
துயிலுமில்ல விதைப்பொன்றின் பின்னர் வீடு திரும்பினேன்.
துயிலுமில்ல விதைப்பொன்றின் பின்னர் வீடு திரும்பினேன்.
படுக்கை விரித்துவிழ சாமக்கோழி கூவிற்று.
வித்துடல் தோளேற்றி நடந்ததால் வலித்தது தோளும், மனமும், தூக்கம் தொலைவாகிப் போனது. கவிதையொன்று எழுதலாம் எழுதலாம் எப்படித் தொடங்குவது? எழுதிச்சென்று எங்கே முடிப்பது? பாட்டெழுதிப் பாட்டெழுதி நான்படும் துயர் யாரறிவர்?
கூட்டுக்குள் கிடந்து குமைகிறது உயிர்.
பூவள்ளிப் போட்டே புண்ணாச்சு கைகள்.
நிதம் அழுதழுது நீர் வற்றிப் போனது விழிகள்.
கண்மலரும் காலையொவ் வொன்றும் வீரச்சாவுடன் தானே விடிகிறது.
இமைமூடும் பொழுதும் இடிவிழுத்தித்தானே இருள்கிறது. நிலவு முகம்திருத்திய நிர்மலப்பூங்குஞ்சுகளை இழவு எடுத்துச்செல்கிறது நாளாந்தம். எத்தனை காலத்துக்கென்றுதான் இது?
பத்துப் பரப்பில் விதைக்கத் தொடங்கிய வயல் ஏக்கர் கணக்காக நீள்கிறது இன்று.
விதைக்கக் குழிதோன்ட வியர்க்கிறது நிலம்.
காற்றின் விழிகளிலும் துளி. வெள்ளையடித்த கல்லறைகளுக்குள்ளே பள்ளிகொள்கின்றனர் பரமாத்துமாக்கள்.
நூல் பிடித்தோடிய நேராய் வரிசையான நாற்று நடுகை.
எல்லாம் முளைக்குமெனும் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. கங்கும், கணையுமாக எங்கும் அரும்புகள்.
ஒருநாள் வந்து உள்ளே புகுந்தோர் பூவைத்துப்பாரும்.
குழியிருந்து கேட்கும் குரல்,
பார்க்கும் விழி,
துடிக்கும் உயிர்.
எவர் சொன்னது இவர்களை இறந்து போனவரென்று?
எவர் சொன்னது எலும்புமுக்கி எருவானாரென்று?
வெளியே வருவதில்லையே தவிர குழிகளுக்குள்ளே ஒரு ராஜாங்கமே நடக்கிறது.
கார்த்திகை இருபத்தேழு தேசத்துக்கு உயிர்ப்பெழுதும் நாள்.
சில்லிட்டுப் போகும் நிலம். பூக்கொண்டு நடப்போம் புனிதநிழல். மெல்ல அருகணைந்து கல்லறை கழுவுவோம் கண்ணீரால். நெய்விளக்கேற்றும் நேரம். செல்வங்கள் விழிதிறப்பர். செவிகேட்கச் சிரிப்பர்.
மௌன மொழியில் பெற்ற மனம் குளிரப் பேசுவர்.
அதில் ஆயிரம் அர்த்தங்கள் அவிழும். “மொழியாகி எங்கள் மூச்சாகி” என்று என்புருக வழியும் பாடலில், சிலிர்த்துப்போய் சிலையாவோம். “பணிமுடித்து உறங்குகிறோம் மீதிவழி முன்செல்வீர்” என தேவகுமாரரின் அசரீரி கேட்கும். “எமக்கானது பூவல்ல….
எமக்கானது சுடரல்ல….
எமக்கானது இந்தப்பாடல் மட்டுமல்ல….
எமக்கானது விடுதலை,
எமக்கானது தேசத்தின் விடிவு” காற்றிலேறும் இந்தப் பேரொலியுடன் கல்லறைகள் மூடிக்கொள்ளும். ஒளிபெறும் திசையில் பாதை தெளிவுறும்.
வாசல் கடந்து வெளியே வர நிலம் விடிந்திருக்கும்.
எம் பயணம் தொடரும். மண்சுமந்தோர் கனவு
நனவாகும் வரை.
– புதுவை இரத்தினதுரை