×

அம்மா!

ஒடுங்கிவிட்ட – ஆனால் ஒளியான உன் கண்கள்,
உன் இயக்கத்தை இம்சிக்கும் ஈர விறகுகள்,
இடைவிடாத இருமல்,
இதயச் சுவர்களின் இடுக்குகளில் இடம் பிடித்துக்கொண்ட அந்த ஆஸ்துமா,

அம்மா!
என்னை மன்னித்துவிடு!

பாசறையில் பாதி இரவுகளில்
என் சண்டாள விழிகள் சயனத்திற்கு சம்மதிக்காதபோது
உன் நேச முகம் வந்து நினைவுகளைச் சுடுகிறது .
என் பெண்மை விழித்து உன் தாய்மையை தரிசிக்கிறது.

மண்,
எனைப் பாதித்தது.
கடமை
கைகளைச் சுட்டது.
மனத்தின் மெல்லிய பிரதேசங்கள் மெளனமாக ஓர் பிரளயத்தைப் பிரேரித்தன.
வானொலி நாடகத்தில் வசனமில்லா வேஷமெமக்கு.

முடியவில்லையேயம்மா……….!
அதனால் தான் – உன்
கைகளைக் கடந்து
கனதூரம் வந்துவிட்டேன்

நீ சிறகுகளுக்குள் சிநேகமாய் கூட்டி வளர்த்த இக்குயில்,
இன்று, தேசயுத்தத்தில் ஒரு சுதந்திரப் பறவை.

அம்மா!
என்னைப் புரிந்துகொள் நீயோ – என் வயதிற்காய் வருத்தப்படுகிறாய் நானோ – ஒரு வம்சத்திற்காய் வழக்காடுகிறேன்.

அனல் வீசும் அராபிய நிலங்களில் – என் சுயம்வரத்திற்காய் சொத்துச் சேர்க்கும் சோதரனுக்கு கூறிவிடு!

வழமிழந்த மண் மீட்டே – என் வசந்தங்களுக்கு வரவு என்று!

என்னோடு இன்னும் எத்தனை தோழியர்கள் !
நாம் கனவுகளை அல்ல கனரக ஆயுதங்களை சுமக்கும்
காவல் கன்னியர்கள்,
புதிய பூபாளத்திற்காய் புறப்பட்ட போர்ப் புஷ்ப்பங்கள்!!

– ஈழகேசரி இதழ்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments