
ஒரு ரவையைக் கூட வீணாக்க அனுமதிக்க முடியாத நெருக்கடியான காலம் அது.
எமது தேவைகளை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி எளிமையாக வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. மூன்று நேர உணவாகக் கஞ்சி, சோறு, கத்தரிக்காய்க் கறியும் சாப்பிட்டு கொண்டிருந்த நாட்கள் அவை.
மூவருக்கு ஒரு பை என்ற அளவில் மெல்லிய நெகிழிப்பை ஒன்றிலே கஞ்சி வரும். கஞ்சியை உணவு ஊர்தியிலிருந்து இறக்கிக் காட்டுத் தடிகளை விலக்கியவாறு காப்பரண்களுக்குள் கொண்டு வருவதற்குள் பாதி நெகிழிப் பைகள் கிழிந்து கஞ்சி நிலத்தில் ஊற்றிவிடும். எஞ்சிய கஞ்சியைப் பகிர்ந்து உண்டோமே அன்றி ஒரு நாளும் மேலதிகமாக நாங்கள் கேட்டதில்லை.
எமக்குத் தரப்படுகிற சொற்ப அளவிலான சீனி முடிவடைந்த பின் பாலை பழப்பாணி, வீரைப் பழப்பாணியுடன் சயத்தண்ணீர் குடித்தோமே அன்றி வேறெதுவும் நாங்கள் கேட்டதில்லை.
நீண்ட தூர நடை காரணமாக, தொடர் வேலை காரணமாக, பயிற்சி காரணமாக ஏற்படும் களைப்பைப் போக்குவதற்காக எஞ்சிய சோத்தை காயவைத்து வறுத்து பொடியாக்கி உண்டு கொண்டிருந்தோம்.
பயிற்சி நடவடிக்கையின் போது கூட ரவைகளை எண்ணி எடுத்தே சுட்டுக் கொண்டிருந்தோம். இப்படியான நேரத்தில் ஒரு ரவையை கூட எப்படி நாம் வீணடிக்க முடியும்?
1998
▪️தமிழீழம் கேட்டுப் போராட வெளிக்கிட்ட 36 இயக்கங்களில் புலிகள் மட்டும் எப்படி யாருக்கும் அடிபணியாமல் நின்று வரலாறு படைத்தார்கள் என்று கேட்பவர்களுக்குச் சொல்வதற்கு ஆயிரமாயிரம் கதைகளும் ஆயிரமாயிரம் காரணங்களும் உள்ளது.