×

தியாக திரவியம் சிவகுமாரன்

தியாக திரவியம் சிவகுமாரன்

எத்தகைய துன்பம்வரினும் தமிழீழத் தாயகம் இன்ப நிலையைக் காண்பதற்கு துணிவாற்றி நிலை காண்பாராகி நின்றவன் தியாகி சிவகுமாரன். உரும்பிராய் நகரில் பொன்னுத்துரை –அன்னலெட்சுமி தம்பதியருக்கு அருந்தவப் புதல்வனாக 26-08-1950 தோன்றினான். பெற்றோரால் திரவியம் என்று அழைக்கப்பட்டான். தமிழிழத்தின் திரவியமாக வாழ்ந்து காட்டினான் பண் தமிழ் பாலை உண்டு தவழ்ந்தான். வலிமையை இளமையில் உணர்த்தி வளர்ந்தான். கல்வியில் சிறந்து விளங்கினான். தமிழர்க்கு இன்னல்கள் விளைந்தால் சங்காரம் மிகமென்று போர் முரசம் கொட்டி அரணாக நின்றான். தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்த்தெடுக்கப்பட்ட போதிலும் ஆரம்பகாலத்தில் போராட்டத்திற்கான எழுச்சியினை ஏற்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவன் பொன். சிவகுமாரன் என்றால் அது மிகையாகாது.

சிறுவயதிலே அநீதிகளை எதிர்த்தல், தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, சமூக மேம்பாடு, தீண்டாமை ஒழிப்பு, சமய சீர்திருத்தங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதே அன்றைய அவனது வாழ்க்கைக் குறிக்கோள்களாகின. ஆயினும், இவ்வாறான அவனது தமிழ் சீர்திருத்தப் போராட்டத்திற்கு தடைக்கல்லாக இவனது சிறைச்சாலை வாழ்வு அமைந்திருந்தது. ஆயினும் சிறை மீண்ட சிறிது காலத்தில் தனித்தமிழ் நாடு ஒன்று அமைப்பதே இவனது பெருமூச்சாக உடலெங்கிலும் இளையோடி இருந்தது. சோதனைகள் வரும்வேளை துணிவோடு அதனை எதிர்த்து சாதனையாக்கிக் கொள்வதும், அநீதி தளைத்தோங்கும்போது அதனைக் களைந்து நீதியை நிலை நாட்டுவதுமே இவனது இயற்குணங்களாகின.

இவ்வாறான அதர்மப் போக்கை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய செயல்கள் ஒன்றா, இரண்டா எண்ணில் அடங்காதவை. ஒருமுறை நல்லூர் கோயிலில் திருவிழா நிகழ்ந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலினைப் பயன்படுத்தி சிங்களப் பொலிசார் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளத் தலைப்பட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த சிவகுமாரன். அவர்கள் மீது பாய்ந்தான். விளைவு, பொலிசார் அவனைக் கைது செய்து நல்லூர்க் கோயிலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். அங்கே பொலிசாருக்கும் அவனுக்கும் கலகம் ஏற்படுகிறது. நிலைமை மோசமாகவே பல பொலிசார் கூடி அவனை மடக்கிப் பிடித்து ஜீப் வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சிறையில் வைத்தனர். மூன்று நாட்களின் பின் அவனைத் தாயார் பிணையில் எடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இவ்வாறாக, அநீதிகளை எதிர்க்கும் குணம் கொண்ட சிவகுமாரன் அமைதி வழிப் போராட்டப் பாதையினை நிராகரித்துவிட்டு, ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் ஈழத்தமிழர்கள் இழந்த உரிமைகளை, சுதந்திரத்தைப் பெறமுடியும் என்ற முடிவுடன் 1971ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவையில் சேர்ந்து தன்னோடும் ஒரு சில இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு சிங்கள அரசையும், தமிழ்த் துரோகிகளையும் எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினான்.

1971, 1972ம் ஆண்டுகளில் தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக மாணவர் பேரவையைச் சேர்ந்த 42 பேர் கைது செய்யப்பட்டார்கள்.. சிவகுமாரனின் வழக்கு சாட்சியங்கள் இல்லாமையினாலும், நிரூபிக்கப்படாமையினாலும் தோல்வியடைந்தன. சிவகுமாரன் சிறையிலிருந்து வெளியே வருகின்றான். 1973ம் ஆண்டு குடியரசு தினம். தமிழீழ வரலாற்றில் மறக்கமுடியாத நாள். தமிழ்த் தலைவர்கள் பலர் இதனைப் புறக்கணிக்கும்படி வேண்டினார்கள். ஆயினும் சில துரோக எண்ணம் கொண்டவர்கள் இதனை ஆதரித்து, அதற்கான ஆயத்தங்களையும் செய்தார்கள். இந்நாளில் சிங்களவர்களின் சின்னமான சிங்கத்தினைத் தாங்கிநிற்கும் இலங்கைத் தேசியக் கொடி நிகழ்வின் போது இரு மருங்கிலும்கட்டி விழா கொண்டாடினார்கள். அத்தருணம் இவர்களுள் சிலரைப் பார்த்து சிவகுமாரன் ஏன் உங்களுக்கு இந்த வேலை… ச்சி… வெட்கமா இல்ல…?

என்று மனச்சீற்றத்துடன் கேட்க, இவனின் இறுமாப்பு சொல்லுக்கு அனைவரும் மௌனமாகினர். அச்சொல்லைக் கூறிவிட்டு அவன் சென்ற பின்பு அவர்களுள் சிலர் இவனுக்கு கட்டாயம் நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற கூறி எச்சரிக்கையினையும் தமக்குள் பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்தப் பரிமாற்றச் செய்தியினை ஏதோ விதமாக கேட்ட இவன். ‘யார் எனக்குப் பாடம் படிப்பிக்க விரும்பினீங்க? துணிந்தால் எனக்கு முன்னுக்கு வாங்கோ’ என்று மிகுந்த கோபத்துடன் ஒரு துண்டுக் கயிற்றின் நுனியிலே கல்லைக்கட்டி அத்தேசியக் கொடியின் மீது எறிந்து கொடியினை கிழே எடுத்து அதனைப் பலநூறு துண்டுகளாக கிழித்து எறிந்தான். அது மட்டுமல்லாது யாரும் கேட்டா இதனைச் சிவகுமாரன் தான் செய்தான் என்று சொல்லுங்கோ. நான் வீட்டிலே தான் இருப்பன் என்று வைராக்கிய மொழியை மொழிந்து விட்டு வீட்டிற்கு போய் இருந்தான்.

அது 1974ம் ஆண்டு தமிழர் பலர் அமிழ்த்தினுமினிய தமிழ் மொழிக்கு ஆராய்ச்சி மாநாடு நடாத்திய பொன் நாள். அது. அந் நிகழ்விற்காக வேண்டி பல தேசங்களிலிருந்து பல அறிஞர் பெருமக்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அந்நாளில் தொண்டர் அவைக்கு சிவகுமாரன் தலைமை தாங்கிக் கொண்டிருந்தான். நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந் நாளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுத் திகழும் அறிஞர் பலர் தமிழரையும், தமிழ் மொழியையும் பற்றி புகழுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

இவைகளை அதாவது தமிழையும், தமிழின் சிறப்புப் பற்றியும் உலகெங்கிலும் இருந்து வந்த அறிஞர்கள் பேசுவதை பொறுக்க முடியாத இலங்கை அரசு கண்மூடித்தனமாக பல கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசி, துப்பாக்கியினால் சுட்டு அதில் ஒன்பது பேரைக் கொன்று அவ்விடத்தினை சுடுகாடாக்கியது. சிறிது கணத்தின் பின் அவ்விடத்திற்கு வந்த சிவகுமாரனுக்கு கிழிந்த ஆடைகளும், மக்களினது உடமைகளுமே எதிர்ப்பட்டன. இதனால், வேதனையும் மிகுந்த வேட்கையும் அடைந்தான். இதன் நிமிர்த்தமாக அன்று இரவு ஒரு மணியளவில் இரண்டு கைக்குண்டுகளுடன் பொலிசாரைத் தேடி நகருக்குள் புறப்பட்டான். ஆனால், அன்று ஒரு பொலிசார் கூட இவன் கண்களுக்குப் புலப்படவேயில்லை. ஆனாலும் அருளம்பலத்தின் வீட்டை நோக்கிச் சென்று உள்ளே செல்லத் தடுத்த காவலாளிகளை நோக்கி இரு கைக்குண்டுகளையும் எறிந்து அவர்களது கால்களைச் சிதைத்தான். 1974ம் ஆண்டின் பின் சிவகுமாரன் முற்றுமுழுதான பயங்கரவாதி என இலங்கை அரசினால் குற்றஞ்சாட்டப்பட்டான். இந் நாட்களில் இவனைப்பற்றி தகவல் தந்தால் சன்மானம் தருவதாகவும் அரசு அறிவித்திருந்தது.

அதற்காக அரசும் பல மாய வலைகளை வீசியிருந்தது. ஆனால், முடிவில் தோல்வியையே சந்தித்து இருந்தது. இக்காலப் பகுதியில் இலங்கை அரசிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கட்டத்தில் சிவகுமாரனுக்கு பணம் தேவைப்படுகின்றது. இதற்காக தனது சகாக்கள் மூவரையும் தன்னோடு இணைத்துக் கொண்டு பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபடலானான். அவ்வேளையில் சிறீலங்கா பொலிசாருடன் துப்பாக்கிப் பிரயோகம் ஏற்பட்டது. துப்பாக்கி ரவைகள் தீருமட்டும் சண்டை செய்தான். முடிவில் ரவை தீரும் பட்சத்தில் தான் உயிருடன் எதிரியிடம் அகப்படக்கூடாது என்று எண்ணி சயனைட் அருந்தி வீரச்சாவு அடைந்தான். சிவகுமாரனின் இவ்வுயிர்த்தியாக நிகழ்வானது தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகியது. தமிழர் போராட்ட வரலாற்றில் இவன் ஓர் சக்தியாக விளங்கினான் என்றால் அதுமிகையாகாது. இந்த தியாக மறவனின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி, அவனது கனவுகளை நனவாக்கியது தமிழீழ விடுதலைப் புலிகள்தான். அவன் நினைத்தவற்றை புலிகள் நிறைவேற்றியுள்ளார்கள். தன் தாய்நாட்டிற்காக உடல் ,பொருள், ஆவி முழுவதனையும் தியாகம் செய்த சிவகுமாரன் தமிழர் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தினான் என்பதனை மறைக்கவோ, மறுக்கவோ முடியாத ஓர் உண்மையாகும். அவனது கனவுகளை நெஞ்சில் சுமந்து வீரத்துடன் எழுச்சி பெறுவோம்.

  • நன்றி: புலிகளின் குரல்
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments