
பேச்சுக்களில் சிக்கலும், தமிழீழ-சிறீலங்கா போரும்
இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து கொழும்புப் பேச்சுக்களில் சிக்கல் எழுந்தது. பிரேமதாசா அரசின் போக்கிலும், அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டது. இந்திய வல்லாதிக்க ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, ஜே.வி.பி. இயக்கமும் அழிக்கப்பட்டதால் திமிர்கொண்ட பிரேமதாசா அரசு, தமிழர் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு எதுவும் வைக்காமல் தட்டிக்கழிக்க முற்பட்டது. தமிழரின் தன்னாட்சி உரிமைக்குத் தடைவிதித்த அரசியலமைப்பின் ஆறாவது சட்டத்திருத்தத்தை நீக்கிவிட வேண்டுமெனப் புலிகள் விடுத்த கோரிக்கையையும் அரசு அசட்டை செய்து வந்தது. அதே சமயம் எந்தத் தீர்வுக்கும் முன்நிபந்தனையாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென அழுத்தங்களும் போடப்பட்டன. இதனால் அரசுக்கும், புலிகளுக்கும் முரண்பாடு எழுந்தது.
ஜே.வி.பி. இயக்கம் என்ற போர்வையில் ஐம்பதுனாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிங்கள இளைஞர்களைக் கொன்றுகுவித்த சிங்கள ஆயுதப் படைகள், புலிகளையும் அழித்துவிடலாமெனக் கர்வம் கொண்டன. தமிழீழத்தில் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்த சிங்கள இராணுவத்திற்கு, வரிப்புலிகள் கம்பீரமாகப் பவனி வருவதையும், புலிக்கொடிகள் எங்கும் வானுயரப் பறப்பதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கில் சிங்களப் பொலீஸாரின் அட்டகாசங்களும், வடக்கில் இராணுவத்தினரின் அத்துமீறல்களும் மோதல்களாக உருவெடுத்து, இறுதியில் யுத்தமாக வெடித்தது.
தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில் வரலாறு காணாத மாபெரும் மோதலாக வெடித்திருக்கும் முழு அளவிலான யுத்தத்துடன், தொண்ணூறுகளின் புதிய தசாப்தம் ஆரம்பமாகியது.
பல வரலாற்றுத் திருப்புமுனைகளையும், யுக நிகழ்வுகளையும் கொண்டதாக அமைந்த கடந்த இரு தசாப்தங்களின் சரித்திரம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் படிமுறை வளர்ச்சியோடும், எழுச்சியோடும், போராட்டத்தோடும் இழையோடி நிற்பதைப் பார்த்தோம். இந்த வரலாற்று ஓட்டத்தில் புலிகள் இயக்கம் தமிழரின் சுதந்திர எழுச்சியின் புரட்சிவடிவமாக வளர்ச்சி கண்டதோடு, விடுதலைப் போராட்டத்தையும் தீர்க்கமான பாதையில் முன்னடையச் செய்தது.
எமது தேசிய வாழ்வுக்கு அடித்தளமானதும், சுதந்திரத் தனியரசுக்கு அத்திவாரமானதுமான எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் முயற்சியில் புலிகள் இயக்கம் மாபெரும் சாதனைகளை நிலைநாட்டியிருக்கிறது. தொடர்ச்சியான, திண்ணியமான, வீரம்செறிந்த போராட்டத்தின் பயனாக, இன்று தமிழீழத்தின் பெரும் பகுதி நிலப்பரப்பு புலிகளால் மீட்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக இந்திய இராணுவங்களின் ஆக்கிரமிப்புக் களமாக இருந்து வந்த இந்தப் பகுதிகள், இன்று தமிழரின் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது, எமது போராட்டத்தின் பெரியதொரு முன்னடைவாகவே கருதப்பட வேண்டும்.
பிரபாகரனின் சொந்த முயற்சியாலும், செயற்திறனாலும் இன்று தமிழீழ மக்களின் பாதுகாப்பு அரணாக ஒரு பலம்வாய்ந்த விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மரபுவழி யுத்த முறைகளில் கைதேர்ந்ததாகத் தமிழர் படை ஒன்று அமைக்கப்பட்டிருப்பது, எமது போராட்ட வரலாற்றில் வளர்ச்சியை நோக்கிய பெரும் திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது.
அற்புதமான தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் நிறைந்த புலிகளின் போராட்டம், தமிழர் மத்தியில் என்றுமில்லாதவாறு தேசாபிமான உணர்வையும், விடுதலைப் பற்றையும் ஊட்டியிருக்கிறது. பரந்துபட்ட பொதுமக்களை சாதிய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரே இலட்சியத்தில் ஒன்றுபடுத்தி, ஒரே தேசிய சக்தியாகக் கட்டி எழுப்பிய சாதனையும் புலிகளையே சாரும்.
இன்று எமது போராட்டம் தென் ஆசியக் கண்டத்தில் முதன்மை பெற்ற தேசிய விடுதலைப் போராட்டமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. போர்த்திறனிலும், இலட்சிய உறுதியிலும், தியாகச் சிந்தனையிலும் ஈடிணையற்றதாகத் திகழும் புலிகளின் தன்னாட்சி உரிமைப் போர், உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலை இராணுவத்தின் தோற்றமும், தாயக மீட்புப் போரில் ஈட்டிவரும் மகத்தான சாதனைகளும், எதிரி இராணுவம் எதிர்கொள்ளும் பேரிழப்புக்களும் தமிழீழ மக்களுக்கு என்றுமில்லாத ஒரு நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் மீது ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புதிய தசாப்தத்தினது வரலாற்றுப் படைப்பாளிகளாகத் திகழப் போகும் விடுதலைப் புலிகள், தமிழர் தாயகத்தில் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டித் தமது புனித இலட்சியத்தை அடைந்தே தீருவார்கள் என மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்திருக்கிறது.