
யாழ் குடாவில் இராணுவப் பயங்கரவாதம்
வீரதுங்காவின் இராணுவம் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் ஆடியது. முன்னென்றுமில்லாத வகையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். மிருகத்தனமாக சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். பலர் இராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் வதைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்களது சிதைந்த உடல்கள் வீதியோரம் வீசப்பட்டன. யாழ் குடாநாட்டு மக்கள் மீது இராணுவப் பயங்கரவாதம் கோரநர்த்தனம் புரிந்தது.
வீரதுங்காவின் ஆறு மாதகாலக் கொடுங்கோன்மை ஆட்சியின் விளைவாகப் பெரும் தொகையில் தமிழ் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் அணிதிரண்டனர். பரந்துபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு மனமுவந்து ஆதரவு நல்கினர்.
உயர்வடிவம் பெற்ற ஆயுதப் போராட்டம்
எழுபதுகளின் தசாப்தம், சிங்கள-தமிழ் தேசிய முரண்பாட்டை என்றுமில்லாதவாறு முதிர்ச்சியடையச் செய்தது. அரச ஒடுக்குமுறையின் தீவிரமான அழுத்தம், தமிழீழத்தில் அரசியல் வன்முறையை அலைமோதச் செய்தது. இந்த அரசியல் வன்முறையால் எழுந்த புறநிலைகள் ஒரு பலம் வாய்ந்த ஆயுத எதிர்ப்பு இயக்கத்தைப் பிறப்பெடுக்கச் செய்தது. அரச ஒடுக்குமுறை மேலும் மேலும் தீவிரமடைந்து செல்ல, ஆயுத எதிர்ப்பு முறையும் தீவிரமடைந்து சென்றது. பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் வளர்ந்து விரிவடைய, மிதவாதப் பாராளுமன்ற அரசியல் செயலிழந்து போனது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தசாப்தம் தமிழரின் அரசியற் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக உயர்வடிவம் பெறச் செய்ததுடன், தன்னாட்சி உரிமையை நிலைநாட்டித் தமிழீழத் தனியரசை நிறுவும் வரலாற்றுத் தேவையையும் வெளிப்படுத்தியது.