
அப்புவும் ஆச்சியும் தோன்றி மகிழ்ந்த பூமி இப்பூமியாம்!
அப்புவும் ஆச்சியும் தோன்றி மகிழ்ந்த பூமி இப்பூமியாம்!
சந்தமார் கவி பாடித்திரிந்ததும், சபைகள் யாவுமே தமிழில் திளைத்ததும்,
விந்தை ஆயிரம் செய்து உயர்ந்ததும், வேறிடத்திலா?
இல்லை இப்பூமியில்!
தென்றல் மேனியைத் தீண்டி மகிழ்ந்ததும்,
தேக வியர்வை சொரிந்து விளைந்ததும்,
கன்று போல நாம் ஓடித்திரிந்ததும், காதல் செய்து உருகிக்கிடந்ததும், நன்று நன்றென விடியும் வரையிலும் நாலு கோவில் திருவிழா பார்த்ததும் நின்று போனது.
எங்களின் தாயகம் நெருப்பு நீரிலே நீந்திக்கிடக்குது.
நெல் விளைந்து சரிந்து கிடந்ததும், நீள நின்று நாம் புதிர் எடுத்ததும்,
புல் வெளிகளில் மாடுகள் மேய்த்ததும்,
புதுப் பொலிவுடன் பள்ளிக்குப் போனதும்,
வல்லை வெளியினைத் தாண்டி மகிழ்வுடன் வண்டிலேறிச் சந்நதி சென்றதும்,
செல் விழுந்திடாக் காலப்பகுதியில் செய்து மகிழ்ந்த பூமி இப்பூமியாம்!
– புதுவை இரத்தினதுரை