×

ஊர் நோக்கி – வட்டக்கச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஒரு பிரதேசமே வட்டக்கச்சி.  பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பேரூர் ஆகும். புளியம்போக்கனை சந்தி, பரந்தன் சந்தி, காக்காகடைச் சந்தி, இரணைமடுச் சந்தி, பழைய கண்டிவீதியின் அம்பகாமச் சந்தி, தருமபுரச் சந்தி, தோட்டியடிச் சந்தி, என பல வாசல் கதவுகள் ஊடாக வட்டக்கச்சிக்குள் நுழையமுடியும். பழையகண்டி வீதி யாழ்பாண இராசதாணியையும் கண்டி இராசதாணியையும் இணைப்பதோடு வன்னி இராட்சியத்தின் நடுவிலும் அமைந்துள்ள பிரதேசம் வட்டக்கச்சியாகும்.

கரைச்சி நாடு என பெயர்பெற்ற கரைச்சி பிரதேசம், கிளிநொச்சி என பெயர் பெற்ற கிளிநொச்சி மாவட்டம், அதன் வழியே வட்டக்கச்சி என பெயர் வட்டக்கச்சிக்கு உள்ளது. வட்டமான வீதிகள் உள்ளதால் வட்டக்கச்சி என பெயர் வந்ததாக கூறினாலும், வட்டக்கச்சியின் பெயர் பற்றிய வரலாற்றுத் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை. பழைய வட்டக்கச்சி என அழைக்கப்படும் பெரியகுளம் தொடக்கம் கறுப்பிகுளம் வரைக்கும் இரணைமடுக் குளத்தின் கட்டுத் தொடக்கம் இராமநாதபுரம் வரையும், கனகராயன் ஆற்றின் தொடர்ச்சியையும் பன்னங்கண்டிக் கிராமத்தையும் எல்லையாகக் கொண்டு, வயல்களையும் பல சிறு குளங்களையும் தென்னை பனைகள் குடைபிடிக்க பல சிறு சிறு நீர்தேக்கங்களையும் கொண்டு குட்டிக்கேரளம் போல காட்சிதரும் ஊர் வட்டக்கச்சி.

நெற்செய்கையை பிரதான தொழிலாகவும் அதனை சுற்றியுள்ள தொழில்களை வருமானமாகக் கொண்டும் பெருந்தோட்டப் பயிர்கள், தொன்னைச் செய்கையும் மற்றும் விவசாயமாக தானியப்பயிர்களையும், விலங்கு வளர்ப்பையும், பிரதான வருமானம் தரும் தட்சார்பு பொருளாதாரத்தை தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு பிரதேசம் வட்டக்கச்சியாகும். மனித இனத்தின் தோற்றம் பற்றிய ஆராட்சியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த தடமாக இரணைமடு உள்ளது. ஆறுகள் ஓடும் கரைகளை வாழ்விடமாக கொண்டு வாழ்ந்த மக்கள் இரணைமடு, வட்டக்கச்சி, பன்னங்கண்டி, கண்டாவளை, தட்டுவன்கொட்டி, போன்ற இடங்களில் வாழ்ந்திருக்க முடியும். பின்னர் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தல் குளக்கட்டு அமைக்கப்பட்டதும் அங்கிருந்து இடம்மாறிச் சென்ற பின்னர் நீர்பாசன வசதிகள் ஏற்பட்டபின்னர் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் மீளக் கூடியேறினர். அதன் பின்னர் 1950க்கு பின்னர் நடந்த பல குடியேற்றத் திட்டங்களின் மூலம் பலர் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் குடியேறி வட்டக்கச்சியை வளப்படுத்தியதோடு தாமும் வளமாக வாழத் தொடங்கினர் .

வட்டக்கச்சி பிரதேசம் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. காற்பந்தாட்டம் வட்டக்கச்சி பிரதேசத்துக்கே உரிய விளையாட்டாகும். பாரம்பெரிய விளையாட்டுக்கள் மாட்டுவண்டிச்சவாரி வட்டக்கச்சியில் மிகவும் பிரபலமானது.

வட்டக்கச்சி மத்திய கல்லூரி, இரமநாதபுரம் மேற்கு அ.தா.கா பாடசாலை, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம், வட்டக்கச்சி தெற்கு ஆரம்பவித்தியாலயம், மாயவனுர் ஆரம்பவித்தியாலயம் என பல பாடசாலைகளை தன்னகத்தேகொண்ட பிரதேசம் வட்டக்கச்சி. பல முருகன் ஆலயங்கள், விநாயகர் ஆலயங்கள், ஜய்யனார் ஆலயம், அம்மன் ஆலயம், கிருத்தவ ஆலயம், பள்ளிவாசல், சிறுதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, என பல ஆன்மீக வழிபாட்டுப் பூமியாகவும் வட்டக்கச்சி காணப்படுகின்றது.

பல சமூதாய அமைப்புகளையும், கல்விசார் அதிபர்களையும், ஆசிரியர்களையும், திணைக்கள உத்தியோகத்தர்களையும், பல சிறு முதலாளிகளையும், அதிக விவசாயிகளையும் உள்ளடக்கிய பிரதேசம் வட்டக்கச்சி. இரணைமடு குளத்தின் நீரை நம்பியும், வான் மழையின் கொடையிலும் வளம் செழிக்கும் பிரதேசம் வட்டக்கச்சி.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பை வட்டக்கச்சி மண் வளத்திலும் தியாகத்திலும் அள்ளி வளங்கியுள்ளது. தியாகத்திலும் வீரத்திலும் வளத்திலும் செழித்து விளங்கிக்கொண்டே இருக்கிறது வட்டக்கச்சி.

வட்டக்கச்சி
வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments