×

ஜயசிக்குறுய் நடவடிக்கையும் புலிகளின் எதிர்ச்சமரும்

1997 மே 13ஆம் நாள் ஜயசிக்குறுய் சமர்க்களம் இரு முனைகள் வழியே திறக்கப்பட்டது. நொச்சிமோட்டையூடாக ஓமந்தை வரை நகர்ந்து அங்கிருந்து முன்னேறி 65 கிலோ மீற்றர் நீளமான வவுனியா கிளிநொச்சி தரைப்பாதையைத் திறப்பதை ஒரு களமுனையாகவும், டொலர் – கென் பண்ணைப்பகுதியூடாக முன்னேறி நெடுங்கேணியைக் கைப்பற்றி  அங்கிருந்து படைநகர்த்தி வன்னி நிலத்தின் ஒரு பகுதியை விழுங்கிச் செல்வதை நோக்கமாகக் கொண்டு அடுத்த களமுனையையும் பகைவன் திறந்தான்.

இந்த இரண்டு களமுனையையும் ஒன்றினைத்து –  நகர்த்தி புலிகளை முழுமையாக சண்டைக்குள் அமிழ்த்தி – அவர்களின் ஆட்பவத்தைக் கரைத்து – விடுதலைப்போராட்டத்தை நசுக்கும் பேராசைத்திட்டத்தையும் ஜயசிக்குறுய் வைத்திருந்தது. ஒரு வருடத்தை பூர்த்தி செய்துவிட்ட ஜயசிக்குறுய் நடவடிக்கைப் படையினரால் இன்று வரை 35 கி.மீ நீளப்பாதையை மட்டுமே கைவசப்படுத்த முடிந்துள்ளது. இன்றைய நிலையில் மாங்குளத்தைக் கைப்பற்றுவதையே நடவடிக்கைத் தலைமையகம் தனது உடனடி இலட்சியமாக கொண்டுள்ளது. ஜயசிக்குறுய் சமரின் ஆரம்பநாளான வைகாசி 13 ஆம் நாள் பெருந்தொகையான எறிகணைகளை இரு களமுனைகளிலும் ஏவி-மரபுப்போர் முறையில் – பகைவன் முரசு கொட்டினான். வன்னியின் நில அமைப்பும் – நடவடிக்கைத்திட்டத்தின் பிரமாண்டமும் ராங்க்குகளின் தேவையை படைத்தரப்பிற்கு இடித்துக்காட்டின.  இதனால் சிங்களத்தின் கவசப்படை, ஜயசிக்குறுய் படை நகர்வின் முதுகெலும்பாகியது.
எனினும் சமர் தொடங்கிய மூன்றாம் நாள் பகைவனின் கவசப்படையணிக்கு புலிகள் பலத்த  அடி கொடுத்தனர். ஓமந்தை சண்டைமுனையில் இரண்டு ராங்க்குகளை அழித்தனர்.

அன்றிலிருந்து எட்டாம் நாள் வைகாசி 24ஆம் திகதியன்று ஓமந்தை முனையைத்திறந்து 3 கி.மீ தூரத்திலிருந்த இறம்பைக்குளச் சந்தியைக் கைப்பற்ற படையினர் முயற்சித்தனர். வயல்வெளிகளையும் – சிறு பற்றைக்காடுகளையும் கொண்ட அந்த திறந்த வெளிச் சண்டையரங்கை புலிகளின் கவச எதிர்ப்பு படையணியாகிய விக்டர் படையணி நன்கு கையாண்டது. அதிகாலையிலிருந்து மாலைவரை நடந்த அன்றைய பகல் சண்டையில் மேலும் இரண்டு ராங்க்குகளை புலிகள் அழித்தனர். அதேவேளை இறம்பைக் குளத்தை படையினர் கைப்பற்றினர். எனினும் நடவடிக்கை தொடங்கி நான்கு நாட்களில் ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியைக் கைப்பற்றி – அங்கிருந்து இரண்டாங்கட்ட நகர்வைச் செயற்படுத்தலாம் என்றிருந்த படைத்தலைமையின் திட்டம் ஈடேற இரண்டு வாரங்கள் சென்றதுடன், நான்கு ராங்க்குகளையும் இழந்தது. சுமார் 125 படையினரையும் பலிகொடுக்க வேண்டி வந்துவிட்டது.

இந்த இரண்டுவாரச் சண்டையில் காயப்பட்ட படையினரின் எண்ணிக்கை படைத்தரப்பிற்கு அதிர்ச்சியூட்டியது. இந்தக்காலப் பகுதியில் சுமார் 500 இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். படைத்தரப்பைப் பொறுத்தவரை இது ஒரு புதிய – அதேவேளை, எதிர்பார்க்காத இராணுவ அம்சமாக இருந்தது. கேணல் கிட்டு பீரங்கிப் படைப்பிரிவின் சரமாரியானதும் – துல்லியமானதுமான எறிகணைப் பிரயோகமே இந்தப் புதிய சண்டைப் பரிமாணத்தை உருவாக்கியது. ராங்க்குகளின் இழப்பு – படையாட்களுக்கு ஏற்படும் சேதம் – இவை இரண்டும் சிங்களத் தளபதிகளை சிந்திக்க வைத்தன. அதுவும் இரண்டேயிரண்டு வாரச்சண்டையில் 04 ராங்க்குகளையும் – சுமார் 600 படையினரையும் ஜயசிக்குறுய் களம் இழந்தது சாதாரணவிடயமல்ல.

ராங்க்குகளின் இழப்பைத் தவிர்த்தபடியும் – ஆள் சேதத்தைக் குறைத்தபடியும் முன்னேற சிங்களத் தளபதிகள் திட்டமிட்டனர். மோட்டர் – ஆட்டிலறி பலத்தை அதிகரித்து – ராங்க்குப்படை நகர்வுடன் அதை ஒன்றிணைத்துப் பயன்படுத்தி நகரமுயன்றனர். அதன் பிரகாரம் ஆனி 3 ஆம் நாள், பலத்த எறிகணைப்பிரயோகத்துடன் எதிரிப்படை களத்தைத் திறந்து – விளக்குவைத்த குளம் சந்தியை நோக்கி நகர்ந்தபோது பகைவனுக்கு எதிர்ப்பு குறைவாகவே இருந்தது. படையினரின் நகர்வு இலகுவாகியது. விளக்குவைத்தகுளம் சந்தியை படையினர் கைப்பற்றினர். கைப்பற்றிய வேகத்தில் அடுத்து இருந்த பன்றிக்கெய்த குளத்தைக் கைவசப்படுத்தி – அதற்கடுத்திருந்த பனிக்க நீராவியடியையும் ஆனி 06 ஆம் நாள் படையினர் பிடித்தனர். மூன்று நாளில் 05 கி.மீ தூரத்தைக் கடந்த திருப்தியில் படையினர் இருக்க புலிகள் வேறொரு திட்டத்துடன் இருந்தனர்.

முன்னேறி நகர்ந்து – நிலம்பிடிக்கும் சண்டைகளில் படையினர் கவனத்தைச் செலுத்த, முன்னேறி நிலைகொண்ட படையினர் மீது ஒரு வலித்த தாக்குதலைத் தொடுக்க புலிகள் தங்களைத் தயார்படுத்தினர். தாக்கு வலயத்திலுள்ள படை நிலைகளில் பலத்தைச் சற்றுக்குறைத்து – தாக்குதல்களைச் சுலபமாக்குவதற்காக படைநகர்வை புலிகள் மறைமுகமாக அனுமதித்தனர். வெற்றி மிதப்பில் படைநகர்வு நடந்தது. ஆனி 10ம் நாள் நள்ளிரவு சிங்களப்படைத் தலைமைக்கு புலிகள் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். புலிகள் இயக்கத்தின் இராணுவ வழமைகளை நன்கு அறிந்திருந்ததால் ஜயசிக்குறுய் நிலைகள் மீது வலித்த தாக்குதலை படையினர் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், பெருமெடுப்பிலான வலித்த தாக்குதலை எவரும் எதிர்பார்க்கவில்லை. வவுனியாவின் வாசலிலேயே அது நிகழும் என்று எவரும் ஊகிக்கவில்லை. அந்த தாக்குதல் ஜயசிக்குறுய் கட்டளைத் தலைமையகம் மீதே விழும் என்று எவரும் எண்ணவில்லை. அடி விழுந்தது. ஜயசிக்குறுய் பூகத்திற்கான வழங்கல் மையம் மீது இடி இறங்கியது. வெடிப்பொருள் களஞ்சியம் வெடித்துச்சிதறியது. தாக்குதலைத் தடுக்க வந்த இரண்டு ராங்க்குகள் தாக்குதலில் அழிந்தன. மூன்று மோட்டார்கள் அழிக்கப்பட்டன. இராணுவ வாகனங்கள் தீயில் எரிந்தன. சில புலிகளின் கைகளிற்கு வந்தன. 400 படையினர் கொல்லப்பட்டனர். 570 பேர் காயமடைந்திருந்தனர். நொச்சிமோட்டைப்பாலம் புலிவீரர்களால் தகர்த்தழிக்கப்பட்டது.

