×

“சிங்கள ‘பெளத்த பேரினவாதத்தின் காவற் தெய்வங்களாக விளங்கிய திரு. லலித் அத்துலத் முதலியும்

“சிங்கள ‘பெளத்த பேரினவாதத்தின் காவற் தெய்வங்களாக விளங்கிய திரு. லலித் அத்துலத் முதலியும்

“சிங்கள ‘பெளத்த பேரினவாதத்தின் காவற் தெய்வங்களாக விளங்கிய திரு. லலித் அத்துலத் முதலியும், திரு. பிரேமதாசா அவர்களும் ஒன்பது நாட்கள் இடைவெளிக்குள் அடுத் தடுத்துப் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.

இந்த இருபெரும் அரசியல் தலைவர்களது மரணத்துடனும், சிறீலங்கா அரசியலில் இப்படுகொலைகள் ஏற்படுத்திய சர்ச்சைகள்-தாக்கங்களுடனும் சிங்கள தேசத்தின் அரசியல் ஸ்திரமும் கேள்விக்குரியதாக மாறிவிட்டது.

மாகாண சபைத் தேர்தலுக்காக கிருலப்பனையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து, ஏப்ரல் 23ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு லலித் சுடப்பட்டார். அவர் மேடையில் ஏழுநிமிடங்கள் பேசியபின், அவருக்கு முன்னால் சுமார் 10 அல்லது 15 அடி தூரத்தில் மேடைக்கு அருகே வந்த துப்பாக்கி இளைஞன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அத்துலத் முதலியின் கொலைக்கு அரசே காரணம் என, உடனேயே ஐ.தே.மு. கட்சி அறிக்கையும் விட்டது. பெரும்பாலான சிங்கள மக்களின் கருத்தும், ஏன் உலகினதும் முடிந்த முடிவும் அதுதான்.

பிரேமதாசாவின் முதல்தர அரசியல் எதிரியாகவும், பிரேமாவின் அதி உயர் பதவியைப் பறிக்கக்கூடிய ஆளுமையும் அரசியல் செல்வாக்கும் பெற்றவராகவும் லலித் வளர்ந்துவந்தார். அதனால் பிரேமதாசா தனது அதிகாரத்தை உறுதிப் படுத்திக்கொள்ள லலித்தைக் கொலைசெய்தார் என்ற அபிப்பிராயம், பரவலாகக் குடிகொண்டிருக்கிறது.

இந்த அபிப்பிராயம் வெறும் ஊகங்களின் அடிப்படையில் எழுந்த வதந்திகள் அல்ல. பிரேமதாசாவின் இரத்தக்கறை படிந்த அரசியல் வாழ்வுக்கு சிங்கள மக்கள் பல ஆதாரங்களை வைத்திருக்கின்றனர். பிரேமதாசாவின் அரசியல் வாழ்வு – அண்மைக்காலத்தில் – கொலைகளாலும், சண்டித்தனங்களாலும், கழுத்தறுப்புகளாலும் தான் வளர்த்துச் செல்லப்பட்டதாக’ அவரின் எதிரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசியல் எதிரிகளை அழிப்பதன் மூலம் எதிர்ப்புகளை வெற்றிகொள்ள விழையும் ஒரு அரசியல் மரபை, சிங்கள தேசத்து அரசியல் அரங்கில் சிருஷ்டித்துவிட்டவர் பிரேமதாசாதான் என்றால், அது மிகையாகாது.

அடாவடித்தனம்கொண்ட இந்த அரசியல் மரபு, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால் திடீர் வளர்ச்சியைக்கண்ட ஜே.வி.பி யின் கிளர்ச்சியை ஒடுக்குவதில் உச்சம் கண்டது. அன்றிலிருந்து பிரேமதாசா தான் இறக்கும்வரை,தனது அரசியல் எதிரிகளது வாழ்வை கனகச்சிதமாக முடித்து, தன்னுடைய அரசியல் அடித்தளத்தைப் பலமாக்க முயன்றுவந்தார்.

இத்தகையதொரு யதார்த்த நிலையிலிருந்து தான் லலித்தின் கொலைக்கு பிரேமதாசா குற்றம்சாட்டப்பட்டார். எதிர்க்கட்சிகளதும், பத்தி ரிகைகளினதும் ஏகோபித்த கண்டனக் கணைகளால் நிலைகுலைந்த பிரேமா,

“…… நான் மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கே தீங்கிழைக்காதவன்” என புலம்பலைச் செய்து தப்பிக்க முயன்றும்,அவர் மே 1 ஆம் திகதி நண்பகல் கோரமான வடிவில் சாவைத் தழுவுகின்றார்.

கொழும்பில் மேதின ஊர்வலத்தில் குதூகலமாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஆமர் வீதிச் சந்திக்கு அருகாமையில், குண்டுவெடிப்பொன்றின் மூலம் பிரேமதாசா கொல்லப்படுகின்றார். அது ஒரு மனிதக் குண்டு ஆகும்.

இவ்விரு படுகொலைகளுக்கும் புலிகள் இயக்கத்தைச் சம்பந்தப்படுத்தி சிங்கள பொலிஸ் துறை குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் சுயாதீன பத்திரிகைகளும், வெளிநாட்டுச் செய்தியாளர்களும் இப் படுகொலைகளை சிங்கள தேசத்தின் உள் பிரச்சினைகளாகவும், பழிவாங்கும் படலமாகவுமே சித்தரிக்கின்றனர்.

இந்த இரு சிங்களத் தலைவர்களது படு கொலைகளின் பின்னணிகள் பற்றிய ஆழமான விசாரணைகள், ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப் படவில்லை. ஆனாலும், இந்த இரு மனிதர்களும் தமிழ்மக்கள் மீதான போரில் எத்தகைய பாத்திரத்தை வகித்தார்கள் என்ற விபரங்களை மீட்டுப் பார்ப்பது அவசியம்.

1977 ஆம் ஆண்டு சிங்களக் காடையர்களின் இனவெறித் தாக்குதல்களுக்கு இலக்காகியபடி வெறுங்கையுடன் நின்ற தமிழர்களைப் பார்த்து, “போரா?சமாதானமா?” எனத்திமிருடன் கேட்ட முதுபெரும் இனவெறியன் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் பேரினவாதப்பட்டறையில் உருவாக்கப்பட்ட, கொடிய மனிதர்களே இந்த இரண்டு பேருமாகும்.

தமிழ்மக்களைக் கொன்று குவித்து வேட்டையாடி அவர்களின் சொந்த இருப்பிடங்களிலிருந்து விரட்டியடித்து இனப்படுகொலை புரிவதில் இருவருமே ஒத்த கருத்துடையவர்களாகவும், அதைச் செயற்படுத்துவதில் அதிதீவிரம் காட்டுபவர்களாகவும் இருந்துள்ளனர்.

ஆனாலும், ஜே. ஆரின் பாணியில் முரட்டுத்தனமாக தனது தமிழின விரோதச் செயல்களுக்கு அத்துலத்முதலி விளக்கமளிப்பதைப் போல, பிரேமதாசா நடப்பதில்லை.

ஏதும் அறியாத ஒரு அப்பாவிபோல- காருண்யம்மிக்க ஒரு கனவானைப்போல – வெளியில் கதைத்து அறிக்கைகளை விடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் மிகத்தீவிரமாகவும் கச்சிதமாகவும் தமிழின அழிப்பில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார்.

இவ்விருவரினதும் அதிகாரத்துக்குள் தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் கொண்டுவரப்பட்ட கடந்த 10 ஆண்டுகளிலும் சுமார் 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

1984 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்ற திரு. அத்துலத்முதலி, தமிழினத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தை நவீனப்படுத்திவிட்டு, ஒழுங்கு படுத்தப்பட்ட. இராணுவ அட்டூழியத்தை தமிழ்மக்கள் மீது ஏவிவிட்டார்.

மணலாறு, திருக்கோணமலை, மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல
தமிழர் கிராமங்களைச் சில மணிப்பொழுதுக்குள் துடைத்தெறிந்து தமிழர்களை விரட்டும்படி, லலித் இராணுவத்திற்கு உத்தரவு வழங்கியிருந்தார் அதேவேளை தமிழீழம் எங்கும் சுற்றி வளைப்புகள், கைதுகள் மூலம் தமிழ் இளைஞர்களை வேட்டையாடும்படியும் இராணுவத்தைப் பணித்தார்.

இதனால் பல அப்பாவிக் கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்; அகதிகளாக இடம் பெயர்ந்தோர் ஏராளம்.

பூசா வதை முகாம்களும், தடுப்பு முகாம்களும், தமிழ் இளைஞர்களின் இருப்பிடங்களாகின.

புதிய புதிய சித்திரவதை வடிவங்கள் தமிழர்கள்மீது பிரயோகிக்கப்பட்டன.

அதேவேளை, பொதுமக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்ட பீப்பாய்க் குண்டுகளின் சூத்திரதாரியும் அத்துலத்முதலியேயாகும்.

பீப்பாய்க் குண்டுகள் சிலவற்றுடன் ஒரு அவ்ரோ விமானத்தில் பறந்துவந்த லலித், யாழ்நகர் மீதான ஒரு பீப்பாய்க் குண்டுவீச்சை நெறிப்படுத்தியிருந்தார். இக் குண்டுகளில் ஒன்று யாழ். வைத்தீஸ்வரன் கோவிலில் மாலை நேர பூசையில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது வீழ்ந்து வெடித்தது. அதில் 10 பேர் உடல்சிதறிப் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற பாரிய உயிர் – பொருள் இழப்புகள் ஏற்படும் என்று உலக நாடுகள் எச்சரித்திருந்தும், வடமராட்சி
மீதான படை யெடுப்பை நடாத்த லலித் தீர்மானித்தார். அந்த இராணுவ நடவடிக்கையில் – ஒப்பறேசன் லிபறேசன்-100 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபா பெறு மானமுள்ள சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அத்துடன் வடமராட்சியின்

பெரும்பான்மை மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல, இந்திய இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு முரணாக புலிகளின் மூத்த தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உட்பட பன்னிருவரைக் கைது செய்ததுடன் அவர்களது சாவுக்கும் நேரடிக் காரணியாக அத்துலத் முதலியே இருந்தார்.

கைதுசெய்யப்பட்ட புலிகளின் தளபதிகளைக் கொழும்புக்குக் கொண்டுவராவிட்டால்

தான் இராஜினாமா செய்யப்போவதாக லலித் கூறியிருந்தார் என, ஜே. ஆர். தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைப்பற்றி 02.05.93 ஆம் திகதிய ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையில் வந்த ஒரு கட் டுரையில் ஒரு சிறுகுறிப்புள்ளது.

அக்கட்டுரையாளர் எழுதுகின்றார்:

இப்படி நடக்குமென்று [கொழும்புக்கு எடுத்துவர முயன்றால் அவர்கள் சயனைட் அருந்திச் சாவார்கள்] ஏற்கெனவே நீங்கள் ஊகித் துணர்ந்திருக்க வேண்டுமே என லலித்தைக் கேட்டேன்; உடனடியாக லலித் பதிலளித்தார். ‘எது நடக்கவேண்டுமென்று நான் விரும்பினேனோ அதுதான் நடந்தது ‘ என்றார்.”

அதாவது, புலிகளின் ஒப்பற்ற தளபதிகளை லலித் எவ்விதம் திட்டமிட்டு மரணப் பொறிக்குள் கொண்டு சென்றார் என்பதை, இது காட்டுகின்றது

லலித்தின் பதவி ஆசைக்குக் குறுக்கே பிரேமதாசாதான் நின்றார். பிரேமாவை வீழ்த்துவதில் குறியாக இருந்த அதேவேளை, புலிகள் அழிக் கப்படவேண்டும் என்பதிலேயே லலித் கண்ணுங் கருத்துமாக இருந்தார்.

கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தனது கட்சிக் கூட்டமொன்றில் லலித் கூறினார்:

நாங்கள் இப்போது யானையைத்தான் குறிவைத்துள்ளோம். அது விழப்போவது உறுதி; அதே நேரத்தில் புலி தப்பிவிடக்கூடாது நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயற்படவேண்டும்.”

லலித்தின் படுகொலைக்குப் பின்னர் ஒரு கொடூரமான மனிதனாக பிரேமதாசா சிங்கள மக்களுக்குத் தெரிந்தார். அந்த உணர்வு சிங்கள மக்களை ஆழமாக ஊடுருவிக் கொண் டிருந்த போதே பிரேமதாசாவும் கொல்லப்படுகின்றார். இதனால் பிரேமதாசாவின் கொலையையிட்டு சிங்கள மக்கள் பெரிதாக அதிர்ச்சிய டையவில்லை; எவர்மீதும் ஆத்திரப்படவுமில்லை. எல்லாம் கர்மவினைப்படி நடக்கின்றது என்றுவிட்டு, அமைதியாக இருந்துவிட்டார்கள்.

திரு. பிரேமதாசா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் ஜே வி பியின் கிளர்ச்சியை ஒடுக்குகின்றேன் என்று கூறிக்கொண்டு, தனது அரசியல் எதிரிகள் – அதிருப்தியாளர்கள் – என்று, சிங்கள இனத்தில் 60,000 மக்களைக் கொன்று குவிக்க உத்தரவு வழங்கியவர் என்பது, அனைவரும் அறிந்த கதை.

அதேவேளை, ஜே. ஆர். தீவிரப்படுத்திய தமிழின அழிப்பு வேலையை பிரேமதாசா கச்சிதமாகத் தொடர்ந்து செய்தபடி இருந்தார்.

கடந்த மூன்று வருடங்களாக, இரக்கமின்றித் தமிழ்மக்கள்மீது போரைத் தொடர்ந்து நடாத்திவந்தார். உணவுத்தடை மருந்துத் தடை, எரிபொருள்தடை, உற்பத்தித்தடை, போக்குவரத்துத்தடை என்று ஒரு முழுமை பெற்ற பொருளாதாரத்தடையை தமிழர்கள் மேல் திணித்து, தமிழினத்தைக் கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.

இந்த மூன்றுவருடகாலத்திற்குள் பலதடவைகள், பல பொது அமைப்புகள், மனிதாபிமா னத்தின் பெயரால் யுத்த நிறுத்தம் செய்யும் படியும் பொருளாதாரத்தடைகளை நீக்கும்படியும் விடுத்த வேண்டுகோள்களைப் பிரேமதாசா ஏற்றுக்கொள்ளவேயில்லை.

அதேவேளை, பகிரங்கமாகவும் சில நல்லெண்ணங்கொண்ட தனிநபர்கள் மூலமும் புலிக ளின் தலைமைப்பீடம் பிரேமதாசாவுக்கு விடுத்த யுத்த நிறுத்தக் கோரிக்கைகளை, சமாதான சமிக்ஞைகளை பிரேமதாசா முற்றாக நிராகரித்தார். பதிலாக புதிய புதிய போர்விமானங்களை, அழி வைத்தேடும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து தமிழர்களுக்கு எதிரான போரை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்.

பிரேமதாசாவின் இந்த மூன்றுவருட ஆட்சியில்தான் தமிழினம் என்றுமில்லாதவாறு துன்பங்களையும் – அழிவுகளையும் – அவலங்களையும் சந்தித்துள்ளது. குறிப்பாக தென்தமிழீழம் சந்தித்த உயிரிழப்பும் நில அபகரிப்பும் மற்றெல்லாக் காலங்களையும் விட மிக மோசமானதாகும்.

எல்லாச் சிங்களத் தலைவர்களையும் விட, இணைந்திருந்த வடக்கு – கிழக்கைப் பிரி்ப்பதற்கு விடாமுயற்சி செய்தவர் பிரேமதாசாதான் என்பதை, சிங்கள மக்கள் இன்னமும் உணரவில்லை என, கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகையாளர் எழுதியிருந்தார்.

இதேபோன்றுதான், சாதாரண மனிதர்க ளால் புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதனாகவே பிரேமதாசாவின் உண்மைத் தோற்றம் இருந்தது.

வெளிப்பார்வைக்கு சமாதானப் பிரியரைப் போலவும், பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுள்ளவர் போலவும் ஒட்டுமொத்தத்தில் ஒரு மிதவாதிபோல தென்படும் அவர், உண்மையில் கொடுமையான ஒரு மனிதன்; அபாயம் நிறைந்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒரு மறுபதிப்பு.

தமிழரின் இனப்பிரச்சினைக்கு பிரேமதாசாவிடமிருந்து ஒரு நீதியான தீர்வை எதிர்பார்க்க முடியாது.

இனப்பிரச்சினைக்கு பிரேமதாசா வைத்திருந்த தீர்வு, இராணுவ பலத்தின் மூலம் தமிழரின் தேசிய பலத்தைச் சிதைத்துவிட்டு தமிழர்களின் உரிமைக் கோரிக்கையை மழுங்கடித்து விடுவதுதான்.

பிரேமதாசாவின் பிரதான இலக்கு. கொழும்பில் தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதும் பாதுகாப்பதும்தான். அதற்காக இந்தப் போரையும் அவர் நன்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியில் தன்னை ஒரு துட்டகைமுனுவைப் போலக் காட்டிக்கொள்ளவும் தன்னை அரசியலில் ஒரு உயர் நிலைக்கு வளர்த்துக் கொள்வதற்காகவும், என்றோ தான் அணிந்த இந்திய எதிர்ப்பு முகமூடியை இப்போது கழட்டி வைத்துவிட்டு, தனது அதிகாரத்தைப் பாதுகாத்துப் பராமரிக்கவும் தனது அரசியல் எதிரிகள் பலம் பெறாமல் தடுக்கும் நோக்குடனும் இந்திய ஆதரவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார். அதன்மூலம் இந்திய அரசுடனான உறவைப் பலப்படுத்திக்கொண்டு தமிழர்கள் மீதான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

இவ்விதம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக சிங்களப்படைகளுக்குத் தலைமை தாங்கிய இரண்டு சிங்களத் தலைவர்கள் அடுத்தடுத்துக் கொல்லப் பட்டமை. இந்த ஆண்டின் ஒரு முக்கியமான விடயமாகும்.

இவ்விருவரினதும் கொலைகள் இலங்கைத் தீவில் முக்கிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஊகிக்கப்படுகின்றது.

– விடுதலைப்புலிகள் இதழ்
வைகாசி 1993

 

 

“சிங்கள ‘பெளத்த பேரினவாதத்தின் காவற் தெய்வங்களாக விளங்கிய திரு. லலித் அத்துலத் முதலியும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments