
இயக்கச்சியில் எங்களது வாகனம் பழுதுபட்டு நின்றதால் பார்த்துவர (05.07.1992 ஞாயிற்றுக் கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில் பளையில் இருந்து இயக்கச்சிக்குப் போய்க் கொண்டிருந்தோம். புதுக்காட்டுச் சந்திக்கருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது இயக்கச்சிப் பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று வட்டமிட்டு வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருந்தது. மேலே உலங்கு வானூர்தி சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது தரையிலிருந்து எறிகணைத் தாக்குதலின் வெடியோசைகளும், துப்பாக்கி வேட்டொலிகளும் கேட்டுக் கொண்டிருந்தன ; அப்பிரதேசம் அதிர்ந்து கொண்டிருந்தது.
நானும் என்னுடன் கூட வந்த சின்னமணி என்பவரும் தொடர்ந்து சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். சன நடமாட்டம் மிகக்குறைவு. இயக்கச்சி -கொம்படி வழிப் பயணிகளின் போக்குவரத்து பலவேகய – 2 நடவடிக்கையால் தடைப்பட்டிருந்தது. சண்டை(பலவேகய – 2 நடவடிக்கை) ஆரம்பமாவதற்கு முதல் 25-6-92 அன்றே இயக்கச்சியில் குடியிருப்புகள் மீது குண்டு வீச்சும் எறிகணைத் தாக்குதலும் தொடங்கியதால் மக்கள் (சண்டை வலுப் பெற்று) தாக்குதல் கடுமையாகியதும் மெல்ல மெல்ல வெளியேறி சண்டை நடக்காத இடங்களுக்குப் போகத்தொடங்கியிருந்தனர்.
ஆனாலும் இடையிடை பொதுமக்கள் இருந்தனர் . நாங்கள் செல்லும் போது புதுக்காட்டுச் சந்தியிலிருந்து வீதியில் இருபக்கமும் உள்ள தென்னந் தோட்டங்களில் விமானங்கள் வீசிய குண்டுகளினால் தென்னைகள் முறிந்து, சிதைந்து கிடந்தன. மனதைத் துயர் வருத்தியது. இந்த மரங்களை வளர்க்க எவ்வளவு உழைப்பு உழைத்திருப்பார்கள். பல இடங்களில் குண்டுகள் வீசப்பட்டதன் அழிவுகள் தெரிந்தன.திடீரெனச் சின்னமணி மூக்கைப் பொத்தினார். எங்கிருந்தோ நாற்றவாடை அடித்தது. குண்டு வீச்சினால் ஊரவர்களின் ஆடோ, மாடோ பலியாகியிருக்கக் கூடும். முறிந்த தென்னைகளினதும், வெடி மருந்தினதும் ஒரு வகைநெடி அடித்தது. சிங்கள இராணுவத்திற்கு தமிழரின் மந்தைகள் என்றால் என்ன? மரங்கள் என்றால் என்ன? வீடுகள் என்றால் என்ன? எல்லாம் விரோதம்தானே. தமிழரே எதிரிகளாக அவர்களுத் தெரியும் வரை தமிழருடையவை அந்தப் பார்வையிலிருந்து தவறுமா? ‘மருண்டவன் கண்ணுக்குத் தெரிவதெல்லாம்….’
நாங்கள் கரந்தாய்க் குளத்தைக் கடந்து இயக்கச்சிக்கு அண்மையாகச் செல்லும் போது “சகடை வருகிறது” என்று சின்ன மணி சொன்னார்.
கிளிநொச்சிப் பக்கத்திலிருந்து (தெற்கிலிருந்து வடக்கு நோக்கி) Y-8 விமானம் வந்து கொண்டிருந்தது. சுற்றிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி இப்பொழுது ஆனையிறவு முகாமில் தரையிறங்கிவிட்டது. சகடை வந்தவுடனேயே குண்டுகளைப் போடத் தொடங்கியது. ‘சியாமாச் செட்டி’ குண்டு வீச்சு விமானங்கள் வட்டமிட்டுப் பறந்தே குண்டுகளை வீசும். ‘அவ்ரோ’ விமானமும் அப்படித்தான். ஆனால் Y-8 விமானம் அப்படியல்ல. விமானம் வான்வெளிப் பிரதேசத்தில் ஒரு சீராகப் பறந்து கொண்டிருக்கையில் இலக்கை நோக்கி குண்டுகளை வீசும்.
முதலாவது குண்டு எவ்விடத்தில் விழுகிறது என அவதானித்து, நாம் தற்காப்பு எடுத்துக் கொண்டோம். இயக்கச்சி – சங்கத்தார் வயல் பகுதியில் குண்டு விழுவதாக நாம் அனுமானித்துக் கொண்டோம். நாங்கள் நின்ற இடத்திற்கு அருகில் சில பொது மக்களும் இருந்தனர். இருந்தவர்களின் மனதில் பயத்தின் மிரட்சி
முகங்களிலும், அவர்களின் பதட்டத்திலும் தெரிந்தது. நாங்கள் பயப்பிடாதீர்கள், பயந்து என்ன ஆகப்போகிறது என அவர்களை உற்சாகப்படுத்தி விமானத்தை அவதானித்துக் கொண்டிருந்தோம். எட்டாவது நாளாக சண்டை நடைபெறுவதால் இடை விடாத விமானத் தாக்குதலில் எவ்வளவோ அழிவுகள் அந்தப் பகுதியில் தெரிந்தன. மின்கோபுரம் கடைக்கட்டிடங்கள், வீடுகள், சந்தை, பாடசாலை, தேவாலயம், மற்றும் மரங்கள் செடிகள் எல்லாமே இடிந்தும், சிதைந்தும், அழிந்தும் காணப்பட்டன. ஊழி தாண்டவமாடிய தடயங்கள் துயரத்தின் வடுக்களாக நெஞ்சைப் பிழிந்தன. ஒவ்வொரு நாள் தாக்குதலுக்குள்ளும் இந்தச் சனங்களும் இந்தப் பொடியளும் (போராளிகளும்) எவ்வளவு பாடுபட்டிருக்குதுகள்” எனச் சின்னமணி என்னிடம் ஆதங்கத்துடன் கூறினார். உண்மையில் இவையெல்லாம் உணர்வைப் பிழியும் நிகழ்வுகள் தான். எம்முடன் இரண்டு ஆசிரியர்களும் நின்றார்கள். எல்லோருமாக பத்துப்பேர் வரையில் தான் அங்கு நின்றோம்.
போராளிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். விமானத்தை நோக்கி சுடும் ஒலி கேட்டது. காயப்படும் போராளிகளை எடுத்துச் செல்வதற்காக வாகனங்களும், சாரதிகளும், துணையாகவும் பராமரிக்கவும் வேறுசிலரும் அங்கங்கே நின்றனர். தண்ணீர் நிரப்பிய கொள்கலனை இரண்டு போராளிகள் தடியில் கொழுவி சிரமப்பட்டுத் தூக்கி வந்தனர். சின்னமணியும் நானும் அவர்களிடமிருந்து கொள்கலனை வாங்கி சைக்கிளில் கொண்டு செல்லவேண்டிய இடத்திற்குக் கொடுக்கச் சென்றோம்.
விமானம் தொடர்ந்து குண்டுகளை வீசிக் கொண்டிருந்தது. கீழேயிருந்து விமானத்தை நோக்கிப் புலிகள் சுட்டுக் கொண்டிருந்தனர். தண்ணீர்க் கலனை உரிய இடத்தில் கொடுத்து விட்டுத் திரும்பினோம். இன்னும் விமானம் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தது. இப்போது நாங்கள் முன்னர் நின்ற இடத்திற்கு வந்து விட்டோம். அருகில் நின்ற பெண் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார்.
“இந்தக் கொடுமை செய்வாங்கள் ஏனிப்பிடி அநியாயம் செய்கிறாங்கள்? இப்படியும் ஒரு அரசாங்கமோ? எத்தனை பிள்ளைகள் இதில் அகப்படுமோ?” என ஆதங்கப்பட்டார். இன்னொரு விமானம் குண்டினைப் போட்டுவிட்டு ஆழியவளைக் கடற்கரையை நோக்கி சென்று திரும்பி மறுபடியும் முதல் வீசப்பட்ட இலக்குக்கு குண்டினைப் போட்டுவிட்டு பரந்தன் பக்கமாகச் சென்று திரும்பி… (வடக்குத் தெற்குத் திசையில் எட்டு வடிவில் பாதையமைத்து) மீண்டும் ஒரு குண்டு போட்டு. அரை மணித்தியாலம் அகோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. விமானம் யுத்தப் பிரதேசத்திற்கு நேராக வரும் பொழுது புலிகள் தரையிலிருந்து துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டேயிருந்தனர். ஒவ்வொரு குண்டும் நாங்கள் போடப்படும் போதும் அவதானித்துக் கொண்டேயிருந்தோம். ஒரு ஊமல் அளவில், சிறியதாக, கறுப்பாக குண்டு விமானத்திலிருந்து கீழே வந்து கொண்டிருக்கும். விமானத்திலிருந்து தள்ளப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாக குண்டு பெரும் அதிர்வுடன் வெடிக்கும். இவ்வாறு ஏழு குண்டுகள் போடப்பட்டு விட்டன.
வடதிசையிலிருந்து திரும்பி எட்டாவது குண்டும் போடப்பட்டாயிற்று. நாங்கள் விமானத்தில் கண்பதித்திருந்தோம். புலிகளின் துப்பாக்கிகள் முழங்கிக் கொண்டேயிருந்தன. திரும்பி வந்து கொண்டிருந்த விமானம் அந்தரத்தில், வான் வெளியில் தீப்பற்றியது. தீயும் புகையும் தெரிந்த சம வேளையில் பெரும் அதிர்வுடன் வெடித்தது. வெடியா அது? அதன் அதிர்வு மரம், செடி, நிலம் எல்லாவற்றையும் ஒரு கணம் ஆட்டி வைத்தது. இருதயமும், செவியும் இயல்பு மீறித் தொழிற்பட்டன. (இந்தச் சத்தமும் அதிர்வும் பளை, எழுதுமட்டுவாள் வரை இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்)
எல்லாம் ஒரு நிமிடத்துள் முடிந்தது. பேய்கள் சங்காரமாகின . எங்களுடன் நின்றவர்கள் மகிழ்ச்சியில் சத்தமிட்டனர். ஆரவாரித்தனர். எல்லையற்ற சந்தோசம் அது. விமானம் வானத்தில் வெடித்துச் சிதறியதும் கறுப்பாக ஒரு பொருள் மெல்ல மெல்ல கீழே வந்து கொண்டிருந்தது. அப்பொருள் விழும்போது அதன் பின்னால் (மேலிருந்து கீழாக) புகைக் கோடு அப்பொருளுடன் தொடர்வது தெரிந்தது. (ஜெட் விமானம் செல்கையில் புகைக்கோடு தெரியுமே…. அது வெண்ணிறமாகத் தெரியும், இது கரும்புகையாகத் தெரிந்தது.)
விமானம் அழிந்ததில் எல்லோருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி.தொலைவார் தொலைஞ்சு போனாங்கள். எங்கட பொடியள் கெட்டிக்காரர் தான்”என்று அருகில் சொல்லிக் கேட்டது. சிதைவுகள் கீழே விழுந்த பின் தூரத்தில் காட்டுத் தீ மூண்டெரியும் போது எவ்வாறு கரும் புகையாகத் தெரியுமோ அவ்வாறே புகைமண்டலமாகத் தெரிந்தது. நீண்டநேரமாக புகை மேற்கிளம்பியபடியே இருந்தது. மாலைச் சூரியன் மறைந்து இருள் பரவும் வரையில் புகைப்படலம் காற்றில் எழுந்து கொண்டேயிருந்தது. பொழுது இருட்டி விட்டதால் அப்பாலே செல்ல முடியாமல் நாங்கள் பளைக்குத் திரும்பினோம். பளைக்கு அண்மையில் வரும்போது வழிநெடுக மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம்; வாகனச் சாரதிகளின் சந்தோசப் பிரவாகம். சிறு பிள்ளைகளின் ஆனந்தத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது.
சன்னதமாடிய பேய்கள் அழிவதில் யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது. Y -8 விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது மட்டுமல்லாமல் விமானியின் சடலத்தையும், விமானத்தின் சிதைவுகளையும் புலிகள் மீட்டெடுத்தனர். மறு நாள் (திங்கள்) காலை 7.00 மணியளவில் நான் யாழ்ப்பாணம் வந்தபோது கோண்டாவில் பகுதியில் அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
புலிகளின் வேகத்தையும், செயற்திறனையும் நினைத்து வியந்தேன்.- முதல் நாள் இராணுவ நடவடிக்கை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் போது, அப்பகுதியிலிருந்து மாலை நேரம் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் சிதைவுகளையும், விமானியின் சடலத்தையும் இவ்வளவு துரிதகதியில் இரவிரவாக மீட்டெடுத்துள்ளனர். புலிகள் புலிகள்தான். வரலாற்றுச் சக்கரத்தைப் புரட்டக் கூடிய திறன் படைத்தவர்கள் ‘ புலிகள்’ என்பதற்கு இந்தச் சம்பவம் மேலும் ஒரு சான்று.
-கருணாகரன்
எரிமலை, மார்கழி, 1992.
தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்
![]()