×

மொழிப்போர் தியாகிகள்

விடுதலைப் போராட்டத்துக்கு முன்னரே தொடங்கிய இந்த மொழிப்போர், விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்த, கிட்டத்தட்ட 20 வருடகாலத்தில் இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்துக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே கருதப்பட்டது.ஓர் இனத்தின் மொழி அழிக்கப்படுமானால், நாளடைவில் அந்த இனமும் அழிந்துவிடும் என்பதை வரலாற்றுச் சான்று மெய்ப்பித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஆம், அதற்கு எதிராகத் தொடங்கியதுதான் இந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப்போர்!

அப்போதைய மதராஸ் மாகாணத் தலைவர் ராஜகோபாலாச்சாரி, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார். அந்நாளில் கல்வி என்பதே கேள்வியாக இருந்த நிலையில் பிறமொழிக் கல்வியும், அதைப் போதிக்கச் சரியான ஆசிரியர் இல்லா நிலையும், இரண்டாம் பட்சமாக்கப்பட்ட தாய்மொழிக் கல்வியும் மக்களை வெகுண்டெழச் செய்தது. தான் உயிர் இழப்பினும், தன் எதிர்காலச் சந்ததியினராவது தமிழோடு வாழட்டும் என்று மாண்டனர், மொழிப்போர் தியாகிகள் நடராஜனும், தாளமுத்துவும். போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டுமெனில், மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைக்கு மறுத்து, சிறையிலே வாழ்வைத் துறந்தனர். இவ்வாறு மொழிப்போருக்கான முதல்விதை அங்கே தூவப்பட்டது.

15 ஆண்டுகள் முடிந்த நிலையில், 1965-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்த, நேருவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பணியில் அமர்ந்த லால் பகதூர் சாஸ்திரி இந்தியை ஆட்சி மொழியாக்கச் சட்டம் இயற்ற, மீண்டும் மொழிப்போர் ஆரம்பமானது. இதை, அப்போது மதராஸ் மாகாண முதல்வர் பக்தவத்சலமும் ஆதரிக்கத் தமிழக இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். வீறுகொண்டு எழுந்தனர்.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என எல்லோரும் ஒருசேரப் போராட ஆரம்பித்தனர். இதை வெறும் கொந்தளிப்பாகக் கண்ட காங்கிரஸ் ஆட்சி, இந்த இளைஞர்களை ஒடுக்கக் காவல் படையையும், `அது போதவில்லை’ என்று ராணுவப் படையையும் கொண்டுவர சூடுகண்டது  போராட்டக்களம். இதைச் சரியாக எதிர்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் போராட்டத்தில் களம்காண, அதன் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைவர்கள் மட்டுமல்ல, மாணவர்கள் பலரும் அரசியல் கட்சிகளைச் சாரா பொதுமக்கள் பலரும் சிறை செல்லத் துணிந்தனர். 50 நாள்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல தபால் நிலையங்கள், ரயில் பெட்டிகள் சூறையாடப்பட்டன. கிட்டத்தட்ட 400 பேர் உயிர்ப்பலி அடைந்தனர். 2,000 பேர் காயப்படுத்தப்பட்டனர். இப்படியாகத் தொடர்ந்த போர், உச்ச நிலையை எட்டியதாலும் பெரும் சேதத்தைத் தவிர்க்கும் வகையிலும் மொழிப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி, இந்தியுடன் ஆங்கிலமும் தற்போதுவரை அலுவல் மொழியாக நீடித்துவருகிறது.

உலகிலேயே மொழிக்காக மாண்ட ஒரு இனம் எனில்,அது நம் தமிழினமாகவே இருக்கும். மொழிப்போரில் இறந்த 12 தியாகிகளின் நினைவாய் இன்று, “மொழிப்போர்தியாகிகள் தினம்”  அனுசரிக்கப்படுகிறது.

தமிழுக்காய் இறந்த நம் முன்னோர்களை நினைவுகூர்வது நம் கடமை.

#ஆற்றுப்படை #Aatrupadai #தமிழ் #தமிழன் #மொழி #மொழிப்போர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments