
அவன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருந்தான்
இயற்கையாகவே நல்ல ஓட்டக்காரன். ஆனால் இன்று ஓடும் ஓட்டம் எந்தவொரு ஓட்டப் போட்டியிலுமே அவன் ஓடாதது. ரவுண்சுகளும் ஷெல்களும் பின்னால் கலைத்துக் கொண்டு வர ஓடுவது இதுதான் முதல் தடவை.
‘என்ர கடவுளே! எப்படியாவது தப்ப வேணும்’ இதுதான் அவனது மனதுக்குள் ஒலித்தது. ஒரு ஒழுங்கையைக் கடந்து தென்னந் தோட்டமொன்றினூடாக வேகமாக ஓடினான். அவனுக்கு முன்னே பின்னே என்று எல்லா இடங்களிலும் எறிகணைகள் வீழ்ந்து கொண்டிருந்தன. எங்கே போகிறேன் என்பது நிச்சயமாக அவனுக்குத் தெரியாது.
அடிக்கிற ரவுண்சுகளும் எறிகணைகளும் அவனை நோக்கியே வீசப்பட்டன போலிருந் தது. “ஏன் எனக்குப் போய் இப்படி அடிக்கிறாங்கள்” என்று மனதிலொரு வினா எழும்பினாலும் “ஆமிக்காரன் என்றால் இப்படித்தான்” என்று மனமே பதில் சொல்ல, அவன் ஓட்டத்தை நிறுத்தவில்லை.
தென்னந்தோட்டத்தின் முடிவில் முட்கம்பி வேலி போன்று காணப்பட்டது. “ஏன் தான் இப்படி வேலியளை அடைக்கிறான்களோ” என்று காணிக்காரன் மீது கோபப்பட்டான். ஆடு, மாடுகள் பூக்கன்றை மேயாமல் இருக்கவென்று கிளுவந்தடி கொண்டு தான் வேலி அடைத்ததும் இன்று காலை அதனைப் பாய அவன்பட்ட கஸ்ரத்தையும் நினைக்க அவனுக்கு தன்மீதே வெறுப்பு ஏற்பட்டது.
கூட காலையில் கிளுவந்தடி கீறிக் கிழித்த போது அவன் அதனைக் கவனிக்கவில்லை. இப்போது முள்ளுக்கம்பி அவனைக் கொழுவியிழுத்துக் கீறியபோது அவன் பொருட்படுத்தவில்லை. தப்பி ஓட வேண்டும் என்பதைத் தவிர மனதில் வேறு ஏதும் நிற்கவில்லை. முள்ளுக்கம்பி வேலியைத் தாண்டியவுடன் வயல் வெளியொன்று முன்னே தெரிந்தது.
“எங்கையண்ணை இப்படி ஓடுறியள்..?” அவன் திடுக்கிட்டுப் போனான். கை, கால் எல்லாம் பதற முன்னுக்கு உற்றுப் பார்த்தான். வயல்வெளியின் முடிவையண்டிய தோட்டக்கரையில் நிலையெடுத்த வண்ணம் பல பெண் போராளிகள் இருந்தனர். அவன் ஓடிய ஓட்டத்தில் அவர்களைக் கவனியாது அவர்களின் முன்பகுதிக் காவலரணையும் தாண்டி வந்திருந்தான். பல்வேறு வயது எல்லைகளைக் கொண்ட பெண்போராளிகள் அவனை அனுதாபத்துடனும் சிரிப்புடனும் பார்த்தார்கள்.
அவனுக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. “ஆ.. ஆ.. ஆமி!” என்றான்.
என்ன வாய் குழறியது. அவர்கள் சிரித்தார்கள். அவனுக்கு மனதுக்குள் கோபம் வந்தது. “நான் பட்டபாடு இவர்களுக்கு தெரியும்?” மனதை அடக்கிக் கொண்டு மீண்டும் மெதுவாக ஓட முற்பட்டான்.
“எவ்வளவு காலத்துக்கு இப்படி ஓடப் போறீங்கள்..?”
மென்மையான குரலொன்று இவனைப் பார்த்துக் கேட்டது. அவனுக்கு அவமானமாகவும் வெட்கமாகவும் இருந்தது.
“ஓடாமல் என்ன செய்யிறது?” நிச்சயமாக அது ஒரு நல்ல பதில் இல்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
ஆனாலும் இந்த இடத்தைவிட்டு அகல வேண்டும் என்பதற்காகச் சொன்னான்.
ஓட்டமும் நடையுமாக அவன் விரைந்து கொண்டிருந்தான். “இந்தப் பிள்ளையள் தன்னைப் பார்த்து என்ன கேள்வி கேட்டு விட்டார்கள்” என்று மனதுக்குள் பொருமினான். கடைசியாக கதைத்த அந்தப் பெண் போராளியின் குரல் எங்கேயோ கேட்ட மாதிரிக் கிடந்தது என்று யோசித்தான். அந்த முகத்தை நினைவுபடுத்த முயன்றான்.
“அட சுமங்கலா” இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்து விட்டது. இவனுடன் தான் அவள் ஒன்றாகப் படித்தவள்.
சுமங்கலா சென்ற வருடம் திடீரென ஒரு நாள் காணாமல் போய் விட்டாள். தாய், தகப்பன் எல்லோரும் ஓடித்திரிந்த பின்னர் தான் அவள் இயக்கத்திற்கு போய் விட்டாள் என்பது தெரியும். முதலில் அவனுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாக இருந்தது.. ‘முட்டாள் பெட்டை’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
ஆனால் இன்றோ சுமங்கலாவை அடை யாளம் காணாமல் அவளுக்கு முன்னாலே ஓடி வந்ததை நினைக்க வெட்கமாக இருந்தது. அவள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்.
பாடசாலையைப் பொறுத்த வரையில் விளையாட்டுக்களில் அவன் சிறந்த வீரனாக இருந்தான். ஓட்டம், உயரம் பாய்தல், நீளம்பாய்தல் எல்லாம் அவனது பிரதான களங்களாக இருந்தன. சென்ற வருடம் மாவட்ட மட்டத்திலே முதல் மூன்று இடங்களிற்கு வந்திருந்தான். இதுகால வரையிலும் பாடசாலை, ரியூசன் வட்டங்களில் அவன் ஒரு வீரனாகவே கருதப்பட்டான். ஆனால் இன்று சுமங்கலாவிற்கு முன்னால் கோழை போல ஓடி வந்ததை நினைக்க வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. உடலெல்லாம் கூனிக்குறுகியது.
ஆனால் “ஓடாமல் வேறு என்ன செய்வது..?” என்று மனம் சமாதானப்படுத்தியது. கடவுளே! இன்று காலையில் நடந்ததை நினைத்தால்.. திடீரென அம்மாவும், தங்கச்சியும், தம்பியும் நினைவுக்கு வந்தார்கள். மனம் பகீரென்றது. “என்ன காரியம் செய்துவிட்டேன்….” அவர்கள் என்ன ஆனார்கள் என்ப தைப் பற்றி எதனையும் கவனிக்காமல் ஓடி வந்திருக்கிறான். நெஞ்சுக்கூட்டிலிருந்து ஏதோ கழன்று விழுவது போல கடும் வேதனையாக இருந்தது. தலை சுற்றியது. அப்படியே நிலத்தில் சரிந்தான்.
★★★
சண்டிலிப்பாய்தான் அவனது சொந்த இடம் சண்டிலிப்பாய்ச் சந்திக்கும் தொட்டிலடிச் சந்திக்கும் இடையிலுள்ள ஒரு பகுதியில் அவனது வீடு அமைந்திருந்தது. பிரதான சாலையிலிருந்து நூறு மீற்றர் தள்ளி ஒரு ஒழுங்கையினூடாகச் சென்றால் அவனது வீடு வரும். இங்குதான் அவனது அப்பா சிவப்பிரகாசமும், அம்மா கமலாதேவியும் குடியிருந்தனர். மூத்த ஆண்பிள்ளை என்றபடியால் அவனுக்குச் செல்லமாக செல்வராஜா என்று பெயர் வைத்தார்கள். அவனை வீட்டில் “ராஜா” என்றும் நண்பர்கள் “செல்வா” என்றும் செல்லமாக அழைப்பார்கள். செல்வராஜாவுக்குத் தம்பியும் ஒரு தங்கையும் மட்டுந்தான். கடைசியாக தங்கை பிறந்ததினால் அவன் தங்கையில் உயிரையே வைத்திருந்தான். தங்கையின் கடைசிப் பிறந்த தினத்திற்கு கூட அவனுக்கு அப்பா வெளி நாட்டிலிருந்து அனுப்பும் ‘பொக்கற் மணி’யில் மிச்சம் பிடித்து ஒரு கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தான். அவ்வளவு பாசம். அவன் இடைக்கிடை சண்டை போடுவதானால் தம்பி யுவராஜனுடன்தான். ஆனாலும் அவன் மீதும் பாசம் வைத்திருந்தான்.
அரசாங்கப் பணியில் கடமையாற்றிய சிவப்பிரகாசம் இடையிலேயே ‘பென்சன்’ எடுத்துக்கொண்டு உழைப்பிற்காக அவுஸ்திரேலியா சென்றுவிட்டார். அங்கு அவர் கணணியைப் பற்றிப் படித்து இப்போது ஒரு நிறுவனத்தில் கை நிறையச் சம்பளம் வாங்கும் ஊழியராகக் கடமையாற்றுகிறார். சிவப்பிரகாசத்திற்குத் தற்போது அவுஸ்ரேலியா பிரஜாவுரிமை கிடைத்துவிட்டது. அவர் தனது குடும்பத்தை அங்கே அழைப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கமலாதேவியோ பரம்பரையாக வாழ்ந்த வீட்டை விட்டுப் போவதற்கு சற்றேனும் விரும்பாதவள். அவள் ஒரு பழைய சைவ நம்பிக்கைகளைக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவள். இதனால்தானோ என்னவோ பிள்ளைகளது படிப்பில் கூடிய கவன மெடுத்து வேறு விடயங்களில் ஈடுபட விடாமல் கண்டிப்பாக படிப்பித்து வந்தாள். இதனால் படிப்பைத் தவிர வெளியுலக விடயங்களேதும் பெரிதும் தெரியாத வீட்டுப் பூச்சிகளாகவே பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். செல்வராஜாவுக்கு மட்டும் விளை யாட்டுப் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கியிருந்தாள். இந்த வருடம் அதுவும் இல்லை.
செல்வராஜா மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்தர கணிதப் பிரிவில் படித்துக் கொண்டிருந்தான். ஓ. எல்லில் அவன் நல்ல பெறுபேறுகளைப் பெற்றதால் உயர்தரத்திலும் பல்கலைக்கழகம் செல்லக்கூடியவன் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். செல்வராஜாவும் அதற்கு ஏற்றாற் போல கடுமை யாகப் படித்து வந்தான். இடையில் வந்த சமாதானத்தின் பலனாக அவனது அப்பா அவுஸ்திரேலியாவிலிருந்து ‘சோலார்’ விளக்கு அவனது அனுப்பிய படிப்பிற்கு கைகொடுத்தது. மண்ணெண்ணெய்ப் புகை யிலிருந்து விடுதலை. பெற்றோர்கள் காட்டிய அக்கறைக்கும் ஊக்கத்திற்கும் ஏற்ப அவன் படித்தான். தாயார் விரும்பியது போலவே பொறியியலாளராக வருவதே அவனது இலட்சியமாக இருந்தது. போராட்டம் குறித்து அவன் பெரிதும் அக்கறை காட்டவில்லை. அவனது குடும்பத்திலோ அல்லது உறவினர்களிலோ எவரும் இயக்கத்தில் இருக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். இயக்கத்திற்குப் போகிறவர்களைக் குறித்து அவனுக்கு ஆச்சரியமாகவும் புதிராகவும் இருந்தது. படிக்க முடியாதவர்களும் கஸ்ரப் படுகிறவர்களும்தான் இயக்கத்திற்கு போகிறார்கள் என அவன் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டிருந்தான். சுமங்கலா இயக்கத்திற்கு போனது இவனுக்கு ஒரு தாக்கமாக இருந்தது. அத்துடன் இவனது நெருங்கிய நண்பன் சத்தியமூர்த்தியும் இயக்கத்திற்கு போனது இவனை யோசிக்க வைத்தது. ஆனாலும் இவன் அதனைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. படிப்பிலேயே கவனமாகவும் குறியாகவும் இருந்தான். பேராதனையில் பொறியியல் படிப்பை முடித்து அவுஸ்திரேலியா செல்லும் கனவில் மூழ்கியிருந்தான்.
★★★
அது ஜூலை மாதம் 9-ம் திகதி. அதி காலையிலேயே எழுந்து அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு படிக்க ஆரம்பித்திருந்தான். பொறியியல் பீடத்திற்கு கிடைத்தால், கரகம் எடுப்பதாக பிள்ளையாரிடம் நேர்ந்திருந்தான். பிள்ளையாரின் மீது இவனுக்கு அதிக பக்தி. பிள்ளையாரால் தான் ஓ.எல். விசேடமாகப் பாஸ் பண்ணியது என நம்பியிருந்தான்.
எறிகணைச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் அதிகரித்துக் கேட்கலாயின.
“இவங்கள் இப்படித்தான் நெடுகவும் அடித்துக் கொண்டிருப்பாங்கள்” என்று மனதிற்குள் இராணுவத்தை திட்டியவாறே எழுந்து எல்லா ஜன்னல்களையும் சாத்திவிட்டு “அம்மா என்னை ஒருத்தரும் குழப்பாதையுங்கோ நான் படிக்கப் போறன்” என்று தாயாரிடம் கூறிவிட்டு கதவையும் சாத்தி விட்டு படிக்கத் தொடங்கினான்.
எவ்வளவு நேரம் படித்துக்கொண்டிருந்தானோ தெரியாது திடீரென “டொய்” என்ற சத்தத்துடன் அவனது அறை ஜன்னல் கண்ணாடி சிதறியது. திடுக்கிட்டுப் போய் எழுந்த போதுதான் ரவைகளும் எறிகணைகளும் இவனது வீட்டைத் தாண்டிச் சென்று கொண்டிருந்ததை உணர முடிந்தது. “இது என்ன கஸ்ரகாலம்? வேணுமெண்டு என்ர படிப்பைக் குழப்புறாங்கள்” என்று சிந்தித்த படியே அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே போனான்.
அங்கே தாயாரும், தங்கையும் பதறிய படியே மண்டபத்தில் நின்றார்கள். “தம்பி என்ன நடக்குதெண்டே தெரியேல்லை. சத்தங்களும் வரவர கிட்டவாகக் கேட்கிது” என்றாள் அம்மா. “கொஞ்சம் பொறுங்கோ நான் றோட்டில போய்ப் பார்த்திட்டு வாறன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
சத்தங்கள் வித்தியாசமாகவும் பயங்கரமாகவும் கேட்டன. ஒழுங்கை வழியாகச் சென்று பிரதான வீதியை எட்டிப் பார்த்த போதுதான் பயங்கரத்தின் முழுப்பரிமாணத் தையும் கண்டு கொண்டான். டாங்கி ஒன்று அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அவனுக்குப் பத்தடி தள்ளி ஏராளமான பச்சைப் பேய்கள் நின்றன. மழுங்கடிக்கப்பட்டு மீசை இல்லாத முகங்களும், கண்களில் தெரியும் இரக்கமற்ற தன்மையும் கோபமும் அவனைக் கிலிகொள்ள வைத்தன. இவ்வளவு அண்மையில் செல்வராஜா ஒருபோதும் இராணுவத்தைப் பார்த்தது இல்லை. இராணுவத்தைத் தவிர வேறு எதுவுமே அவன் பார்வைப் புலனில் படவில்லை. அவனது நெஞ்சுக்குள் இருந்து ஏதோவொன்று திரண்டு வாயை அடைத்தது. கால்களோ அசைய மறுத்தன. அவன் கெலித்துப் போனான். “அடோ கொட்டியா” என்ற குரல் பதட்டத்துடன் ஒலித்த போதுதான் அவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு “ஐயோ – ஆமி” என்று குழறிக்கொண்டு ஓடத் தொடங் கினான்.
“சட சட” என்று ரவைகள் அவனைத்
தாண்டி சீறிக்கொண்டு சென்றன. முள்ளந்தண்டு பலமாகக் கூசியது. எந்த நேரமும் ர்வை அவனைத் தாக்கலாம். இதோட தான் சரி என்ற எண்ணமே செல்வராஜாவின் மனதிலிருந்தது. வீட்டு முன் கதவை பாய்ந்து திறந்து கொண்டு வந்தபோது கூட அவன் நிற்கவில்லை. “அம்மா ஆமி! அம்மா ஆமி ஓடுங்கோ” என்று கத்திக் குழறிக்கொண்டே ஓடினான்.
எப்படி அவன் வீட்டுப் பின்பக்க கிளுவம் வேலியைத் தாண்டினான் என்றோ, அடுத்த வளவு மாமாவின் வீட்டுச் சுவரை எப்படிப் பாய்ந்தான் என்றோ அவனுக்கு ஏதும் தெரியாது. எப்படியாவது தப்பவேணும்; ஓடித் தப்ப வேணும் என்பது மட்டும்தான் அவனுக்கு முன்னால் தெரிந்தது.
அவன் பார்த்த இராணுவத்தின் வெறுப்பு உமிழும் விழிகள் அவனை நிற்கவிடாமல் துரத்தியது. பேய்களைப் பற்றி அவனது தாயார் சொல்லும்போது அவனது விஞ்ஞான மனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இன்றோ அந்தப் பேய்களை நேரில் கண்டபோது, அம்மா சொன்ன பேய்கள் உலகத்தில் இன்னும் இருக்கிறது என்பதைப் பூரணமாக நம்பினான்.
★★★
பூகம்பம் வெடித்தாற் போல பூமிப்பந்து திடீரென அதிர்ந்தது. மனச் சோர்வில் மயங்கிக் கிடந்தவனை குண்டுவெடிப்பின் அதிர்ச்சியலைகள் தள்ளி விழுத்தின. வீட்டுச் சிந்தனையில் தன்னை மறந்திருந்த அவன் தன்னைச் சுற்றியிருந்த யதார்த்த சூழ்நிலை யினை கவனிக்கத் தவறிவிட்டான். குண்டு வீச்சு விமானமொன்று போகிற அவசரத்திலே எல்லாக் குண்டுகளையும் கொட்டிவிட்டு மிக உயரக் கிளம்பிச் செல்வதை கண்டான். “கொஞ்ச நாள் நிம்மதியாக இருந்தம். திரும்பி வந்திட்டாங்கள்…” என்று மனம் பதைபதைத்தபடியே எழும்பினான்.
தென்கிழக்கு மூலையில் சுமார் 500 மீற்றருக்கு கிட்ட ஒரே புகை மண்டலம் எழுந்ததுடன் மனிதக் கூக்குரல்களும் அவல ஒலிகளும் கேட்கலாயின. போய்ப் பார்ப்போமா..? என்று மனதில் கேள்வி எழ எழுந்து நடந்தான். வழமையாக எறிகணை அன்றி விமானக்குண்டு வீச்சுச் சேதங்களை இவன் ஒருபோதும் போய்ப்பார்ப்பதில்லை. இன்று சூழ்நிலை அவனைத் தூண்டியது.
அது, நவாலி சென். பீற்றர் தேவாலயம். அங்கு கட்டிடக் குவியல்களும் மனித சதைக் குவியல்களும் எங்கும் பரவி சிதறிக் காணப்பட்டன ஒப்பாரியும் அழுகைக்குரலும் காதை அடைத்தது. எங்கும் அழுகுரலும், வேதனைக்குரல்களும், ஆண், பெண், பெரியவர்கள், குழந்தைகள் என்று எதுவித வேறுபாடும் இன்றி நரவெறிபிடித்த பேயொன்று வெறியாட்டம் போட்டிருந்தது.
இப்படியொரு கோரக்காட்சியினை அவன் என்றுமே கண்டதில்லை. சந்திரிகா அரசு பதவிக்கு வந்த போது மகிழ்ச்சி அடைந்தவர்களில் அவனும் ஒருவன். இனியென்ன, மின்சாரம் வந்து விடும். படிப்பதற்குப் பிரச்சினையில்லை என்றுதான் யோசித்தான். புலிகள் மாணவர் அமைப்பினரும் புலிகளின் உறுப்பினர்களும் சாலைகளில் கூட்டம் வைக்கும்போது சந்திரிகா சமாதான வேடம் தாங்கிய இனவாதி என்று கூறியபோதெல்லாம், அவன் அதனை நம்பவில்லை. இவர்கள் இயக்கத்திறகு ஆட்கள் சேர்ப்பதற்காகத் தான் இப்படிச் சொல்கிறார்கள் என்று யோசித்தான். ‘பொடியள் சொன்னது சரிதான். சந்திரிகாவின் முகமூடி இங்கு தான் எங்கோ விழுந்து நொருங்கியிருக்கிறது’ என்று செல்வராஜாவுக்கு இப்போது தோன்றியது.
“ஐயோ இப்படி யாரும் செய்வாங்களோ என்ர ஐயோ! தமிழனாகப் பிறந்ததே பாவம் தான்” என்று யாரோ கதறியழும் சத்தம் கேட்டது. இப்படிப் பலகுரல்கள், பல அழுகைச்சத்தங்கள். கோபமிகுதியில் யாரோ
சாபமிடுவதும் இவனுக்குக் கேட்டது. இவனுக்குள் யாரோ ஆணி அறைவது போலிருந்தது.
வட்டுக்கோட்டை, சங்கரத்தைப் பகுதிகளில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து ஏராளமானவர்கள் நவாலி வீதிவழியே வந்து கொண்டிருந்தார்கள். நவாலி வீதியனருகே தான் சென்பீற்றரின் தேவாலயமும் அமைந்திருந்தது. றோட்டெல்லாம் கட்டிடச் சிதறல்கள்; பரவிக் கிடந்தன. இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தவர்கள் அச்சிதறல்களைத் தாண்டி குண்டு வீச்சின் கொடூரத்தையும் பார்த்தவண்ணம் விரைந்து சென்று கொண்டிருந்தனர். செல்வராஜாவினால் இவ்வாறு செல்லமுடியவில்லை. உலகமே கொடூரமானதாகவும், துன்பகரமானதாகவும் மாறிவிட்டது போலிருந்தது. புற உலகின் யதார்த்தத்தை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.. இது என்ன உலகம்.. என்ன வாழ்க்கை என்று பெருமூச்சு விட மட்டும் முடிந்தது.
“என்ன செல்வா இங்கை நிக்கிறீர்” என்ற படியே ஒருவர் அவனது தோளைத் தட்டினார். திடுக்கிட்டுப் போய் திரும்பிப்பார்த்தால் அவனது கணித ஆசிரியர் பொன்னம்பலம். சைக்கிளில் பல உடமைகளுடனும் குடும்பத்தவர்களையும் அழைத்துக்கொண்டு வேகமாக யாழ் நோக்கிச் சென்றவர் அவனைக் கண்டதும் விசாரித்தார்.
தெரிந்த பழகிய ஒருவரைக் கண்டவுடன் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்ததெல்லாம் வெளியே பீறிட்டுப் பாய்ந்தது. ‘சேர் எங்கடை வீட்டிலெல்லாம் ஆமி வந்திட்டான். எனக்குச் சுட்டவங்கள் நான் ஓடியந் திட்டன். ஆனால் சேர், அம்மாவையும் தங்கச்சியையும் காணேல்ல’ அதற்கு மேல் சொல்லமுடியாமல் அழ ஆரம்பித்தான்.
“என்ன தம்பி இப்படி அழுகிறீர். உம் மோட்ட பொடியள் இதைவிடச் சின்னப் பொடியளெல்லாம் முன்னுக்கு நின்று அடி படுகிறாங்கள்” என்று சொன்னவர் பின்பு எதனையோ யோசித்து விட்டு “அம்மாவை யெல்லாம் வேறு வழியால வந்திருப்பினம். நீர் ஒண்டுக்கும் யோசிக்காதையும்.. உங்கட சொந்தக்காரர் வீடுகளில் போய்த் தேடிப் பாரும்” என்றார். பிறகு, “தம்பி நான் கன தூரம் போகவேணும் அப்ப வாறன்”
மாஸ்ரரும் அவரது குடும்பத்தினரும் சனக்கூட்டத்தினூடு சென்று மறைந்து விட்டனர். செல்வராஜா இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். சனக்கூட்டத்தை திரும்பிப் பார்த்தான். எவ்வளவு சனங்கள் றோட்டு முழுவதும் சாரிசாரியாகச் சென்று கொண்டிருந்தனர். எல்லோரது முகத்திலும் பயமும், பீதியும், கவலையும்…. ‘எல்லோரும் எங்கே போகிறீர்கள்? நான் எங்கே போவது?” மனதில் களைப்பும் ஆயாசமும் தோன்றியது.

★★★
நான்கு நாட்களாக எல்லா இடமும் தேடியும் செல்வராஜாவின் தாய், தம்பி, தங்கைகளைக் காணவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்திலும் போய்ப்பார்த்து வந்தான். ஒரு முடிவும் தெரியவில்லை. செல்வராஜா இப் போது நல்லூரிலுள்ள அவனது சித்தப்பா வீட்டில் வந்து சேர்ந்திருந்தான். எப்போதோ ஒரு காலத்தில் இவனது வீட்டின் வேலியிலிருந்த முருங்கை மரத்தால் ஏற்பட்ட சண்டையால் இரு குடும்பத்தினருக்குமிடையில் உறவு முறைகள் சீரில்லாமல் இருந்தன.. இவன் எங்கே போவதென்று தெரியாமல் றோட்டால் போய்க்கொண்டிருந்த போது சித்தப்பா இவனைக் கண்டார். “இதென்ன கோலம் தம்பி… ஆபத்திற்கு உதவுகிறதுதான் மனுஷத் தன்மை. ஒண்டையும் யோசிக்காமல் எங்கடை வீட்டிற்கு வாரும்” என்று அழைத்துக்கொண்டு போனார்.
நல்லூரடியில் எறிகணைச் சத்தங்கள், விமானங்களின் இயந்திர முறுகல்களின் சத்தங்களைக் கேட்டாலும் வழமையான வாழ்க்கையில் எதுவித குறையுமிருக்கவில்லை. சித்தப்பா குடும்பத்தினர் விமரிசையாக
வெளிக்கிட்டுக் கோயிலுக்குப் போனார்கள். செல்வராஜாவுடன் அனுதாப வார்த்தைகள் கதைத்தார்கள். அவனது குடும்பத்தினரை அவனுடன் சேர்ந்து தேடினார்கள். வேளா வேளைக்கு நல்ல சாப்பாடும் தேனீரும் வந்தது. அவனுக்கு எதிலுமே மனம் செல்ல வில்லை. சாப்பாடும் இறங்கவில்லை.
அவனது நினைவுகள் எல்லாம் குடும்பத்தைச் சுற்றியே சுழன்றன. அம்மா.. தம்பி.. தங்கச்சி.. தங்கச்சி என்ன செய்யிறாளோ மனம் அலை மோதியது. கண்ணீர் வந்தது. ‘எவ்வளவு கோழையாகிப் போனேன். என்ன நடந்திருந்தாலும் குடும்பத்தோடையே நிற்க வேணும். அப்பா அறிந்தால் என்ன நினைப்பார். செல்வராஜாவின் மனம் ஆறுதலற்று எங்கெல்லாமோ ஓடியது.
“ஆமி எவ்வளவு தூரம் வந்திட்டான் தெரியுமோ” சித்தப்பாவின் மூத்த மகன் சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். “கல்லுண்டாய் வெளியிலே ஒருபக்கம் வந்து நிற்கிறான். அங்கே மற்றப்பக்கம் சண்டிலிப்பாய் சந்தி தாண்டி கட்டுடையில் நிற்கிறான்.”
“எவ்வளவு இடத்தைப் பிடிச்சிட்டான் தெரியுமோ”
“அடுத்தது ரவுண்தான்”
சித்தப்பாவின் இளையமகன் பெருமூச்சு விட்டபடியே சொன்னான்.
சித்தப்பா வீட்டில் பாராளுமன்றம் கூடி விட்டது.
“அப்ப பொடியள் என்ன செய்யிறாங்களாம்?” இது சித்தி.
“பொடியள் அடிபடுற நோக்கமே இல்லைப்போல கிடக்கு”
”ஒருக்கா ஆமியை உள்ளுக்க விட்டாத் தான் தங்கட அருமை சனத்திற்கு விளங்கும் எண்டு யோசிக்கினம் போல”
என்றார் சித்தப்பா.
“அப்படியெண்டால் பொடியள் ரவுணையும் விட்டு விடுவாங்களோ?”
“அப்பிடிப் போலத்தான் கிடக்கு”
“நல்லூரானே இதென்ன சோதனை?”
“சனமெல்லாம் சாகுது. காயப்பட்டு ஆஸ்பத்திரி நிரம்பி வழியிது. றோட்டெல்லாம் அகதி அகதியாய் திரியிது. பொடியள் பேசாமலிருந்தால் என்ன மாதிரி” சித்தப்பாவின் இளைய மகன்.
“கவனிச்சியோ பொடியள் ஒருத்தரும் சாகவுமில்லை. அவை அடிபடவுமில்லை” சித்தப்பா.
“பத்தாயிரம் ஆமியைக் கண்டு பயந்து போனாங்கள் போலக்கிடக்கு” சித்தப்பாவின் நடுவில் மகன் தனது பங்கிற்கு இவ்வாறு கூறினான். இன்னும் கதைகள் தொடர்ந்தபடியே இருந்தன. செல்வராஜாவுக்கு தனது கல்லூரியிலும் ரியூசனிலும் கருத்தரங்கு வைத்த போராளிகள் சொன்னவைதான் நினைவுக்கு வந்தன.
“பொடியள் அப்பவே சொன்னாங்கள் தானே! பெரிய சண்டை வரப்போகுது இயக்கத்தில் சேருங்கோவெண்டு” கணீரென்ற குரலொன்று கேட்டது. “சரி கிழவி வந்திட்டுது. இனி விடாது. பேசாமல் மாறுவம்” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடியே சித்தப்பாவின் மூத்த மகன் நைசாக அந்த இடத்தை விட்டகன்றான்.
“இங்க றோட்டு றோட்டாய் பொடியளும் பெட்டையளும் அளந்து திரிந்தால் ஆர் போராடுகிறது? கதைக்க மட்டும் தெரியும். யாராவது ஒராள் இயக்கத்துக்குப் போங்கோவன்.” ஆச்சிக்கு கோபம் வந்தால் இப்படித் தான். ஆச்சி வேறு யாருமில்லை, சித்தப்பாவின் தாயார் தான். மனிசிக்கு பொடியளை யாராவது குறை சொன்னால் போதும் விளக்குமாறையும் தூக்கிக் கொண்டு சண்டைக்கு வந்து விடுவா. அதனாலே சித்தப்பா வீட்டில் ஆச்சிக்கு முன் ஒருவரும் இயக்கத் தைப்பற்றிக் கதைக்க மாட்டார்கள்.
“….பார்… நீ மூன்று தறுதலைகளைப் பெத்து வைச்சிருக்கிறாய்.. விடிந்தால் பொழுது படுகிறவரை நல்லூரிலை பெட்டையளுக்கு பின்னால் சுத்துறதுதான் வேலை.. ஏன் நீயும் தான் கூட்டங்கள், சாப்பாடு குடுக்கிறது எண்டு ஆதரவாளன் போல திரி. ஆனா பிள்ளையளை மட்டும் பொத்திப் பொத்தி இயக்கத்திற்கு விடாமல் வளர்…. தலைவர் இருக்கிறார். விடமாட்டார்.”
ஆச்சியின் சூடான இந்தக் கதையோட சித்தப்பாவையும், சித்தியையும் காணவில்லை. ஆச்சி சூரசம்காரம் செய்த முருகன் போல பொல்லோடு மண்டபத்தில் நின்றார். பாராளுமன்றம் எப்படிக் கலைந்தது என்றே தெரியவில்லை.
“ம் சண்டிலிப்பாயிலிருந்து பெத்த தாயையும் சகோதரங்களையும் விட்டிட்டு ஓடி வந்திருக்கிறான்.. ம்.. எங்க தான் ஓடப் போறாங்களோ தெரியேல்லை.” ஒருவரையும் காணாதபடியால் ஆச்சி முணுமுணுத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம் செல்லலானா. மெதுமெதுவாக ஈட்டியாலே யாரோ இதயத்தினுள் செருகியது போல செல்வராஜாவிற்கு இருந்தது. ‘சுமங்கலாவும் இப்படித்தான் கேட்டவள்’ மனம் ஊமையாக அழுதது. ‘பிழைதான்.. பிழைதான் ஆனால்…’
‘தமிழீழத் தேசியத் தலைவரால் திட்ட மிடப்பட்ட புலிப்பாய்ச்சல் தாக்குதலால் இராணுவம் கலைக்கப்பட்டு விட்டது. போராளிகள் மீளக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பகுதிகளில் தடையகற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்’ பத்திரிகைகள் பரபரத்தன; மக்கள் ஆரவாரித்தனர்.
செல்வராஜா நிலைகொள்ளாமல் தவித்தான். அவன் நாலைந்து தடவை தனது வீட்டிற்குப் போக முயன்றான். ஆனால் இராணுவம் ஆபத்தான வெடிபொருட்களை விட்டு விட்டு சென்றதால் போராளிகள் முன்னே செல்ல விடவில்லை.
ஆனைக்கோட்டைச் சந்தியில் நின்று எப்படிப்போவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதுதான் பக்கத்திலிருந்தவர் ‘ஈழநாதம்’ பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்ததை அவதானித்தான். அந்தப் பத்திரிகையை பார்க்கவேண்டும் என்று அவனது மனதில் இனந்தெரியாத ஏதோவொரு துடிப்பேற்பட்டது. பத்திரிகையை வாங்கினான். இல்லைப் பறித்தான் என்றே சொல்லலாம். புலிப் பாய்ச்சலின் போது வீரச் சாவைடைந்த மாவீரர்களது புகைப்படங்கள் அங்கே விபரங்களுடன் பிரசுரிக்கப்பட்டிருந்தன. ஏனோ மனம் துடிதுடித்தது. அப்பக்கத்தில் கண்களைச் செலுத்தினான். வேகமாக எல்லாப் படங்களையும் பார்த்துக்கொண்டு வந்தவன் இடையில் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான்.
திரும்பித் திரும்பி அந்தப் படத்தைப் பார்த்தான். நெஞ்செல்லாம் வேதனையால் துடித்தது. மனம் பதைபதைத்தது. அப்படத்தில் லெப். சுமங்கலா சிரித்துக் கொண்டிருந்தாள். இவன் அவளை ஒரு போதும் காதலித்தது கிடையாது. ஆனாலும் மனதில் அவளின் நினைப்பு ஆழமாக பதிந்திருந்ததை அவனால் அப்போதுதான் உணர முடிந்தது.
பேப்பர் கைநழுவி விழுந்ததையோ பேப்பரைப் பறிகொடுத்தவர் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு பின் அனுதாபமாகப் பார்த்ததையோ அவனால் உணரமுடிய வில்லை. கண்களில் நீர் நிறைந்து குளமாயின.
‘தம்பி உம்மட சகோதரர்கள் யாராவது வீரச்சாவடைந்து விட்டினமோ’ பேப்பர் வைத்திருந்தவர் அவனை அனுதாபத்துடன் பார்த்துக் கேட்டார்.
அதிர்ச்சியடைந்து போன செல்வராஜா அப்போதுதான் புற உலகத்திற்கு வந்தான். ‘ஓம்’ என்றான் கண்ணீர் மல்க.
★★★
சண்டிலிப்பாயை நோக்கி அவனது சைக்கிள் மிகவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அவனது மனமோ அவனுக்கு முன்பே வீட்டிற்குப் போய் அங்கு அம்மா, தம்பி, தங்கைகளைத் தேடிக் கொண்டிருந்தது. இன்னொரு மனம் அவர்கள் பத்திரமாயிருக்க எல்லா தெய்வங்களையும் வேண்டியது. பிரார்த்தனை, நேர்த்தி இன்னும் பல. அவனது இஸ்ட தெய்வமான பிள்ளையார் உட்பட எல்லோருக்கும் வேண்டுதல்கள் செய்தான்.
அவனது வீட்டை அண்மிக்க அண்மிக்க அவனது நெஞ்சு ‘பக் பக்’ என்று மிகப்பலமாக துடிதுடித்தது. இராணுவம் சுட்டு ஓடும் போது கூட இதயம் இப்படி அடிக்கவில்லை. வேகமாக ஒழுங்கையால் திரும்பினான். பக்கத்து வீட்டு வேலியெல்லாம் ‘டாங்கி’ போனதால் சின்னாபின்னமாகக் கிடந்தது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
‘நாய், பூனை செத்திருக்கும். அல்லது ஆமிக்காரன் செத்திருப்பான்” என்று மனதைத் தேற்றிக்கொண்டான். வீட்டின் முன்மண்டபம் ‘ஆ’ வென்று திறந்து கிடந்தது. முற்றம் முழுவதும் வீட்டுச் சாமான்களும் வேறுமாக தாறுமாறாக வீசிக் கிடந்தன. சைக்கிளை நிறுத்தியவன் மனமெல்லாம் இனம்தெரியாத பீதியும் பயமும் நிறைய உடம்பெல்லாம் தடக்கியது. நடுங்கியது. காலில் ஏதோ வீட்டிற்குள்ளிருந்து நாலைந்து நாய்கள் அவனைப் பார்த்துக் குரைத்தபடியே ஓடின. ஆணியறைந்தவன் போல நின்றான். வீட்டிற்குள் போக துணிவு வரவில்லை. உடம்பிலுள்ள பலமெல்லாம் கரைந்து போவது போலத் தோன்றியது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் காலடியெடுத்து வைத்தான்.
‘அம்மா.. ஆ..ஆ..’
அவன் கண்ட காட்சி அவனைப் பேயறைந்தவன் போலாக்கியது. அழுதான் குலுங்கிக் குலுங்கி அழுதான். பேய்க்காற்றும் இடியும் மின்னலுமான இரவில் தீவொன்றில் தனித்திருப்பது போலக் கிடந்தது. இன்னொரு கணம் கடற்சுழியொன்றில் அகப்பட்டு அது அவனை உள்ளுக்குள் இழுப்பது போல, கழுத்தெல்லாம் திருகி மூச்சுத் திணறுவது போல ஒரு உணர்வு. எவ்வளவு நேரம் அப்படி அழுது கொண்டிருந்தானோ அவனுக்கே தெரியாது.
மனம் கல்லாக இறுகியிருந்தது. தள்ளாடிய படி சைக்கிளைத் திருப்பினான். கால் போன போக்கில் சைக்கிள் போனது. இந்த மண்ணில் இப்போது அவனுக்கு சொந்த மென்று யாருமில்லை. எங்கே போவது?
‘எவ்வளவு காலத்திற்கு இப்படி ஓடப்போறியள்? சுமங்கலாவின் நினைவு வந்தது.
‘சொந்தத் தாய், சகோதரங்களை விட்டு ஓடி வந்திருக்கிறான் பார்’ ஆச்சியின் குரல்.
இவையெல்லாம் மாறி மாறி அவனுக்குள் ஒலித்தன .
அவனது சைக்கிள் ஆனைக்கோட்டை யைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கிப் போகையில் ஏதோவொரு சக்தியால் தன்னையறியாமலே மனம் ஈர்க்கப்பட்டு சைக்கிளை நிறுத்தினான். முன்னாலே நிமிர்ந்து பார்த்தபோது, மில்லர் சிரித்துக்கொண்டு நின்றான். எத்தனையோ தடவை இந்தப் பாதையாலே செல்வராஜா போயிருப்பான். இன்றுதான் கரும்புலி கப்டன் மில்லருடைய கட்டவுட்டினைப் புதிதாய்ப் பார்ப்பது போலப் பார்த்தான். “என்னைத் தியாகம் செய்ததன் மூலம் ‘ஒப்பரேசன் லிபரேசனை’ ஒரு முடிவுக்கு கொண்டு வந்து எவ்வளவு மக்களைக் காப்பாற்றினேன் பார்த் தாயா?”… என்று மில்லர் இவனைக் கேட் பது போல இருந்தது. இனி எங்கு போவதென அவனுக்குத் தெரியும்.
![]()
-சூரியப்புதல்வர்கள் 1995
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்