×

 இரண்டாம் கட்டமாக 14.01.1991 கடன் பத்திர தாரர்களுக்கு தங்கத்தை மீளளிப்புச் செய்தோம்

 இரண்டாம் கட்டமாக 14.01.1991 கடன் பத்திர தாரர்களுக்கு தங்கத்தை மீளளிப்புச் செய்தோம்

சிங்கள பேரினவாத பூதத்திடமிருந்து தமிழீழத்தை மீட்பதற்காக இதுவரை இரண்டாயிரத்து ஐநூறு புலி வீரர்களும், வீராங்கனைகளும் தமது உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான புலிகள் வீரமுடன் போர்க்களத்தில் நிற்கின்றார்கள்.

தமிழீழ மண்ணை நேசிக்கின்ற, அதன் விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் இலட்சக்கணக்கான மக்கள், சிறீலங்கா அரசின் இராணுவ, பொருளாதார வகையிலான, தாங்கொணாத பல்வேறு கொடுமைகளையும் தாங்கி, மண்மீட்புப்போரில் தங்களது பங்களிப்பையும் செலுத்தி வருகின்றார்கள்.

தமிழீழ மண்ணைக் கபளீகரம் செய்து, தமிழீழ மக்களை நிரந்தர அடிமைகளாக்க கங்கணம் கட்டி நிற்கும் சிங்கள அரசு, அதற்கான முயற்சிகளை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது.

விடுதலைப் போரை விரும்பாத சர்வதேச சக்திகளிடமிருந்து பெருந்தொகையில் ஆயுதத்தையும் நிதியையும், பெற்று வருகின்றது. தமிழ் இன அழிப்பிற்காகவே ”தேசிய பாதுகாப்பு நிதி ” என்ற பெயரில் கோடி ரூபாய்களை உள் நாட்டிலேயே சேகரித்து வருகின்றது. சிறீலங்கா முப்படைகளின் கூட்டுத் தளபதி கூட தெருத் தெருவாக இறங்கி, நிதி திரட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கணிசமான சிங்களமக்களும் இந்த தமிழ் இன அழிப்புக்கு நிதிகளை வாரிவழங்கி வருகின்றார்கள்.

தமிழ் அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்தும் இந் நிதிக்கு சிறீலங்கா அறவீடுகளை மேற்கொண்டு வருவதுடன், கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடமிருந்தும் பெருமளவு நிதியை பெற்று வருகின்றது. தமிழ் இனத்தை அழிக்க, தமிழ் மண்ணை அடிமை கொள்ள தமிழர்களிடமிருந்தே சிங்கள அரசு பெருமளவு நிதியைத் திரட்டுகின்றது. இந்த நிதிகளைக் கொண்டு நவீன ஆயுதங்களையும் -வெடிமருந்துகளையும், போர் விமானங்களையும் கொள்வனவு செய்து, தமிழீழ மக்களுடன் ஒரு போரை நடாத்துகின்றது.

இந்நிலையில் எதிரிக்கு நிகராக – எமது விடுதலைப் போரை மேலும் நவீன மயப்படுத்தி, தமிழீழத்தை மீட்பதற்காக எமது இயக்கத்திற்கு பெருமளவு நிதி தேவைப்படு கின்றது. அந்த நிதியை தமிழ் மக்களிடமிருந்துதான் நாம் பெறமுடியும். இந்த நோக்கத்தை நிறை வேற்றிக் கொள்வதற்காக தமிழீழ மீட்புநிதி என்ற பெயருடைய கடன் திட்டத்தை அமுல்படுத்துகின்றோம். குடும்பத்திற்கு இரண்டு பவுண் தங்கம் அல்லது பத்தாயிரம் ரூபா பணம் என்ற அடிப்படையில் வசதியுள்ள குடும்பங்களிடமிருந்து நிதியைப் பெறுகின்றோம்.

இத்திட்டமானது எமது விடுதலைப் போருக்கான நிதியை நாம் பெறுவதற்கும், தமிழ்மக்கள் அனைவரும் எமது போராட்டத்தில் இணைந்து கொண்டு ஏதோ ஒரு விதத்தில் தமது பங்களிப்பைச் செய்வதற்கும் உதவுகின்றது. பெறப்படும் தங்கம் அவர்கள் தந்த நகையின் மாற்றுடன் (Carat) 2 மாற்று அதிகமாக உள்ள புலி இலட்சனை பொறித்த தங்க நாணயமாக வழங்குவதன் மூலம் நாம் பெற்ற தங்கத்தை மீளளிப்பது என்ற உறுதி மொழியையும் மக்களுக்கு வழங்கியிருந்தோம்.

அதன்படி முதலில் 27.11.1990 மாவீரர் நாளிலும், இரண்டாம் கட்டமாக 14.01.1991 தைப்பொங்கல் தினத்தன்றும் நூறு, கடன் பத்திர தாரர்களுக்கு தங்கத்தை மீளளிப்புச் செய்தோம், தொடர்ந்தும் மாதாமாதம் மீளளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதுவரை தங்கத்தை மீளப் பெற்றுக் கொண்டவர்களில் பலர், நாம் கொடுத்த தங்க நாணயத்துக்குச் சமனான நகையை நன்கொடையாகத் தர முன்வந்தார்கள். புலிச்சின்னம் பொறிக்கப் பட்ட மீளக்கையளிக்கப் பட்ட தங்கத்தை தான் ஒரு பொக்கிசமாகப் பயன்படுத்தப் போவதாக கூறிய ஒரு மூதாட்டி உடனடியாகவே இரண்டு பவுண் தங்கத்தை அன்பளிப்பாக இயக்கத்துக்கு வழங்க விருப்பம் தெரிவித்தார். இந்தச் செயல் மீளளிப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்த மக்களையும் போராளிகளையும் உணர்ச்சி கொள்ள வைத்தது.

-விடுதலைப்புலிகள் இதழ்
தை,1991.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments