×

மேதகு தேசியத்தலைவரின் இலட்சிய ஆசைகள்.

மேதகு தேசியத்தலைவரின் இலட்சிய ஆசைகள்.

ஆசைகள்…
அவை அலாதியானவை.
ஒவ்வொருவரும் சிற்சில ஆசை விதைகளை தமது மனங்களில் நட்டுவைத்து- நீரூற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஆசைப்படுவது மனித சுபாவம்-இயற்கை உணர்வு.
சாதாரண மனிதர்களும் எதையாவது அடைய ஆசைப்படுவார்கள்; சரித்திர மனிதர்களும் எதை எதையோ நினைத்து ஆசைப்படுவார்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம், குடும்பப் பொருளாதாரத்தின் முன்னேற்றம்… இவை, சாதாரண மனிதர்களின் சாதாரண ஆசைகள்.

தேசத்தின் விடுதலையை அந்த விடுதலை நோக்கிய ஒவ்வொரு வெற்றிப்படிகளை -கண்குளிரக் கண்டுகளித்தல்… இவை சரித்திர மனிதர்களின் இலட்சிய ஆசைகள்.

இத்தகைய இலட்சிய ஆசைகள் பலவற்றைத் தலைவர் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

படைத்துறைப் பள்ளியைத் திறந்துவைத்து விட்டு தனது இலட்சிய ஆசைகளில் ஒன்றை தலைவர் இவ்விதம் வெளிப்படுத்தினார்.

“நான் ஒரு கனவு காண்கின்றேன். அந்தக் கனவு நனவாகி, நடைமுறை உண்மையாக வேண்டும் என்பது எனது அவா. எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக அறிவு ஜீவிகளாக. தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுநர்களாக, நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக, ஒரு புதிய புரட்சிகர பரம்பரை தோன்றவேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக – நிருவாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும். இது ஒரு பெரிய ஆசை; அலாதியான கனவு. எனினும் நான் முயற்சிக்கின்றேன். முயற்சி ஆக்கம் தரும் என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு.”

இப்படித்தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் –

அது 1970 களின் பிற்பகுதி –

இரண்டு கைகளினதும் விரல்களது தொகைக்குள் அடக்கப்படக்கூடிய அளவு எண்ணிக்கையான உறுப்பினர்களே, அப்போது இயக்கத்தில் இருந்தனர்; அந்த உறுப்பினர்களுக்கான இராணுவப் பயிற்சிகளையும் தலைவரே வழங்கினார். இயக்கத்தின் தலைவராகவும், அதேவேளை ஒரு பயிற்சி ஆசிரியனாகவும் தலைவர் அவர்கள் செயற்பட்டகாலம் அது.

இருநூறு முந்நூறு பேர்கொண்ட இன்றைய பயிற்சி முகாம்களையும், ஐந்து -பத்துப்பேர்கொண்ட அன்றைய பயிற்சி முகாங்களையும் உங்களது மனத்திரையில் மாறி மாறி எண்ணிப் பாருங்கள். அது வியப்பாகவும் இருக்கும்; பெருமையாகவும் இருக்கும்.

பயிற்சி | கொடுப்பது – பயிற்சி முகாங்களை நடாத்துவது மட்டுமல்ல, அந்த ஐந்து -பத்துப் பேருக்கான இராணுவ சீருடைகளைப்
பெறுவதற்கும் அது கடினமானதொருகாலம்:

அன்று ஒரு நாள்…

எதிர்காலத்தில் இயக்கத்தில் ஏற்படவேண்டிய வளர்ச்சி பற்றி திரு. அன்ரன் பாலசிங்கத்திற்கு எடுத்து விளக்கிக்கொண்டிருந்த போது, தலைவர் சொன்னார்…

அண்ணை!… ஒரு ஐம்பது போராளிகள் சீருடை அணிந்து கொண்டு – ஆயுதங்கள் ஏந்தியபடி – அணிவகுத்து நிற்கும் காட்சியை நான் பார்க்கவேண்டும் என்பதுதான்” எனது இப்போதைய ஆசை, என்றார்.

தலைவர் வெளிப்படுத்திய அந்த ஆசையை – தான் வீரச்சாவடையும்வரை -மூத்த உறுப்பினர் லெப். சீலன் (சாள்ஸ் அன்ரனி] தனது மனதிலேயே சுமந்து திரிந்து பணியாற்றினார். அவர் வீரச்சாவடைவதற்கு சில காலத்திற்கு முன்னர் ஏதோ ஒரு அலுவலாக வேலையாக யாழ் நகரத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. அந்தக்காலம். யாழ்நகரம் சிங்களப் படைகளின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருந்த நேரம். ஒழுங்கை ஒன்றிற்கூடாக துவிச்சக்கரவண்டியில் சென்ற சீலனும் அவருடன் கூடச் சென்ற இன்னொரு தோழரும்,நகரத்தின் உள்ளே இருந்த பிரதான வீதியில் போய் ஏறியதும், அங்கே இருந்த ஒவ்வொரு கடைகளுக்கு முன்னாலும் சிங்கள இராணுவத்தினர் நின்றதைக் கண்டனர் -ஆயுதங்களைத் தோளில் போட்டபடி கூட்டங்கூட்டமாக நின்ற படையினரைப் பார்த்துவிட்டு, சீலன் தனது சக தோழரிடம் “மச்சான்! இவங்கள் நிற்கிறதைப்போல. எல்லா இடத்திலும் எங்கடை பொடியளும் ஆயுதங்களோட சிரிச்சுக் கதைச்சபடி -கூட்டங்கூட்டமாக நிற்கிறதை, ஒரு முறை கற்பனை செய்துபார்!””

தலைவரின் இலட்சிய ஆசை ஒன்று, தலைவரின் வலது கரமாகச் செயற்பட்ட அந்தத் தளபதியையும் பற்றிக்கொண்டு.

அவரை இயக்கியதையும் காணக்கூடியதாக உள்ளது.

தலைவரின் இலட்சிய ஆசையை நிறைவேற்றப் பாடுபட்டதுடன், உயிர்த்தியாகத்திற்கு ஒரு அற்புதமான முன்னுதாரணமாகத் திகழ்ந்த அந்தத் தளபதி இன்று இல்லை; ஆனால், அவரது பெயரிலேயே ஒரு படையணியை உருவாக்கி, அவரது கற்பனையை தலைவர் அவர்கள் நனவாக்கியுள்ளார்.

’50 புலிவீரர்களைச் சீருடையுடன் பார்க்கவேண்டும்’ என்ற தலைவரின் ஆசை, அவர் அதை வெளியிட்டு நாலு ஐந்து வருடங்களிலேயே நிறைவேறிவிட்டது. பின்னர், ஐம்பது நூறாகி, நூறு ஆயிரமாகி -இன்று – ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகிவிட்டது ! ‘ கெரில்லாக் குழு’ என்ற பெயர் மாறி, ‘உலகிலேயே பலம் வாய்ந்த விடுதலை இயக்கம்’ என்ற புகழும் எமது இயக்கத்திற்குக் கிடைத்துவிட்டது!

அண்மையில் சிங்களப் படைகள் ‘முன்னோக்கிப் பாய்ச்சலில் ஈடுபட்டபோது அதற்கு எதிராக – தலைவர், ‘புலிப்பாய்ச்சலை” நிகழ்த்தினார்.

’50 போராளிகளை வரிசையாக நிற்கவைத்துப் பார்க்கவேண்டும்’ என்று ஆசைப்பட்ட தலைவர் அவர்கள், “புலிப்பாய்ச்சலில்” பங்கு கொள்ளத் தயாராக – கனரக ஆயுதங்களுடனும் வரிப்புலிச் சீருடையுடனும் ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கான புலிவீரர்கள், தத்தம் தளபதிகளுடன் அணிவகுத்தபடி. கம்பீரமாக நின்றுகொண்டு உறுதிப் பிரமாணம் எடுத்த காட்சியைப் பார்த்தபடி சொன்னார்….

“இதைப் பார்க்க எனக்கு, உண்மையில் மெய்சிலிர்க்குது!”

இப்படியான சின்னச் சின்ன இலட்சிய ஆசைகளைப் போலவே, பென்னம் பெரிய கனவுகளும் தலைவரின் மனதில் இருக்கின்றன. இந்த ஆசைகளைப் போலவே. அந்தக் கனவுகளும் ஒரு நாள் நனவாகும்!

– வி.பு இதழ் 1995. கட்டுரை.
– தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments