
புதிய தமிழ்ப் புலிகள்
1972ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது. புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இந்த அமைப்பை உருவாக்கிய பிரபாகரன், அவசரப்பட்டுக் களத்தில் குதிக்காமல் ஆரம்பகாலத்தைத் தனது தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதிலும், போர்முறைத் திட்டம் ஒன்றை உருவாக்குவதிலும் செலவளித்தார். அன்றை யதார்த்த சூழ்நிலையையும், தமிழீழத்தின் பூகோளத் தன்மையையும், எதிரியின் இராணுவ பலத்தையும் கருத்திற் கொண்டு நீண்டகால கெரில்லா (கரந்தடி) போர்முறையின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே பொருத்தமானதெனப் பிரபாகரன் முடிவுக்கு வந்தார். ஆரம்ப காலத்திலிருந்தே ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற இலட்சிய வரிகளைப் புனைந்த பிரபாகரன், தமிழீழத்தை மீட்டு, சுதந்திரத் தனியரசு அமைப்பதையே புலிகள் இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோளாக வரித்துக் கொண்டார்.
விடுதலைப் புலிகளின் தோற்றமானது எழுபதுகளைக் கொண்ட தசாப்தத்தின் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகவும், தமிழீழ தேசிய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு மாபெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது. திசை தெரியாது அலைமோதிய வன்முறை எழுச்சியிலிருந்து ஒரு திண்ணியமான, நீண்டகால ஆயுதப் போராட்டத்திற்கான உறுதியான அத்திரவாரத்துடன் புலிகள் இயக்கம் பிறப்பை எடுத்தது. புலிகளின் பிறப்போடு புரட்சிகரமான ஒரு புதிய வரலாறும் பிறந்தது.