தாண்டிக்குளம் நடவடிக்கைத் தலைமையகத்திலிருந்தபடி ஜயசிக்குறுய் நடவடிக்கையை வழி நடத்திய பிரிகேடியர் வவுனியாவுக்கு தப்பியோடி உயிர்பிழைத்தார். தாக்கு வலயத்திற்குள் சிக்கி அகதிகளாகிய பல டசின் படையினர் துவக்குகளைத் துறந்து – வேட்டிகட்டி தமிழ் மகன்களாய் உருமாறி உயிர்பிழைத்தனர். முற்றுகைக்குள் அகப்பட்ட படையினர்க்குத்துணை செய்ய உதவிப்படையாக உலங்குவானூர்திகளில் வந்திறங்கி சிறப்புக் கொமாண்டோக்கள் சண்டையிட்டனர். இதற்குள் அகப்பட்ட எம்.ஐ. 24 வானூர்தி குண்டடிபட்டு – களம் அகன்றது. தாண்டிக்குளம் மீதான வலிந்த தாக்குதல் முடிவுடன் ஜயசிக்குறுய் நடவடிக்கை ஒரு மாதத்தைப் பூர்த்தி செய்தது. இந்த ஒரு மாதச் சண்டையில் புலிகளின் தரப்பில் 185 போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஆனால் படைத்தரப்பில் 500 பேர் வரை பலியாகியிருந்தனர். அண்ணளவாக 1000 படையினர் காயமடைந்திருந்தனர்.

இந்த வகையில் 1500 படையினரை ஜயசிக்குறுய் களம் ஒரு மாதத்தில் இழந்தது. இந்த இழப்பை ஈடு செய்து – அடுத்த சண்டைக்காக படைத் தரப்பை தயார்படுத்த அவர்களுக்கு இரண்டு வாரம் தேவைப்பட்டது. தாண்டிக்குளத் தாக்குதலால் ஜயசிக்குறுய் படையினர் சோர்வடைந்திருந்தனர். தூரப்பயணம் புறப்படும் போது வாசலிலேயே சறுக்கி வழுவது போல ஜயசிக்குறுய் நடை பயணத்தின் ஆரம்பமே அடிவாங்கி அபசகுனமாகியது. இந்த நிலையில் ஒரு இராணுவ வெற்றியை ஈட்டி – இந்தச்சோர்வையகற்றி – துருப்புக்களுக்கு உற்சாகமூட்ட படைத்தலைமை விரும்பியது. புளியங்குளத்தைக் கைப்பற்றி அந்த இராணுவ வெற்றியைப்பெற இராணுவத் தலைமை திட்டமிட்டது. புளியங்குளத்திற்கு மிக அண்மையில் 04 கி.மீ தூரத்திலேயே படையினர் நிலைகொண்டிருந்ததால் வெற்றி பற்றி அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். தாண்டிக்குளம் மீதான பெருந்தாக்குதல் நடந்து சரியாக 12ம் நாள் (22.06.97) படையினர் நகர்வுச் சண்டையை ஆரம்பித்தனர்.

மாலதி படையணி நிலைகொண்டிருந்த பகுதியை உடைத்து –  உட்புகுந்து புளியங்குளச் சந்தியைக் கைப்பற்றப் படையினர் எடுத்த முயற்சியை – ராங்க் ஒன்றை அழித்து, 15 படையினரைக் கொன்று பெண்புலிகள் தடுத்து நிறுத்தினர். எனினும, சண்டை நடந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக – புளியங்குளம் நோக்கி நகர்ந்த படையினர் புளியங்குள சந்திக்கருகிலுள்ள பழையவாடியடியை அடைந்துவிட்டனர். ஆனி 24ம் நாள் – தாண்டிக்குளம் மீதான பெருந்தாக்குதல் நிகழ்ந்து 14ம் நாள் – ஜயசிக்குறுயின் முன்னரங்கப் பகுதியாக விளங்கிய பெரியமடு மீது பெருந்தாக்குதல் நிகழ்ந்தது.

வலிந்த தாக்குதல்களை நிகழ்த்தும் போது கேந்திர நிலைகளைத் தேர்ந்தெடுத்துத் தாக்கி – அழித்து, விளைவுகளை பல்பரிமாணம் கொண்ட தந்திரோபாய வெற்றியாக்க முயல்வது புலிகளின் வழமை. தாண்டிக்குளம் – நொச்சிமோட்டை பெருந்தாக்குதல் நிகழ்ந்த போது ஜயசிக்குறுய் படையினர் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். இதனால், முன்னரங்கம் சாதாரண சிப்பாய்களால் நிரப்பப்பட்டு –  சண்டைப் படையணிகள் பின்சென்று கட்டளை மையப்பகுதியில் ஓய்வெடுத்தனர் ஆனால், மையப்பகுதியே புலிப்பாச்சலுக்கு உள்ளானதால் பலியானவர்களில் பலர் சண்டைமுனைப் படையினராக இருந்தனர். வழங்கல் மையம் சிதைக்கப்பட்டது. கட்டளைப்பீடம் சின்னாபின்னமாகியது. பெரியமடுத் தாக்குதல் நிகழ்ந்தபோது படையினர் புளியங்குளத்தைக் கைப்பற்ற முயன்றுகொண்டிருந்தனர். இதனால் முன்னரங்கம் முதல்தர சிப்பாய்களால் நிரம்பியிருந்தது. இந்த தடைவ புலிகள் முன்னரங்கத்தையே குறிவைத்துப் பாய்ந்தனர். ஜயசிக்குறுயின் சண்டைப்படையணியை தாக்கியபடி எதிரிப்படையின் மோட்டர் ஏவு தளத்தைக் கைப்பற்றிவிட புலிகளின் ஒரு அணி முயன்றது. ஏவு தளத்தைக் காவல்காத்த படையினர் எதிர்ப்பை மூர்க்கமாய்க் காட்ட, லெப். கேணல் தணம் களம்புகுந்து எதிர்ப்பை உடைக்கும் சண்டைக்குத் தலைமை தாங்கினான்.

ஏவுதளம் வீழும் தறுவாயில் பகைவன், தனது மோட்டார்களைத் தானே அழித்துவிட்டு பின்வாங்கினான். நெருக்கமாக நடந்த அந்த தீவிர சண்டையில் தளபதி தனம் களப்பலியானான். சாதனைகள் பல செய்த அந்தச் சண்டைத் தளபதியுடன் இந்தத் தாக்குதலில் 94 போராளிகளும் வீரச்சாவடைந்தனர். படைத்தரப்பில் 185 பேர் கொள்ளப்பட்டனர். 200 பேர் வரையில் காயப்பட்டனர். கொல்லப்பட்ட படையினருள் பெரியமடு படைத்தள கட்டளைப்பீட அதிகாரியான கேணல் டீனும் ஒருவர். இந்தத் தாக்குதலின் விளைவாக புளியங்குளம் பழைய வாடியில் தரித்து நின்ற இராணுவமும், தானாகவே பெரியமடுவுக்கு பின்வாங்கியது. புளியங்குளத்தில் வைத்து –  பெருமெடுப்பில் – ஒரு மறிப்புச் சண்டை புரிய தலைவர் பிரபாகரன் முடிவெடுத்தார். அதற்காக புளியங்குளச் சந்தியை உள்ளடக்கிய பகுதியை ஒரு படைத்தளமாக்கி – அரண்களமைத்து –  ஒரு நீண்ட கால நேரடிச் சண்டைக்குத் தயாராகும்படி புலிவீரர்களைப் பணித்தார்.

ஏதிரியின் குண்டுத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் நிலைகளை அமைத்த புலிகள் துணிகரமான முறையில் – புதுவிதமான சண்டைக்குத் தயாரானார்கள். ஒரு சில கிலோ மீற்றர்களை விட்டமாகக் கொண்ட அந்த படைத்தளத்தை பகைவனும் கண்டுகொண்டான். புலிகளின் புளியங்குள தள அமைப்பு தற்கொலை முயற்சி என்றே படைத்தரப்பு கருதியது. தாங்கள் விரும்பியது போல – ஒரு சிறு பகுதியில் – புலிகள் கூடி நின்று தமக்கு வாய்ப்பளிக்கின்றனர் என்று அது எண்ணியது. புளியங்குளம் மறிப்புச்சண்டை ஆரம்பமானது. பகைவனது பீரங்கிப் படைப்பிரிவின் பிரதான குறியிலக்காக – பரப்பளவில் மிகவும் சிறிய புளியங்குளத் தளம் அமைந்தது. கிபிர் குண்டுவீச்சு விமானங்களினதும் – தாக்குதல் உலங்கு வானூர்திகளினதும் தாக்கு வலயமாக அந்தப்படைத்தளம் மாறியது. குண்டுவீச்சுக்களாலும் களம் அதிர்ந்தது. இதேவேளை, புளியங்குளத்தைச் சூழ படையினர் அரைவட்ட வடிவில் அரணமைத்தனர். குஞ்சுகளைத் தாக்க அலையும் பருந்துகள் போல புலிகளின் அரண்களை உடைத்து –  உட்புகுந்து நாசம் செய்ய பகைவனின் ராங்குப்படையும் முயன்றது.

புளியங்களத் தளத்திற்குப் பாதுகாப்பாக ஒரு கிலோ மீற்றர் முன்னே – வேகத்தடையைப் போன்று –  மாலதி படையணி ஒரு வியூகத்தை அமைத்து – தளத்திற்கு பாதுகாப்பு கொடுத்தது. புளியங்குள தளத்தினுள்ளே சாள்ஸ் அன்ரனி படையணியும் இம்ரன் – பாண்டியன் படையணியும் இணைந்து நின்றன. பகைவன் எண்ணியதுபோல முன்னரங்கத்தை உடைத்தெறிந்து தளத்தினுள்ளே உட்புகமுடியாததால் தளத்தை முழுமையாக முற்றுகையிட்டு –  துடைத்தெறிய விரும்பினான். இதற்காக நெடுங்கேணியிலிருந்து நகர்ந்தபடையும் புளியங்குள தள முற்றுகைக்கு உதவுவதற்காக நெருங்கி வந்தது. முற்றுகையை தடுப்பதற்காக புலிகள் புதிய வியூகமமைத்து தளத்தின் பாதுகாப்பை விரிவுபடுத்தினர். இந்த முற்றுகை எத்தனிப்புக்களாலும் முறியடிப்பு முயற்சிகளாலும் களம் மெது மெதுவாக விரிவடைந்தது. விரிந்த களத்தின் காவலர்களாக ஜெயந்தன் படையணி பொறுப்பேற்றது. இவர்களுடன் சுகன்யா படையணியும் அரசியல்துறைப் படையணியும் இணைந்து கொண்டன.

புளியங்குள மறிப்புச்சண்டை தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் போது மீண்டுமொரு வலிந்த தாக்குதலை நடாத்த புலிகள் முடிவெடுத்தனர். ஜயசிக்குறுய் படையினரின் வழங்கல் மையமாக, குறித்த அந்தநேரத்தில் ஓமந்தை படைத்தளம் விளங்கியது. எனவே, இம்முறை ஒமந்தையே தாக்குதலின் குறியிலக்காகியது. ஆவணி 1ம் நாள் பாதையின் இருமுனைகளிலிருந்தும் ஓமந்தை – இறம்பைக்குளம் பகுதி தாக்கப்பட்டது. ஜயசிக்குறுய் படையினர் மீது நடாத்திய இந்த மூன்றாவது வலிந்த தாக்குதலில் 135 படையினர் கொல்லப்பட்டனர். படை நடவடிக்கை தொடங்கி மூன்றுமாதகாலம் முடிவடைய முன்னர் நடைபெற்ற இந்த மூன்றுபெரும் வலிந்ததாக்குதல்கள்  நடவடிக்கைப் படையினரை திகிலடையச்செய்தது. புலிகள் பலவீனமாக இருக்கின்றனர் என்ற கணிப்பையும் வேகநகர்வு பற்றிய சிங்களத்தின் கனவுகளையும் அவை சிதைத்தன. இதேவேளை, ஆவணி 19 அம் திகதி அதிகாலை, புளியங்குளத் தளப்பகுதியில் ஒரு சண்டை ஆரம்பமானது. நெடுங்கேணியில் இருந்து நகர்ந்து புளியங்குளத்தை அண்மித்த படை –  மேலும் அருகே வர முயற்சிப்பது போல –  எறிகணைகளை சரமாரியாக ஏவிச்சுட்டபடி நகர்ந்தது.

புளியங்குளத் தளத்தின் தென்கிழக்கு முனையில் இந்த மறிப்புச்சண்டை நடந்துகொண்டிருந்த போது தளத்தின் வடமேற்குப் பகுதியில் இருந்த பகைவனின் படைவீட்டிலிருந்து மின்னலெனப்புறப்பட்டு வந்த ஆறு ராங்க்குகள் அரணுடைத்து தளம்புக முயன்றன. இரண்டு ராங்க்குகளை முன்னரங்க வாசலிலேயே புலிகள் தகர்த்தனர். இன்னொன்று வெளியே நின்றவாறு தளத்தினுள் புக வசதியாக உதவிச் சூடுகளை வழங்கிக் கொண்டு நின்றது. இதேவேளை, இரண்டு ராங்க்குகளும் ஒரு துருப்புக்காவியும் வெற்றிகரமாக அரணுடைத்து – தளத்தினுள்ளே புகுந்துவிட்டன. புலிகளும் – சிங்கங்களும் ஒரு தளத்தில் நின்றன. இந்த திடீர்ச் சூழலால் தளம் திகைத்தது. வீழ்ச்சியின் விளிம்பில் தளத்தின் நிலை இருந்தது. தளத்தின் அதிபதிகள் விரைவாகச் செயற்பட்டனர். மேலதிக ராங்க்குகளும் – துருப்புக்களும் தளத்தினுள்ளே புகமுடியாதவாறு உடைத்த உடைப்புகளை அடைக்க முயன்றனர். முன்னரங்க வீரர்கள் அதைச் செய்துவிட்டு செய்தியை அறிவித்தனர்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் இருந்த நிலை இப்போதில்லை. இப்போது, ராங்க்குகளும் துருப்புக்காவியும் புலிகளின் முற்றுகைக்குள் அகப்பட்டுவிட்டன. உள்ளிருந்து தாக்குவதா அல்லது வெளியேறித் தப்பியோடுவதா என்று குழம்பியபடி பகைவனின் கவசங்கள் பதட்டத்தில் உருண்டன. தடத்தில் அகப்பட்ட குழுவன் மாடு போல துருப்புக்காவி அங்கும் இங்கும் ஓடியது. ஆர். பி. ஜிகளால் புலிவீரர் தாக்கினர். ஆடியை வாங்கிக்கொண்டு விரைவாக ஓட முடியாது –  பெண்போராளிகளது அரணுக்கு முன்னால் நின்று தத்தளித்த போது பெண்புலிகள் நடாத்திய,       இறுதித்தாக்குதலுடன் துருப்புக்காவி புலிகள் வசமானது. இதேவேளை, ரீ55 ரக ராங்க், மூன்று அடிகளை வாங்கிக்கொண்டு அரண்களை ஏறிக்கடந்து தளப்பாதுகாப்பிற்காக சற்றே தள்ளிப்போடப்பட்டிருந்த மாலதி படையணியின் நிலைகளையும் கடந்து தப்பியோடியது.

சகல முனைகளிலும் சண்டைகள் நடந்ததால் களம் இறுக்கமாக இருந்தது. இத்தகைய சூழலில் தான் புளியங்குள பிரதான தளத்தினுள் இருந்து வட – கிழக்குப் பகுதியூடாக ஒரு ராங்க் வெளியேறி –  தமது நிலையை நோக்கி வந்தபோது மாலதி படையணியினர் தாக்கமுயற்சிக்கவில்லை. எமது தளத்தினுள் இருந்து, எம்மைநோக்கி வருவது எமது ராங்க்கா ! ஏதிரி ராங்க்கா ! ஏன்று அவர்கள் குழப்பமடைந்தனர். குழப்பத்தைத் தீர்க்க –  பிரதான தளத்துடன் தொடர்பு கொண்டு –  உறுதிப்படுத்தி –  தாக்குதலைத் தொடுப்பதற்கிடையில் இருந்த ஒன்று, இரண்டு நிமிடநேர இடைவெளிக்குள் அந்த அதிஸ்டக்கார ராங்க் எதிரிவலயத்திற்குள் நுழைந்து தன்னை தற்காத்து விட்டது. மற்றைய ராங்க்குகளும் வந்த வேகத்திலேயே தளத்தின் மேற்கு முனைகளுக்கூடாக மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டன.

அந்த அதிஸ்டத்தை மூலதனமாக்கிக்கொண்டு அடுத்த நாள் விடியற்காலை (20.08.1997) அதே மாலதி படையணி நிலைகொண்டிருந்த பகுதியை பகைவனின் ராங்க்குகள் மூர்க்கத்தனமாகத் தாக்கின. சண்டை கடுமையாக நடந்தது. ராங்க் ஒன்று அழிக்கப்பட்டது. வேகத்தடுப்பியாக செயற்பட்ட பாதுகாப்பு நிலைகளை விட்டு மாலதி படையணி பின்வாங்கி பிரதான தளத்துடன் இணைந்துகொண்டது. இதனால், குறித்த நிலைகள் பகைவன் வசமானது. புளியங்குளத் தளத்திற்கு பாதுகாப்பாக, வேகத்தடை போன்று விளங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் விலகிக்கொள்ளப்பட்டதால் பகைவன் சற்று உற்சாகமடைந்திருந்தான்.  இன்னொரு ராங்க் நகர்வைச் செய்து தளத்தை உடைத்து உள்நுழைய சிங்களத்தின் கவசப்படை திட்டமிட்டது.

ஆறு நாட்களில் அதைச் செயற்படுத்தியது. ஆவணி 26ம் நாள் தென்புறமிருந்து புளியங்குளத்தை நோக்கி கவசப்படையணி பெருந்தாக்குதலைத் தொடுத்தது. குண்டுவீச்சுக்களும் கவசப்படையின் நகர்விற்கு உதவின. எனினும் புலிகளின் அரண்களை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்றைய சண்டையிலும் ஒரு ராங்க் அழிக்கப்பட்டது. சுமார் ஐந்துமாத காலமாக புளியங்குள மறிப்புச் சண்டைகள் இடம் பெற்றன. பகைவன் தன்னாலான அனைத்துவகைத் தாக்குதல் முயற்சிகளையும் சகல விதமான தந்திரோபாயங்களையும் பயன்படுத்திப் பார்த்தான். குண்டுச் சிதறல்களால் நிலைகள் சின்னாபின்னமாகினாலும் – அதற்குள் உள உறுதியுடனும் ஓர்மத்துடனும் நின்று நிலைத்து பகைப்படையை உள்ளே நுழையவிடாது தடுத்து மறிப்புச் சண்டையின் அதி உயர் போர்த்திறனை புளியங்குளச் சண்டையில் புலிகள் வெளிப்படுத்தினர்.

புலிகளின் புளியங்குள தளத்தை உடைத்து – உட்புகமுயல்வதென்பது கற்சுவரை வெறுந்தலையால் உடைத்து உட்புகமுனையும் வேலை என்பதை – சிங்களப்படை அனுபவத்தால் உணர்ந்துகொண்டது. புளியங்குள தளத்தை வட்ட வடிவமாக சுற்றிவளைத்து –  நெருங்கி நின்று முற்றுகையிடுவதென்பதும் இயலாத இராணுவ முயற்சி என்பதையும் கண்டு கொண்டது. இந்த நிலையில் புளியங்குளத்திற்கான பிரதான வழங்கல் பாதையைக் கைப்பற்றி தளத்தை தனிமைப்படுத்தி புளியங்குளத்தை புலிகளே கைவிடும்படி நிர்ப்பந்திக்கும் தந்திரோபாயத்திட்டத்தை படைத்தலைமை அமுல்படுத்த விரும்பியது. புளியங்குளத்திற்கு வடக்கே 05 கி.மீ தூரத்தில் இருந்த புதூர்ச் சந்தியை நோக்கி காடுகளுக் கூடாக ஒரு துணிகரநகர்வைச் செய்து –  அதைக் கைப்பற்றி – அங்கே நிலைகொண்டு புளியங்குளத்தின் இருப்பை சிக்கலாக்க படைத்தலைமை முயன்றது.

புரட்டாதி 10ஆம் நாள் இரவின் இருளில் – பிரதான பாதையின் கிழக்குப்புறமாக நகர்ந்துசென்ற எயர்மொபைல் படையணி என்ற பெயருடைய பகைவனின் சிறப்புக் கொமாண்டோ அணி, புதூர்ச் சந்தியைக் கைப்பற்றி தன்வசப்படுத்தியது. இதேசமயம் பிரதான பாதைக்கு மேற்காகவும் ஒரு படையணி புதூர்ச்சந்தியை நோக்கி இருட்டுக்குள்ளால் இரகசியமாக விரைந்து – நகர்ந்ததை புலிகளின் அணிகள் கண்டு அதனுடன் மோதின. பகைத்தலைமையின் தந்திரோபாய நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. இப்போது புலிகளுக்கு ஒரேயொரு தேர்வு மட்டுமே இருந்தது. புளியங்குளத்தைக் கைவிடுவதா ! அல்லது புதூர்ச் சந்தியை மீளக்கைப்பற்றி புளியங்குளத்தைப் பாதுகாப்பதா ! புளியங்குளத்தைப் பாதுகாப்பதில் புலிகள் உறுதியாக இருந்தனர் எனவே புதூர்ச் சந்திப் பகுதிமீது புலிகள் ஒரு முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்தனர்.

சந்தியில் வந்து குந்திய கொமாண்டோப் படையினர் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் தயாரிப்புக்களைச் செய்ய முன்னரே தாக்கப்பட்டனர். கேணல் கிட்டு பீரங்கிப் படைப்பிரிவின் துல்லியமான எறிகணைத்தாக்குதல் – கொமாண்டோப் படையை இருத்தி எழுப்பியது. ஜெயந்தன் படையணியும் – கடற்புலிப்படையணியும் களமிறங்கி தாக்குதலைத் தொடுத்தன. சிக்கலான நிலைமைகளை சமாளிக்கவெனப் பயிற்றப்பட்ட எயர்மொபைல் படையணி, தான் பிடித்த நிலத்தை மட்டுமல்ல தங்களையே பாதுகாக்க முடியவில்லை. விடியமுன்னர் புதூர்ச்சந்தியைபுலிகள் மீண்டும் கைப்பற்றினர். இந்த இரவுச் சண்டையில் சமார் 200 படையினர் பலியாகியிருந்தனர். 500 பேரளவில் காயப்பட்டிருந்தனர். இந்த முறியடிப்புத் தாக்குதலின் விளைவாக எயாமொபைல் படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சீவலிவணிகசேகர பதவி நீக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெல்லப்பட முடியாத மறிப்புச் சண்டைக்களமாக புளியங்குளம் தொடர்ந்தும் இருந்தது. புதூர்ச்சந்திக்கு நகர்ந்தது போல புரட்டாதி 30ம் நாள் கனகராயன்குளச் சந்திப்பக்கமும் ஒரு நகர்விற்கு படைத்தரப்பு முயன்று – தோற்றது இவற்றுடன் புளியங்குளச் சண்டையை படையினர் தவிர்த்துக் கொண்டு –  வேறுமுனையில் சண்டையை ஆரம்பிக்கத் திட்டமிட்டனர். தாண்டிக்குள வலிந்த தாக்குதலின் போதும் – பெரியமடு வலிந்த தாக்குதலின் போதும் – ஓமந்தை வலிந்த தாக்குதலின் போதும் ஜயசிக்குறுய் படையினர் கைப்பற்றிய பிரதான பாதைக்கு கிழக்காகவும் – மேற்காகவும் இருந்த நிலப்பகுதியை உபயோகித்து – புலிகளின் அணிகள் – இருமுனைத்தாக்குதலைத் தொடுத்ததாலேயே தாக்குதலை எதிர்கொள்ள முடியாது ஜயசிக்குறுய் படையினர் திக்குமுக்காடினர் என்று படைத்தலைமை ஊகித்தது. இந்த நிலையில் பாதையின் கிழக்குப்பகுதியை புலிகள் பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்காக அந்தப் பகுதி முழுவதையும் இராணுவ கட்டுப்பாட்டு வலயமாக மாற்ற அது முடிவெடுத்தது. நெடுங்கேணிப்பகுதியில் தரித்து நின்ற படையினரை புளியங்களம் நோக்கி நகரச் செய்து –  ஒரு நிலப்பூட்டையிட்டு பாதையின் கிழக்குப் பகுதியை இராணுவ வலயமாக்கியது.

நிலம் விழுங்கியபடி வேறு திசைவழியே நகரும் நோக்கத்துடன் திறக்கப்பட்ட நெடுங்கேணி களமுனையை, பாதை பிடிப்பதற்கும் – பிடித்ததை பாதுகாத்துக்கொள்ளவென்றும் திசை திருப்பவேண்டிய கட்டாயத்தை இந்த, வலிந்ததாக்குதல்கள் செய்தன. இதனால், ஜயசிக்குறுய் மூலத்திட்டத்தில் பாரிய மாற்றம் நடந்தது. நெடுங்கேணியைக் கைப்பற்றிய படைப்பிரிவு –  அங்கிருந்து நகர்ந்து ஒட்டுசுட்டான் வழியாக முல்லைத்தீவிற்கு அல்லது புதுக்குடியிருப்புக்கு என்ற  ஊகங்கள், அன்றைய நாட்களில் கொழும்பில் எழுதப்பட்டன. ஆனால், இந்த நிலம் விழுங்கும் திட்டத்தைக் கொண்ட களமுனை, ஈற்றில், பாதைப்பிடிப்பதற்கான வேறொரு சண்டை முனையைத் திறப்பதற்கே பயன்பட்டது. கரிப்பட்ட முறிப்பு என்ற புதிய சண்டைமுனையைத் திறக்க பகைவன் ஆயத்தங்கள் செய்தான்.

கரப்புக்குத்தி விஞ்ஞானகுளத்தை வழங்கல் மையமாகக் கொண்டு பதிய சண்டைமுனை ஒன்று திறக்கப்படப் போகின்றதென்பதை புலிகள் முன்னரே ஊகித்தறிந்து கொண்டனர். புதிய சண்டை முனையை பகைவன் திறந்து வைக்க முன்னர் அவனது வழங்கல் மையத்தை தாக்கி –  கைப்பற்ற புலிகள் திட்டம் தீட்டினர். திகதியும் குறித்தனர். எனினும் படையினரும் அவசரப்பட்டனர். ஐப்பசி 04 ஆம் நாள் துணிகரமானதொரு நெடுந்தூர இரவு நகர்வை கரிப்பட்டமுறிப்புச் சந்திவரை படையினர் செய்தனர். சுமார் 09 கி.மீ தூரத்தை அவர்கள் இருளின் துணையுடன் நடந்து கடந்தனர். களங்களை விரிவாக்கினால் புலிகளின் எதிர்ப்பு சக்தி பரவலாக்கப்படும். அவ்விதம் நடந்தால், அது புலிகளுக்கு பாதகமாக முடியும் என்று படைத்தலைமை கருதி –  கள விஸ்தரிப்புக்களைச் செய்தது. முள்ளை முள்ளால் எடுப்பது போல விரிவாக்கப்பட்ட களங்களிலெல்லாம்,  புலிகள் காட்டமான வலிந்த தாக்குதல்களை நடாத்தியும் – திறக்கப்பட்ட புதிய சண்டைமுனைகளிலெல்லாம் படையினருக்கு மோசமான விளைவுகளைக் கொடுக்கும் முறியடிப்புத் தாக்குதல்களைத் தொடுத்தும் படையினருக்குப் பதிலடி கொடுத்தனர்.

ஜப்பசி 05 நாள் கரிப்பட்ட முறிப்பை படையினர் கைப்பற்றிய அன்றிரவே கரப்புக்குத்தி –  விஞ்ஞானகுள வழங்கல் மையம் மீது பெரும் எடுப்பிலான ஒரு வலிந்ததாக்குதலை புலிகள் நடத்தினர். ஜயசிக்குறுய் படையினர் மீது நடாத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் இது வித்தியாசமானது. பெருந்தொகையிலான வெடிப்பொருட்ளையும் இராணுவ உபகரணங்களையும் மரபுவழிச் சண்டைக்குத் தேவையான வாகனங்கள் – புல்டோசர்களையும் – இங்கிருந்து புலிகள் தாராளமாகக் கைப்பற்றினர். வழங்கல் மையத்தின் மீது தாக்குதல் நடைபெறும் போது அதற்கு வெளியில் இருந்து உதவிகள் வரவிடாது தடுப்பதற்காக ஒரு திசை திருப்பல் தாக்குதலை கரிப்பட்டமுறிப்பு படையினர்மீது புலிவீரர்கள் நடாத்தினர். கரிப்பட்ட முறிப்பை புலிகள் தாக்குகின்றனரா ! கரப்புக்குத்தி – விஞ்ஞான குளத்தை தாக்குகின்றனரா ! என்பதைக் கண்டறிய படையினரால் முடியவில்லை. கரிப்பட்ட முறிப்பே புலிகளின் இலக்கு என அவர்கள் தவறாகக் கணித்தனர்.

இதனால் நெடுங்கேணிப்படையினரின் ஆட்லறிவீச்சின் குறியிலக்காக கரிப்பட்டமுறிப்புப் பகுதியே இருந்தது. அன்றிரவு முழுவதும் நடந்த எறிகணை வெடிப்பால் கரிப்பட்டமுறிப்புப்பகுதி அதிர்ந்தது. இதனால், உண்மையான குறியிலக்கைத் தாக்கிய புலிவீரர்களின் மீதான எதிர்த் தாக்குதலின் கடுமை குறைந்திருந்தது. கைப்பற்றப்பட்ட இராணுவ உபகரணங்களை சுலபமாகவும் – பாதுகாப்பாகவும் அப்புறப்படுத்த அது உதவியது. இந்தத் தாக்குதலின் ஒரு ராங்க் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கரிப்பட்டமுறிப்பு மீது நடாத்தப்பட்ட திசை திருப்பல் தாக்குதலும் சிறிது காட்டமாகவே இருந்தது. கைப்பற்றிய அன்றிரவே பதில் தாக்குதல் நடாத்தப்பட்டதால் படையினர் சரியான காப்பு வசதிகளை செய்து முடித்திருக்கவில்லை. இதனால் கரிப்பட்ட முறிப்பு படையினரும் இழப்புக்களைச் சந்தித்தனர்.
கரிப்பட்ட முறிப்புக்கு நகர்ந்த படைக்கு வழங்கல் பணி செய்யவென காட்டுப்பாதையை படையினர் திருத்தி அமைத்து – செப்பனிட்டனர். அதேவேளை கற்கிடங்கு மற்றும் விஞ்ஞானகுளம் பகுதியில் படையினரின் பிரசன்னமும் அதிகரித்தது.

அதாவது மாங்குளத்திற்கு அண்டிய பகுதிக்கு களம் எடுத்துச்செல்லப்பட்டது. படையினரின் விஸ்தரிப்பிற்கு பதிலளிப்பது போல போராளிகளை நிறுத்த புலிப்படைக்கு ஆட்தொகை போதாது. எனவே சில இடங்களிலிருந்து தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்து – தேவையான இடங்களில் சண்டைக்குத் தயாராவதைத் தவிர புலிகளுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையிலேயே புளியங்குளத்திலிருந்து பின்வாங்கி கனகராயன் குளச்சந்திப் பகுதியைத் தளமாக்கி சண்டைக்குத் தயாராக தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். புளியங்குளத்தை புலிகள் கைவிட்ட பின்னரே படையினர் அதைக் கைப்பற்றினர். கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதலின் பின்னர் கழிந்த இரண்டு மாத அமைதி நிலையை அடுத்து மார்கழி 04 ஆம் நாள் கனகராயன் குளச்சந்தியைக் கைப்பற்றப் படையினர் ஒரு மும்முனைத் தாக்குதலைத் தொடுத்தனர்.  பிரதான பாதை வழியே கனகராயன்குளச் சந்தியை நோக்கி ஒரு முனையாலும், மன்னகுளத்தை நோக்கி ‘கிறீன்பரேட்’ டிடம் பயிற்சி பெற்ற கொமாண்டோ அணி இன்னொரு முனையாலும்,  கனகராயன் குளத்திற்கும் மன்னகுளத்திற்கும் இடையில் உள்ள முத்தர்குளம் வழியாக எஸ்.அணி – மூன்றாவது முனையைத்திறந்தும் – கனகராயன் குளத்தைக் கைப்பற்றும் இலக்குடன் சிங்களப்படை நகர்ந்தது.

ஒவ்வொரு முனையிலும் சண்டை தொடங்கியது. பிரதான பாதை வழியே நகர்ந்த படையினரும் – முத்தர்குளம் வழியே நகரமுயன்ற எஸ்.எவ் படையணியும் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், மன்னகுளம் நோக்கி வந்த கொமாண்டோப் படையினரை எதிர்த்து அங்கே நிலைகொண்டிருந்த மாலதி படையணியும் – புலனாய்வுத்துறைப் படையணியும் – திருமலை படையணியும் கடுமையாக மோதின. புலிகளின் சில அரண்களை உடைத்து உட்புகுந்த கொமாண்டோப் படையினரை குறிவைத்து ஜெயந்தன் படையணியினர் ஒரு முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்தனர். சண்டை தீவிரமாக நடந்தது. புலிகள் புதூர்ச் சந்தியில் சாதித்ததை – மன்னகுளத்தில் சாத்தியமற்றதாக்க கொமாண்டோப் படையினர் போராடினர். முதலில், பிடித்த நிலத்தை தக்க வைக்க சண்டையிட்டனர். பின்னர் பாதுகாப்பாக தப்பிப்போக சண்டை இட்டனர்.

ஆனால், புலிகள் நடாத்திய பகல் நேர முறியடிப்புத் தாக்குதல் வீரம் செறிந்ததாகவும் தந்திரோபாயங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. சிங்களத்தின் கொமாண்டோக்கள் திகைத்து பதறினர். இறுதிக்கட்டத்தில் ஜெயந்தன் படையணியும் களம் புகுந்து நிலத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கியத. அமெரிக்க சிறப்புப் படையான  ‘கிறீன்பரேட்’ டிடம் சண்டைப்பயிற்சி பெற்ற சிறப்புக் கொமாண்டோக்கள் ஏறக்குறைய அழிந்தே போயினர். இந்த முறியடிப்புத் தாக்குதலில் 300 கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். அதேயளவு காயமடைந்திருந்தனர். 37 போராளிகள் களப்பலியாகியிருந்தனர்.

புளியங்குளத்திலிருந்து புலிகள் நடாத்திய தந்திரோபாயப் பின் வாங்களின் விளைவை, மன்னகுளத்தில் படையினர் அனுபவித்தனர்.
முன்னகுளம் முறியடிப்புத் தாக்குதலின் விளைவுகளை ஜீரணித்து பழைய நிலைக்கு மீண்டுவர ஜயசிக்குறுய் படைக்கு இரண்டு மாதங்களும் ஒரு வாரமும் பிடித்தது. இதேவேளை, புலிகள் மீண்டுமொருமுறை தந்திரோபாயப்பின்வாங்கலுக்கு முடிவெடுத்தனர். கனகராயன் குளத்தைக் கைவிட்டு மாங்குளம் முனையைப் பலப்படுத்தும் முடிவைச் செயற்படுத்தினர். இதன்பின்னர் கனகராயன்குளப் பகுதியை படையினர் சண்டைகளின்றிக் கைப்பற்றினர். இப்போது மாங்குளத்தைக் கைப்பற்றுவதற்கான சண்டைகளில் ஈடுபட படைத்தலைமை தயாரிப்புக்களைச் செய்தது. புளியங்குளத்தை ஒரு தளப்பகுதியாக்கியது போல மறிப்புத் தாக்குதலுக்குரிய பாரிய தளப்பகுதியாக மாங்குளம் மாற்றப்பட்டது. மாங்குளத்திற்கு கிழக்கே இருக்கின்ற ஒலுமடுவும் மேற்கே இருக்கின்ற மூன்று மறிப்புச் சந்தியும் மாங்குள தளத்தின் இரு முனைகளாகின. பிறந்துள்ள புதிய வருடம் உயிரிழப்பின்றி கரும்புலிகள் நடாத்திய ஒரு உலங்குவானூர்தி அழிப்புடன் ஆரம்பமானது.

தை 02ம் நாள் படையினருக்கு ஆச்சரியத்தை ஊட்டிய அந்த கொமாண்டோத் தாக்குதல் நிகழ்ந்தது. மழை பெய்து விநியோகப் பாதை சீரற்று இருந்த அந்த நேரத்தில், போக்குவரத்து உலங்குவானூர்தியான எம்.ஐ5 17 வழங்கல் வேலையைச் செய்துகொண்டிருந்தது. கரும்புலிகளின் தாக்குதலில் அந்த வானூர்தி முழுமையாக அழிந்தது.

புதிய ஆண்டில் மாங்குளத்திற்கான சண்டைகள் ஆரம்பமாகின. khசி 14 ஆம் நாள் மன்னகுளப்பகுதியில் இருந்து மூன்று முறிப்புச் சந்தியை நோக்கி ஒரு இரகசிய நகர்வைச் செய்து –  தேவையான இடத்தில் புலிகளின் அரண்களைத் தாக்கி அழித்து –  சந்திப்பகுதியை கைப்பற்ற படையினர் திட்டமிட்டனர். மாங்குளத்திற்கு மேற்கே –  மாங்குளம் மல்லாவி பாதையில் – 3கி.மீ  தொலைவில் மூன்று முறிப்புச் சந்தியுள்ளது. இந்தச் சந்திப்பகுதியை கைப்பற்றினால் மாங்குளம் தளத்தின் மேற்குப்புற பாதுகாப்பை கைப்பற்றியதற்கு ஒப்பானதாகும் என்று படையினர் கணித்து படைநகர்த்தினர். கேணல் கிட்டு பீரங்கிப் படைப்பிரிவு ஒரு இராணுவ வேட்டைக்கு தயாராகியது. மோட்டார் குழாய் துடைத்து இலக்குகளை சரிபார்த்து தூரம் கணித்து –  எறிகணைகளையும் எண்ணிவைத்து உத்தரவிற்காக காத்து இருந்தது. முன்னரங்கொன்றில் முட்டுப்பட சண்டை தொடங்கியது. புலிகளின் மோட்டார்கள் இயங்கத்தொடங்கின. படையினரது பீரங்கிப் படையும் பதில் மழை பொழிந்தது. புலிகளின் நிலைகளுக்குள்ளே காப்பெடுத்துச் சண்டையிட்டனர். வந்த படையினர் நிலைகளில்லாது தடுமாறினர். அடிவாங்கி பின்னேறினர். சண்டை முடிந்த போது புலிகள் தரப்பில் 06 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பகைவன் தரப்பில் இழப்பு 60 ஆக இருந்தது. 200ற்கும் மேல் காயமடைந்திருந்தனர்.

மாங்குளத்தின் மேற்கு முனை விழிப்பாகவும் – பலமாகவும் உள்ளதால் அதன் கிழக்கு முனை தாக்க வாய்ப்பாக இருக்குமென்று படைத்தரப்பு கணிப்பிட்டது. பத்துநாள் இடைவெளியில் மாசி 24ம் திகதி கிழக்கு முனையான ஒலுமடு மீது கரிப்பட்ட முறிப்புப் படையினர் பாய்ந்தனர். அரண்காத்த சிறுத்தைகள் ஆக்ரோசமாகப் பதிலடி கொடுத்தனர். 50 ற்கும் மேற்பட்ட படையினரை அழித்தனர். அவர்களது 20 உடல்களை சிறுத்தைகள் கைப்பற்றி செஞ்சிலுவையிடம் கொடுத்தனுப்பினர். புலிகள் தரப்பில் 06 போராளிகள் களப்பலியானார்கள்.
மேற்கும் – கிழக்கும் பலமானதாக இருப்பதால் மத்தியபகுதி ஓட்டை – ஒடிசலுடன் ஒட்டுப்போடப்பட்டுக் கிடக்கின்றதா ! எனப் படையினர் ஜயப்பட்டனர். பங்குனி 14ம் திகதி அதனையும் பரீட்சித்தனர். மாங்குளம் பிரதான பாதைப்பக்கம் சண்டை வெடித்தது. புலிகளின் போ – வண் (4:1) படையணி மையப்பகுதியை காவல் செய்தது. அனுபவத்தை மூலதனமாகக்கொண்ட போ-வண், சிங்களப்படையை அருகே வர அனுமதித்தது – அதன் பின் தாக்கியது. போ– வண் விரித்த தந்திரோபாய வலைக்குள் பரீட்சிக்க வந்த பகையணி சிக்கிக்கொண்டது.

நன்றாக வாங்கிக்கட்டியது. சகபாடிகளின் உடல்களையும் – ஆயுதங்களையும் விட்டுவிட்டு சிங்களப்படை ஓட்டமெடுத்தது. 15 துப்பாக்கிகளையும் பகைவனின் ஐந்து உடல்களையும் போ-வண் படையணி கைப்பற்றியது. ஏறக்குறைய 30 படையினர் இந்தச் சண்டையில் கொள்ளப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர் – புலிகளின் மத்தியபகுதிக் காப்பரண்கள் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே நின்றன.

இதே சமயம், மாங்குளம் புலிகளின் தளம்மீது நடாத்தப்படுகின்ற தாக்குதல்களை வழிநடத்திக்கொண்டிருந்த 55ம் டிவிசனில் கட்டளைப்பீடம் இதேநாளில் புலிகளது எறிகணைத் தாக்குதலால் கலங்கிவிட்டது. புலிகளின் பீரங்கிப்படையணி ஏவிவிட்ட எறிகணைகள் பகைவனது கட்டளைப் பீடத்தைத்தாக்கி முதல்நிலைக் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சரத்பொன்சேகாவையும் – இரண்டாம் நிலைக் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் வோருண் என்பவரையும் உடற்சேதத்திற்குள்ளாக்கி – களத்தை விட்டு அப்புறப்படுத்தியது.

இந்த எறிகணைத் தாக்குதலில் சிங்களப்படைகளின் ஆட்டிலறி கொமாண்டரான கேணல் நிலை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாங்குளம் தளத்தின் உறுதி படைத்தலைமையை வாட்டியது. சிங்களத் தளபதிகள் கூடிக்கதைத்து – அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கலந்தனர். ஏதோ செய்து – எப்படியாவது மாங்குளத்தின் முன்னரங்கை உடைக்க திட்டம் தீட்டினர். நேரடிச் சூடு போல புலிகளின் பீரங்கிப் படையணி வழங்கும் நேரடியற்ற சூடுகளுக்குத் தற்காத்தபடி எப்படி முன்னேறுவது ! உருக்குக்கவசம் உடுத்திய பனைமரம் போல உறுதியாக நிற்கும் புலிகளின் அரண்காவலர்களை எப்படித் தாக்கி வெற்றி கொள்வது ! குள வரைபடத்தை விரித்து வைத்து சிங்களத்தளபதிகள் சிந்தித்தனர்.

புலிகளின் ஒலுமடு அரண்களுக்கு முன்னேயிருந்த நீண்ட வெளியையும் – தங்களது கவசப்படையையும் ஒன்றிணைத்து திட்டம் வகுத்தனர். சிங்களத்தின் இராணுவ வரலாற்றில் முதல் தடவையாக அது ஒரு மாபெரும் ராங்க்குத் தாக்குதலுக்கு தயாரானது. தாக்குதல் திட்டத்தின் நேர்த்தி படைத்தளபதிகளை உற்சாகப்படுத்தியது. தாக்குதல் வெற்றி பெறும் என்று அது நம்பியது. அந்த வெற்றியை உடனடியாகப் பயன்படுத்தி மாங்குளம் சந்திவரை ஒரு வேக நகர்வைச் செய்யவும் சிங்களப்படை திட்டமிட்டது. இதற்காக மும்முனைத் தாக்குதல் திட்டத்தை முறைப்படி வரைந்தது. இதில் ஒரு முனையை திசை திருப்பல் தாக்குதலுக்காக ஒதுக்கியது. ஒலுமடுவை ராங்க் படையணி தாக்கி –  நிர்மூலமாக்கிக் கைப்பற்றும் போதே –  பலமான இன்னொரு அணி கனகராயன் ஆறு வழியே நகர்ந்து, மாங்குளம் – ஒலுமடு வீதியில் உள்ள கனகராயன் ஆற்றுப்பாலத்தைக் கைப்பற்றி –  அங்கிருந்து மாங்குளம் சந்தியை நோக்கி நகர்வது திட்டம். இந்த திட்டத்திற்கு பலம் சேர்ப்பதற்காக மூன்று முறிப்பு முனையில் ஒரு திசைத்திருப்பல் தாக்குதலைத் தொடுக்கவும் திட்டமிட்டது. ஜயசிக்குறுய் ஒரு வருடம் பூர்த்தியாகும் வேளையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றியை இந்த மும்முனைத்தாக்குதல் பெற்றுத்தரும் என்று படைத்தலைமை நம்பியது.

சித்திரை 20ம் நாள் அதிகாலை சண்டைமுனையை எதிரியின் பீரங்கிப்படைகள் திறந்து வைத்தன. ஒலுமடு காவல் அரண்களுக்கு முன்னால் உள்ள வெளிப்பகுதியில் பகைவனின் ராங்க்குகள் அணிவகுத்து நின்றன. சுமார் 20 கவசங்கள் அந்த கவசப்போர் அணியில் இடம்பெற்றிருந்தன. ரி 55 ரக தாக்குதல் ராங்க்குகளும் மற்றும் துருப்புக்காவிகளும் இதில் இருந்தன. புலிகளின் முன்னரங்கத்தை குண்டுகளால் துவம்சம் செய்து தள்ளிவிட்டு –  உருக்குலைந்த புலி அரணுக்குள் துருப்புக்காவிகள் மூலம் படையினரைக் கொண்டு சென்று இறக்கி –  அரண்களைக் கைப்பற்றுவது திட்டம். ஒரு துருப்புக்காவி 10 படைவீரர்களை ஒரு தடைவையில் பொத்தி மூடிக்காவிச் செல்லும்.
துருப்புக்காவிகளில் சென்று இறங்கும் குறைந்த தொகையுடைய சிறப்பு அணியினர் சிதைந்த அரண்களை ஒரு சில நிமிட நேரங்களுக்கு பிடித்து வைத்திருக்க எதிரித்தளத்தில் தயாராக நிற்கும் காலாட்படையினர் விரைந்து வந்து நிலம் பிடித்து –  ஒலுமடு தளத்தைக் கைப்பற்ற வேண்டும்.

அந்த வெட்டவெளிப்பகுதியில் ஒரு குறிப்பிட்டளவு தூரம் முன்னேறி வருவதும் – பின்னர் நிலையெடுத்து –  ராங்க்குகளை வரிசைப்படுத்தி, முன்னரங்கைத் தாக்குவதும் பின்னர் – மேலும் முன்னேறி ஒரு குறித்தளவு தூரம் வந்து மீண்டும் நிலையெடுத்து –  வரிசைப்படுத்தி முன்னரங்கத்தை தாக்குவதுமாக ராங்க்குப் படையணியின் தாக்குதல் தந்திரோபாயம் இருந்தது. பகைவனின் கவசப்போர் அணியை புலிகளும் தூரவைத்தே தாக்கத் தொடங்கினர். தாக்குதலைச் சமாளித்தபடி ராங்க்குகள் முன்னேறினவுடன் சண்டை இப்போது முன்னரங்கத்தின் துப்பாக்கி வீச்செல்லைத் தூரத்திற்குள் வந்துவிட்டது. முன்னரங்கை சோதியா படையணியும் – சாள்ஸ; அன்ரனி படையணியும் சிறுத்தைப் படையணியும் காவல் காத்தன. இவற்றுடன் விக்டர் கவச எதிர்ப்புப் பிரிவில் கேணல் கிட்டு பீரங்கிப்படைப்பிரிவும் இணைந்து ராங்க்குப் படையணியின் நகர்வு மீது பதில் தாக்குதலை மேற்கொண்டன. ராங்க்குத் தாக்குதல் – எறிகணை வீச்சுக்கள் – உலங்குவானூர்தித் தாக்குதல்கள் என்பவற்றால் முன்னரங்கம் புழுதி மண்டலமானது. கைக்கெட்டிய தூரத்தையே கண்களால் பார்க்க முடியாத அளவிற்கு தூசிமழை சமரரங்கை விழுங்கியது. தூசித்திரையை வாய்ப்பாகக் கொண்டு ராங்குப்படை ஒரு வேக நகர்வை, அரண்களை நோக்கி எடுத்தது. சில ராங்க்குகள் முன்னரங்கைத் தொட்டும் விட்டன. ராங்க்குத் தாக்குதல்களில் அரண்கள் சிதைந்தன. மரங்கள் தலைவிரிகோலமாகின. ஆயினும் அரண்களுக்குள் இருந்த புலிவீரர்கள் நிலைகளைவிட்டு அகலவில்லை.

உறுதி குலையாது எதிரியைத் தாக்கினர். முன்னரங்க வாசலிலே வைத்து ஒரு துருப்புக்காவியையும் – ஒரு ராங்க்கையும் புலிகள் அழித்தனர். இன்னொரு ரி 55 ரக ராங்க் சற்றுத் தூரத்திலேயே அழிக்கப்பட்டது. மேலும் சில கவசங்கள் குண்டடிவாங்கிக் காயப்பட்டன. முயற்சியைத் தொடர படையினர்க்கு முடியாமல் போய்விட்டது. தாக்குதல்கள் முறியடிக்கப்பட்ட நிலையில் புறப்பட்ட நிலைக்கே ராங்க்குப்படையணி திரும்பிச் சென்றது. சிங்கள இராணுவத்தின் வரலாற்றில் முதற்தடவையாக நடாத்தப்பட்ட ராங்க் வியூகத் தாக்குதல, அதற்கு தோல்வியில் முடிந்தது. இதேவேளை, கனகராயன் ஆற்றுக்கரையால் நகர்ந்து பாலத்தைப்பிடித்து – மாங்குளத்தின் கிழக்குவாசலை எட்டி மிதிக்க ஆசைகொண்ட படையணியினரை ஜெயந்தன் படையணி வழிமறித்துத் தாக்கியது. பழமை மிகுந்த அந்த பிரிட்டிஸ் கால உருக்குப் பாலத்திற்கு வரமுன்னரே பகைவனின் நகர்வு நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டது. ஒலுமடு கனகராயன் ஆற்றுப் பாலம் ஆகியவற்றைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட இரண்டு தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. மூன்றுமுறிப்புச் சந்தி முனை மீது மேற்கொள்ளப்பட்ட திசை திருப்பல் தாக்குதலை அன்பரசி படையணி சுலபமாக எதிர்கொண்டு விரட்டியடித்தது. மாங்குளத்திற்காக நடந்த இந்த நான்கு சண்டைகளுடன் ஜயசிக்குறுய் ஒருவருட பூர்த்தியை அடைந்தது. ஒருவருட பூர்த்தி நாளான மே-13-1998 ஜயசிக்குறுய் களமுனை அமைதியாகவே  கிடந்தது ஆனால், வன்னி வாழ் மக்கள் வீதிகளில் குழுமிநின்று  வெற்றிகரமாக நடந்த ஒருவருடச் சமரை, எழுச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஜயசிக்குறுய் இரண்டாவது வருடத்துள் நுழைந்துள்ளது..

ஜயசிக்குறுய் படையினருக்கு இந்த மண்ணின் மைந்தரிடமிருந்து ஒரு மடல்……. இந்த வெசாக்கல்ல, எந்த வெசாக்கிலும் உங்கள் எண்ணம் ஈடேறுவது அவ்வளவு சுலபமானதல்ல என்பதை வன்னிக்களம் இதுவரையில் உங்களுக்கு நன்கு உணர்த்தியிருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. 30,000 படைகள், வானூர்திகள், ஆட்லறிகள், கவசங்கள், கனரகங்கள்.. ஆனாலும் மூன்றே மாதத்தில் முடிந்து விடும் என்று கூறி முடுக்கி விடப்பட்ட ஜயசிக்குறுய், 365 நாட்களைக்கடந்த நிலையிலும் முடங்கிப்போய் கிடக்கிறது. ஆனால் விரைவாக உயர்ந்து கொண்டு போவதோ உங்களில் உயிரிழந்தோர், ஊனமானோர், காணமற்போனோர் பட்டியல் தான்.

நீங்கள் கொல்லப்படுவது பற்றியோ, ஊனமாக்கப்படுவது பற்றியோ, காணமற்போவது பற்றியோ உங்கள் இராணுவ அரசியல் தலைமைகள் இதுவரை கவலைப்பட்டதுமில்லை. இனியும் கவலைப்பட போவதுமில்லை. அவர்களின் தேவைகள் எல்லாம் பதக்கங்களும் பதவிகளுமே.
மூன்றே, மாதம் எனக்கூறி, பின் வெசாக்கென்று மாற்றி, புத்தாண்டு என்று இடித்துரைத்து இறுதியில் இப்பொழுது பெபோதாவது என்று கூறுகின்றார் ரத்வத்த. சென்ற புத்தாண்டில் வெசாக்கில் உங்கள் அருகில் நின்ற எத்தனை தோழர்கள் இன்று உயிருடன் இல்லை. அடுத்த வெசாக்கிற்கு நீங்கள் இருப்பீர்களா? இங்கு தொடர்ந்திருந்தால் நிச்சயம் இருக்கமாட்டீர்கள் என்பது உங்களுக்குத்  தெரியும். சிறிலங்கா பாராளுமன்றத்தில் சொகுசு நாற்காலிகளில் அமர்ந்து கெண்டு, கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் பிள்ளைகள் யாராவது பக்கத்துக் காப்பரணில் நிற்கிறார்களா? ஒருவர் கூட இல்லை. கடல் கடந்த நாடுகளில் அவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருப்பார்கள். இங்கு உங்கள் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். ஒழுங்கான உணவின்றி, நீரின்றி, தலையில்குண்டேந்தி, எறிகணையால் உடல்சிதறி, கண்ணிகளால் காலிழந்து போய் நிற்கிறீர்கள்.

துப்பாக்கி வேட்டொலியே கேட்காத தொலைவில் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் இருந்து கொண்டு கட்டளையிடும் உங்கள் அதிகாரிகளின் பெயர்கள் பதவி உயர்விற்காகவும், பதக்கங்களிற்காகவும் சிபார்சு செய்யப்பட உங்கள் பெயர்களோ காணாமல் போனோர் பட்டியலில் பதியப்பட்டுக்கொண்டு போகின்றது. எத்தனை முறை உங்கள் இராணுவத்தலைமைகளையும் தந்திரோபாயங்களையும் மாற்றிப்பார்த்தாகி விட்டது. ஆனாலும் உங்கள் மரணங்களோ மலிவாகக்கிடைக்கின்றன. அசோக ஜெயவர்த்தனா அட்டகாசமாகத்தான் வந்தார். அழிந்துபோகிறது இராணுவம் என்றார்கள். ஆவர் அனுப்பப்பட்டார். சிறிலால் வீரசூரிய வந்தார். சிறந்த தளபதி என்றார்கள். சிதைந்து போனது மன்னகுள மண்ணில் உங்கள் சிறப்பு படைகள். நீங்கள் எதற்காக படைகளில் சேர்ந்தீர்கள் என்பதைச் சற்று எண்ணிப்பாருங்கள். உங்கள் ஏழைக்குடும்பங்களை வாழவைக்க, உங்கள் நோயாளித்தாயை காப்பாற்ற, உங்கள் சகோதரிகளை மணம் முடித்து வைக்க இவை உங்கள் கடிதங்கள் கூறும் கண்ணீர் கதைகள் தான், ஆனால், இங்கு நடப்பது என்ன? உங்களை நேசிப்பவர்கள் உங்களைக்காணாமல்  உருகிக்கொண்டிருக்க எங்கோ ஒரு மூலையில் உங்கள் சிதைந்த உடல்கள் உருக்குலைந்து கொண்டிருக்கும்.

உயிரிழந்தோர், ஊனமுற்றோர், காயமடைந்தோர், கடமைக்குத் திரும்பாதோர் என உங்கள் படையணிகள் சுருங்கிக்கொண்டுவர, இங்கே என்றுமே இல்லாதவாறு மீழ இணைவோர் புதிதாய்ச் சேர்வோர் என்பனவற்றால் எமது படையணிகள் பலம் பெறுகின்றன. அள்ளி எடுத்தவை, அழித்தொழித்தவை மூலம் உங்கள் ஆயுதபலம் கேள்விக்குறியாய் நிற்க, அள்ளப்பட்ட ஆயுதங்கள் இறக்கப்பட்ட போர்க்கலங்கள் என எமது ஆயுதபலம் ஒரு உன்னத நிலையை நோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. கடல் கடந்து எம்மை நோக்கி நீளும் நேசக்கரங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக எமது மக்களின் இணையில்லாப் பேராதரவும் எம்முள் ஒரு புதிய சக்தியை ஊட்டி நிற்கின்றன. தாண்டிக்குளம் தகர்க்கப்பட்டபோதும் கரப்புக்குத்தி – விஞ்ஞானகுளம் அள்ளப்பட்டபோதும், மன்னகுளத்தில் நீங்கள் மண்ணோடு மண்ணாக்கப்பட்ட போதும், மூன்றுமுறிப்பில், மண்ணகுளத்தில் என நீங்கள் மாறிமாறி வாங்கிக்கட்டிக்கொண்ட போதும், ஒலுமடுவில் நீங்கள் ஓடஓட விரட்டப்பட்டபோதும், இறுதியாய் மும்முனைச்சமரில் உங்கள் ராங்க்குப்படைகள் தவிடுபொடியாக்கப்பட்டபோதும், ஆகாய விமானங்களுக்கோ, ஆட்லறிகளுக்கோ உங்கள் அவலக்குரல் கேட்கவில்லை. அனுருத்தவோ, தளுவத்தவோ உதவிக்கு ஓடிவரவில்லையே. இன்னும் எதை நம்பி நிற்கிறீர்கள்?

நீங்கள் யாருக்காகப் போராடுகிறீர்கள்? உங்கள் பெற்றோர்களுக்காகவா? பிள்ளைகளுக்காகவா? மனைவிக்காகவா? காதலிக்காகவா? நீங்கள் அனுப்பும் ஒரு சில ஆயிரம் ரூபாக்களைவிட அவர்கள் உங்களையே அதிகம் நேசிப்பார்கள். நியாயமற்ற ஒரு யுத்தத்தில் அநியாயமாக பலியாவதை விட, உங்கள் இனிய உறவுகளுடன் மகிழ்ச்சியாய் வாழ முடிவு செய்யுங்கள். நாம் காலியிலோ அல்லது மாத்தறையிலோ அல்லது குருநாகலிலோ இருக்கும் உங்கள் வீட்டுமுற்றத்திற்காகப் போராடவில்லை. எமது மூதாதையர் மண்ணில் இனவாத ஆக்கிரமிப்பை எதிர்த்தே போரிடுகிறோம். இந்த மண் எமது சொந்த மண். எமது பெற்றோர், அவர்களின் பெற்றோர் என வழிவழியாய் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்த மண் இன்று நாமும், எமது பிள்ளைகளும் வாழப்போகும் மண்.  இறுதியாக உங்களுக்கு ஒன்றைச் சொல்லிவைக்க விரும்புகின்றோம். அது எமது வாழ்விற்கான போராட்டம். இது எமது வரலாற்றுகடமை, இங்கு நாம் சந்திக்கும் சாவு ஒரு சரித்திரம். இந்தமண் எங்கள் உணர்வுடன், உயிருடன் ஒன்றிப்போனது. இந்த மண்ணின் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் மிக மூர்க்கமாகப் போராடுவோம். எந்த ஆக்கிரமிப்பாளனையும் எம்மண்ணில் நிலைத்திருக்க விடமாட்டோம். அனைவரையும் கொன்றொழிப்போம்.

‘வெற்றி நிச்சயம் உங்களுக்கல்ல எங்களுக்கு’

ஜயசிக்குறுய் நடவடிக்கையும் புலிகளின் எதிர்ச்சமரும்

விடுதலைப் புலிகள் – குரல் – 83

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments