×

1987 செப்டம்பர் 14 ஆம் நாள் காலை.

‘மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.  யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90 க்குப் பின்னர் சில வருடங்கள் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட ராஜனும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார்கள்.

1987ஆகஸ்ட் 15 ஆம் நாள் தமிழ் நாட்டில் இருந்து இந்திய விமானத்தில் சென்று இறங்கிய காசி அண்ணாவும் நானும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோம். தலைவர் அவர்களது அலுவலகப் பணிகள் எம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. திலீபனின் வருகையை தலைவருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து திலீபன் உள்ளே அழைக்கப்பட்டார். காசியண்ணா மற்றும் எங்களோடு ராஜன் பேசிக் கொண்டிருந்தார்.

1987 ஜூலை 29 ஆம் நாள் இந்திய – இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டதைத் தொடர்ந்து, 30ஆம் திகதி காலை முதல் இந்திய விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் வந்து தரையிறங்கத் தொடங்கின. விமானங்களில் ‘அமைதிப்படை’ என்ற பெயரில் இந்திய இராணுவம் கொண்டு வந்து குவிக்கப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின் நாம் விரும்பாத பல நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கின. ஆயுத ஒப்படைப்பு என்ற பெயரில் புலிகள் தங்களதும், தமிழீழ மக்களினதும் பாதுகாப்புக்கென வைத்திருந்த  ஆயுதங்களை நயவஞ்சகமாக பெற்றுக் கொண்டது இந்திய இராணுவம்.

இந்தியாவை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த அதேவேளை EPRLF, TELO, ENDLF  பான்ற அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது இந்தியா.  இந்தியா கொடுத்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு புலிகளையும்,  அவர்களது ஆதரவாளர்களையும் அந்த அமைப்புக்கள் தாக்கத் தொடங்கின. அதே காலகட்டத்தில் தமிழீழத்தில் எல்லைப் புறங்களில் புதிது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

பொலிஸ் நிலையங்கள் புதிது புதிதாக நிறுவப்பட்டன. இந்திய- இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படாமல் தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் இடம் பெற்றதால் இந்திய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தமிழர் பகுதிகளில் இடம்பெற்றன.

இந்திய அரசின் ஓர வஞ்சனையான அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காந்தீய வழியில் ஒரு உண்ணா விரதத்தை தான் மேற்

கொள்ளப் போவதாக அரசியல் துறையைச் சேர்ந்த போராளிகளிடம் தெரிவித்த திலீபன், அதற்காக அனுமதியைப் பெறுவதற்காகவே

தேசியத் தலைவரின் சந்திப்பிற்காக வந்திருந்தார். தேசியத் தலைவரின் அறைக்குள் சென்றிருந்த திலீபன் இரண்டு மணி நேர இடைவெளியின் பின் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

“நான் உண்ணாவிரதம் இருப்பதற்கு தலைவர் அனுமதி வழங்கி விட்டார்” என ராஜனிடமும், எம்மிடமும் தெரிவித்துவிட்டு மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மீண்டும் திலீபன் தலைவரின் விசேட அழைப்பின் பேரில் அன்றிரவும் மன்மதன்

இல்லத்திற்கு வந்திருந்தார். அங்கு வந்திருந்த திலீபன் அன்று நள்ளிரவு வரை தலைவரோடும் மற்றையவர் களோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு அன்றைய இரவுணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

தலைவர் அவர்களே திலீபனுக்கான உணவை மிகுந்த பாசத்தோடு பரிமாறினார். அளவு கடந்த மகிழ்ச்சியுடன் திலீபன் சாப்பிட்ட அந்தக் காட்சி இப்பொழுதும் என் மனத்திரையில் வந்து செல்கிறது. மிகுந்த பாசத்தோடு தலைவர் பரிமாற அளவு கடந்த மகிழ்ச்சியோடு சாப்பிட்ட அந்தச் சாப்பாடுதான்திலீபனுடைய கடைசிச் சாப்பாடு என்பதை தலைவர் உட்பட நாங்கள் யாருமே நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments