×

இந்திய-சிறீலங்கா சூழ்ச்சி வலைக்குள் தமிழ்க் குழுக்கள்

இந்திய-சிறீலங்கா சூழ்ச்சி வலைக்குள் தமிழ்க் குழுக்கள்

தன்னாட்சி உரிமைப் பிரச்சினையில் தமிழமைப்புக்கள் புலிகளோடு ஒன்றுசேர்ந்து ஒரே குரலெழுப்பியதும், திம்புப் பேச்சுக்கள் முறிந்ததும், தொடர்ந்தும் புலிகள் இயக்கம் ஆயுதப் போரில் முன்னணிப் படையாக நின்று சிங்கள இராணுவத்தின் முதுகெலும்பை முறித்து வருவதும் இந்திய அரசுக்குச் சினத்தைக் கொடுத்தது. தமிழ் அமைப்புக்கள் மத்தியில் ஒற்றுமையைக் குலைத்து, மோதல்களை உண்டுபண்ணி, புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, கடுகதியில் முன்னேறிச் செல்லும் ஆயுதப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசு சதி செய்தது. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை வழங்கிப் புலிகளை மோதி அழிக்கத் தூண்டிவிட்டது. இதற்கிடையில் சிங்கள அரசு புளொட் தலைமையுடன் இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திப் புலிகளை அழிக்கும் இன்னொரு சதியில் ஈடுபட்டது.

இப்படியாகத் தமிழ்க் குழுக்கள் இந்திய-சிங்கள அரசுகளின் சூத்திரதார சூழ்ச்சிவலைக்குள் சிக்குப்பட்டுப் புலிகளுடன் மோதுவதற்குத் துணிந்தன. தேசிய விடுதலைப் போராட்டத்திலோ, அன்றித் தமிழீழ மக்களின் நலனிலோ எவ்வித அக்கறையும் காட்டாது, முற்றுமுழுதாக சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த ஆயுதக் குழுக்கள், இந்திய ஏகாதிபத்தியத்தினதும், சிங்களப் பேரினவாதத்தினதும் சூழ்ச்சிக்குப் பலியாகி, தமிழரின் விடிவுக்காக இரத்தம் சிந்திக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை அழிக்க முற்பட்ட போது, புலிகளும் தற்காப்பு யுத்தத்தில் குதிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1986 மே மாதம் ரெலோ இயக்கத்துடனும், நொவெம்பர் மாதம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனும் மோதல்கள் நிகழ்ந்து, இவ்விரு இயக்கங்களும் விடுதலைப் புலிகளால் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டன. புளொட் இயக்கம் தடைசெய்யப்பட்டு அவர்களது செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. எட்டப்பர் கோஸ்டிகளுக்கு எதிராகப் புலிகள் ஈட்டிய வெற்றி, தமிழீழச் சுதந்திரச் சுடரை அணைந்து போகாமல் பாதுகாத்தது. இந்தியாவின் கூலிகளாக மட்டுமன்றி, மக்கள் விரோத சக்திகளாகவும் செயற்பட்ட இந்த அமைப்புக்கள் செயலிழந்து போக, தமிழீழத்தில் தலைவரித்தாடிய அராஜகமும் நின்று போயிற்று.

எதிரி அமைப்புக்களின் பகை முரண்பாடுகள் நீங்கியதால் தமிழீழத்தில் புலிகள் இயக்கத்தின் மேலாதிக்கம் வளர்ந்தது. சிங்கள இராணுவத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்றுமில்லாத முனைப்புடன் முன்னேற்றம் கண்டது. பலமுனைகளில் வெடித்த புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கள இராணுவம் முகாமுக்குள் முடங்கியது. யாழ்ப்பாணக் குடாநாடும், வடக்கின் பெரும் பகுதிகளும் விடுதலைப் புலிகளின் பெரும் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக மாறின. சிங்கள அரசு தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments