×

இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்…

இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்…

சில உண்மை விளக்கங்கள்

பகுதி 1:
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இரத்தம் சிந்தி, எத்தனையோ மகத்தான தியாகங்களைப் புரிந்து, எத்தனையோ இன்னல்களை அனுபவித்து, சிங்களத் தீவிரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த யாழ்ப்பாணப் பிரதேசம் இன்று இந்திய இராணுவத்தின் வல்லாதிக்கத்தின் கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த எமது சொந்த மண்ணில், நாம் சுதந்திரமாக உலவிக் களித்த எமது தாய் பூமியில் இன்று இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்து எம்மை அடிமைப்படுத்தி வருகின்றது. முதலில் போர்த்துக்கேயர், அடுத்ததாக ஒல்லாந்தர் (ஹாலந்து), பின்பு ஆங்கி லேயர், அடுத்து சிங்களவர், இன்று இந்தியர் என கிட்டத் தட்ட 500 ஆண்டுகள் வரை ஈழத்தமிழினம் தொடர்ச்சியாக அன்னிய காலனிய ஆதிக்கத்தின் கீழ் நசுக்கப்பட்டு வருகின்றது. இதில் இந்திய ஆக்கிரமிப்பு, தமிழினத்திற்குச் செய்யும் அப்பட்டமான வரலாற்றுத் துரோகமாகும். தமிழீழத்தில் அமைதியைப் பேணி, தமிழீழ மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து, சுயாட்சி மாநிலம் பெற்றுத் தருவதாக இங்கு வந்த இந்திய இராணுவம், எமது தாய்ப் பூமியைக் கபழீகரம் செய்து, எமது மக்கள் மீது அதர்மமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது மிகவும் நயவஞ்சகமான நம்பிக்கைத் துரோகமாகும்.

இன்று தமிழீழத்தில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொடும் ஆட்சி நடைபெறுகின்றது. என்றுமில்லாதபடி எமது மக்கள் இம்சைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய இராணுவ வெறியாட்டம் சிங்கள அரச பயங்கரவாதத்தையும் மிஞ்சி நிற்கின்றது.

இந்தியாவின் நேசசக்தியாக விளங்கி வந்த எமது மக்கள் சமுதாயத்தின் மீது பாரதம் ஏன் இந்த பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது?

இந்திய அரசு ஏன் எம்மீது இந்த அதர்மமான யுத்தத்தைத் தொடுத்திருக்கின்றது?

இந்திய அரசு புலிகளை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டி நிற்பது ஏன்?

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், அதன் முக்கிய அம்சமான மாகாணசபைத் திட்டத்தையும் எமது மக்கள் மீது திணித்துவிட இந்தியா ஏன் பகீரத முயற்சி செய்கின்றது?

மாகாணசபைத் திட்டத்தின் அடிப்படையான குறை பாடுகள் என்ன?

இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் மத்தியில் எழுந்த முரண்பாடுகளும், அதன் மூலகாரணங்களும் என்ன?

இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராட நாம் ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டோம்?

இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் அளித்து எமது நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்து விளக்குவதுதான் இந்தப் பிரசுரத்தின் நோக்கம்……

இந்திய அரசானது தனது பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி புலிகளுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட விசமப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. தமிழ்மக்களின் உரிமைக்குரலாக விளங்கி வந்த பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டைப் போட்டு விட்டு உலகப் பத்திரிகையாளர்களின் வருகையைத் தடை செய்துவிட்டு, உண்மையை உலகிற்கு இருட்டடிப்பு செய்து கொண்டு, இந்திய அரசு தனது பொய்ப்பிரச்சார யுத்தத்தையும் எம்மீது தொடுத்துள்ளது. எமது விடுதலை இயக்கத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதோடு, எமது மக்கள் மீது சுமத்தப்பட்ட துன்பங்களுக்கு எல்லாம் எம்மையே காரணகர்த்தாக்களாகக் காட்டி, மக்களிடம் இருந்து எம்மை அன்னியப்படுத்தி, மக்கள் நலனில் அக்கறை அற்ற ஒரு மக்கள் விரோத சக்தியாக எம்மை சித்தரித்துக் காட்டுவதே இந்தியப் பிரச்சாரத்தின் நோக்கம். இந்தத் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்திற்குச் சவாலான ஒரு உண்மை விளக்கமாக, இந்த அறிக்கையை நாம் மக்கள் முன்னிலையில் வைக்கின்றோம்.

முதலில் இந்திய அரசுக்கும், “தவிபு” இயக்கத்திற்கும் மத்தியிலான உறவு பற்றியும், இந்த உறவில் காலத்துக்குக் காலம் ஏற்பட்டு வந்த முரண்பாடு பற்றியும், இந்த முரண்பாடுகள் கூர்மையடைந்து இறுதியில் மோதலாக வெடித்ததின் காரணங்கள் பற்றியும் இங்கு எடுத்து விளக்க விரும்புகிறோம்.

1977 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய ஜெயவர்த்தனா அரசு தமிழீழ மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையைக் கூர்மைப் படுத்தியதுடன் தமது வெளிவிவகாரக் கொள்கையையும் மேற்கத்தைய முதலாளித்துவத்தின் நலன்களுக்குச் சார்பாக நெறிப் படுத்தியது. இந்தியப் பிராந்திய வல்லாட்சியின் பிடியில் இருந்து விடுபட்டு மேற்கத்தைய ஏகாதிபத்தியக் கூட்டணியின் அடிவருடி நாடாகத் தன்னை ஆக்கிக் கொள்வதால் தனது பொருளாதாரத்தையும், முதலாளித்துவப் பாதையில் வளப்படுத்துவதோடு, தமிழரை இனரீதியாக ஒழித்துக்கட்டவும் வாய்ப்பாக அமையுமென ஜெயவர்த்தனா அரசு கருதியது. இதன் அடிப்படையில் உருவான இலங்கை அரசின் இந்தப் புதிய வெளிவிவகாரக் கொள்கை இந்தியப் பிராந்திய வல்லாதிக்கத்திற்கும், பூகோள அரசியல் நலன்களுக்கும் அச் சுறுத்தலாக அமைந்தது.

1983 ஜூலையில் இனப் பூகம்பமும், அதனையடுத்து ஜெயவர்த்தனா மேற்கத்தைய ஏகாதிபத்திய நாசகார சக்திகளின் உதவியை நாடியதும் இந்தியாவிற்கு மேலும் அச்சத்தை ஊட்டியது. இந்தச் சூழ்நிலையிற்தான் இந்திய அரசு ஈழத்தமிழினத் தேசிய இனப் பிரச்சனையில் தலையிட்டது. வெளிப்படையாக ராஜதந்திர ரீதியாகவும், மறைமுகமாக இராணுவ ரீதியாகவும் இந்தத் தலையீடு அமைந்தது. மத்தியஸ்தம் என்ற போர்வையில் கொழும்பில் பேச்சுக்களை ஆரம்பித்த அதேவேளை, மறைமுகமாக தமிழீழப் போராளிகள் அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கி ஆயுதப்போராட்டத்தை விரிவுப்படுத்தவும் இந்தியா திட்டம் தீட்டியது. இந்தியாவின் இந்தத் தலையீடு ஆனது தமிழீழ மக்களின் நலன்களைப் பேணி அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் செயலை மேற்கொள்ளவில்லை.

ஆயுதப்போராட்டத்தை விஸ்தரித்து, இன நெருக்கடியை மேலும் கூர்மையடையச் செய்து, போராளி அமைப்புக்கள் மூலம் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகித்து, இராஜதந்திர ரீதியாக ஜெயவர்த்தனா அரசை வென்றெடுத்து, இலங்கையைத் தனது ஆதிக்க வியூகத்துக்குள் கொண்டு வருவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. அதாவது, ஈழத்தமிழர் பிரச்சனையைத் தனது வல்லாதிக்கத்தின் நலன்களுக்குப் பயன் படுத்த இந்திய அரசு நோக்குடன் முயன்றது.

தமிழீழப் போராளிகளுக்கான இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தையும், முன்னாள் பாரதப் பிரதமரான இந்திரா காந்தி அம்மையார் இந்திய உளவுத்தாபனமாகிய ‘ரா’ விடம் கையளித்தார். இந்த உளவுத்தாபன அதிகாரிகள் தன்னிச்சையாகச் செய்த சில செயல்கள், போராளி அமைப்புக்களை பிரிவு படுத்தி, மோதவிட்டு ஒரே கட்டுக்கோப்பான தேசிய விடுதலை இயக்கம் உருவாகாமல் தடுத்ததுடன், போராளி அமைப்புக்களை இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழுள்ள கூலிப் படைகளாகச் செயல்படச் செய்வதாகவும் அமைந்தன.

இவர்கள் கையாண்ட இந்த யுக்திகள் எமது இயக்கத்திற்கும் ‘ரா’ விற்கும் மத்தியில் விரிசல்களை உண்டுபண்ணியது. இந்தச் சதி வேலைகளுக்கு ‘ரா’ விற்கு உறுதுணையாக நின்று செயற்பட்டவர் சந்திரகாசன் என்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ‘ரா’ அதிகாரிகள் சந்திரகாசனுடன் தொடர்பு கொண்டனர். அப்போது சென்னையில் சாமி, ரவிமேனன் எனப்படும் ‘ரா’ அதிகாரிகள் இயங்கி வந்தனர். இவர்கள் சந்திரகாசனின் நண்பர்கள். 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பயிற்சித்திட்டம் பற்றி சந்திரகாசனுக்கு அறிவிக்கப்பட்டது. விடுதலை அமைப்புக்களைச் சிபாரிசு செய்யும் பொறுப்பும் அவரிடம் கொடுக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் “தவிபு” இயக்கமே மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற ஒரு கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பாகச் செயற்பட்டு வந்தது. அவ்வேளை எமது தலைவரும் ஏனைய தளபதிகளும் தமிழீழக் களத்தில் நின்று போராடி மகத்தான இராணுவச் சாதனை களைப் புரிந்து வந்தனர். இராணுவ, அரசியல் பிரிவுகள் விஸ்தரிக்கப்பட்டு உள்ளூர் பயிற்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, சர்வதேசரீதியாகக் கிளைகள் திறக்கப்பட்டு, எமது இயக்கம் சுயமான முறையில் இயல்பான வளர்ச்சி கண்டுவந்த கால கட்டத்தில் ஏனைய அமைப்புக்கள் எல்லாம் சிதறுண்டு, செயலிழந்து கிடந்தன. இயக்கத் தலைமைகள் தமிழீழத்தில் இருந்து இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் ஒதுங்கி இருந்தன. இந்தச் சூழ்நிலையில்தான் சந்திரகாசனின் சூழ்ச்சிப்படலம் ஆரம்ப மாகியது.

– தொடரும் …..

அரசியல் பிரிவு தவிபு 1987.
தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments