
சிங்கள இனத்தின் பூர்வீக வரலாறு மிகவும் பூடகமானது.
மகாவம்சத்தின் புராணக் கட்டுக்கதைகளிலிருந்து இந்த வரலாறு ஆரம்பமாகிறது. மிகவும் வினோதமான அம்புலிமாமா கதைபோல, ஒரு சிங்கள ராசாவின் விரசமான காதல் விவகாரத்திலிருந்து, சிங்கள இனத்தின் வரலாறு தோற்றம் கொள்கிறது.
பௌத்த பிக்கு ஒருவரின் எழுத்தாணியிலிருந்து ஊற்றெடுத்த ஒரு அலாதியான கற்பனைக் காவியம், விஜயனையும் அவனது தோழர்களையும் ஈழத் தீவில் குடியமர்த்திவிடுகிறது. வட இந்திய ஆரியமும் அரச குலத்து இரத்தமும் சிங்கள இனத்தின் பூர்வீகத்தோடு சேர்க்கப்படுகிறது. கற்பனைக் காவியத்தின் கதாநாயகர்கள் வரலாற்று மனிதர்களாக அவதாரம் எடுத்தார்கள். புராணத்துப் பொய்மைகள் மெய்மை ஆக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் வரலாறு திரிக்கப்பட்டது.
சிங்கள பௌத்தம் வரலாற்றுப் புரட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரச உருவாக்கத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. அந்தக் காலத்திலிருந்தே ஆசிரமத்து ஆன்மீக அறநெறிகள் அரண்மனைக்குள் புகுந்துகொண்டன. பற்றுகளைத் துறந்து பரிநிர்வாணம் வேண்டிநின்ற கௌதமரின் துறவறத் தத்துவம், அதிகாரப் பற்றுக் கொண்ட அரசியல் உலகில் பிரவேசித்தது. அரசர்கள் போதிசத்துவர்களாக மாறினர். ஆசையைக் கொல்லவேண்டிய ஆன்மீகத் துறவிகள் அரசியல் பிக்குகளாக அதிகாரபீடம் ஏறினர். தர்மசீலம் அதிகார அரசியலுக்குள் புதைந்துபோனது. காருண்ய மார்க்கம் பேரினவாதமாகப் பேயுருவம் பெற்றது. வாளேந்திய சிங்கத்துடனும் அரச இலையோடும் ஆதி திராவிட இனக்குழு ஒன்று, அதியுன்னத தேசியமாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியது.
மனித குலத்தின் உன்னத மக்கள் சமூகமாக யூத இனத்தையும், பூமியில் புனித தேசமாக இஸ்ரேலையும் எபிரேயக் கடவுள் தேர்ந்தெடுத்தார் என்கிறது சியோனிசவாதம். இப்படியானதொரு தீர்க்கதரிசன அற்புதத்தைச் சிங்கள பௌத்தமும் சிருஷ்டித்துவிட்டிருக்கிறது. இந்தக் கற்பனைக் கருத்துருவாக ‘தம்ம தீப’ கோட்பாடு பிறந்தது.
பௌத்த தர்மத்தைப் பவுத்திரமாகப் பாதுகாக்க ஒரு புனித நாடும், ஒரு புனித இனமும் புத்த பெருமானால் தெரிவுசெய்யப்பட்டதாம். அரச மரத்தின் கீழ் சித்தார்த்த முனிக்கு பிரம்மஞானம் பிறந்த பொழுது இப்படியானதொரு மண்பற்றும், இனப்பற்றும் தோன்றியதாக சிங்கள பௌத்தம் கற்பனை செய்திருக்கிறது. இந்தக் கற்பனை வளத்தில் இலங்கைத் தீவு தர்மத்தின் இருப்பிடமாக, புத்தபெரு மானின் திருவருட்பேறுபெற்ற புனித பூமியாக மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு புராணத்து ஐதீகம் வரலாற்று உண்மையாகத் திரிக்கப்பட்டு, சிங்கள பௌத்த பேரின வாதத்தின் இரத்தமும் சதையுமாக உயிர் வடிவம் பெற்றது.
இந்த ஐதீகத்தின் அடிப்படையில் சிங்கள இனம் இலங்கைத் தீவு முழுவதற்கும் சொத்துரிமை கொண்டாடியது.’தம்ம தீபம்’ ஒரு இனத்திற்கே உரித்தான உடைமையாக மாறியது.ஐக்கியம், பிரதேச ஒருமைப் பாடு, இறைமை என்பதெல்லாம் சிங்கள இனத்தின் நில ஆதிபத்திய உரிமையை நிலைநாட்டும் கோட்பாடுகளாக அமைந்தன. புத்தரின் புனித பூமியில் ஒற்றை ஆட்சி என்ற போர்வையில் ஒற்றை இன சர்வாதிகாரம் தலைதூக்கியது.
புனித நாடு, புனித இனம், புனித மதம் என்ற கோஷங்களுடன் வெறி கொண்டு எழுந்த சிங்களப் பேரினவாதம் தமிழர்களை வெறுத்தது. விரோதிகளாகக் கருதியது. வேண்டப்படாத அந்நியர்களாக ஒதுக்கியது. இலங்கைத்தீவின் பூர்வீக குடி களாக, நீண்ட வரலாற்றுடனும், நாகரீகத்துடனும், தனித்துவ தேசியமாக, தனக்கே உரித்தான தாயக மண்ணில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களை அங்கீகரிக்க மறுத்தது.
தமிழரின் வரலாறு மறுக்கப்பட்டது.
தமிழரின் தாயகம் மறுக்கப்பட்டது.
தமிழரின் தேசியம் மறுக்கப்பட்டது.
புராணத்துப் பொய்களை வரலாற்று உண்மைகளாக, விசாரணையின்றி விழுங்கிக் கொண்டதால், தமிழரின் வாழ்வியல் மெய்மையை ஏற்றுக்கொள்ள சிங்கள இன வாதம் மறுத்தது. இதனால் எழுந்த இன முரண்பாடு போராக வெடித்தது. பூமி ரணகளமாக மாறியது. புனித
புராணத்து தம்ம தீபம் என்பது வெறும் ஐதீகமாக சிங்களவரின் மனவுலகக் குகைக்குள் வசித்து வரவில்லை. அது ஒரு பூதாகர ஆக்கிரமிப்புச் சக்தியாக, ஆயுதம் தரித்து தமிழரின் தாயகத்தை பலாத்காரமாக விழுங்கிவிட பகீரத முயற்சி செய்து வருகிறது.
தமது சொந்த மண்ணில், காலம் காலமாக வாழ்ந்துவந்த தமது வரலாற்றுத் தாயகத்தில், நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டுமென்ற தமிழ ரின் – நியாயமான, நீதியான நிலவுரிமைக் கோரிக்கை, கடந்த நாற்பது ஆண்டுகால இடைவெளியில், முறிந்த பேச்சுக்களும், உடைந்த ஒப்பந்தங்களும், முடிவில்லாப் போர்களுமாக இழுபட்டு, இன்று ஒரு பெரும் நில ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு நிற்கிறது.
வரலாற்றுத் திரிப்பால் எழுந்த தம்ம தீப கோட்பாடும், வரலாற்று எதார்த்தத்தில் பிறந்த தமிழர் தாயகக் கோரிக்கையும்,இரு தேசிய இனங்கள் மத்தியில் தீர்க்கமுடியாத பெரும் முரண்பாடாக விரிசலை விழுத்தியிருக்கிறது. இதனால் அரசியல் தீர்வுக்கான இடைவெளி மூடப்பட்டிருக்கிறது.
படைகளைத் திரட்டி, படையெடுப்பு நடத்தி,நிலத்தைப் பிடித்து, முள்வேலி போட்டு, புனித பூமியை விரிவாக்கம் செய்யும் இராணுவவாதக் கொள்கையும் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பியக்கத்தால் ஆட்டங்கண்டு வருகிறது.
தமிழர் தாயகத்தை ஏப்பம்விட எண்ணிய சிங்கள பௌத்த பேரினவாதம், என்றுமில்லாத பெரும் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது.
மத புராணத்து மாயையில் தோன்றிய இனவாத வெறியிலிருந்து சிங்கள தேசம் விடுபடாதபட்சத்தில், தமிழர் தாயகம் பிரிந்து சென்று, தனிநாடாகத் தனித்து வாழும் வரலாற்று நியதி தவிர்க்கமுடியாததாகிவிடும்.
![]()
சிங்கள இனத்தின் பூர்வீக வரலாறு மிகவும் பூடகமானது.