×

கிளிநொச்சியில் உருவான தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றி தெரியுமா?

கிளிநொச்சியில் உருவான தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றி தெரியுமா?

ஒரு தூரநோக்கு சிந்தனை, தீவிரமான முயற்சி, இறுதியில் வரலாற்றோடு கலைந்துபோன கனவு —இவை அனைத்தும் சேர்ந்ததுதான் கிளிநொச்சி “தமிழ்ப் பல்கலைக்கழகம்”

2000-களின் தொடக்கத்தில் போர் அமைதி உடன்படிக்கை அமலில் இருந்த காலம். வடக்கிலும் கிழக்கிலும் ஒரு தற்காலிக அமைதி நிலவியது. அப்போது, கிளிநொச்சியில் வெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டமைப்புகள் மட்டுமன்றி, மக்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன. அதில் உருவான ஒரு பிரம்மாண்டமான கனவுதான் இந்த தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக, உலகத்தரத்திலான ஒரு சர்வதேசப் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்ற சிந்தனை உதித்தது. வெறும் பாடப்புத்தகக் கல்வியை வழங்குவது மட்டும் இதன் நோக்கமல்ல; தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், நுண்கலைகள் மற்றும் நவீன அறிவியலை ஒரே கூரையின் கீழ் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இதற்காக கிளிநொச்சி – ஏ-9 நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்தக் கதையின் மிகவும் சுவாரசியமான பகுதி இதுதான். அன்றைய கட்டத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பலர் இந்தக் கனவுக்கு ஆதரவாக முன்வந்தனர்.

லண்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் இருந்த பல திறமையான பேராசிரியர்கள் இணையவழி வாயிலாகவும், நேரடியாக வந்தும் இதற்கான பாடத்திட்டங்களை (Curriculum) வடிவமைக்க உதவினர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளுக்கு இணையான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. பிரம்மாண்டமான நூலகம், நவீன ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கான வரைபடங்கள் தயாராகின. பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடங்கள், விரிவுரை மண்டபங்கள் என பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின. கட்டிடங்களின் வடிவமைப்பிலேயே பாரம்பரியத் தமிழ் அடையாளங்களும் நவீனத்துவமும் கலந்து இருக்கும்படி திட்டமிடப்பட்டது.

பல்கலைக்கழகம் முழுமையாக இயங்கும் முன்பே, பல இளைஞர்களுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சிகளும் சான்றிதழ் படிப்புகளும் அங்கு தொடங்கப்பட்டதாக அக்காலப் பகுதியைக் நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். “நம் நிலத்திலேயே, நமக்கு என ஒரு சர்வதேசப் பல்கலைக்கழகம் வரப்போகிறது” என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் பெரும் புது நம்பிக்கையை விதைத்தது. ஆனால், வரலாறு எப்போதும் நாம் நினைப்பது போல் பயணிப்பதில்லை. 2006-க்குப் பிறகு போர் மீண்டும் தீவிரமடைந்தது. கிளிநொச்சியை நோக்கி மோதல்கள் நகர்ந்தபோது, இந்த பிரம்மாண்டக் கனவின் கட்டிடப் பணிகள் பாதியிலேயே நின்றன.

பின்னர் 2009-ல் போர் முடிவுக்கு வந்தபோது, அந்தப் பல்கலைக்கழகத்திற்கான கட்டிடங்களும், அங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அரிய நூல்களும், திட்ட வரைபடங்களும் காலத்தின் சுவடுகளாக அழிந்தும் மாறினாலும் போயின. இன்று நீங்கள் கிளிநொச்சி வழியே பயணித்தால், அந்தப் பழைய நினைவுகள் அப்பகுதி மூத்த மனிதர்களின் மனதில் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

ஒரு அதிகாரப்பூர்வப் பல்கலைக்கழகமாக அது உலக வரைபடத்தில் முழுமை பெறாவிட்டாலும், மிகக் குறுகிய காலத்தில், கடுமையான தடைகளுக்கு மத்தியிலும் கல்வியை உச்சத்திற்குக் கொண்டு செல்ல நினைத்த அந்த முயற்சி — ஈழத்து கல்வி வரலாற்றில் என்றும் ஒரு மறக்க முடியாத உண்மை அத்தியாயம்!

 

guest
0 Comments