×

கரும்புலி மேஜர் சதா / புவிரஞ்சினி வீரவணக்க நாள் இன்றாகும்

கரும்புலி மேஜர் சதா / புவிரஞ்சினி வீரவணக்க நாள் இன்றாகும் 25.05.2000,

தமிழர் விடுதலைப்போரானது பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சியை எட்டி நின்ற வேளையில், அதன் மிகப்பலமானதும் புதிய வீச்சானதுமான ஒப்புவமைக்கு அப்பாற்பட்ட வடிவமாகப் பரிணமித்தது கரும்புலிகளின் சகாப்தம். தமிழீழம் நோக்கிய பாதையின் பெருந்தடைகளைத் தகர்த்து தற்கொடையின் உச்சத்தைக் கடந்து தமிழீழத் தேசியத்தலைவரின் எண்ணத்தைச் செயலால் வரித்து நிற்கும் ஆத்மபலங்கள் கரும்புலிகள் .

கடல், தரை, வான் என எங்கும் நீண்டு விரிந்தது அவர்களின் போர் வேள்வி. இன்னும் ஒருபடி மேலே சென்று “ எம் தேசத்திற்காய் எங்கெங்கும் ” என்ற மகுட வாக்கியத்தோடு கடினமான இலக்குகள் பலவற்றை அழித்து இன்றுவரை வெளித்தெரியாமலே விதையாகிப்போன மறைமுகக் கரும்புலிகளின் தியாகங்களுக்கு ஈடாக இத்தரணியில் ஏதுமே இல்லை எனலாம்.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமதுபோராட்டப் பாதையின் தடை நீக்கிகள், எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். ” இது தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணத்திலிருந்து வெளிப்பட்ட உண்மைவரிகள்.

தலைவரின் உள்ளமே தாம் வாழும் இல்லம், தமிழீழ விடுதலையே தாம் தேடும் இன்பம் என ஈகத்திற்கே இலக்கணமாகி மிளிரும் உறுதியின் கலசங்களை இலகுவில் எழுத்தில் வடித்துவிட முடியாது. எனினும், அவர்களின் தடங்களைத் தொட்டுத்தொடர்வது பெரும் பேறெனக்கொண்டேன். அதன் வழி கரும்புலி மேஜர் சதா, புவிரஞ்சினியின் தற்கொடை வாழ்வைப் பதிவுசெய்ய முயல்கிறேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பசுமைகொஞ்சும் எழில்மிக்க ஊர்களில் ஒன்றாக துணுக்காய் மல்லாவிப் பிரதேசத்தின் தென்னியன்குளம் விளங்குகின்றது. நிறைந்த நீர்வளத்தோடு விவசாயத்தை அடிப்படைத்தொழிலாகக் கொண்டு வாழும் இவ்வூரானது, தமிழீழவிடுதலைப் போருக்குத் தந்த வேங்கைகள் அதிகம். அந்தவகையில் 16. 01. 1976 அன்று திரு. திருமதி மாணிக்கம், இலட்சுமிப்பிள்ளையின் அன்பு மகளாக அங்கே பிறப்பெடுத்தவள்தான் மேஜர் சதா அல்லது புவிரஞ்சினி .

‘ கனகாம்பிகை ‘ எனும் இயற்பெயர் கொண்டாலும் ‘ சித்ரா ‘ என்றே செல்லமாக இவளை அழைத்தனர் குடும்பத்தினர். வீட்டின் கடைசி பிள்ளை இவள். அதனால் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தாள். தென்னியங்குளம் பாடசாலையில் துடிப்புமிக்க மாணவியாகத் திகழ்ந்தாள். வீட்டில் கடைக்குட்டியாகவும் செல்லப் பிள்ளையாகவும் திகழ்ந்த சித்திரா தான் ஆசையாக நேசித்த சகோதரி போராடப் புறப்பட்டு 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு ஆகாய கடல்வெளிச்சமரில் தலையில் காயப்பட்டு வாய் பேச முடியாமல் யாழ் வைத்தியசாலையில் இருந்த நிலை கண்டு தானும் ஒரு போராளியாகி எமது தேசத்தில் நடைபெறும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட முடிவெடுத்து 17.09.1992ல் அமைப்பில் இணைந்து, விடுதலைப் புலிகளின் மகளீர் அணியின் 22வது பயிற்சி முகாமில் அடிப்படை பயிற்சியை நிறைவு செய்து பின் இவளுடைய அதீத திறமையினால் சிறுத்தைப் படையணியின் 2 வது பயிற்சி முகாமுக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்சி பெற்று பல்வகை தாக்குதல் திறமைகளோடு பயிற்சியினை நிறைவு செய்து பல சண்டைக்களங்கள் கண்டாள் எவராலும் அசைக்க முடியாதென்ற இறுமாப்புடன் அமைந்திருந்த முல்லைத்தீவு படை முகாமை தமிழீழ விடுதலைப் புலிகள் ஓயாத அலை 1 நடவடிக்கை மூலம் தகர்த்து கைப்பற்றிய சமரில் சதாவின் பங்களிப்பும் இருந்தது.

பின்னர் நடைபெற்ற சத் ஜெய நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கையில் வேவு அணியினரோடு களமிறங்கி சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டப்பட்டாள். சிறுத்தை விசேட வேவு கொமாண்டோஸ் படையணியில் இவளது செயற்பாடு இவளை தனித்துவம் மிக்க போராளியாக இனங்காட்டியது. எதிரியின் எந்த இறுக்கமான கோட்டைக்குள்ளும் புகுந்து வேவு தகவல்களை திரட்டி வருவதில் அவள் கெட்டிக்காரி. சதாவின் போர்த்திறன் அவளுக்குத் தனித்துவமான நிலையை ஏற்படுத்தி வந்த வேளைகளில் அவளுக்குள் தற்கொடை எண்ணம் உருக்கொண்டது. தானும் ஒரு தற்கொடைப்போராளியாக வேண்டும் என்ற ஆசையை அவளால் நீண்டநாள் தனது மனதிலேயே வைத்திருக்க முடியவில்லை . அதனைக் கடிதமாக வரைந்து அனுமதி பெறுவதற்காகத் தலைவருக்கு அனுப்பி வைத்தாள். சில நாட்களின் பின் அவள் விரும்பிய பதில் அவளுக்குக் கிடைத்தது. தரைக் கரும்புலி மகளிர் அணியின் 2வது பயிற்சிப் பாசறையில் மிகக் கடுமையான, நுணுக்கமான பயிற்சிகளைப் பெற்றுக்கொண் கரும்புலிப்போராளியாக தனது பணியின் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானாள்.

கரும்புலிகள் மிக மென்மையான உள்ளம் படைத்தவர்கள். தாய் மண்மீதும் மக்கள் மீதும் கொண்ட அளவற்ற அன்பையே தமது மனோபலமாக மாற்றித் தம்மை உரமேற்றி உறுதியோடு பயணிப்பவர்கள். கரும்புலிப் பயிற்சிப்பாசறையில் சதாவுடன் பயிற்சி எடுத்த சகதோழிகளுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அமைதியானவளாக இருந்தாலும் எல்லோருடனும் இணைந்து வேலைகளைக் கலகலப்பாகச் செய்வாள். தனக்குத் தரப்பட்ட நாளாந்த வேலை அட்டவணையுடன் மற்றவர்களின் வேலைகளையும் இழுத்துப்போட்டுச்செய்வாள்.

தமது சிறிய ஓய்வு நேரத்தில் பாசறையின் சிறிய நிலப்பரப்பில் மரக்கறிகளைப் பயிரிட்டு வளர்த்திருந்தார்கள் கரும்புலி போராளிகள்.

கரும்புலி அணியினரின் பயிற்சியின் போது ஆண் – பெண் போராளிகளுக்கான பல்வேறு போட்டிகளும் இடையிடையே நடக்கும். ஓட்டப்போட்டியில் ஆண் போராளிகளையும் வென்று விடுவாள் சதா. அவளின் வேகத்தைப் பார்த்து கரடி என்ற பட்டப்பெயரை வைத்துவிட்டார்கள் நண்பர்கள். நிமிர்ந்த எடுப்பான தோற்றம் அவளுக்கு ஒரு மிடுக்கைத் தந்திருந்தது.

அவர்களின் பயிற்சிப்பாசறைக்கு தலைவர் அவர்கள் அடிக்கடி வருகைத்தருவதுண்டு. சிலவேளை அவர் முன்னிலையில் போட்டிகள் நடைபெறும்போது போராளிகளின் உற்சாகத்திற்கு அளவே கிடையாது.

நல்ல செயல்களைச் செய்ய நினைப்பதும் செய்வதை நேர்த்தியாகச் செய்வதும் நம்பிக்கையுடனும் திறம்படவும் செய்வதும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வதும் சதாவிற்குள் ஊன்றியிருந்த குணாதிசயங்கள். அவர்களின் பயிற்சிகளில் சதா எல்லா பயிற்களிலும் ஒரே தடவையிலே பாஸ் ஆகி விடுவாள்.

2000ம் ஆண்டின் முற்பகுதியில் யாழ். பளையில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறித் தளத்தினுள் புகுந்து கரும்புலியணி ஓர் அதிரடித் தாக்குதலைத் தொடுத்து, அத்தளத்தை அழித்து வெற்றிகண்டது. அத்தாக்குதலில் பங்கு கொண்டு மீளத் திரும்பியவர்களில் சதாவும் ஒருத்தி. கரும்புலி அணியில் செயலாற்றும் போது பல உள்ளக நடவடிக்கைகளுக்கு சென்று மீண்டு வந்துள்ளாள்.

தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு தாக்குதல் அணிகள் ஓயாத அலைகள் 3 சமருக்கான தயார்ப்படுத்தல்களில் இறங்கியிருந்தன. அவ்வேளை மண்டைதீவுப் பகுதியில் இராணுவமுகாம் தகர்ப்புக்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. அத்தாக்குதலுக்காக சதாவும் வேறு சில போராளிகளும் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர்.

எனவே, விடுமுறையில் வீடுசென்றுவர அனுமதிக்கப்பட்டாள் சதா. அவளின் சகோதரியும் அதேநேரம் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாள். சதா எங்கோ ஒரு தாக்குதலுக்குச் செல்ல போகிறாள் என்பதை அவளின் சகோதரி உணர்ந்திருந்தாள் போலும். தங்கையுடனேயே தனது பொழுதை முழுமையாகக்கழித்தாள். அப்போது தனது அக்காவுடன் சேர்ந்து சிறுபிள்ளைகளுக்கான உடைகள், விளையாட்டு பொருட்கள், இனிப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை வாங்கிக்கொண்டு தனக்குப் பழக்கமான மாவீரர் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று அங்கே உள்ள பிள்ளைகளுக்கு அவற்றைக் கொடுத்து அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தாள். அதுவே அவளுக்கு மிகவும் பிடித்த விடுமுறைப் பொழுதுப்போக்காக இருந்தது. தந்தையை அல்லது தாயை மாவீரராக மண்ணிற்கு ஈந்த மழலைகளை மனதார அவள் மகிழ்வித்துத் தானும் நிறைவு கண்டாள்.

சதாவுக்கு புத்தகங்கள் வாசிப்பதிலும் அவ்வப்போது கதை, கவிதை எழுதுவதிலும் மிக்க நாட்டமிருந்தது. இருந்த போதிலும் முழுமையாக அவற்றில் ஈடுபட அவளால் முடியவில்லை. தன்னைச்சுற்றியிருக்கும் உறவுகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு எமக்கென்றொரு நாடு வேண்டும் என்பதையே சதா சொல்லிக்கொண்டிருப்பாள். தனது நாட்குறிப்பேட்டில் சிலவற்றை சதா பதிவு செய்திருந்தாள். தனது பயிற்சி மேலதிகாரியான கடாபி அண்ணாவிடம் (பிரிகேடியர் ஆதவன்) அவள் சில விடயங்களை வேண்டியிருந்தாள். அதாவது தான் விருப்புடனேயே கரும்புலி அணியில் இணைந்து மிக்க மகிழ்ச்சியுடனேயே – தனது தாக்குதற் களத்திற்குச்செல்கிறேன் என்பதனைத் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என அவள் கேட்டிருந்தாள்.

தமது, உயிரீகல் தமிழீழம் நோக்கிய நகர்வை வேகப்படுத்தும் என்பதையிட்டு பரிபூரண சந்தோசமும், திருப்தியுடனுமே எல்லோரையும் விட்டுச்செல்கின்றேன். தமிழீழம்வெல்வது உறுதி, தலைவரின் எண்ணத்தைச் செயலாக்கப் போகிறேன் என்பதில் நான் பெருமிதத்துடன் செல்கிறேன்,” என்பதையும் அவர்களிடம் எடுத்துச்சொல்லுங்கள் என்றும் எழுதியிருந்தாள்.

அவள் விடுறையில் நின்ற போது தனது விடுமுறையின் அந்த இறுதிநாளில் அம்மா அவித்து வைத்திருந்த வத்தாளங்கிழங்கை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வேறு சாப்பாடு வேண்டாம் என மறுத்து தனது அக்காவிடம் நாளைக்கு இதே நேரம் ஒருத்தி வேறு இடத்திற்கு தாக்குதலுக்காகச் செல்கிறாள் அவளை நினைத்தால் மனம் கனக்கிறது அக்கா என்று கூறினாள். அதற்கு ஒன்றும் யோசிக்காத, மனதைப்போட்டுக்குழப்பாதே என்று சகோதரி பதலளிக்க சதா வீட்டிலிருந்து புறப்பட்டாள். அப்போதுகூட அடுத்த நாளே கரும்புலியாகவெடிக்கப் போகிறாள் என்பதை அவள் அக்கா சிந்தித்திருக்கவில்லை. தாயின் கண்களைத் தொடர்ந்து சந்திக்க முடியாதவளாய் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டே நகர்ந்தாள் அவள்.

நாள் 25.05.2000, தனது உடலோடு வெடிசுமந்து மண்டைதீவில் எதிரியை நிலைகுலையச் செய்த கரும்புலியாகி மேஜர் சதா புவிரஞ்சினி காற்றோடு கலந்தாள். தமிழர் மனங்களில்நிறைந்தாள். அவள் விரும்பிய இலட்சியம் இன்னும் எட்டப்படவில்லை. தமிழ்மனங்கள் எழுச்சி கொள்ளும்போது நிச்சயம் எமது நிலம் வெல்லப்படும் கரும்புலி சதாவின் கனவும் நனவாகும் என உறுதிகொள்வோம்.

சகோதரி கோமதி (புவி)

 

 

கரும்புலி மேஜர் சதா / புவிரஞ்சினி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments