×

விழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள் – கரும்புலி சுபேசன்

விழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள் – கரும்புலி சுபேசன்
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகி விட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கிக் குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது.

எதிரியின் பலமான தடைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்துக்குள் தகர்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்ததும் கரும்புலி மேஜர் குமுதனிடமிருந்து பின்வாங்கும் படி கட்டளை கிடைத்தது.

நாங்கள் பின்வாங்குவதற்கான வியூகங்களை ஏற்படுத்தி வேகமாகப் பின்வாங்கத் தயாரானோம். ஆனால் எங்கள் அணியினை பொறுப்பேற்று வந்திருந்த சுபேசனிற்கு காலிலும், நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருந்தது. எங்களுடன் சேர்ந்து சுபேசனால் பின்வாங்க முடியவில்லை. தூக்கிக் கொண்டாவது வந்து அவனைக் காப்பாற்றுவோம் என முயற்சித்தோம். அந்த நிலையில் அது சாத்தியப்படாத காரியம். ‘என்னைப்பார்த்து நிற்காதிங்கோ. என்னைத் தூக்கிக் கொண்டு பின் வாங்க ஏலாது.  நீங்கள் போங்கோ’ சுபேசன் எங்கள் எல்லோரையும் பார்த்து எதுவித கலக்கமும் இல்லாது உறுதியாக இறுதி விடை தந்தான். எப்படி அவனைப் பிரிந்து போவது – எங்களுக்கு அது கஸ்ரமாக இருந்தது. ‘நீங்கள் நிறைய சாதிக்க வேண்டியனீங்கள், என்னைப் பார்த்து நின்று வீணாய்க் காயப்படாதீஙங்கோ தயவு செய்து போங்கோ – நான் சாஜ்சரை இழுக்கப்பேறேன்_’

இப்பொழுது நாங்கள் அவனைப்பிரிந்து போனால் இன்னும் ஒரு சில வினாடிகளுக்குள் அங்கே சம்பவிக்கப் போகும் அந்த நிகழ்வு நினைத்துப் பார்க்கவே உயிரைப் பிளிந்தது. இனி என்றுமே, எப்பவுமே அவனைப் பார்க்கவோ பேசவோ முடியாது. அப்படி ஒரு நிகழ்வு இங்கே நடக்குமானால்… எண்ணிக்கொள்ளவே நெஞ்சு கனத்தது. ‘சுபேசன் வீரச்சாவடைந்து விட்டான்’ என்று எப்படி அவன் தங்கையிடம் போய்ச் சொல்வது. அதை அவள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள்.

‘சுபேசன் தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தான். என்ன மாதிரி எல்லாம் நேசித்தான். சின்ன வயதில் இருந்து ஒருவர் மேல் ஒருவர் அளவில்லாத பாசம் வைத்து வளர்ந்தவர்கள். தாய் தந்தையிலோ, மற்ற சகோதரர்களிலோ வைத்த பாசத்தை விட சுபேசன் மீது அதிக பாசம் வைத்திருந்தாள் அவள். நாங்கள் சீனன்குடாத் தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த வேளை…. சுபேசனின் தங்கையை யாரோ ஒருவன் கடத்திச் செல்கிறான். சுபேசன் துடிதுடித்துப்போய் ஒடிச்சென்று தங்கையைக் காப்பாற்றுகிறான். இருந்தாலும் தலையில் பலமாக அடிபட்டு மயங்கிவிடுகிறான். மயங்கிய தங்கையை கைகளில் சுமந்து – பின் ஓரிடத்தில் தண்ணீர் தெளிக்கவே அவள் மயக்கம் தெளிந்தாள்.’

இப்படி ஒரு கனவினைக் கண்டுவிட்டு அவன் நிஜமாகவே துடிதுடித்துப் போய்விட்டான். நித்திரையில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை. தங்கையின் நினைவுகளே சுற்றிச்சுற்றி அவன் கண்களுக்குள் நுழைந்தன. விடிந்ததும் தங்கையிடம் சென்று அவளைப் பார்த்து தான் கண்ட கனவினை அவளோடு கதைத்த பின்னர் தான் அவனின் மனம் ஆறுதலானது. இரவு கனவு கண்டுவிட்டு எழுந்து போராளிகளிடம் கூறும் போது எவ்வளவு துடித்தான். கனவிலேயே தங்கச்சி படும் கஸ்ரத்தினைக் கண்டுவிட்டு தங்கைக்க என்னவோ ஏதுவோ என ஏங்கிய அவனது உணர்வுகள் தங்கையை இறுதியாய் பிரிகின்ற வேளை எப்படி இருந்திருக்கும். அவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!

ஆணையிறவுப் படைத்தளமே எமது இலக்கிற்கான இடம். எமது முகாமில் இருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இறுதி நேரம்  நாங்கள் எல்லோரும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். இன்னும் சில வினாடிகளில் வாகனம் புறப்பட்டுவிடும். இறுதியாய்ப் பிரிகின்ற அந்தக் கணம் – எல்லோரும் மாறிமாறி விடைகொடுத்துக் கொள்கிறோம். இந்த இறுதியான விடைகொடுப்பு யார் யாருக்கு நிரந்தரமாய்ப் போகும் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. என்றுமே எப்பவுமே இனிக்காண முடியாத அந்தப் பிரிவு நிகழ்ந்த வேளை… சுபேசனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது இயக்கத்திற்கு வந்த அவனின் பாசத்தங்கையும் அங்கே நிற்கின்றாள்.

இன்னும் ஒன்றோ இரண்டோ வினாடிகளில் அவன் புறப்படப்போகின்றான். அந்த ஒருசில வினாடிகளைக் கூட தங்கையுடனேயே பேசிக்கழித்தான். இரண்டு பெருநதிகள் ஓடிவந்து கலக்குமே ஓர் இடம்… அங்கு எழுகின்ற ஆர்ப்பரிப்பினைப் போன்று இரண்டு பேர் மனதிற்குள்ளும் எத்தனையோ மனக்குமுறல்கள். என்னால் சொல்ல முடியவில்லை.

போராளிகளுடன் சிறிதுகாலம் பழகிப்பிரியும் போது கூட தாங்கிக் கொள்ள முடியாத சுபேசன், நினைவு வந்த நாளில் இருந்து உயிராய் நேசித்த தங்கையின் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறான். தங்கைக்குத் தெரியும் அண்ணன் கரும்புலி என்று, இப்பவும் கரும்புலித் தாக்குதல் ஒன்றிற்குத்தான் போகிறான். போனால்… சீனன்குடாவில் இலக்குகளை அழித்துவிட்டு வந்த மாதிரி இந்தச்சண்டையிலும் இலக்கை அழித்து விட்டு அண்ணன் திரும்பிவரமாட்டானா?! அவளது மனம் பிரார்த்தித்தது.

உயிரோடு ஒட்டிய உறவல்லோ, சுபேசனிற்கும் வேதனையாகத்தான் இருந்தது. தங்கையின் கண்ணீரைத் துடைத்து ‘அழக்கூடாது தலைவர் இருக்கிறார். கவலைப்படக்கூடாது’ தங்கையிற்கு அறிவுரை சொல்லி, ஆறுதல் வார்த்தைகள் கூறி எவ்வளவோ மனப்போராட்டத்தின் மத்தியில் பிரிக்க முடியாது பின்னிப்போன உறவை பிரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறான்.

அவள் அண்ணனுக்கு கையசைத்தாள். அவனும் கையசைத்தான் வினாடிகளைக் காலம் மிக வேகமாக விழுங்கிக் கொண்டது. தங்கையின் விசும்பல் காதில் கேட்கிறது. தங்கையின் சிறுகலக்கத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சுபேசனிற்கு எப்படி இருந்ததோ.

வாகனம் மெல்ல மெல்ல நகரத்தொடங்குகின்றது. மீண்டும் ஒரு தடவை தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென ரோச்சடித்துத் தங்கையைப் பார்க்கின்றான். தங்கையின் முகம் தெரிகிறது. அவளின் வாட்டத்தைக் கண்டதும் அவளிற்கு ஆறுதல் சொல்ல வேண்டும்போல துடித்தது அவன் மனம். வாகனம் மெல்ல மெல்ல வேகம் கூடியது. பிரிவைத் தாங்க முடியாது சுபேசன் தலைகவிழ்ந்து கொள்கின்றான்.

இந்த இறுதி நேரம் அவன் உணர்வுகள் எத்தனை தடவை சிலிர்த்திருக்கும் இவ்வளவு பாசமான உறவினைவிட இந்தத் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எவ்வளவு உன்னதமான பற்று வைத்திருக்கின்றான். அவனது இலட்சியம் எவ்வளவு புனிதமானது. அவன் தன் தேசத்தில் எல்லோரையும் ஆழமாக நேசித்தான். அதனால்தான் அவர்களின் துயரத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் கரும்புலியானான். அடுத்தவர் துயரத்திற்கு தோள்கொடுக்கவும், மற்றவரின் வேதனைக்காக கண்ணீர் சிந்தவும் பழகிய இதயம் அவனது இதயம். தலைவர் ஒரு போராளியை எப்படியெல்லாம் எதிர்பார்த்தாரோ அத்தனையும் பிரதிபலிப்பதாகத் திகழ்ந்தான்.

1993 ஆண்டு தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொண்டவன் சுபேசன். இன்றுவரை எத்தனை ஆண்டுகள் மனம் சலிக்காது கொள்கை ஒன்றையே நெஞ்சில் சுமந்து எவ்வளவு கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுத்திருப்பான். இறுதி மூச்சிலே பகை எரித்த இந்த இலக்கு கிடைக்கும் வரை இத்தனை வருடங்கள் காத்திருந்தானே! அவனது இலட்சியம் எத்தனை பெரியது.

அவனிற்கு உடம்பில் ஏராளமான காயங்கள். 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆணையிறவுப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்வதற்கான இறுதி வேவிற்கு சுபேசன் சென்றிருந்தான். அன்று எதிரியுடன் மோத நேர்ந்தது. சுபேசனிற்கு கையில் பெரிய காயம். அன்று ஏற்பட்ட காயத்தால் இன்றும் பெரிய வேலைகள் செய்தால் கைமூட்டுகள் கழன்று விடும். பின் அவன் தானே கைமூட்டைக் கொழுவி தன் பணியைச் செய்து கொள்வான். எல்லா ஆயுதங்களையும் சிறப்புற இயக்கும் தேர்ச்சி பெற்றதோடு சிறந்த சூட்டு வல்லமையும் கொண்டவன். எந்த ஒரு இறுக்கமான சூழ்நிலையிலும் நன்கு திட்டமிட்டு அணிகளை சிறந்த முறையில் வழிநடத்தக்கூடியவன். சீனன்குடாவில் எதிரி வானூர்திகளையும் கனரக ஆயுதங்களையும் அழித்த கரும்புலி அணிகளிற்கு சுபேசனே தலைமையேற்றுச் சென்றிருந்தான்.

அன்றொரு நாள் ஆகாயக் கடல் வெளித் தாக்குதலை முறியடிப்பதற்காக வெற்றிலைக் கேணியிலிருந்து ஆணையிறவுக்கு சிங்கள இராணுவம் பெரிய நகர்வு ஒன்றினை மேற்கொண்டது. அதற்கு ஊடறுப்புத் தாக்குதல் மேற்கொள்ள நின்ற எமது அணிகளுடன் ஒன்றாக சுபேசனும் 05 பேர் கொண்ட வேவு அணியுடன் நின்றான். முதல் நாள் சுபேசனும் சென்று வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான். அடுத்த நாள் ஊடறுப்புத் தாக்குதலுக்குத் திட்டமிடும் வேலை இருந்தமையினால் சுபேசன் வேவிற்குச் செல்லாது முகாமில் தங்கிக் கொள்கிறான். சண்டைச் சூழ்நிலை காரணமாக உணவு விநியோகம் பெரிதும் சீர்குலைந்திருந்தது. எப்போதாவது வரும் சாப்பாட்டைச் சாப்பிடுவது. சாப்பாடு வராவிட்டால் சாப்பாட்டை எதிர்பாக்காது தத்தமது கடமைகளைச் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலையே இருந்தது. அன்று சாப்பாடு வந்திருந்தது. ஆனால், அங்கே நின்ற ஆட்களை விட வந்திருந்த சாப்பாட்டுப்பொட்டலங்கள் குறைவானதாக இருந்தது. 05 பேர் கொண்ட சுபேசனின் அணிக்கு இரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்கள் கிடைத்தன.

தனது தோழர்கள் வேவு பார்த்துவிட்டு களைத்துப் போய் வருவார்களே அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம் என எண்ணியவன் அந்த உணவுப்பொட்டலங்களை துணி ஒன்றினால் சுற்றி கவனமாக வைத்துவிட்டு படுத்துவிடுகிறான். அவன் முதல்நாள் சாப்பிட்ட சாப்பாடு தான்_ அன்று மதியம் கழிந்து கொண்டிருந்தது. இந்தளவு நேர இடையிற்குள் ஒன்றோ இரண்டு இளநீர் குடித்திருந்தான். படுத்திருந்த சுபேசனிற்கு வேவு பார்க்கச் சென்ற தோழர்கள் வருகிறார்கள் என்ற செய்தி காதில் எட்ட, நித்திரை விட்டு எழுகிறான். எழுந்திருந்தவன் உடனே தான் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பார்க்கின்றான். பொட்டலங்களைக் காணவில்லை…. யாரோ அந்தச் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்துச் சாப்பிட்டு விட்டார்கள். பொங்கி வந்த அழுகையினை சுபேசனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. உணவு இருக்கும் என்ற நம்பிக்கையோடு வருவார்களே தன் தோழர்கள் அவர்களுக்கு என்னவென்று சாப்பாடு இல்லையெனச் சொல்வது அவன் துடித்துப்போனான்.

முதல் நாள் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டுடன் சென்று களைத்துப்போய் வந்திருக்கிறார்களே எப்படி பசியைத் தாங்கிக் கொள்ளப்போகிறார்கள். அவர்களிற்கு ஒரு வேளை உணவுகூட கொடுக்க முடியவில்லையேயென கலங்கினான். அவனது மன வேதனை கண்களால் வெளியேறிக்கொண்டிருந்தது. பெற்ற பிள்ளைகள் பசியில் துடிப்பதைப் பார்த்து ஒரு தாய் அழுவாளே அதே மாதிரி அழுதான் எங்கள் சுபேசன். அவன் தோழர்கள் எவ்வளவு சமாதானப்படுத்தியும் சுபேசனின் அழுகை தீருவதாக இல்லை. நின்ற வேறு தோழர்கள் அங்கு தேடி, இளநீர்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து சுபேசனிற்கும் கொடுத்த போதும் அவன் குடிப்பதாய் இல்லை.

‘என்ர பெடியள் சரியான பசியாய் இருப்பார்கள் அவங்களுக்குக் கொடுங்கோ எனக்கு வேண்டாம்’ அவன் மறுத்தே விட்டான். இப்படித்தான் என்றும் தன்னை விட பிறரை நேசிக்கும் மனம் அவனிற்கு. நான் கடைசியாகச் சிரித்து அவனோடு பேசிய அந்த இறுதியான அந்த நேரமே இவனது உணர்வுகள் எவ்வளவு புனிதமாக இருந்தது.

ஆணையிறவு படைத்தளத்திற்கு ஊடுருவி முதலாவது தடை தாண்டியாகி விட்டது. தாக்குதல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில மணித்தியாலங்கள் இருந்தது. இறுதியாக நாங்கள் பழற்ரின்களையும், உலர் உணவுகளையும் சிரித்து கலகலப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுபேசன் மட்டும் ஒவ்வொரு போராளியின் முகத்தையும் பாசமாய்ப் பார்த்தான். அவனது முகத்தில் லேசாக சோகம் படர்ந்திருந்தது. இன்னும் ஒருசில மணித்தியாலங்களிற்குள் வெடிக்கப்போகும் அந்த சுபேசன் என்ன சொன்னான் தெரியுமா?…..

‘பார் மச்சான் எவ்வளவு சிரிப்பு கலகலப்பாக இருக்கிறான்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில்_ _’ அவனால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. தீயிற்குள் இருந்து நீர் வடியும் உணர்வு அவனுக்கு. அவன் தனியாக இலக்கை அழிக்கச் சென்றிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டான். தன்னுடன் சேர்ந்து கூடிக்கும்மாளம் போட்டுப்பழகிய இந்த வீரர்கள் இன்னும் சில மணி நேரத்தில் காவியங்களாகப் போகிறார்களே என்ற ஏக்கம் தான் அவனுக்கு. தன்னை அழிக்கத் துணிந்த அந்த வீரன் இறுதி நேரத்தில் இப்படி ஏங்கினான் என்றால், அவன் மற்றவர்களின் வாழ்வை, மற்றவர்களை எப்படி உன்னதமாக நேசிக்கின்றான். இப்படி எல்லோரிலும் பாசம் வைக்கும் சுபேசன் இயக்கத்திற்கு வந்ததும், அண்ணனைப் பிரிந்து வாழ முடியாது என்று அண்ணனுடன் கூட இருப்பதற்காக இயக்கத்திற்கு வந்தாளே அவன் தங்கை. அவள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான்.

தன் தங்கை மீதும். எம் தேசம் மீதும், ஒவ்வொரு மக்கள் மீதும், எங்கள் தலைவன் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதுதான் அவனை ஒரு உன்னத கரும்புலி வீரனாக்கியது.

சண்டைகளின் சீறல் இன்னும் அடங்குவதாய் இல்லை. தொடர்ந்து வெடிமுழக்கம்.
‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’

சுபேசன் அழுத்தமாக உரைத்தது வானில் எதிரொலித்தது. எப்போதுமே மற்றவர்களிற்காக சுவாசித்துப் பழகிப்போன அவனது மூச்சு நிச்சயம் எம் தேசத்தை வாழவைக்கும்.

கரும்புலி

லெப்.கேணல் சுபேசன்ஃ கிள்ளிவளவன் —
மருசலீன் அல்வின் ˜
மன்னார்

பிறப்பு:- 02-07-1971
இயக்கத்தில்:- 10-02-1990
சகோதரர்கள்:- ஒரு அண்ணனும், 03 அக்காவும், 04 தம்பியும், ஒரு தங்கையும்.

கரும்புலியாய் இணைந்துகொள்ள முன் பங்கு பற்றிய தாக்குதல்கள்
ஆ.க.வெ. பெருஞ்சமர்
மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சண்டை, கொக்குத்தொடுவாயில்      மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல்
சின்னமண்டலாய்ப் பகுதியில் மேற்கொண்ட காவலரண் அழிப்புச்சண்டை
கட்டுப்பத்தை இராணுவ முகாம் தாக்குதல்

@ நினைவுப்பகிர்வு – விடுதலைப்புலிகள் இதழ்
சித்திரை – வைகாசி, 1999

Vizhutherintha Virudsathin…

விடுதலைப் புலிகள் – குரல் – 89

 

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments