×

ஜி. யு. போப்

ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 – பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர். தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.  19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

தமிழ்நாட்டிற்கு வருகை

விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சாயர்புரத்தில்

தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக்கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

போப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.

1849 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட போப் பின் இங்கிலாந்து சென்றார்.

தஞ்சாவூரில்

1851 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

போப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.

உதகமண்டலத்தில்

தஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.[1]

உதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார்.

உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார்.

பெங்களூரில்

1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார்.

தமிழ்த் தொண்டுகள்

  • இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
  • 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
  • புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
  • தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

மூன்று இறுதி விருப்பங்கள்

முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.

  • இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் (அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
  • தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
  • கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments