
தமிழராய்ச்சி மாநாட்டுக் கொலைகள்
1974ஆம் ஆண்டு சனவரி மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், இனத்துவேச அரசியலின் அசிங்கமான வெளிப்பாடாக அமைந்தன. தமிழரின் கலாச்சார வாழ்வைச் சிதைக்கவும் சிங்கள அரசு தயங்காது என்பதை இந்நிகழ்வு எடுத்துக் காட்டியது. இச்சம்பவம் தமிழீழ மக்கள் மனதில் என்றுமே மாறாத ஒரு வடுவை ஏற்படுத்தியதோடு, இன முரண்பாட்டை மேலும் இறுகச் செய்தது.
தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த விடாது தடுக்க சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பகீரத முயற்சிகளைச் செய்தது; இறுதியில் சிங்களப் பொலீஸாரை ஏவி மாநாட்டைக் குழப்பியது. இந்தச் சம்பவத்தில் 9 அப்பாவித் தமிழர்கள் கொலையுண்டார்கள். இந்தப் படுகொலைச் சம்பவத்திற்குச் சூத்திரதாரியாக விளங்கியவர் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவாகும். சுதந்திரக் கட்சியின் வடமாகாணப் பிரதான அமைப்பாளராக இயங்கிய துரையப்பா, அரசின் அடிவருடியாக இருந்து தமிழ்த் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்த் தீவிரவாத இளைஞர்களை அரசுக்குக் காட்டிக் கொடுத்தார். தமிழராய்ச்சி மாநாட்டிற்கு சிங்களப் பொலீஸாரை ஏவிவிட்டதற்கு இவரே காரணகர்த்தாவாக விளங்கினார். இந்த இனத்துரோகியை அழித்து, சிங்கள அரசுக்கு ஒரு பாடம் புகட்டப் பிரபாகரன் முடிவு செய்தார்.
இதற்கிடையில் தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளால் கொதிப்படைந்த சிவகுமாரன், அல்பிரட் துரையப்பாவையும், உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவையும் குண்டுவைத்துக் கொலை செய்ய மேற்கொண்ட பகீரத முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் பொலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த சிவகுமாரன், 1974 ஜுன் 5ஆம் திகதி வீரமரணத்தைத் தழுவிக் கொள்கிறான். விடுதலையுணர்வும், வியப்பு மிக்க துணிச்சலும் கொண்ட மகத்தான ஒரு விடுதலை வீரனை இழந்து தமிழீழம் துயரில் ஆழ்ந்தது.