
சுனாமி பொது கட்டமைப்பு பாராளுமன்றப் பதிவு. 25-06-25-2005 ( வீரகேசரி)
ஜே.வி.பி. கறுப்பு கொடியுடன் கூச்சல் குழப்பம் விவாதம் நடக்கமுடியாமல் சபை ஒத்திவைப்பு: பொதுக்கட்டமைப்பு ஆவணம் குறித்து எம்.பி.க்களிடையே காரசாரமான வாய்த்தர்க்கம்.
ஜே.வி.பி. எம்.பி.க்களின் கூச்சல், குழப்பம் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு மத்தியில் நேற்றுக் காலை சுனாமி நிவாரணத்துக்கான பொதுக்கட்டமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜே.வி.பி. எம்.பி.க்கள் தொடர்ந்தும் சபை நடவடிக்கைகளை நடத்த விடாது பெரும் களேபரத்தில் ஈடுபட்டமையினால் பொதுக்கட்டமைப்பு மீது விவாதம் நடத்தப்படாமலேயே சபை நடவடிக்கையை சபாநாயகர் லொக்கு பண்டார அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமை போன்று எம். பி. க்களுக்கான வாய் மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் 9.45 மணியளவில் பொதுக் கட்டமைப்பு ஆவணம் தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த எழுந்தார். அப்போது ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும், கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார்.
பொதுக்கட்டமைப்பில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவ்வாறு கைச்சாத்திட்ட நிலையில் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை சபையில் சமர்ப்பித்து ஏன் விவாதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி தனது ஒழுங்குப் பிரச்சினையை அவர் முன் வைத்தார்.
அதற்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதிலளிக்க முற்பட்டபோது அதனை ஏற்றுக் கொள்ளாத ஜே.வி.பி. எம்.பி.க்கள் தங்களது மேசைக்கு கீழ்பக்கமாக ஒளித்து வைத்திருந்த கறுப்புக் கொடிகளை எடுத்து கைகளில் ஏந்திய வண்ணம் சபை நடுவாக வந்து நின்று சத்தமிட்டனர். தமிழ் இராஜ்ஜியத்தை உருவாக்கும் பொதுக்கட்டமைப்பை கிழித்தெறிவோம் என கோஷமிட்டனர்.ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிராக ஜே.வி.பி. எம்.பி.க்கள் உரக்க சத்தமிட்டு கோஷம் எழுப்பி குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்ததற்கும் மத்தியில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொதுக்கட்டமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கவுரையை நிகழ்த்தினார்.
ஆனால், ஜே.வி.பி. எம்.பி.க்கள் அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் ஒலி வாங்கிக்கு அருகாக வந்து நின்று புலி பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தமா என சத்தமிட்டு அமைச்சரை பேசவிடாது தடுத்தனர். சபையில் நாகரிகமாக செயற்படுங்கள் என சபாநாயகர் கேட்டுக் கொண்டார். கூச்சல் குழப்பத்தினால் சபை அதிர்ந்தது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபாநாயகர் சபையை 9.47 மணியளவில் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
எம்.பி. க்களிடையே வாய்த்தர்க்கம்
சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்னரும் சபை நடுவாக நின்று ஜே.வி.பி. எம்.பி. க்கள் சத்தமிட்டனர். தகாத வார்த்தைகளினால் ஜனாதிபதியையும் விடுதலைப் புலிகளையும் ஏசினர். அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, பிரதியமைச்சர் மகிந்தானந்த அழுத்கமே ஆகியோர் ஜே.வி.பி. எம்.பி.க்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்தனர். தகாத வார்த்தைகளும் பரிமாறப்பட்டன.
தமிழீழம் வாழ்கவெல்க
அதற்கிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று ஜே.வி.பி. களின் கோஷங்களுக்கு மத்தியில் தமிழீழம் வாழ்க வெல்க என சத்தமிட்டனர். கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. க்களான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, கனகசபை, அம்பாறை மாவட்ட எம்.பி. பத்மநாதன், யாழ்.மாவட்ட எம்.பி.க்களான பத்மினி சிதம்பரநாதன், சிவநேசன் ஆகியோர் ஜே.வி.பி. எம்.பி. க்களுக்கு ஆவேசம் ஊட்டும் வகையில் சத்தமிட்டனர். கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மேற்படி எம்.பி.க்களை அமைதியாக இருக்குமாறு கையை அசைத்து உத்தரவிட்டார்.
சபை மீண்டும் கூடியது
சபை மீண்டும் 10.18 இற்கு கூடியது. அமைச்சர் மைத்திரி பால சிறிசேன மீண்டும் பேச எழுந்தார். அப்போது ஜே.வி.பி. விடாது தடுத்தனர். அமைதியாக இருங்கள் என சபாநாயகர் கூறினார். பொதுக்கட்டமைப்பை கிழித்தெறியும் வரை அமைதியாக இருக்க மாட்டோம் என ஜே.வி.பி. க்கள் சத்தமிட்டனர். பிரபாகரனுக்காக நாங்கள் அமைதியாக இருப்பதா? எனவும் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.
சமர்ப்பிப்பு
அதற்கிடையே பொதுக்கட்டமைப்பை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்தார். கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை விளங்கப்படுத்தி அதில் உள்ளவற்றை வாசிக்க முடியாது என சபாநாயகரிடம் அமைச்சர் சொன்னார்.
அந்த வேளை அமைச்சருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு வழங்கினர். அமைச்சர்களான டி.எம்.ஐயரட்ன, மில்ரோய் பெர்னாண்டோ, ஜெயராஜ், பெர்னாண்டோ புள்ளே, பிரதி அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே ஆகியோர் ஜே.வி.பி. எம்.பிக்கள் அருகில் நெருங்காத வகையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சூழ்ந்து கொண்டனர்.
அந்த வேளையில் ஒலிவாங்கியை சரிப்படுத்திய அமைச்சர் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை இந்த சபையில் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். அப்போது ஜே.வி.பி. எம்.பி.க்களும் மேற்படி அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் இழுபறிப்பட்டனர். அதற்கிடையில் பொதுக்கட்டமைப்பு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை சபை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
ஆவணத்தை கிழித்தெறிந்த விமல் வீரவன்ச எம்.பி.
அந்த வேளையில் ஆத்திரமடைந்த விமல் வீரவன்ச எம்.பி. தனது கையில் வைத்திருந்த பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் முகத்தில் கிழித்தெறிந்தார். அப்போது சபாநாயகருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
சபை ஒத்திவைப்பு
அதேவேளை சபையை ஒத்திவைக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சபை அடுத்த மாதம் 5 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதனையடுத்து சபை கலைந்தது.
ஆனாலும், ஜே.வி.பி. எம்.பிக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும் சபை நடுவாக நின்று வாய்த்தர்க்கம் புரிந்தனர். படைக்கல சேவிதர் செங்கோலை எடுத்துச் செல்வதற்குக் கூட இடமளிக்காதவகையில் சபை நடுவாக நின்று எம்.பி.க்கள் வாய்த்தர்க்கம் புரிந்தனர். உதவி படைக்கல சேவிதர்களின் பாதுகாப்புடன் படைக்கல சேவிதர் செங்கோலை எடுத்துச் சென்றார்.