புத்தகம் இருந்துகொண்டே இருக்கும். கல்லூரிக்காலத்தில் விமான தாக்குதல்கள் அதிகரித்திருந்த நேரம். அங்கே போர் விமானங்கள் புறப்படும்போது வன்னியின் பல பகுதிகளுக்கும் எச்சரிக்கை வழங்கப்படும். அப்படி எச்சரிக்கை கிடைத்தும் பதுங்கு குழிக்குள் போகாமல் வெளியே நிற்பதை அவர் கண்டால் கடுமையான கண்டிப்புடன் உள்ளே பதுங்கு குழிக்குள் அனுப்பிவிடுவார். ஆனாலும் அவர் பதுங்கு குழிக்குள் வருவதில்லை.

அவர் தன்னை நேசித்ததை விட…
தனது குடும்பத்தை நேசித்ததை விட…
தாயக சுதந்திரத்தை நேசித்தார்
தன்னிகரில்லா தலைமையை நேசித்தார்
ஒழுக்கமான கட்டுப்பாட்டினை நேசித்தார்
முறையான நிர்வாக கட்டமைப்பை நேசித்தார்
எதிர்கால சந்ததியை நேசித்தார்

களமுனையில் டிசம்பர் மாதம் வயிற்று பகுதில் ஏற்பட்ட விழுப்புண் சரியாக குணமடைய முன்னரே மீண்டும் களமுனைக்கு சென்று நெத்தலியாற்று பகுதியில் ஏற்பட்ட மோதலில் 30.01.2009. அன்று வீரச்சாவினை தழுவிக்கொண்ட போது, குடும்பத்தினர் இடம்பெயர்ந்து மாத்தளன் பகுதியில் இருந்த தாற்காலிக வதிவிடத்தில் அவரது வித்துடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது மகளுக்கு புரியாத வயது. வித்துடலில் ஈக்கள் அமராமல் அருகிலே வேப்பிலையை வைத்து விசிறிக்கொண்டிருந்த ஒருவரிடம் அந்த பிள்ளை அடிக்கடி கூறிக்கொண்டிருந்த ஒரு வசனம் “அப்பாவுக்கு பூச்சி கடிக்க போகுது. வடிவா விசுக்குங்கோ…”
எத்தனையோ வீரச்சாவுகளை கண்டு, வித்துடல்களை சுமந்து இறுகி போயிருந்த மனதும் உடைந்து விழிகளில் நீர் வழிந்தோடியது.

எத்தனை எத்தனை உன்னதமானவர்களை எமது கனவுகளுக்காக விதைத்து வந்திருக்கிறோம். எத்தனை எத்தனை ஆளுமைகளை எமது விடியலுக்காக தியாகம் செய்து வந்திருக்கிறோம்.

எங்கள் வளர்ச்சிகளை பார்க்க எமை வளர்த்தவர்கள் இல்லையே என்ற வலிகள் உள்ளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டேயிருக்கும். அந்த வலிகள் கூட எமை என்றென்றும் உறுதியுடன், தலைவணங்காமல் பயணிக்க வைப்பதாகவே இருக்கும்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments