×

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும்

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் (வெள்ளைவான் குழு) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர். கடந்த இரு வருடங்களில் இலங்கையில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகில் இலங்கையிலேயே அதிகமானோர் காணாமல் போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. காணாமல் போவதற்கு அரசே காரணம் என பல காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிய போதும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இத்தகைய குற்றசெயற்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையங்கள் சரிவர தமது வேலையை செய்யவில்லை என்று அதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் அதிகாரி இலங்கையில் இடம்பெறும் இத்தகைய குற்றச்செயல்களை ஆவணப்படுத்தி ஒர் அறிக்கை சமர்பித்துள்ளார்.

வெள்ளைவான் குழு

வெள்ளை வான் படுகொலைகள் அல்லது கடத்தல்கள் என்பது இலங்கையில் வெள்ளை வான் வாகனம் ஒன்றில் வந்து நபர்களை கடத்திச் சென்று படுகொலை செய்தல் அல்லது காணாமல் போகச் செய்தல் ஆகும். ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பல தரப்பட்டோர் இவ்வாறு படுகொலை செய்யப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார். இதுவரை இலங்கைக் காவல்துறை யாரையும் இக் குற்றங்களுக்காக கைது செய்யவில்லை.

வெள்ளைவான் குழு இலங்கை இராணுவத்தின் இரகசியப் பிரிவாகும். இது பெரும்பாலும் தமிழர்களைப் பொதுவாக வர்த்தகர்களையும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் கடத்தி கப்பம் வாங்குவதற்கும் படுகொலைகளைப் புரிதல்
போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பிரிவாகும். இவ்வகை வாகனங்களிற்கு இலக்கத் தகடுகள் ஏதும் கிடையாது. இப்பிரிவில் இருந்து தப்புவதற்கு பெரும்பாலும் வீதி வளைவுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும். யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இவர்களின் செயற்பாடு கூடுதலாக உள்ளது. திருகோணமலையில் இவர்களின் செயற்பாடு அவதானிக்கப்பட்டபோதும் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளைப் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கிடைத்ததால் பின்னர் திருகோணமலையில் செயற்பாடுகளை இடைநிறுத்தி விட்டனர். கொழும்பிலும் இவர்களது செயற்பாடு காணக் கிடைக்கின்றது. கொழும்பில் பொதுவாக இரவு நேரத்தில் தமிழர்களின் வீடுகளிற்குச் சென்று கடத்தி வருகின்றனர். கொழும்புத் தமிழர்கள் இரவு நேரத்தில் அநாவசியமாகக் கதவுகளை அறிமுகம் இல்லாத ஆண்களிடம் திறக்கக் கூடாது எனும் பயம் நிலவுகிறது.

இந்த வெள்ளைவான் குழு பல்வேறு காரணங்களுக்காக சில சிங்களவர்களையும் கடத்திச் சென்றுள்ளது. இக்குழுவால் கடத்திச் செல்பவர்கள் பெரும்பாலும் திரும்பிவருவதில்லை. இக்குழுவின் செயல்கள் பற்றி இலங்கை இராணுவம் கூறுகையில் இது ரணில் விக்கிரமசிங்கேயின் தூண்டுதலின் பேரில் நடக்கிறது என்பது போன்ற பரப்புரைகளை மேற்கொண்டுவருகிறது. இலங்கையில் பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுக்கு வெள்ளைவான் குழுவினால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளனர். இக்குழுக்களின் செயல்கள் பற்றி பல்வேறு சர்வதேச ஊடங்களில் செய்திகள் வந்திருக்கின்றன.

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

WhiteVanv7-15

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments