
பிரபாகரனின் புரிந்துணர்வு
வன்முறை அரசியலில் ஆர்வம்கொண்ட இந்தப் புரட்சிவாத இளைஞர்கள் அனைவரும், தம்மைத் தமிழ் மாணவர் பேரவையினர் என அழைத்துக் கொண்டனர். சத்தியசீலன் என்ற பட்டதாரி மாணவன் தலைமையில் இந்த அமைப்பு இயங்கி வந்தது. சிவகுமாரன், பிரபாகரன், தங்கத்துரை போன்றோர் இந்த அமைப்போடு தொடர்புகொண்டு இயங்கி வந்தனர்.
செயற்திறனற்ற தலைமை காரணமாக இந்த அமைப்பு செம்மையாகச் செயற்படவில்லை. சத்தியசீலன் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டாரே தவிர, களத்தில் இறங்கத் துணியவில்லை. புரட்சிகரக் கொள்கைத் திட்டமோ, செயற்பாடோ இல்லாததினாலும், ஆயுதப் போராட்டம் பற்றிய தெளிவு இல்லாததினாலும், வன்முறை நிகழ்வுகள் மாறி மாறித் தோல்வி கண்டதாலும், பேரவைத் தலைமை மீது விரக்தியடைந்த பிரபாகரன் தனித்தியங்க முடிவுசெய்தார்.
எதேச்சையாக, கட்டுப்பாடற்ற முறையில் திசையின்றிப் பிரவாகமெடுத்த வன்முறை எழுச்சியானது இளைஞர் சமூகத்தின் இதயக் குமுறலை வெளிப்படுத்தியதே தவிர, மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதைப் பிரபாகரன் புரிந்து கொண்டார். தேசிய விடுதலையை இலட்சியமாக வரித்த கொள்கைத் திட்டத்துடன் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்ட அமைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டியதன் வரலாற்றுத் தேவையையும் அவர் நன்கு உணர்ந்து கொண்டார்.
ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கைத் திட்டம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு புரட்சிகர விடுதலை அமைப்பைக் கட்டி எழுப்பி, தீர்க்கமான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென உறுதிபூண்ட பிரபாகரன், 1972ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து அந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். வீரமும், அர்ப்பணிப்பும், விடுதலையுணர்வும் மிகுந்த புரட்சிகர இளைஞர்கள் பிரபாகரன் பின்னால் அணிதிரண்டனர்.