
1985 ஓகஸ்ட் 18 அன்று பெண்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழீழ நடைமுறை அரசில் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் அதனது தாய் குறித்து வினாவினால் அனேகமாக கிடைக்கும் பதில் இப்படித்தான் இருக்கும், “அம்மா சண்டைக்கு போட்டா..”
இந்த ஒற்றை வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது பெண் விடுதலை குறித்த “பிரபாகரனியத்தின்” முழுப் பரிமாணம்.
பெண்ணாக, மனைவியாக, தாயாக, போராளியாக தமிழீழப் பெண்கள் சுதந்திரத்தின் குறியீடாக நிமிர்ந்து நின்றார்கள்.
இதன் வழி தமிழீழத்தில் பெண்ணானவள் தன்னை மட்டும் விடுவிக்கவில்லை, சமூகத்தையும் இனத்தையும் விடுவிக்கும் ஒரு உக்கிர வடிவமெடுத்து நின்றாள்.
தமிழீழ நடைமுறை அரசு இன்றைய உலக ஒழுங்கினால் அழித்தொழிக்கப்பட வேண்டிய இலக்காக தேர்வு செய்யப்படதற்கு பிராந்திய – புவிசார் அரசியல் மட்டும் காரணமல்ல, பல உதிரிக் காரணங்களும் உள்ளன.
அதில் பிரபாகரனியம் உருவகித்த இந்த பெண் சமூக மாற்றமும் ஒன்றாக அதுவும் இந்திய ஆளும் வர்க்கத்திற்குத் தேவையான ஒன்றாக இருந்தது.
இந்துத்துவம் என்ற இதிகாச புனைவுகளின் வழி நின்று சாதி, மத, பெண்ணொடுக்கு முறைகளினூடாக போலியாக ஒற்றைத் தேசமாக உருவாக்கப்பட்டதுதான் இந்திய“ஒன்றியம்”.
அருகே ஒரு தேசம் இவற்றை ஒட்டுமொத்தமாக உடைத்தெறிந்து உலகிற்கே முன்னுதாரணமாக உருவாவதென்பது இந்திய ஒன்றிய தேசிய இனங்களை பட்டியை விட்டு வெளியேறும் ஆட்டு மந்தைகளாக மாற்றும் என்பதை அறிந்தும், மேலும் இந்தப் போலி இழையினூடாக நீண்ட நாட்களுக்கு அவற்றைக் கட்டி வைக்க முடியாது என்பதுமே தமிழீழ நடை முறை அரசை அழிக்க மேலும் வலுவூட்டிய உதிரிக் காரணமாகும். இதன் காரணமாகவே தொடர்ந்து இன்று வரையில் இன அழிப்பின் இலக்காகப் பெண்கள் இருக்கிறார்கள்.
ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரமும் பெண்கள்தான். அந்தப் பெண்களை குறிவைப்பதன் ஆழமான அரசியல் பின்புலம் இன அழிப்பு சிந்தனைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது. இந்த கட்டமைக்கப்ட்பட்ட இன அழிப்புக்குள் நாம் பெரும்பாலும் பெண்களையே இழக்க நேரிடுகிறது.
மே 18 ற்கு பிறகான பல பொருளாதார வாழ்வியற் சிக்கல்களுடன் பல உளவியற் சிக்கல்களும், பாலியல் முரண்பாடுகளுமாக எமது இனத்து பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது. இது பல சமூக சீரழிவுகளுக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுக்கிறது. இதைத்தான் இன அழிப்பு அரசு எதிர்பார்க்கிறது. ஏனெனில் இது இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளைக் கொண்டது.
தமிழ்ப் பெண்களின் படைவலிமை, போர்த்திறன், படைநடத்தும் ஆளுமை புலிகளின் காலத்தில் ஒரு வரலாறாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பனைக்கு எட்டாத, கொலிவுட் திரைப்படங்களில் கூட பதிவு செய்யமுடியாத படைத்துறைச் சாதனைகளை தமிழ்ப்பெண்கள் நடத்தி முடித்துவிட்டார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவர் பிரபாகரன் பெண்களின் வலிமையை மீண்டும் மீட்டெடுத்தார். அவர்களை அவர்களாகவே மீளுருவாக்கம் செய்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக பெண்ணிய தளத்தில் பேசப்பட வேண்டிய பெரியதொரு வரலாறு இது. இத்தகையதொரு தளத்தில் மேலெழுந்து நின்ற தமிழ்ச்சமூகத்தின் மீதான ஒரு பழிவாங்கல் தான் தமிழ்ப் பெண்களை இன அழிப்பின் இலக்காகக் குறி வைத்தமை.
விளைவாக ‘அடிமைகள், தோற்றுப்போனவர்கள்’ என்ற உளவியலை தமிழ்ச் சமூகத்தில் விதைத்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை துரிதப்படுத்துவதே இதன் பின்னணியாகும்.
பெண்களை அனைத்து தளங்களிலும் குறிவைக்கும் தந்திரம் இதுதான்.
எனவே இதற்குப் பலியாகாமல் பெண்களின் வீரத்தை, தியாகத்தைத் தொடர்ந்து பேசுவோம் – வரலாற்றில் பதிவு செய்வோம் – அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம்.
![]()