×

உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி.

உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி.

தமிழ் பேசும் தேசிய இனத்தின் (THE TAMILNATION ALL OVER THE WORLD) எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியோரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ்நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இதுபற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர்.

அதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம். திட்டங்களைப் பத்துக்கணக்கில் வகுத்தோம். ஆனால் நாம் செயலில் ஒன்றையாவது நாம் செய்யவில்லை.

ஒருறுப்பு அரசியலமைப்பு (UNITARY) கொண்ட ஜனநாயக நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மைத் தேசிய இனமக்கள் பேரினவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ பேரினவாத மக்கள் அரசு அனுமதிக்க மாட்டாது. ஏனெனில் எண்ணிக்கையில் பெரும்பான்மை இனம், தமது அதிக எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நிரந்தரமாகத் தேசிய சிறுபான்மையினர் மீது தங்கள் ஆட்சியையே திணிப்பார்கள்.

அறவழி முதலில்…
சிறுபான்மை இனத்தினர். தங்கள் கோரிக்கைகளை பெரும்பான்மையினரிடம் முறையிடுவார்கள். மனுப் போடுவார்கள். மகாநாடுகள் கூட்டுவார்கள். தீர்மானங்களைப் போடுவார்கள். சட்டசபையிலும் கூக்குரலிடுவார்கள். ஆட்சியாளரிடம் தூதும் செல்வார்கள்.

வாழ்வா சாவா?
இவையொன்றும் பயன்படாத போது தேசிய சிறுபான்மை இனத்துக்கு தான் வாழ்வா சாவா என்ற நிலை ஏற்படும். அப்போது அவர்கள் மறப் போராட்டத்திலிறங்கி விட்டார்கள். உலகில் மக்கள் ஆயுதப் போரில் இறங்குவதற்கு இவைகளே காரணங்களாகும். இதே நிலை தான் இலங்கைத் தீவிலும் ஏற்பட்டுள்ளது.

கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன்! வீரனிலும் ஒரு மாவீரன்!! அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்! ஆயுதங்களைச் சேகரித்தான், தன் வாழ்விடமாகிய தமிழீழத் தாயகத்தையும் தன் மொழியையும், தன் மக்களையும் காப்பாற்றிட ஆயுதப் போரைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினான். போரில் இறங்கி விட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தோள் கொடுத்தனர். சிலர் பலராகி இன்று பல்லாயிரக்கணக்கானோராகி விட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிரையும். உடலையும் விடுதலைக்காக அர்ப்பணித்தனர்.

போர் நடைபெற்றது. (இன்றும் நடைபெறுகிறது) ஓராண்டு ஈராண்டல்ல, பல ஆண்டுகள். அவனை எதிர்த்து அடக்க முயன்ற அரசுகள் ஒன்றல்ல, இரண்டு பெரும்பான்மை மக்களைக் கொண்ட சிங்கள அரசு பிரபாகரனோடு போராடி வெல்ல முடியவில்லை. இறுதியில் அவனோடு போர்நிறுத்தம் செய்ய வந்தது. பேச்சுவார்த்தைக்கும் அழைத்ததே தவிர சிங்கள அரசினால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் பிரபாகரன் அந்த அரசுக்குச் சரிசமமாக இன்று காட்சியளிக்கிறான்.

சீனாவையும், பாக்கிஸ்தானையும் போரிட்டு வென்ற இந்தியப் பேரரசு, பிரபாகரனை அடக்க எழுபத்தி ஐயாயிரம் போர் வீரர்களைத் தமிழீழத்துக்கு அனுப்பியது. இறுதியில் அவனை அடக்கவோ பிடிக்கவோ முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

இதில் ஒரு அழகு. இந்த இரு அரசுகளுக்கும் நாடு உண்டு. படையுண்டு. ஆயுதங்களுண்டு. தங்குவதற்கு இடமும் உண்டு. உணவுண்டு. உடையுண்டு, பொருள் மற்றும் போர்க் கருவிகளுமுண்டு. தரைப்படையும், கப்பற்படையும், தரைப்படையுமுண்டு.

மேற்கூறியவற்றில் எதுவுமே இல்லாதது மட்டுமல்ல காலுக்கு மிதியடி கூட இல்லாது, உடம்பிற்கு நல்ல உடையுமில்லாது சிறுசிறு காடுகளிலும் புதர்களிலும் மறைந்து நின்று ஒரு நாள் அல்ல இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இரு அரசுகளோடும் போராடியிருக்கிறான் மாவீரன் பிரபாகரன்.

இத்தகைய வீரன் ஒருவன், புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டுகளாக எவனும் தோன்றியதில்லை.

தம்பி பிரபாகரனின் செயல் சரியா தவறா என்று ஐயப்பட்டவரும், அவனது நோக்கம் நல்லதா கெட்டதா என்று ஐயப்பட்டவரும், அவன் அடையப் போவது வெற்றியா தோல்வியா என்று ஐயப்பட்டவருமுண்டு. ஆனால் அவன் ஒரு மாவீரன் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு ஏற்பட்டதில்லை.

அத்தகைய மாவீரன் பிறந்த நாளையொட்டி அறிஞர் கோவை மகேசன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘வீரவேங்கை’ இதழ் ஓர் சிறப்பிதழாக நல்லறிஞர்களின் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகிறது.

நியாயமான காரணத்தை முன்வைத்துப் போராடுகின்ற எவனும் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. அது அவனது காலடியில் தானே வந்து விழும் என்பது பேரறிஞர் ஒருவரின் நல்வாக்கு.

இது மெய்ப்பிக்கப்பட்ட வேண்டும் என்றும், தம்பி பிரபாகரன் தமது இலட்சிய வெற்றிப்பதாகையை ஏந்தியபடி போர் முனையிலிருந்து மீண்டு, பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து, தமிழீழ நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் நற்றொண்டுகள் பல புரிந்து நல் வாழ்வு வாழ்கவென வாழ்த்துவதுடன், மாவீரன் பிறந்த நாளைக் கொண்டாடி, மலரை வெளியிட்டு, மகிழ்ச்சி அடைகின்ற “வீரவேங்கை” இதழ் இன்னும் விரிவடைந்து சிறப் பெய்தி ஒளி வீச வேண்டுமென முழு மனத்துடன் வாழ்த்துகிறேன்.

கி ஆ பெ விசுவநாதம்
இக்கட்டுரையாளர் முதுதமிழ்ச் சான்றோர்களில் ஒருவர், முத்தமிழ்க்காவலர் என்று தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பை எதிர்த்து ஏனைய அறிஞர்களுடன் சேர்ந்து போராடி இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியவர், “ஆகாஷ் வாணி” என்று இந்தியில் அழைப்பதை நிறுத்தி, தமிழக வானொலி நிலையத்தில், அகில இந்திய வானொலி நிலையம், என்று ஒலிபரப்பப்பட வேண்டுமென்று போராடி அதில் வெற்றியும் பெற்றவர். தமிழில் சகல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். சிறந்த சொற்பொழிவாளர், பல நூல்களை எழுதியவர். இவர்தான் தனது தொண்ணூறாவது ஆண்டு பூர்த்தியை தொண்ணூறு இடங்களில் கொண்டாடிய முத்தமிழ் வித்தகர் உயர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள்.

1949 ஆம் ஆண்டு பெரியவர் செல்வாவும், கோப்பாய்க் கோமான் அமரர் கு. வன்னிய சிங்கமும், தமிழ்க் காங்கிரசின் இனத்துரோகத்தைப் பொறுக்க முடியாது, அதிலிருந்து வெளியேறி, தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த காலத்திலிருந்து, தமிழீழத்தில் நடக்கும் போராட்டங்களையும் அரசியல் திருப்பு முனைகளையும் ஆழ்ந்த அக்கறையுடன் அவதானித்து வந்திருக்கும் இத்தொண்ணூறு வயது இளைஞர் ஈழத்தில் தமிழரசுக் கட்சி மாநாடுகளிலும், கல்லூரிகள், கல்விமான்களின் கூட்டங்களிலும் ஏராளமாக உரையாற்றியுளளார்.

இதோ இன்றைய தமிழீழத்தளபதி திரு.வே. பிரபாகரன் பற்றி தராசு போற் சமநிலையிலிருந்து சிறப்பாக ‘வீரவேங்கை’ க்கென அப்பெரியார் எழுதியுள்ள பொன்னோவியம்படியுங்கள்.

– கோவை மகேசன்
– வீரவேங்கை
– சனவரி 1990.
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments