×

அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு – இரும்பொறை மாஸ்ரர்

கடற்புலிகளின் துணைத்தளபதி

லெப். கேணல் இரும்பொறை

சிவராஜா கலைச்செல்வன்

தம்பலகாமம், திருமலை

 பிறப்பு: 02-09-1972

வீரச்சாவு: 16-09-2001

நினைவுப்பகிர்வு ச.புரட்சிமாறன்  விடுதலைப்புலிகள் இதழ் ஆடி – ஆவணி

களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கான எட்டுச்செலவும் முடிந்தது. இப்போது 31ம் நாள் நினைவுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நிதி வீரச்சாவில்லையாம், நிதி வீரச்சாவில்லையாம்‘  காற்றோடு கலந்து வந்தது அந்த இனிய செய்தி. சாவீடு அங்கே சந்தோசத்தில் துள்ளிக்கூத்தாடியது.

இரும்பொறையாய் கடற்புலிகளுக்காய் வரலாறு படைத்தவன் 1991இல் ஆனையிறவு ஆகாய கடல் வெளிச்சமரில் மடிந்ததுவிட்டதாக வந்த செய்தி பொய்யாகிப்போனது. கடல் எப்போதுமே அமைதியாக இருப்பதில்லை. அலைகள் எப்போதுமே எதையோ அடைவதற்காய் துடித்துக்கொண்டேயிருக்கும். அந்த அலைகளைப் போலவே கடலுக்குள் வாழ்ந்தவனின் கதையிது.

இரும்பொறை என்ற பெயரையும் அந்தப் பெயரின் இதயத்தையும் அறியாத யாரும் கடற்புலிகளில் இருந்திருக்க முடியாது. அதுபோலவே இந்த தேசத்தில் அந்த வீரனைப்பற்றி அறியாதவர்கள் இருக்கவும் கூடாது. ஏனென்றால் தேசம் மடியக்கூடாது என்பதற்காய் சாவையே மறந்து, சாதனைகளையே எதிர்பார்த்து வாழ்ந்த வரலாறுகள் மறைந்து விடக்கூடாது.

எல்லோரும் அறிந்தது தமிழீழ விடுதலைப் புலிகளென்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத்துணைத்தளபதி என்ற இரும்பொறையைத்தான். ஆனால் அதற்கு முன்பே நிதி என்ற பெயரில் அவனுக்கொரு வரலாறு இருக்கின்றது.

1990ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களொன்றில் இரும்பொறையின் தாயூரான திருகோணமலை மணியரசன் குளத்தில் பதுங்கித்தாக்குதல் ஒன்றிற்காகப் பதுங்கியிருந்த புலிகளுக்குள் இந்த முகமும் இருக்கிறது. இடுப்பிலே கைக்குண்டுடன் அல்ல, L.M.G என அழைக்கப்படும் கனரக சூட்டு ஆயுதத்தோடு தனது கன்னிச்சமருக்காகக் காத்திருக்கின்றான். சண்டை தொடங்குகின்றது. டு.ஆ.பு முழங்குகின்றது. இராணுவ உடல்கள் வீழ்கின்றன. ஒரு நீண்ட அனுபவம் மிக்க கனரன ஆயுத வல்லுனனைப்போல் அந்தத் தாக்குதலில் எதிரிக்கு தலையிடி கொடுத்தவனுக்கு பின்னர் L.M.G என்னும் கனரகச் சூட்டு ஆயுதமே நிரந்தர ஆயுதமாகியது.

இப்போதுபோல கனரக ஆயுதங்கள் ஏராளம் இருந்த காலப்பகுதியல்ல அது. குறைந்தளவு ஆயுதங்களுடன் கூடுதலான முன்முயல்வுகள். அதனால் திருகோணமலையில் எங்கு சண்டை நடந்தாலும் அங்கு நிதியின் G.P.M.Gபுயும் இருக்கும். அதுபோல் திருகோணமலைப்படையணி எந்த மாவட்டத்திற்கு சண்டைக்குச் சென்றாலும் அங்கும் நிதியின் துப்பாக்கியின் அதிர்வொலி கேட்கும்.

1993 ஆம் ஆண்டு பூநகரி இராணுவத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை நடவடிக்கையிலும் தனது படையணியுடன் களமிறங்கியவன் வெற்றிகரமாய் முடிந்த அந்தச் சண்டைக்குப்பின் ஒரு கனரக சூட்டாளனாக விடுதலைப்புலிகளின் கடற்படைக்கு அறிமுகமாகின்றான்.

வல்லரசு நாடுகளிடம் பெற்றுக்குவிக்கும் கடற்கலங்களுக்கு நிகராக கடற்பலிகளின் பலமும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கடற்புலிகள் தயாரானபோது கடற்புலிகள் நோக்கிய இரும்பொறையின் வரவும் இருந்தது. இங்கேயும் அவனுக்கு கனரக ஆயுதப்பணியே கிடைக்கின்றது. இரும்பொறைக்கும் கனரக ஆயுதத்திற்குமான வாழ்வு இரத்தமும் சதையும் போன்றது. கனரக ஆயுதங்களை அவன் அணுவணுவாகத் தெரிந்து வைத்திருந்தான். அதனால் தான் கடற்புலிகளின் ஆயுதப்பயிற்சிக்கல்லூரி அவன் வழிநடத்தலுக்குள் கொடுக்கப்பட்டது. அதன்பின் இரும்பொறை மாஸ்ரர் இரும்பொறை மாஸ்ரர் என போராளிகள் அவனுடனயே இருந்தார்கள்.

ஒரு தாய் தன் பிள்ளையை வளர்ப்பதுபோல் அந்தப்பயிற்சி ஆசிரியன் செயற்பட்டான். தன்னிடம் பயிற்சிபெறும் ஒவ்வொரு போராளியும் கனரக ஆயுதக்கையாளுகையில் வல்லவராக வரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டான். தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப்படையின் கடற்படைப் பெண் போராளிகள் இன்று ஆண்களுக்குச்சமனாக நின்று ஓங்கி வீசும் அலைகளை எதிர்த்துத் தங்கள் கனரக சூட்டு ஆயுதத்தால் எதிரியின் கலங்களை நோக்கிச் சுடும்போது அங்கு புறப்படும் ஒவ்வொரு சன்னமும் அவன்பற்றி அறிந்திருக்கும். ஏனெனில் தங்களாலும் கனரக ஆயுதங்களைக் கையாள முடியுமா என பெண் போராளிகள் சற்றுத்தயங்கிய வேளைகளில் பக்குவமாக அந்த ஆயுதங்களின் நுட்பங்களை அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களின் கரங்களும் கடல் நடுவே நிற்கும் படகில் உள்ள கனரக ஆயுதத்தின் விசைவில்லைத் துணிவாக அழுத்தி எதிரியின் கலங்களில் அவற்றின் சன்னங்கள் முட்டி வெடிக்க வைக்க முடியும் என்ற உணர்வையும் அறிவையும் ஊட்டியவன் அவனல்லவா?.

பயிற்சிகளை வழங்குவதில் அவன் எப்படி மும்முரமாய் ஈடுபட்டானோ அதேபோலவே கடலிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற உணர்வு அவனுக்குள் எப்போதும் இருந்தது. அந்த உணர்வுக்குச் சந்தர்ப்பமும் கிடைத்தது. அது விடுதலைப்புலிகளின் வரலாறு மீண்டும் புதிதாய்ப் பிறப்பெடுத்த பெருஞ்சமர். ஓயாத அலைகள் ஒன்று. கடந்த காலப்படிப்பினைகளுடன் புலிகள் புதிதாய் மூட்டிய பெரும் போரில் எதிரியின் கற்பனைகளைச் சிதறடித்து அசாத்தியமான துணிச்சலுடன் எதிரியின் கடற்கலங்களுக்குச் சமனாக வலம் வந்தன கடந்புலிப் படகுகள்.

கடலை மட்டுமே துணையாய் நம்பி நின்ற எதிரி தரையிலும் கடலிலும் மூண்ட பெருஞ்சமரில் அதிசயித்து அதிர்ச்சிக்குள்ளாகினான். அதிர்வின் மீட்சிகள் எதிரிக்குக்கிடைக்கமுன் கடலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் கடற்புலிகள். கடற்களங்களில் சமரிட்ட கடற்புலிகளின் படகொன்றின் வழிநடத்துனனாக நின்று சமரிட்டான் இரும்பொறை.

கடற்புலிகள் தோற்காத அந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் சிறிலங்கா வான்படை வீசிய குண்டில் இரும்பொறையின் படகு தீப்பற்றி எரிகிறது. இரும்பொறை படகுக்குள் வீழ்கின்றான். படகினுள் கடல்நீர் உட்புகுந்து இரும்பொறையின் உடல் சிந்நிய இரத்தத்துடன் சேர்ந்து செந்நிறமாகியது. ஆனாலும் அவன் உயிர் அவனது எதிர்காலப் பணிக்காய் இன்னும் இழக்கப்படாமலிருந்தது. அவனது இடதுகால் இடுப்புடன் உடைந்துபோக அவன் மருத்துவ மனைக்குள் முடங்க வேண்டி வந்தது. தன் கால் பொருந்தி மீண்டும் நடமாடக்கூடியவாறு வருவதற்கு ஒரு வருடத்தையும் கடந்து அவன் காத்திருந்தான்.

இந்த வேதனையைக் கடந்து மீண்டும் இரும்பொறை இயங்கத் தொடங்கினான். ஒரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியன் என்ற நிலையிலிருந்து அவன் மேலும் வளர்ச்சி கண்டு கடற்புலிகளின் சாள்ஸ் படையணியை வழிநடத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. எப்போதுமே போராளிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்திற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் ஒரு பொறுப்பாளனாக இல்லாமல் ஒரு போராளியைப் போலவேயிருந்து தனது படையை வழிநடத்தினான். தேவையான இடங்களில் கண்டிப்புகள் அதற்கேற்ற வகையில் விட்டுக்கொடுப்புக்கள் என ஒரு வழிநடத்துனனுக்குரிய எல்லா இயல்புமே அவனிடமிருந்தது. எப்போதும் எதையுமே நேரில் நின்று பார்த்துச் சீர்திருத்தி விடவேண்டும் என்பது அவனது எண்ணம். அது தளத்தில் மட்டுமல்ல களத்திலும் தான்.

ஒரு முறை விநியோகப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்புலிப்படகுகள் சிங்களக் கடற்படையின் படகுகளால் வழிமறிக்கப்படுகின்றன. கடற்சமர் மூழுகின்றது. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் சமரிடத் தொடங்கின. கடற்புலிப் படகொன்றிலிருந்த கனரக ஆயுதமொன்று அப்போது இயங்க மறுத்துக் கொண்டிருந்தது. கரையிலிருந்து கட்டளைகளை கிரகித்துத்துக்கொண்டிருந்த இரும்பொறை நிலமையைப் புரிந்து கடற்புலிப் படகொன்றில் கடற்சமர்க் களத்திற்கு விரைகின்றான். சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தச் சூழலுக்குள் கூவிச்செல்லும் சன்னங்களுக்கும் வெடித்துச் சிதறும் கனொன்ரவைகளுக்கும் இடையில் கடலில் நின்றபடி ஆயுதத்தைச் சரிசெய்துகொண்டிருந்தான் இரும்பொறை.

இப்படித்தான் எந்தச் சூழலுக்கும் முகம் கொடுக்கும் அவன் 07-10-99இல் கடலில் நடந்த சமரில் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் நிரோஜன் வீரச்சாவடைந்ததால் அந்தப் பணியை கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் பணிப்புடன் ஏற்றுக்கொண்டான். கனரக ஆயுதங்களில் அவனுக்கிருந்த பட்டறிவும், கனரக ஆயுதங்களைக் கொண்டு எந்தச்சூழ்நிலையிலும் எதிரியை அழிக்கலாம் என்பதில் அவன் வைத்திருந்த தன்னம்பிக்கை, இருப்பதை வைத்து எதையும் சாதிக்கும் திறன், இடைவிடா முயற்சி என விரிந்து செல்லும் அவனின் அற்றல்கள்,  எங்கள் தேசத்தின் தலைமையும், கடற்புலிகளின் சிறப்புத் தளபதியும் அவனைக் கடற்புலிகளின் துணைத் தளபதியாக்க காரணமாக அமைந்தன.

அவனின் சிறப்பியல்புகளையெல்லாம் ஒன்றுசேர வெளிப்படுத்தியது திருமலைத்துறை மீதான தாக்குதல். திருகோணமலைத் துறைமுகம் ஒரு வேவுப்புலிவீரனால் வேவுபார்க்கப்பட்டு கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் கைகளுக்கு வர, அந்தத் தகவல்களோடு நேரடியாக வேவிற்கு இறங்கினான் இரும்பொறை. திருகோணமலைத்துறைமுகமே அதிர வேண்டும் என்ற உணர்வோடு பகலையும் இரவையும் ஒன்றாக்கி உழைத்தான். தாக்குகலின் ஒவ்வொரு ஆயத்தங்களிலிலும் தானே நேரில் நின்று சரிபார்த்தான். கரும்புலிப் படகுகளையும் தாக்குதல் படகுகளையும் ஓட்டிச் சரிசெய்தான். ஒவ்வொரு போராளிக்கும் சண்டை பற்றித் தெளிவூட்டினான்.

திருகோணமலைத் துறைமுகம் நோக்கி கடற்புலிகளின் கடற்சமர்ப்படகுகளும் கரும்புலிப்படகுகளும் நகர சமநேரத்தில் கரையில் விடுதலைப் புலிகளின் பீரங்கிப்படைகளும் தயாராகிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கடற்படையின் குகைக்குள் மூட்டப்போகும் பெருஞ்சமரை வழிநடத்த களத்திலிருந்தான் இரும்பொறை.

சண்டைக்கான நேரம் நெருங்க எதிரியின் துறைமுகக் கோட்டைக்குள் தன் நுட்பமான திட்டமிடலின்படி படகுகளை முன் நகர்த்தினான். ஒரு சாதகமற்ற சூழலுக்குள் சாதனைச் சிகரத்தைத் தொட்டுவிட எல்லோரும் மௌனமாய் காத்திருந்தார்கள். துறைமுகத்திலிருந்த ஆக்கிரமிப்புப் படைகளும் துருப்புக் காவிக்கலங்களும் அதன் துணைக் கடற்கலங்களும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க இரும்பொறையின் தொலைத் தொடர்புக் கருவியிலிருந்து கட்டளைகள் பிறக்கின்றன. கடல் அலையின் ஓசை அதிர்வை மேவியபடி கடற்புலிகளின் மூர்க்கமான தாக்குதல் கடலிலும் தரையிலும் ஆரம்பித்தது. பீரங்கிப்படையணியின் எறிகணைக் குழல்கள் துப்பிய குண்டுகள் துறைமுககெங்கும் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. திருகோணமலைத் துறைமுகத்தையும் சிங்களக் கடற் படையையும் சிங்கள அரசையும் கலங்கவைத்த அந்த வெற்றிகரத் தாக்குதலை தனித்து நின்று வழிநடத்தினான் இரும்பொறை. எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் எதையும் சாதிக்கும் தன் திறமையை தன் போராளிகளுடன் சேர்ந்து நிரூபித்துக்காட்டினான்.

இப்படித்தான் செயலால் வளர்ந்து சாதனை படைத்தாலும் கடற்புலிகளின் பாதுகாப்போடு பயணித்த விடுதலைப் போராளிகள் சிறிலங்காக் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி மடிந்ததை இரும்பொறையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த இழப்பு அவனின் நெஞ்சத்தை குடைந்துகொண்டிருந்தது. சிறிலங்கா கடற்படை மீது கடும் சினத்தையும் ஏற்படுத்தியது. வெறும் வேதனைகள் மட்டுமே தன் இதயத்தை அமைதியாக்கிவிடாதென்பதை உணர்ந்தவன் செயலில் இறங்கினான்.

திருகோணமலையிலிருந்து கடற்புலிகளை வழிநடத்திய அந்த இளம் தளபதி மீண்டும் வன்னிக்கு திரும்பினான்.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் ஆலோசனையோடு சிறிலங்கா கடற்படைக்கு தக்க பதிலடிகொடுக்கப் புதிய திட்டமொன்று தீட்டப்பட்டது. கடலில் நேரடியாக நின்று கனரன ஆயுதங்களால் சூட்டுப்பயிற்சி வழங்கி படகுகளை சரிபார்த்து எதிரிக்கு பேரிடிகொடுக்க கடற்புலிச் சேனையின் துணைத்தளபதியுடன் போராளிகள் தயாராகினார்கள்.

ஒரு இராப்பொழுதில் இயற்கையும் மனிதர்களும் மௌனமாய் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மெல்லியதாய் இரைந்து கொண்டிருந்த அலைகளுக்குள் படகுகள் இறக்கப்படுகின்றன. இருளின் வெளிச்சத்துக்கள் வானவிளிம்போடு பார்க்கும்போது கறுத்த உறுவமாய் படகுகள் அசைந்தன.

இரும்பொறை தன் கட்டளைப் படகுக்குள் இறங்குகிறான். படகுகளின் இயந்திரங்கள் உரத்து ஒலிக்கின்றன. தரையில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி தன் தோழர்களை வழியனுப்பி விட்டுத் தன் கட்டளையகத்தில் காத்திருக்க கடற்புலிகளின் துணைத்தளபதி இரும்பொறையின்  வழிநடத்தலில் மூன்று தொகுதிகளாகப் பிரிந்து கடற்களச்சமருக்கு கடற்புலிகளின் சண்டைப் படகுகளும் கரும்புலிப்படகுகளும் புறப்படுகின்றன. முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தங்கள் இலக்கை எதிர்பார்த்து அதிவேகத்தில் அலைகளை ஊடறுத்து விரைந்தன படகுகள்.

இப்போது சிங்களக் கடற்படையின் கலங்களில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தங்கள் விநியோகப்பயணத்தை ஆரம்பித்தன. கடற்புலிகளின் படகுகள் இலக்கை இனங்கண்டு மூன்று முனைகளில் எதிரிகளின் கலங்களை முற்றுகையிட்டன. கடற்சண்டையைக் கடற்புலிப்படகுகள் தொடக்கி வைத்தன. எதிர்பாராத நேரத்தில் தங்கள் கலங்களில் பட்டு வெடித்துச் சிதறும் சன்னங்களைக் கண்டு சிங்களக் கடற்படை திகைத்தது. இரும்பொறையின் கட்டளைப்படகும் அதன் துணைப்படகுகளும் எதிரியின் பாரிய கப்பலொன்றை இனங்கண்டு தாக்குதல் தொடுக்க தயாராகின. எதிரியின் கப்பலில் இருந்து 1200 மீற்றர் தூரத்தில் நின்றபடி கரும்புலிப்படகை கப்பல் மீது மோதவிட தன் தளபதியிடம் அனுமதியைக் கோருகின்றான் இரும்பொறை. எதிரி நிதானித்து தன் பலத்தை அதிகரிப்பதற்கு முன் எதிரி திகைத்திருக்கும் அந்த நேரத்தில் 1200 படையினருடன் இருந்த அந்த பிறைட் ஒவ் சவுத்‘  கப்பலைச் சிதறடித்துத் தன் அதயச் சுமைகளை இறக்கி வைப்பதற்காக அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.

ஆனால் தளபதியால் உடன் அனுமதி வழங்க முடியாத நிலை. பொது மக்கள் அந்த கப்பலில் இருப்பதாகத் தகவல். தலைவன் எப்போதும் மக்களுக்குச் சேதம் வரக்கூடாதெனச் சொல்லியது அவர் முன் சிந்தனைக் கணைகளாக வந்து மோதின. நேரம் கடந்துகொண்டிருந்தது. சிங்களக் கடற்படை தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தபடியிருக்க, இரும்பொறை கரும்புலிப்படகுகளை தடுத்தபடியிருக்க, கடலில் அப்போது நிலவியது ஒரு சமருடன் கூடிய அமைதி.

நேரம் கடந்ததால் எதிரியின் பலம் கடலில் இப்போது கூடியிருந்தது. எதிரியின் டோறாக் கலங்களுடன் கடற்புலிப்படகுகள் கடுஞ்சமரிட்டன. கடற்புலிகளின் ஒரு தொகுதிப்படகுகளின் தாக்குதலில் ஒரு டோறா கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. இரும்பொறை கனரக ஆயுதம் பொருந்தியிருந்த தன் கட்டளைப் படகில் நின்றபடி சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்தான்.

சற்றுப் பின்நகர்ந்த இரும்பொறையின் கட்டளைப்படகு ஆவேசத்துடன் எதிரியின் டோறாக் கலமொன்றை இனங்கண்டு தாக்குகின்றது. இப்போது டோறாப்படகு கடலில் நின்று சுழன்று கொண்டிருந்தது. இரும்பொறை கரும்புலிப்படகொன்றை அந்த டோறாவைச் சிதைக்க விடைகொடத்தனுப்பினான். அது கடலின் அலைகளினூடே புகுந்து டோறாவுடன் மோதியபோதும் வெடிக்கவில்லை. நிலமையைப்புரிந்த இரும்பொறை ஆவேசத்துடன் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் நிற்க வேண்டிய தன் கனரக ஆயுதம் பொருந்திய கட்டளைப்படகை எதிரியின் டோறா நோக்கி வேகத்துடன் முன் நகர்த்தினான்.

எப்போதும் போல, கடலில் ஏதாவது பிசகு நடந்துவிட்டால் அடுத்த கணம் இரும்பொறையின் படகு அங்கே நிற்கும். இலக்கு விலகிவிட்டதோ, வெடிமருந்து வெடிக்கவில்லையோ, என்ன பிசகோ…. எங்கோ நிற்க வேண்டியவன் கரும்புலிப்படகு தாக்கிய எதிரிக்கலத்தின் அருகில் நின்றான். ஏன் இதற்குள் என அருகிலிருந்த படகில் நின்ற போராளிகள் அங்கலாய்த்தார்கள். இரும்பொறையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் நிதானித்து அவனைப் பின்நகர்த்துவதற்கிடையில் ஆவேசமாய் தொலைத்தொடர்புக் கருவியில் ஒலித்துக்கொண்டிருந்த அவன் குரல் ஓய்ந்திருந்தது. அந்த வீரன் தன் கட்டளைப்படகிற்குள் இரத்தவெள்ளத்தில் மௌனமாய் கிடந்தான். ஓருறவாய் தங்களுடன் உண்டு படுத்து ஊட்டி வளர்த்த தளபதியைக் கடலில் பறிகொடுத்த சோகத்துடன் அவனையும் இன்னும் சில தோழர்களையும் வித்துடலாய்ச் சுமந்தபடி படகுகள் கரைதிரும்பின.

எனக்கு ஒண்டு நடந்தா எங்கட கடற்புலிகளையே சிறப்பாக வழிநடத்தக்கூடியவனென்டு நான் கற்பனையெல்லாம் போட்டு வச்சிருந்தன் ஆனா அது அவன்ர சாவோடை முடிஞ்சுபோச்சுஎன்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி ஏங்கியது எத்தனை உண்மையானது. புறப்படும் போதே தன் இலக்கை அழிக்காமல் மீள்வதில்லை என்று புறப்பட்டவன் பின்னர் வரவேயில்லை. எந்தச்சண்டையிலும் ஏதாவது பிசகெண்டால் தன் படகுடன் அங்கே நிற்கும் ஒரு சண்டைக்காரனை நாங்கள் இழந்து போனோம்.

1991இல் நிதி என்ற பெயரின் வரலாறு முடிந்து போகாமல் இன்னும் பத்து வருடங்கள் இரும்பொறையாய் சாதனை படைத்த திருப்தி ஒருவேளை அவன் ஆத்மாவிற்கிருந்தாலும் ஒரு எதிர்கால கடற்படைத்தளபதியின் வாழ்வு இடையில் முடிந்துவிட்டதே என்ற எங்களின் நெஞ்சத்து வேதனை அவன் ஆன்மாவிற்கு எட்டுமா?

ஆவணம் Alaiyil Karaiyum Aathmaavin…

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments