×

தமிழீழ மக்களின் 40 க்கும் மேற்பட்ட வருடகால அனுபவம்

தமிழீழ மக்களின் 40 க்கும் மேற்பட்ட வருடகால அனுபவம்

தமிழீழ மக்களின் 40 க்கும் மேற்பட்ட வருடகால அனுபவம், சிங்களப் பேரினவாதம் சமாதானமாகப் பிரச்சனையை எப்போதும் தீர்க்க முன்வராது என்ற உண்மையை மிக ஆணித்தரமாக உறுதிசெய்கிறது.

அரச பயங்கரவாதமும், இனஅழிப்பு என்ற எல்லையை தொடுகின்ற ஒடுக்குமுறையுமே பாரிய அளவிலும், தொடர்ச்சியாகவும் எமது மண்ணில் இடம் பெற்றுவருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் சர்வ தேச சட்டங்களின் விதிகளுக்கு அமைவாக மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட 40 வருடகால கொடூர ஒடுக்குமுறை போதியதாக உள்ளது. தவிர, சமாதான முயற்சிக்கோ, உண்மையான பேச்சுவார்த்தைக்கோ சிங்கள இனவாதத்தைப் பொறுத்தவரை இடமில்லை என்ற மட்டில், இறுதி வழியாக ஆயுத நடவடிக்கை மூலம் அடக்குமுறையை அகற்றுவதும், சுதந்திரத்தை நிலைநாட்டுவதும், சர்வ தேச சட்டத்திற்கு உட்பட்டதாகவும், நியாயபூர்வமானதாகவும் அமைந்துவிடுகின்றன. எமது விடுதலைப் போராட்டம் இவ்வடிப்படையிலேயே வளர்ந்து வருகின்றது. இராணுவ அடக்குமுறைக்கு எதிரான தமிழீழ மக்கள் படையின் ஆயுதம் தாங்கிய போராட்டம்; இப்போராட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சி. இவ்விரண்டு விடயங்களிலும் புலிகளின் தலைமையில் தமிழீழ மக்கள் பெரும் தடைகளை உடைத்தெறிந்து, மிகவேகமாக இலக்கை நோக்கி முன்னேறி வருவதே யதார்த்த உண்மையாகும்.

ஆயுதப் போராட்டம், தாயக மண்ணில் தொடர்ச்சியான பல வெற்றிகளை ஈட்டிவருகின்றது. பாரிய நிலப்பரப்புக்களை தொடர்ச்சியாக, நீண்ட காலத்திற்கு தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதானது, பிரகடனப்படுத்தப்படாத வகையில் தமிழீழநாடு உருவாகி வருவதை காட்டுவதாகவே சர்வதேச சட்டவல்லுனர்கள் கணித்துள்ளனர். வடக்கில் 90% மான நிலப்பகுதியும், கிழக்கில்

50% இற்கு மேலான நிலப்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருந்து வருகின்றன. பொலிஸ் நிலையங்களும், ஆயுதப்படை முகாம்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. புறம் போக்காக, விநியோகம் செய்வதற்கு கஷ்டமான, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. தற்போது பெரும்பாலான சண்டைகள் எல்லைப் புறங்களிலேயே நடைபெற்று வருகின்றன. எமது எல்லைகளையும், முழு நிலப்பரப்பையும், கடல் எல்லைகளையும் பாதுகாக்கக் கூடியதாக எமது ஆயுதபடைகள் முறையான, தேசிய இராணுவமாக உருப்பெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தமிழ்மக்கள் படையில் நாளும் இணைந்து வருகின்றனர். கனரக ஆயுதங்கள், வாகனங்கள், ஏவுகணைகள், பீரங்கிப்படகுகள் குறித்தும், விமானப்படை குறித்தும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதும், அது நோக்கி முன்னேற வேண்டியதுமான அடுத்த கட்டம் வந்துகொண்டிருக்கின்றது.

சுய உணவுற்பத்தி, சுய சார்புப் பொருளாதாரம், எரிபொருட்கள், மின்வலுசக்தி ஆகியவற்றை உற்பத்தி செய்தல் அல்லது மாற்றீடு காணுதல் ஆகியவை குறித்து தீவிர சிந்தனையும் அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்குமான செயற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழீழ மக்கள் என்றுமே கண்டிராத இன ஒடுக்குமுறையின் உச்சக்கட்டத்தை அனுபவித்து வருகின்றனர். தமிழீழ மக்களிற்கு எதிரான முழுஅளவிலான போராகவே சிங்கள அரசாங்கத்தால் இது நடாத்தப்பட்டு வருகின்றது. படுகொலைகளும், காணாமல் போதலும், குண்டுவீச்சுக்களும், பொருளாதாரத் தடையும் தமிழீழ மக்களை துன்பங்களின் எல்லைக்குத் தள்ளியபோதும், மனஉறுதி வளரப்பெற்றவர்களாகவும், தமது இலட்சியத்தில் திடசங்கற்பம் உடையவர்களாகவும் மாறுவதையே காணக்கூடியதாக உள்ளது. தமது உயிர்வாழ்தலுக்காக இறுதிவரை போராட வேண்டும் என்பதிலும்,புலிகளே தமது வாழ்விற்கும், விடுதலைக்கும் உறுதியான, விட்டுக்கொடுக்காத உத்தரவாதிகள் என்பதையும், சிறீலங்கா அரசாங்கத்தோடோ, இந்தியாவின் அனுசரணையோடோ இருக்கின்ற ஏனைய தமிழ்க் குழுக்கள் ‘பிணம் தின்னும் கழுகுகள்” என்பதையும் மக்கள் எப்போதும் சரியாகப் புரிந்து வைத்துள்ளனர். எதிரியுடன் சேர்ந்து, அரசபயங்கரவாதம் தமிழீழ மக்களின் மீது மேலும் மேலும் கட்டவிழ்த்து விடப்பட உதவி வரும் காட்டிக் கொடுப்பவர்கள் பற்றி, அவர்களால் ஏற்படும் கொடூர அழிவுகள் குறித்து, சொல்லொணாத் துன்பங்கள் குறித்து மக்கள் தெளிவாகவே உள்ளனர். ஒன்று திரண்ட மக்கள் சக்தியின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் விடுதலைப் போராட்டம் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல், யுத்த தந்திரோபாயத்தின் அடிப்படையில், தலைவர் பிரபாகரனின் உறுதியான, கட்டுப்பாடான, தீர்க்கதரிசனமான வழிநடத்தலில் முன்னேறிவருகின்றன.

எமது விடுதலைப் போரில் சர்வதேச ஆதரவு, அங்கீகாரம் என்பன முக்கியமான விடயங்களாகும். பல்வேறு நாடுகளில் நடைபெறும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் எமது போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகின்றன, பரஸ்பர துணைகரமாக அமைகின்றன. 90 ம் ஆண்டுகள் தேசிய இனங்களின் விடுதலை தசாப்தமாக அரசியல் வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனின் கூட்டத் தொடர்களில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து, பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அறிக்கைகள் வாசித்துள்ளதும், பல்வேறு நாடுகள் புலிகளின் தலைமையோடு உத்தியோக ரீதியிலும், உத்தியோகபற்றற்ற ரீதியிலும் தொடர்புகளை ஏற்படுத்திவருவதும், அண்மையில், அவுஸ்திரேலியா இலங்கையில் தமிழ், சிங்கள தேசிய இனங்கள் உண்டென்பதை ஏற்றுக் கொண்டதும் இம்முன்னேற்றங்களையே எடுத்துக் காட்டுகின்றன. அதேவேளை புதிய நாடுகள் உருவாகுவதையும், தமிழீழ நாடு உருவாகுவதையும் தடுக்கும் சர்வதேச நாசகார சக்திகள் எமது போராட்டத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றன.

சிறீலங்கா அரசின் பின்னே அணிதிரண்டுள்ள இப்பிற்போக்கு, நாசகார சக்திகள் தமிழீழ உருவாக்கத்திற்கு எதிரான இராணுவ, பண, இராஜதந்திர உதவிகளை சிறீலங்காவிற்கு வழங்கி வந்த வண்ணமே உள்ளன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இச்சதி முயற்சி, துரோகக் குழுக்களின் கணிசமான உதவியுடன் முடுக்கிவிடப் பட்டுள்ளது. உள்நாட்டில் சாதி, சமய, பிரதேச, நில அடிப்படையில் தமிழீழத்தைப் பிரிப்பதும், சர்வதேச அளவில், தமிழீழக் கொள்கைக்கு எதிரான பிரச்சாரத்தை பல்வேறு தளங்களில் மேற்கொள்வதும் இடம் பெற்றுவருகின்றன. இவ் எதிர்ப்பு அலைகளை வென்று எமது விடுதலைப் படகு இலக்கு நோக்கி முன்னேறுவதை எவராலும் தடுக்கமுடியாது.

–     எரிமலை: ஏப்ரல் 1991

  • தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

தமிழீழ மக்களின் 40 க்கும் மேற்பட்ட வருடகால அனுபவம்

 

guest
0 Comments