×

சுயநிறைவான தன்னில்தானே தங்கி நிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும் என்பதே, எனது விருப்பம்

சுயநிறைவான தன்னில்தானே தங்கி நிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும் என்பதே, எனது விருப்பம்

சுயநிறைவான தன்னில்தானே தங்கி நிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும் என்பதே, எனது விருப்பம்: மக்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவ வேண்டும். என்ற
மேதகு தேசியத்தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். அவர்களின் சிந்தனைக்கமைய தமிழீழ நடைமுறை அரசானது , தமிழீழ நாட்டின் உட்கட்டுமானத்தை எவ்வாறு அமைத்திருந்தது என்பது பற்றிய வரலாற்று தரவுகளை தொடர்ந்து விரிவாக பார்ப்போம்.

தமிழீழ உட்கட்டுமானம்

தமிழீழத்திற்கான பிரதான நகரங்கள்:

1. ஆரம்பநிலை – குழுநிலை.
1.1 தமிழீழத்துக்கான உட்கட்டுமான அமைப்பை வடிவமைத்தல் தொடர்பாக ஆராய்வதற்கென 1993 ஜூலை 15-ம் நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இறைமையும் தன்னாட்சியும் கொண்ட தமிழீழம் (இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிரதேசம்) தனக்கேற்றதான வகையில் எதிர்கால உட்கட்டுமான அமைப்பைத் தீர்மானிப்பது தொடர்பான பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
1.2 உட்கட்டுமான அமைப்புத் தொடர்பாக ஆக்கபூர்வமாகவும். முழுமையாகவும் ஆராய்வதற்கு ஏற்றதாக எட்டுக் (8) குழுக்கள் அக்கூட்டத்தில் தெரியப்பட்டன. அக்குழுக்கள் வருமாறு :-

1. நகரங்கள்
2. தெருக்கள், இரும்புப்பாதைகள். விமான நிலையங்கள்
3. கடற்போக்குவரத்தும், துறைமுகங்களும்

  1. மின்சாரம்
    5. தொலைத்தொடர்பு
    6. நீர்ப்பாசனமும், நீர் முகாமையும்
    7. கைத்தொழில்
    8. நீர் வழங்கலும், வடிகால் அமைப்பும்1.3 ஒவ்வொரு செயற் குழுவும் அதற்கெனச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயம் தொடர்பாக முதலில் விரிவாக ஆராயவேண்டுமென்றும், அதன் பின் ஏனைய செயற் குழுக்களுடன் கலந்துரையாடி விடயங்களைத் தொடர்புபடுத்தி ஆராயவேண்டுமென்றும், அவற்றின் அடிப்படையிற் பெருந்திட்டம் (MasterPlan) உருவாக்கப்படவேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
    1.4 பிரதான நகரங்களின் அமைவிடம் முதலில் தீர்மானிக்கப்படவேண்டும் என்றும், அதனடிப்படையிலேயே ஏனைய விடயங்கள் பற்றிய ஆலோசனைகளையும், தீர்மானங்களையும் செயற்றிறன் உடைய முறையில் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.2. நகரங்களுக்கான செயற்குழு

2.1 தமிழீழத்தின் பிரதான நகரங்களைத் தெரிவு செய்வதற்கெனத் தெரியப்பட்ட செயற்குழுவுக்கு ஒன்பது (9) பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள்:
1. திரு. எஸ்.பீ.ஜெயலிங்கம்.
2. திரு.சே. இராஜேஸ்வரன்
கட்டிடக்கலைஞர்,
குடிசார் பொறியியலாளர்.
3. திரு.ந. செந்தில்குமரன்
கட்டிடக்கலைஞர்.
4. திரு.ஐ. பாலசுப்பிரமணியம்
விரிவுரையாளர்.
5. திரு.எம். சின்னத்தம்பி
விரிவுரையாளர்.
6. திருமதி. மல்லிகா இராஜரட்ணம்
கட்டிடக்கலைஞர்.
7. திரு அ. சந்தியாப்பிள்ளை
நில அளவையாளர்.
8. திரு.பெ.ஜீ. சதானந்தன்
பொறியியலாளர்,
இணைப்பாளர்.
9. திரு. ரமேஷ்.

2.2 இக்குழு, நாடு, மாவட்டங்கள், நகரங்கள் என்ற தொடர் நோக்கு அடிப்படையிற் சிந்திப்பது அவசியமாயிருந்தது. நாட்டின் எல்லைகள் தெரிந்தனவாக இருப்பதால், மாவட்ட எல்லைகளை நிர்ணயித்தல் பற்றியே கவனம் செலுத்தவேண்டியதாய் இருந்தது.

3. நிர்வாகப்பிரதேசங்களின் நிர்ணயம்
3.1 நிர்வாகப் பிரதேசங்களாக அமையும் மாவட்டங்களின் பரப்பு, எல்லை தொடர்பாக ஆராய்ந்து அதனடிப்படையில் முன்மொழிவு செய்யவேண்டும் என இச்செயற்குழு கருதியது. தற்போதுள்ள மாவட்டங்கள் சிறீலங்கா அரசின் தேவைக்கேற்பவே உருவாக்கப்பட்டிருப்பதால் தமிழீழத்தின் வளர்ச்சிக்கும், எதிர்காலத் தேவைகளுக்கும். அபிவிருத்திக்கும் போதுமானவையாக அமையமாட்டா. என்றும் எமது அபிவிருத்தி இலக்குகளுக்கும், நிர்வாக முறைமைகளுக்கும் ஏற்ற வகையில் புதியனவாகவும், கூடிய எண்ணிக்கையிலும், (மாநிலங்கள்) நிர்வாகப் பிரதேசங்கள் தீர்மானிக்கப்படுதல் அவசியம் என்றும் இக்குழு கருதியது. நிர்வாகப் பிரதேசங்கள் மாநிலங்கள் என்றழைக்கப்படும்.
3.2 மாநிலங்களின் பரப்பளவு. எல்லைகள் பற்றி நிர்ணயம் செய்வதற்குப் பல அடிப்படையான தகுதி விதிகள் கவனத்திற் கொள்ளப்பட்டன அவையாவன:
3.2.1. புதிதாக வகுக்கப்படும் மாநிலங்கள் அனைத்தும் சமமானதும், சீரானதுமான வளர்ச்சியைப் பெறக்கூடியதாகவும், அதற்கேற்ப அப்பிரதேசங்களிடையிலான வேறுபாடுகளுக்கு இடமளிக்காத வகையிலும், இயன்றளவு எல்லா வகையான வளங்களையும் ( கடல், விவசாயம், கைத்தொழில் ) எல்லாப்பிரதேசங்களும் பெறக்கூடியதாகவும் அமையவேண்டும்.
3.2.2. மாநிலங்களை வகுக்கும் போதும், அவற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் போதும் கூடியளவு புவியியல்சார் பௌதீக அம்சங்களுக்கு (ஆறுகள், ஏரிகள், கடனீரேரிகள்) முன்னுரிமை கொடுத்தல் அவசியம்.
3.2.3. புதிய மாநிலங்களை வகுக்கும் போது தமிழீழத்தின் எதிர்காலத் தேசியத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.
3.3. புதிய மாநிலங்களும், எல்லைகளும்:

தமிழீழத்தின் புதிய மாநிலங்கள் பல முன்மொழியப்படுவதுடன், தேவைக்கேற்ப தற்போதிருக்கும் மாவட்டப் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டும், ஒன்றிணைக்கப்பட்டும் உள்ளன. அவ்வாறான நிர்வாகப் பிரதேச எல்லைகள், பரப்பளவு நிர்ணயம் தொடர்பாகப் பின்வரும் அம்சங்கள் இக்குழுவினால் முன்மொழியப்படுகின்றன.

3.3.1. தமிழீழத்தில் மொத்தமாக இருபது (20) மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றுக்குமுரிய பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
3.3.2. மாநிலங்கள் (மாவட்டங்கள்) எனப்படும் இவ் ஆட்சிப் பிரதேசங்கள் தற்போதைய மாவட்டங்களை விடப் பரப்பளவிற் சிறியவை. எனினும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் பார்க்கப் பெரியனவாகும்.
3.3.3. தமிழீழத் தேவைகள், இலக்குகள் என்பவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாகவும், கிளிநொச்சி மாவட்டம் மூன்றாகவும், மன்னார் மாவட்டம் இரண்டாகவும், புத்தளம் மாவட்டம் மூன்றாகவும், திருகோணமலை மாவட்டம் மூன்றாகவும், மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாகவும், அம்பாறை மாவட்டம் இரண்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து மாங்குளம் மாநிலம் எனப் புதிய பிரதேசம் உருவாக்கப்பட்டுள்ளது.
3.3.4. யாழ்ப்பாணக் குடாநாடு இயற்கையாகவே தொண்டைமானாறு நாவற்குழி நீரேரியினால் வலிகாமம் பிரதேசத்திலிருந்து தென்மராட்சி, வடமராட்சிப் பிரதேசங்கள் பிரிக்கப்படுகின்றன. இதனடிப் படையில் யாழ்ப்பாணக் குடாநாடு இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:
3.3.4.1 நல்லூர் மாநிலம் : இப்பகுதியில் தற்போதைய வலிகாமமும், தீவகமும் அடங்கும். இங்கு சனத்தொகை அதிகமாயிருப்பதோடு வளமான செம்மண்ணும் உண்டு.

3.3.4.2. வறணி மாநிலம் : இப்பகுதியில் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்கள் அடங்கும். இங்கு சனத்தொகை குறைவாகவே காணப்படுகிறது.

தென்மராட்சியில் நெற்பயிற் செய்கை இடம்பெறுவதோடு, பளைப்பிரதேசத்தில் தென்னைப் பெருந்தோட்ட அபிவிருத்தியும் காணப்படுகின்றது.

வடமராட்சிப் பகுதியில் கடல்வள அபிவிருத்திக்குப் போதிய வாய்ப்புண்டு. வடமராட்சிக் கிழக்குப் பிரதேச அபிவிருத்திக்குத் திட்டமிடல் அவசியம்.

வறணி நிர்வாகப் பிரதேசத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. இங்கு புதிய அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தக் கூடியளவுக்கு நிலமும் ஏனைய வளங்களும் உள்ளன.

3.3.5. கரைச்சி மாநிலம்: இது கிளிநொச்சி, பரந்தன். வட்டக்கச்சிப் பகுதிகளை உள்ளடக்கியது. இதன் வடக்கு எல்லையாக யாழ்.குடா நீரேரியுள்ளது. விவசாயம் இப்பிரதேசத்தின் பிரதான வளமாகும்.
3.3.6 பூநகரி மாநிலம்: இதன் மேற்கு எல்லை மன்னார் வளைகுடாவாகும். பூநகரி பெருநிலப்பகுதி ஆதிக்குடியிருப்புகள் காணப்பட்ட பிரதேசமாகும். இங்கு நெற்செய்கைகள் பிரதானமானதாகும்.
3.3.7. முல்லைத்தீவு மாநிலம்: இது முன்னைய முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதியைக் கொண்டதாகும். இதில் மணலாறுப் பிரதேசமும் அடங்குகிறது. இதன் கிழக்குக்குக் கரையோரம் வங்காள விரிகுடாவாகும். கடல் வளம், விவசாய வளம் என்பன இப்பகுதியில் பிரதானமானவையாக உள்ளன.
3.3.8. மாங்குள மாநிலம்: இது தற்போதைய முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியதாகும். வடமாகாணத்தின் பிரதான நிர்வாக மையம் (மாநகரம்) மாங்குளத்தில் அமையும். இதனைக் கருத்திற் கொண்டு இப்பிரதேசம் பரப்பளவில் பெரிதாக அமையுமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பாக ஆராயுமிடத்து, மாங்குளத்தில் ஒரு மாநகரம் அமைப்பதற்கேற்றளவு நீர்வளம் இல்லையென்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வளமான காடு அழிக்கப்படும் அபாயமும் ஏற்படும் என்றும், இதனால் வடமாநிலத்தின் தலைநகர் முறிகண்டியில் அல்லது கொக்காவிலில் அமைக்கப்படலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.3.9. தற்போதைய மன்னார் மாவட்டம் மாந்தை, மடு என்ற இரண்டு நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
3.3.9.1. மாந்தை மாநிலம் : இது மன்னார். தலைமன்னார், திருக்கேதீஸ்வரம், கட்டுக்கரைக்குளம் (Giants Tank) என்பவற்றை உள்ளடக்கும். இங்கு நெற்செய்கையும், கடல் வளம் அபிவிருத்தியடைவதும் இலகுவாக இருக்கும். தரமான களிமண் வளமும் உண்டு.
3.3.9.2. மடு மாநிலம்: இப்பகுதி பிரதானமாகக் காடுகளைப் பேணும் இடமாக அமையும். மடு தேவாலயம் இப்பகுதியிலிருப்பதால் இதற்கு முக்கியத்துவம் உண்டு.
3.3.10. வவுனியா மாநிலம்: இப்புதிய வவுனியாப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுவதற்குக் கால் நடை அபிவிருத்திக்கு முதன்மையளிக்க வேண்டும். இங்கு ஏற்கனவே சனத்தொகை உண்டு.
3.3.11.(1) திருகோணமலை மாநிலம்: தமிழீழத்தின் தலைநகர் இப் பிரதேசத்தில் அமையும். தலைநகரின் நிர்வாகப் பிரதேசமாக இதன் அயற்பகுதிகள் அபிவிருத்தியடையும். சீனன் குடா, தம்பலகாமம் என்பன இதில் அடங்கும்.
(2) குச்சவெளி மாநிலம்: தற்போதைய வட திருகோணமலை மாவட்டம் இப்பகுதியில் அடங்கும். இதன் வடக்கு எல்லை தற்போதைய முல்லை- திருகோணமலை மாவட்ட எல்லையாகும். தெற்கு எல்லை திருகோணமலை- ஹொரவுப்பத்தானை நெடுஞ்சாலையும் நிலாவெளியும் ஆக அமையும்.
3.3.11.(3) மூதுார் மாநிலம் இதன் எல்லைகள் மகாவலிகங்கையாகவும் மற்ற எல்லை தற்போதைய திருகோணமலை – மட்டக்களப்பு எல்லையாகவும் உள்ளது. இப்பிரதேசத்தில் விவசாயம், கடல் என்பன பிரதான வளமாக அமைகின்றன.

3.3.12. மட்டக்களப்பு மாநிலம்:
வாகரை மாநிலம்: இது புதிய நிர்வாகப் பிரதேசம். பெரியளவு நீர்ப்பரப்புடையதாகும். தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபகுதியாக இது அமையும். இதன் தெற்கு எல்லை முகுந்தன் ஆறு ஆகும்.
3.3.13. அம்பாறை மாவட்டம் இரு மாநிலங்களாகச் சமநிலப்பரப்புடையதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நெற்செய்கையும், விலங்கு வேளாண்மையும் இங்கு பிரதானமானவை.
3.3.13. (1) அக்கரைப்பற்று மாநிலம்
3.3.13. (2) பொத்துவில் மாநிலம்
வெல்லாவெளிப்பிரதேசம் தற்போதைய அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பகுதிகளாக இருக்கும். மட்டக்களப்புப் பிரதேசத்தின் தெற்கு எல்லைப் பகுதியாகப் பட்டிருப்பு அமையும். இப்பிரதேசமும் சனத்தொகை கூடிய பகுதியாகக் காணப்படும்.

3.3.14. புத்தளம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
3.3.14. (1) அறுவாக்காடு மாநிலம்
3.3.14 (2) புத்தளம் மாநிலம்
3.3.14. (3) சிலாபம் மாநிலம்

4. பிரதான நகரங்கள்
மாநிலங்களாகத் தெரியப்பட்ட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு பிரதான நகரைத் தெரிந்தெடுக்க
வேண்டுமென இச் செயற்குழு கருதி அதன்படி செயற்பட்டது. இதற்கான முதற்கட்ட அவதானமாகத்

தமிழீழத்தின் வளங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. உட்கட்டுமானம் தொடர்பாக 04.08.1993 இல் யாழ்.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குழுக்களின் கூட்டத்தில் ஏனைய குழுக்களுடன் நடாத்திய ஆலோசனையோடு பிரதான நகரங்கள் தெரியப்பட்டன. அவை தொடர்பாக மீண்டும் எமது செயற்குழு மீளாய்வு

செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையிற் பிரதான நகரங்களின் தெரிவு மேற்கொள்ளப்பட்டது.

4.1 நல்லூர்ப் பிரதேசத்தின் பிரதான நகரம் யாழ்ப்பாணம் ஆகும். இங்கு கூடியளவு உட்கட்டுமான வசதிகள் உள்ளன.
4.2 வரணிப் பிரதேசத்தின் பிரதான நகரம் கொடிகாமம் ஆகும். இது பருத்தித்துறை, சாவகச்சேரி, பளை, வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளின் மத்தியில் அமைகிறது. இங்கு அபிவிருத்திக்குரிய நிலப்பரப்புக் காணப்படுகிறது. புவியியற் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கொடிகாமம் பற்றி ஆய்வு நடாத்தி, அதன் முக்கியத்துவம் பற்றிச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.
4.3 கரைச்சி மாநிலத்துக்கு பிரதான நகரம் கிளிநொச்சி நகரம் ஆகும். இங்கு கூடியளவு உட்கட்டுமான வசதிகள் உள்ளன.
4.4 பூநகரி மாநிலத்துக்குப் பூநகரி நகரமே சிறந்தது. சங்குப்பிட்டி, கேரதீவுப் பாலமும் (மகாதேவாபாலம்) போக்குவரத்தும் பூநகரி நகரை முக்கியத்துவப்படுத்துகின்றன. இம் மாநிலத்துக்கான நிர்வாக மையம் இங்கு இருப்பது விரும்பத்தக்கது.
4.5 முல்லைத்தீவு மாநிலத்துக்கு முல்லைத்தீவு நகரம் ஏற்கனவே இருப்பதால், தண்ணீரூற்று பிரதான நகரமாக அமையும். முல்லைத்தீவு நகரம் ஒரு துறைமுகமாகச் செயற்படும்.
4.6. மாங்குளம் வட தமிழீழத்தின் மாநகரமாகும். இவை பற்றிய ஆய்வுகள் 1991-ல் நடைபெற்றிருந்தன. இங்கு மாநகரம் உருவாவதால் காடு அழிப்பு ஏற்படும் அபாயம் உண்டென்றும், நீர்வளம் போதுமானதாக இருக்குமா என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் தலைநகராகச் செயற்படும் மாநகரம் முறிகண்டியில் அல்லது கொக்காவிலில் அமையலாமென்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
4.7. மாந்தைப்பிரதேசத்தில் மன்னார் நகரமிருப்பதால், பெருநிலப்பகுதிகளின் அபிவிருத்தி பின் தங்கியுள்ளது. இங்கு கூடியளவு வளமும் காணப்படுகின்றது. இதனால் உயிலங்குளம் இப்பிரதேசத்தின் பிரதான நகரமாக அமையும்.
4.8. மடு மாநகரத்துக்கு மடுவே நகரமாகும் என்ற முடிவு 04.08.1993 இல் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இச் செயற்குழு இதனை மீளாய்வு செய்து நகரத்தை மடு றோட் எனுமிடத்துக்கு மாற்றவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன.

1) மடு ஒரு காட்டுப்பிரதேசமாயுள்ளது. இங்கு நகரம் ஏற்படுத்தப்பட்டால் காட்டுவளம் அழிக்கப்பட்டு விடும்.
2) மடு கோயில் ஒரு புனிதப் பிரதேசமாகப் பேணப்படல் வேண்டும். இப்பகுதி பெரிய நகரமாக்கப் பட்டால், இதன் புனிதத்தன்மை சீர்குலையும் அபாயம் ஏற்படலாம்.

4.9. வவுனியா மாநிலத்துக்கு ஓமந்தை பிரதான நகரமாவது பொருத்தமானது. இதன் வளர்ச்சியின் போது தற்போதைய வவுனியா நகரும் அடங்கும். வவுனியா நகரும் ஓரளவு அபிவிருத்தியடைந்துள்ளபடியால் அது பிரதான நகரமாக இருத்தல் வேண்டுமென 04.08.1993 இல் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதை இச் செயற்குழு மீளாய்வு செய்தது, வவுனியா ஒரு ஒதுக்கில் உள்ளபடியால் ஓமந்தை சிறந்ததெனக் கருதியது.
4.10 குச்சவெளி மாநிலத்துக்குத் திரியாய் பிரதான நகரமாகத் தெரிவு செய்யப்பட்டது. திரியாய் ஒரு ஆதிக்குடியிருப்பு என்ற வகையில் அது நகரமாவது விரும்பத்தக்கது.
4.11 திருகோணமலை மாநிலத்துக்குத் தம்பலகாமம் தான் அபிவிருத்திக்கு உகந்த நகரமாகும். தற்போதைய திருகோணமலை நகரம் ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகக் கோணேஸ்வரர் கோவிலை உள்ளடக்கிய வகையிற் பேணப்படல் வேண்டும். ஏற்கனவே திருகோணமலைக் கைத்தொழிற் பூங்கா என்ற மாபெரும் அபிவருத்தித் திட்டமும் இப்பகுதிக்குரியதாகத் தீரமானிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாரிய திருகோணமலை என்றழைக்கப்படும்.
4.12 மூதூர் மாநிலத்தின் பிரதான நகரமாகக் கிளிவெட்டி அமையவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
4.13 வாகரை மாநிலத்தின் பிரதான நகரமாக வாகரை நகரம் அமைய வேண்டுமென 04.08.1993 கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனை இக்குழு மீளாய்வு செய்யும் போது மாங்கனி பிரதான நகரமாக இருப்பது விரும்பத்தக்கதெனக் கருதப்பட்டது.

4.14 மட்டக்களப்பு மாநிலத்தின் பிரதான நகரமாகவும் கிழக்குப் பிராந்தியத்தின் தலைநகரமாகவும் கரடியன்ஆறு அமைய வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் மட்டக்களப்பு நகரமும் தொடர்ந்திருக்கும். இந்நகரை விஸ்தரிப்பதற்கான இடப்பரப்புக் குறைவாயிருப்பதால், கரடியன் ஆறு நகரமாக அபிவிருத்தி செய்யப்படுவது சிறந்தது.
4.15 வெள்ளாவெளிப் பிரதேசத்துக்குப் பேராறு (மகாஓயா) நகரம் பிரதான நகரமாக அமையவேண்டும். இது மத்திய நகரமாக வளரமுடியும். 04.08.1993 இல் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளாவெளிப்பிரதேசத்துக்குப் பெரிய புல்லுமலை நகரமாக அமைய வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இது இம்மாநிலத்தின் கிழக்கு எல்லையில் அமைவதாலும், கிழக்குப் பிராந்தியத்தின் தலைநகரான கரடியன் ஆறுக்கு மிகச் சமீபமாக இருப்பதாலும், பேராறு நகரம் விரும்பத்தக்கதாக செயற்குழு தீர்மானித்தது.
4.16 அக்கரைப்பற்று மாநிலத்தின் பிரதான நகரமாகப் பாலமுனை அமையவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
4.17 பொத்துவில் மாநிலத்தின் பிரதான நகரமாகப் பொத்துவில் அமையவேண்டும். அருகம்பே துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் போது அதனருகிற் காணப்படும் பொத்துவில் நகரமும் விருத்தியடையும்.
4.18 அறுவாக்காடு மாநிலத்தின் பிரதான நகரமாகப் பொம்பரிப்பு அமையவேண்டும்.
4.19 புத்தளம் மாநிலத்தின் பிரதான நகரமாகப் புத்தளம் அமையவேண்டும்.
4.20 சிலாபம் மாநிலத்தின் பிரதான நகரமாகச் சிலாபம் அமையவேண்டும்.

5. சிறப்பான ஆய்வுகள் பற்றிய தேவை
தமிழீழத்தின் பிரதான தலைநகரான திருகோணமலையின் நகராக்கம் தொடர்பான விபரமான ஆய்வு தனியான நகரத் திட்டமிடல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.

வடதமிழீழப் பிரதேசத்தின் தலைநகராக மாங்குளம் விருத்தி செய்யப்படும்போதும் பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு தனியான நகரத்திட்டமிடல் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1. மாங்குளம் மாநகரத்துக்குரிய பிரதான நீர்விநியோக முறைக்கு உதவக் கூடிய வகையிற் கனகராயன் ஆற்றை மையமாக வைத்து, பொருத்தமான ஒரு நீர்த்தேக்கத் திட்டம் அமைக்கப்படல் வேண்டும்.
2. தேவை ஏற்படின் பொருத்தமான வகையிற் கனகராயன் ஆற்றைத் திசைதிருப்புவதும், வவுனிக்குளம் ஆறு, அல்லது முத்தையன் சுட்டு ஆறு என்பவற்றுடன் தொடர்புபடுத்தி இந்நீர்த்தேக்கம் அமைக்கப்படலாம்.
3. நீர்த்தேக்கற் செயல் திட்டம் அமையும் இடத்தைக் கருத்திற் கொண்டே மாங்குளம் நகருக்கான சரியான அமைவிடம் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

– தமிழீழ நடைமுறை அரசின் உட்கட்டுமானத்தின் அடுத்த செயற்திட்டமான. தெருக்கள்,புகையிரதப்பாதைகள், விமானநிலையங்கள் ஆகியவற்றிற்கான செயற்திட்டத்தை அடுத்தப் பதிவில் பார்ப்போம் .

– தமிழீழ நடைமுறை அரசின் உட்கட்டுமானம்.
– வி பு களின் சர்வதேச தலைமைச்செயலக வெளியீடு.
– தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

 

 

தமிழீழ-உட்கட்டுமானம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments