
போருக்குள் வாழ்வதென்பது சாவுக்குள் வாழ்வதென்று அர்த்தப்படமாட்டாது
போருக்குள் வாழ்வதென்பது சாவுக்குள் வாழ்வதென்று அர்த்தப்படமாட்டாது. சத்தியத்தின் பக்கத்திலான யுத்தத்தில் சிலவேளைகளில் சாவு சம்பவிக்கலாம். இந்த இறப்பை ஏற்று தொடர்ந்தும் முன்னேற முடியாமற் போகும் தருணத்தில் தான் விடுதலைப் போராட்டத்தின் கதவு சாத்தப்படுகிறது.
உலகில் போராடி விடுதலைபெற்ற மக்கள் எல்லோருமே இன்னல்களையும் இழப்புக்களையும் துயரங்களையும் சந்தித்து நின்றவர்களேயாவர். துயரங்களைக் கண்டும் இழப்புக்களைக் கண்டும் சோர்ந்து போகும் ஒரு நாடோ அல்லது இனமோ விடுதலையின் அடிவேரைத் தொட்டுவிட முடியாது.
ஏனெனில், எந்த எதிரியும் எமக்கான விடுதலையைத் தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தரப்போவதில்லை. இன்று எம்மக்கள் விடுதலைக்காகக் கொடுக்கின்ற விலை பெரியது. சுமக்கும் சுமை அதிகமானது. என்றாலும் எம்மக்கள், தினசரி அலைக்கழிந்த வாழ்வை வாழ்கின்றபோதும் போராட்டத்தின் உறுதிதளராமல் நிற்கின்றார்கள்.
நவாலி நரபலியும் நாகர்கோவில் படுகொலையும் எம்மக்களை அச்சுறுத்தி, மனதளவிலான பயப்பிராந்தியை ஏற்படுத்தி, போராட்டத்திலிருந்து அவர்களைப் பிரித்தெடுப்பதற்காக எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொடூர நடவடிக்கைகளாகும். ஆனால், இது எதிரியின் கணிப்புக்கு மாறாக எம்மக்களுக்கு விடுதலையின் மேல் இன்னும் உறுதியையும் போராட்ட ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்டு எதிரி மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் விடுதலைப் போருக்கு பலம் சேர்ப்பதாகவே அமைந்து வருகிறது.
நவாலி நரபலியின் கோரம் உலகநாடுகளில் சிறிலங்கா அரசுக்கு தீராத அவமானத்தையும். பூமி யெங்கும் பரந்து வாழும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் அமைந்துவிட்டது; ஏகோபித்த குரலில் உலகத்தமிழினம் எமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் நிலையை ஏற்படுத்தியது. இதுபோன்றே நாகர்கோவிலில் இடம் பெற்ற பள்ளிமாணவர்கள் மீதான படுகொலையும் இங்கே சிதறிக்கிடந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், புலமையாளர்கள் எல்லோரையும் ஒரு இலக்கு நோக்கிய பயணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.
கலை, இலக்கியம் பற்றிய கருத்துநிலைபில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தவர்கள் கூட இனத்தின் மீது வேற்றொருவன் நடாத்துகின்ற மிலேச்சத்தனங் கண்டு இங்கே கொதிப்படைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்துக் கலை, இலக்கிய அமைப்புகள், பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எல்லோரும் இணைந்து எம்மினத்தின்மீது தொடுக் கப்பட்டுள்ள யுத்தத்துக்கு எதிராக குரல்கொடுத்துள்ளனர். காலத்தின் ஓட்டம் கருதி, விடுதலையின் தேவை உணர்ந்து இவர்கள் ஒருமித்த கருத் துடன் விடுதலைப் போரின் பக்கம் தம்மை இனங்காட்டி நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவை யெல்லாம் எமது விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை நோக்கிய முன்னேற்றகரமான நிகழ்ச்சிகளே .
– வெளிச்சம் இதழ், தலையங்கம்
ஐப்பசி-1995.